Wednesday 2 August 2017

அருள்மிகு தீம்பிலான்குடி மகாதேவர் திருக்கோயில்


நாகர்கோவில்-திருவனந்தபுரம் சாலையில் மார்த்தாண்டத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும், குலசேகரத்தில் இருந்து சுருளோடு செல்லும் பாதையில் 5வது  கி.மீ.யில் தாமிரபரணி ஆற்றின் இடது புறம் உள்ளது பொன்மனை ஊர். இங்கு குடி கொண்டிருக்கிறார் அருள்மிகு தீம்பிலான்குடி மகாதேவர். இந்த பகுதி காடாக இருந்த சமயத்தில் காணிக்காரர் என்னும் சமூகத்தை சேர்ந்த தீம்பிலான் என்பவர் மரம் வெட்டி கொண்டிருந்தார். அப்போது மரங்களுக்கு  நடுவில் சுயம்புவாக முளைத்திருந்த சிவலிங்கத்தை கண்டார். இது குறித்து அவர் ஊர்மக்களுக்கு தெரிவித்தார். ஊர் மக்கள் ஒன்று கூடி சிவலிங்கத்திற்கு  கோவில் கட்டினர். அது தீம்பிலான்குடி என்று அழைக்கப்பட்டது. 

இந்த கோவில் 1 ஏக்கர் பரப்புடையது. கிழக்கு பார்க்க அமைந்த கோவிலினை சுற்றி பெரிய மதில், கல் விளக்கு, செம்பு தகடு வேய்ந்த கொடிமரம் உள்ளது.  கருவறை எதிரே நந்தி மண்டபம், சுற்றிலும் சுற்றாலை மண்டபம், கிழக்கு வெளிப்பிரகாரத்தை ஒட்டி ஓட்டுக்கூடம் என அமைந்துள்ளது. கருவறையின் முன்பு  துவாரபாலகர்கள் உள்ளனர். லிங்கத்துக்கு ஆவுடையில்லை. அஷ்டபந்தனம் செய்யப்படாத சுயம்புலிங்கம் இவர். கிழக்கு பிரகாரத்தின் தென்கிழக்கில் நாகர்  சிற்பங்கள் உள்ளன. வெளிப்பிரகார வடமேற்கு மூலையில் யட்சி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். 

இது பூட வடிவம், தெற்கே விநாயகர் அமர்ந்த வடிவம். தெற்கு உள்பிரகாரம் நடுவில் சாஸ்தா இருக்கிறார். கோவிலில் 35க்கும் மேற்பட்ட ராமாயண சிற்பங்கள்  உள்ளன. இந்த சிற்பங்கள் அனைத்தும் மரத்தால் ஆனவை. இவை எந்தவித பழுதும் இல்லாமல் முழுமையாக உள்ளன. இந்த கோயிலில் கல்வெட்டுகள் இல்லை.  கட்டுமானம் பற்றி சான்றுகள் இல்லை. கருவறையின் அமைப்பு 15ம் நூற்றாண்டினதாக இருக்கலாம். முன்மண்டபம் பிற்காலத்தது.

மகாசிவராத்திரி விழா

காலை 6 மணிக்கு திருநடை திறப்பு, 6.30க்கு உஷபூஜை, 10 மணிக்கு உச்ச பூஜை, 10.30க்கு திருநடை அடைப்பு. மாலை 5 மணிக்கு நடைதிறப்பு, 6க்கு பூஜை,  7.30க்கு அர்த்தசாம பூஜை, 8 மணிக்கு திருநடை அடைப்பு. மகாசிவராத்திரி விழா இங்கு சிறப்பு. பங்குனி திருவாதிரை நாளில் விழா ஆரம்பித்து 10 நாட்கள்  நடக்கிறது. யானை ஊர்வலம், சிவராத்திரி விழா தினை கஞ்சி, நல்லமிளகு தண்ணீர், சக்கா எரிசேரி போன்றவை பக்தர்களுக்கு வழங்கப்படும்.

No comments:

Post a Comment