
மக்கள் பிணி தீர்ப்பதே மகேசனின் கடமை. அதனால் மக்கள் எந்தக் கஷ்டம் வந்தாலும் இறைவனின் திருவடியில் சரணடைகின்றனர். அந்த வகையில் தன்னை நாடி வரும் பக்தர்களின் தோஷம் நீக்கி அவர்களுக்கு யோகங்களை தருகிறார் கைலாசநாதர் என்ற பெயர்கொண்ட சிவபெருமான். விழுப்புரம் திருவிக வீதியில் அமைந்துள்ளது பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோயில். பல நூறு ஆண்டுகள் பழமையானது. இந்த கோயில் கல்வெட்டில் கூறப்பட்டுள்ள படி, காஞ்சியை தலைநகரமாக கொண்டு நல்லாட்சி நடத்திய பல்லவ பேரரசன் நிருபதுங்கவர்மனுக்கும், பாண்டிய மன்னன் ஸ்ரீமாறனின் மகன் இரண்டாம் வரகுணனுக்கும் கி.பி 880ம் ஆண்டு கும்பகோணம் அருகே திருப்புளம்பியம் என்ற இடத்தில் போர் நடந்தது. அந்த போரில் நிருபதுங்கவர்மன் அபராஜிதவர்மன் மூலம் பாண்டியன் வரகுணனை தோற்கடித்தான். சிறப்பு மிக்க இந்த வெற்றியின் நினைவாக விஜய நிருபதுங்க செயந்தன் சதுர்வேதி மங்கலம் என்று தன் பெயரால் நான்கு வேதம் ஓதும் அந்தணர்களுக்கு இறையிலியாக கொடுத்தான்.
இக்கோயில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு முதலாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டு விஜயநகர மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கோயிலாகும். கோயில் மற்றும் இராஜகோபுரம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறை கிழக்கு நோக்கியும், கோயில் நுழைவு வாயில் தெற்கு நோக்கியும் அமைந்துள்ளது. ஆயினும் கி.பி. 1892 ல் பெரியமடம் பொம்மையார்பாளையம் ஸ்ரீபாலைய சுவாமிகளின் சீடர் சிவ சின்னசாமி என்பவர் கருவறைக்கு நேராக கிழக்கு நோக்கி வழி அமைத்துள்ளார். கல்வெட்டு வாயில்படி மேலேயே அமைந்துள்ளது. கோயிலில் வடக்கு நோக்கி ஷண்முக பெருமாளும், மேற்கு நோக்கி பைரவரும், மேற்கு நோக்கி அம்பாளும், இரண்டு முருகன் கோயில்கள், இரண்டு விநாயகர் கோயிலும் விசேஷமாக அமைந்துள்ளது. அர்த்த மண்டபம், நாற்பது கற்தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. நடுவில் அமைந்துள்ள பன்னிரண்டு தூண்களில் பல கலைச்சிற்ப வேலைப்பாடுகள் உள்ளது. எல்லா தூண்களிலும் நாயக்கர் கால சிற்பங்கள், சில தூண்களில் நாயக்க மன்னர்களின் தேவியரும் பொறிக்கப்பட்டுள்ளது.
63 நாயன்மார்கள் உற்சவர் சிலைகள், தலவிருட்சகமாக வில்வமரம் அமைந்துள்ளது. விழுப்புரத்தில் வாழ்ந்த தொண்டைமண்டல சோமசுந்தர சரவண முதலியார் 1866ம் ஆண்டு பெரியநாயகி அம்மன் கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மஹா மண்டபம் என்று தனியாக கட்டினார். சித்திரை மாதத்தில் 10 நாள் பிரம்மோற்சவம், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம், வைகாசி மாதத்தில் வசந்த உற்சவம், ஆவணி மாதத்தில் வினாயகர் சதுர்த்தி, புரட்டாசி மாதத்தில் நவராத்திரி, ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகம், கார்த்திகை மாதத்தில் சோமவாரம், கார்த்திகை தீபம், மார்கழி மாதத்தில் ஆருத்ரா 10 நாள் விழா, மாசி மாதத்தில் மகா சிவராத்திரி போன்ற பல்வேறு விழாக்கள் நடத்தப்படுகின்றது. கைலாசநாதர் மற்றும் பெரியநாயகி அம்மனை வெள்ளிக்கிழமை தோறும் பக்தர்கள் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டால், பக்தர்களுக்கு எல்லா வளமும், செல்வமும் கிடைக்கும், மேலும் குறிப்பாக பெண்கள், பெரியநாயகி அம்மனுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் சகல தோஷங்களும் நீங்கி யோகங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
No comments:
Post a Comment