‘பங்குனி முயக்கம் கழிந்த வழுநாள்’ எனும் சங்க பாடலடி, பங்குனி திங்களும் உத்திரமும் கூடிய நன்னாள் என்னும் பொருளை தருகிறது. உறையூரில் பங்குனி உத்திர திருவிழா சிறப்புற்று இருந்தது என்று குறிப்பிடுகின்றது. சிறப்புக்குரிய பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளில் மீனாட்சி- சுந்தரேஸ்வரர், முருகன்-தெய்வானை, ராமன்-சீதை, லட்சுமணன்-ஊர்மிளை, பரதன்- மாண்டவி, சத்ருகனன்- சுருதகீர்த்தி, நான்முகன்-கலைவாணி ஆகிய தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றுள்ளது.
அய்யப்பன், வள்ளி, அர்ச்சுனன் போன்றோர் அவதரித்ததும் இந்நாளில் தான். பழனியில் உள்ள திருஆவினன்குடியில் உத்திர திதியில் தேரோட்டம் நடைபெறுவது பிற முருக திருத்தலங்களைவிட மிகுந்த சிறப்புக்குரியது. இந்நாள் விரதமிருப்பதற்கும், அன்னதானம் செய்யவும் ஏற்றதாக கூறப்படுகிறது.
முருகப்பெருமான் தனது வேலாயுதம் கொண்டு மலையை உடைத்தெறிந்து, தாரகாசுசூரனை கொன்று, தெய்வானையை மணந்த நாள் பங்குனி உத்திர திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் திருமணம் ஆகாதவர்கள் ஆலயங் களுக்கு சென்று வழிபட்டால் திருமணம் நடைபெறும். இந்நாளில் தங்களது துன்பங்கள், கவலைகள் தீர முருகப்பெருமானை வழிபட்டால் சூரன் போன்று துன்பம் தரும் எதிரிகளை அவன் அழித்தொழிப்பான். இந்நாளில் விரதமிருந்தால் பிறப்பற்ற முக்திநிலை கிடைக்கும்.
நான்கு வேதங்களும், தேவர்களும் ஏனைய யாவர்களும் ஆராய்ந்து அறிதற்கரியவன். பிரமம், ஓம் என்ற பிரணவத்தின் பொருளாக விளங்குபவன். மாறாத இளமையுடன், தந்தைக்கு உபதேசம் செய்து, அகத்திய முனிவருக்கு அருள் செய்து, மனித மனக்குகையிலே உறைகின்ற குகன், ஞானதண்டாயுதபாணியாக வீற்றிருக்கும் பழனியில் சித்தர்கள் ஏராளமானோர் வாழ்ந்தனர். அவர்கள் தங்கள் குருவாக முருகப்பெருமானை வணங்கி வழிபட்டனர்.
No comments:
Post a Comment