இந்துக்களாகிய நாம் எல்லோரும் வருடம் முழுவதும் மாதா மாதம் ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேலும் பண்டிகைகளை விரதங்களாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்தப் பண்டிகை நாட்களைக் கூர்ந்து கவனித்தால் பெரும்பாலும் அமாவாசையும், பவுர்ணமியும் பங்கு வகிக்கின்றன. இந்த இரண்டு நாட்களையும் நம் முன்னோர்கள் புனித நாட்களாகக் கருதி அந்த நாட்களில் இறைவனிடம் மனதை செலுத்த விரத நாட்களாகவும் ஆக்கினார்கள். அப்படி விரதம் இருக்க வேண்டுமானால் நம் உடலில் பலமும், மனதில் சக்தியும் வேண்டும்.
விஞ்ஞான ரீதியாக மட்டுமல்லாமல் ஆன்மிக ரீதியாகவும் பவுர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்த முக்கியநாளாகக் கருதப்படுவதால் மாதாமாதம் ஒவ்வொரு பவுர்ணமியையும் ஒரு பண்டிகையாகக் கொண்டாடும்படி நம் முன்னோர்கள் வைத்துள்ளார்கள். மாதா மாதம் பவுர்ணமி ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்திலேயே வரும், அந்த நாட்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் பெரும்பாலும் அந்த நட்சத்திரத்தின் பெயரிலேயே வருவதைக் காணலாம். மேலும், தட்சனது சாபத்தால் சிவபெருமானிடம் அடைக்கலம் வேண்டினார் சந்திரன். சந்திரனுக்கு அடைக்கலம் அளித்த சிவபெருமான் அதை தன் தலையில் சூடிக்கொண்டு சந்திரசேகரர் ஆனார். ஆதலால் பன்னிரண்டு பவுர்ணமிகளுமே சிவபெருமானுக்குரிய விசேஷ நாட்களாகும்.
சித்திரை - சித்ரா பவுர்ணமி விரதம்
சித்திரை மாதத்தில் பவுர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் வரும். சித்ரா பவுர்ணமி யன்றுதான் யமதர்மராஜாவின் கணக்கரான சித்ரகுப்தன் அவதரித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. அன்று ஒரு நாள் விரதம் இருந்து சித்ரகுப்தனை வழிபட்டால் மோக்ஷம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சித்திரை நட்சத்திரம் அம்மனுக்குரிய சிறப்பு தினம். சிவாலயங்களில் சிவனுக்கு மருக்கொழுந்தால் அபிஷேகம் செய்வார்கள்.
வைகாசி - வைகாசி விசாகம் விரதம்
வைகாசி மாதத்தில் பவுர்ணமியில் வரும் விசாகம் என்பது முருகப் பெருமான் பொய்கையில் ஆறு முகங்களுடன் அவதரித்த நாளாகும் என்பதால் முருகன் கோயில்களில் இந்தநாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். சிவாலயங்களில் சிவனுக்கு சந்தனதத்தால் அபிஷேகமும், அலங்காரமும் செய்வார்கள்.
ஆனி - ஆனித் திருமஞ்சனம் விரதம்
ஆனி மாதத்தில் பவுர்ணமி கேட்டை நட்சத்திரத்தில் வரும். சிவன் கோயில்களில் சிவனுக்கு முக்கனிகளால் (மா, பலா, வாழை) அபிஷேகம் செய்வார்கள். ஆனி மாதத்தில் சிவபெருமான், பார்வதியின் அருளைப் பெற வழிவகுக்கும் நாளாகும். ஆனி மாதம் பவுர்ணமியன்று காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனித் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
ஆடி - ஆடி குரு பூர்ணிமா விரதம்
ஆடி மாதத்தில் பவுர்ணமி உத்திராடம் நட்சத்திரத்தில் வரும். இந்த பவுர்ணமியில் சிவன் கோயில்களில் சிவனுக்கு காராம் பசுவின் பாலால் அபிஷேகம் செய்வார்கள். மகாபாரதம் ஸ்ரீமத் பாகவதம் போன்ற புராணங்களை எழுதியவர் வேதவியாசர். ஆடி மாத பவுர்ணமியை வியாச பூர்ணிமா அல்லது குரு பூர்ணிமா என்ற பெயரில் வியாசபகவானை பூஜிக்கிறார்கள். ஆடி மாத பவுர்ணமியில் அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் கஜேந்திர மோட்சம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். அம்மன் கோயில்களிலும் இந்த பவுர்ணமி அன்று மாவிளக்கு போடுதல், பொங்கல் இடுதல், லலிதா ஸஹஸ்ரநாமம் அர்ச்சனை போன்ற விசேஷ ஆராதனைகள் நடைபெறுகின்றன.
ஆவணி - ஆவணி அவிட்டம் விரதம்
ஆவணி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் வரும். இந்த பவுர்ணமியில் சிவன் கோயில்களில் சிவனுக்கு வெல்ல சர்க்கரையால் அபிஷேகம் செய்வார்கள். உபநயனம் செய்து கொண்ட பிராமணர்கள் ஆவணி மாத்தில் அவிட்டம் நட்சத்திரத்தோடு கூடிய பவுர்ணமி அன்று கொண்டாடும் பண்டிகை ஆவணி அவிட்டம்.
புரட்டாசி - புரட்டாசி பூரட்டாதி விரதம்
புரட்டாசி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் பவுர்ணமி வருகிறது. இந்த மாத பவுர்ணமியில் சிவன் கோயில்களில் சிவனுக்கு கோதுமையும் வெல்லமும் கலந்த வெல்ல அப்பத்தால் அபிஷேகம் செய்வார்கள். இந்த மாத பவுர்ணமி அன்று தான் உமா மகேஸ்வர விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
ஐப்பசி - ஐப்பசி அன்னாபிஷேகம் விரதம்
ஐப்பசி மாதம் அசுவினி நட்சத்திரத்தில் பவுர்ணமி வரும். எல்லா சிவாலயங்களிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் மிக மிக சிறப்பாகக் கொண்டாடப்படும். உலகில் உள்ள ஜீவராசிகளுக்கெல்லாம் உணவளித்துக் காக்கும் சிவபிரானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவனுக்கு அன்னம், காய்கறி, பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்கரிப்பார்கள்.
கார்த்திகை - கார்த்திகை தீபம் விரதம் :
கார்த்திகை பவுர்ணமி கார்த்திகை நட்சத்திரத்திலேயே வரும். இந்த பவுர்ணமியில் எல்லா சிவாலயங்களிலும் சிவனுக்குப் பசு நெய்யால் அபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை நட்சத்திரமும் கார்த்திகை பவுர்ணமி நாளும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் எல்லா சிவாலயங்களிலும் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த நாளில் ஏற்றப்படும் திருவண்ணாமலை தீபம் உலக பிரசித்தம். அன்று தான் பார்வதிக்கு ஈசுவரன் இடபாகம் தந்து அர்த்தநாரீசுவரன் ஆனார் என்பர்.
மார்கழி - மார்கழி திருவாதிரை விரதம் :
மார்கழி பவுர்ணமி திருவாதிரை நட்சத்திரத்தில் வரும். இது பரமசிவனின் நட்சத்திரமாகும். இந்த நாளில் சிவனுக்குப் பசு நெய்யாலும் நறுமண பன்னீராலும் அபிஷேகம் செய்வார்கள். மார்கழியில் பாடப்படும் திருப்பாவை மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் என்று பவுர்ணமியில் துவங்குகிறது. கோயில்களில் ஆருத்ரா தரிசனமும் இந்த திருவாதிரை பவுர்ணமி அன்றுதான் கொண்டாடப்படும்.
தை - தைப்பூசம் விரதம் :
தை மாதத்தில் பவுர்ணமி பூசம் நட்சத்திரத்தில் வரும். அன்று செய்யும் தைப்பூசம் முருகன் வழிபாட்டிற்கு ஈடு இணையே இல்லை. தைப்பூசம் முருகனுக்கு உகந்த நாள் என்றாலும் அன்று முருகனுடன் சிவனையும் வழிபட வேண்டும். சிவனுக்கு அன்று கருப்பஞ்சாறால் அபிஷேகம் செய்வது உகந்தது. தைப்பூசத்தன்றுதான் உலகம் தோன்றியதாகக் கூறப்படுகிறது. சத்தியஞான சபையைத் தோற்றுவித்த வள்ளலார் தைமாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று ஏற்றி வைத்த ஜோதி ஜோதி தரிசனமாகக் காட்டப்படுகிறது. சிவபெருமான் உமா தேவியுடன் ஞான சபையான சிதம்பரத்தில் நடனம் ஆடி தரிசனம் தந்ததும் இந்த தைப்பூசத் திருநாளில்தான்.
மாசி - மாசிமகம் விரதம்
மாசி மாதத்தில் பவுர்ணமி மகம் நட்சத்திரத்தில் வரும். சிவன் கோயில்களில் சிவனுக்குப் பசு நெய்யில் அபிஷேகம் செய்வார்கள். இந்த நாளை மாசி மகம் என்று கோயில்களில் இறைவனை புனித நீர் நிலைகளில் நீராடல் செய்து கொண்டாடுவார்கள். வீடுகளில் அன்று சித்ரான்னங்கள் பாயசம் முதலியன செய்து நிலவிற்குப் படைத்து நிலவொளியில் குடும்பத்துடன் உண்டு மகிழ்வார்கள்.
பங்குனி - பங்குனி உத்திரம் விரதம்
பங்குனி மாதத்தில் பவுர்ணமி உத்திர நட்சத்திரத்தில் வரும். சிவன் கோயில்களில் முருகனுக்கு சிறப்பு விரத தினமாக் கொண்டாடப்படுகிறது. கடவுளரின் திருமண நாளாகவும் கொண்டாடப்படும். இந்த பவுர்ணமியன்று திருச்செந்தூர் கோயிலில் ஐராவத மண்டபத்தில் 108 சிவலிங்கங்கள் சாட்சியாக வள்ளி முருகன் திருமணம் சிறப்பாக நடைபெறும். மேலும் பார்வதி தேவி சிவனை மணந்து கொண்ட நாள். மேலும் மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஸ்ரீராமர் - சீதை, ஆண்டாள் - ஸ்ரீரங்கநாதர், சாவித்திரி - சத்தியவான், மயிலை கற்பகாம்பாள் - கபாலீஸ்வரர் திருமணங்கள் நடைபெற்ற நன்னாள். இந்த தினம் ஸ்ரீஐயப்பனும், அர்ஜுனனும் அவதரித்த திருநாள்.
No comments:
Post a Comment