மாயையே உருவானவர் தத்தாத்ரேயர். அவரது மாயையை உணர்ந்தவர்கள் மட்டுமே, அவரிடம் சீடர்களாக இருந்துள்ளனர். தன்னுடைய மாயையை உணராதவர்களை, தத்தாத்ரேயர் ஒருபோதும் வெறுத்ததில்லை. ஏனெனில் ஆன்மாவைத் தவிர அனைத்தும் மாயை என்பதை உணர்ந்தவர் அவர்.
கைகய வம்சத்தின் மாபெரும் சக்கரவர்த்தி கிருதவீர்யன். பெரும் ராஜ்ஜியம் நடத்தி வந்த அவருக்கு புத்திரப்பேறு கிட்டவில்லை. அவரது மனைவியின் வயிற்றில் உருவான கரு எதுவும் தங்கவில்லை.
ஒருமுறை பிரகஸ்பதியை சந்தித்த கிருதவீர்யன், தனது மனக் கவலையை அவரிடம் கூறினான். அவனிடம் சூரியனை வழிபடும்படி கூறினார் பிரகஸ்பதி. அதன்படியே செய்தான் கிருதவீர்யன். வழிபாட்டில் மகிழ்ந்து அவன் முன்பாக தோன்றிய சூரியன், ‘ஒருவரின் மேன்மைக்கு ஏதாவது தடையாக இருந்தால், அது அவர்கள் செய்த முன்வினைப் பயனே ஆகும். அந்த பாவம் போக, தத்தாத்ரேயர் உபதேசம் செய்த ‘சப்தமி ஸ்நபனம்’ என்னும் விரதத்தை கடைப்பிடி என்று கூறி, விரதமுறைகளையும் கற்பித்தார்.
விரதம் இருந்த கிருதவீர்யனின் மனைவி கர்ப்பம் தரித்தாள். அவளுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்தக் குழந்தையின் கைகள் செயலற்றதாக இருந்தது. இதனால் அரச தம்பதியை மனக்கவலை வாட்டியது.
அந்தக் குழந்தைக்கு அர்ஜுனன் என்று பெயரிட்டனர். கிருதவீர்யன் மகன் என்பதால், அனைவரும் அவனை கார்த்தவீர்யன் என்று அழைத்தனர். மகனின் உடல் குறையைக் கண்டு நாளும் துன்பப்பட்ட கிருதவீர்யன், உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தான். செயலற்ற இரு கைகளை கொண்டிருந்தாலும், அரச பதவி கார்த்தவீர்யனைத் தேடி வந்தது. ஆனால் அதை ஏற்க மறுத்து விட்டான் கார்த்தவீர்யன்.
‘இந்நாட்டு மக்களுக்கு நான் எவ்வகையில் ஒப்பற்ற அரசனாக இருக்க முடியும். நம்மையும், நம் நாட்டையும் அரசன் எவ்வித துயரமும் நெருங்காமல் காப்பாற்றுவான் என்று எண்ணித்தான், விவசாயிகள் தங்கள் நிலத்தின் விளைச்சலில் ஆறில் ஒரு பகுதியையும், அந்தணர்கள் தங்கள் தவத்தில் ஒரு பங்கையும் அளிக்கிறார்கள். கைகள் வலுவின்றி, அரசை காப்பாற்ற நான் அரியணை ஏறினால், ஏமாற்றுக்காரன், திருடன் போன்றோருக்கும், எனக்கும் என்ன வித்தியாசம்?’ என்று மருகினான்.
சிறிய வயதாக இருந்தாலும், பக்குவமுற்ற அந்த உள்ளத்தை கண்டு நெகிழ்ந்துபோனார், அமைச்சர்களில் ஒருவரான கர்க முனிவர். அவர் கார்த்தவீர்யனிடம், ‘உலகத்தை காப்பாற்றுவதற்காக மும்மூர்த்திகளின் அம்சமாக பிறந்துள்ள தத்தாத்ரேயர், உனது கஷ்டங்களை போக்கும் வல்லமை கொண்டவர். ஒப்பற்ற யோக குரு. உலகில் உள்ள அனைத்தையும் சமமாக பார்க்கும் எண்ணம் உடையவர். ஆனால், லக்ய மலையின் அடிவாரத்தில் வசித்து வரும் அவர், எளிதில் எதற்கும் அசையமாட்டார். அவரது பரிசோதனையில் நீ வெற்றி பெற்றால், உனக்கு அவரது கருணை கிடைக்கும்’ என்று கூறினார்.
அவரது வார்த்தையின் உறுதியை கேட்டு ஆசி பெற்று அக்கணமே லக்ய மலைக்கு புறப்பட்டு சென்றான் கார்த்தவீர்யன். தத்தாத்ரேயரின் ஆசிரமத்தை அடைந்து, அவரை தரிசனம் செய்தான்; சரணடைந்தான்; பக்தி சிரத்தையுடன் பணிவிடைகள் செய்தான். தனது பணிவிடையில் இருந்து சிறிதும் விலக வில்லை. பாத சேவை செய்தான்; மது கேட்டபோது அதையும் கொண்டு வந்து கொடுத்தான். சந்தனம் பூசிவிடுவான், மாலை அணிவிப்பான், உணவளித்து விட்டு அதன் மிச்சத்தை உண்பான்.
கோபத்தால் மனச்சோர்வு
தத்தாத்ரேயரிடம் எந்த சந்தேகமும் கொள்ளாதவனாக இருந்தான். அவர் திட்டினால் அதனை பொறுத்துக் கொள்வான். எதிர்த்து எந்த கேள்வியும் கேட்கமாட்டான். இருப்பினும் ஒருநாள், காரணம் இன்றி கார்த்தவீர்யனை கடுமையாக திட்டினார் தத்தர். இதனால் ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக ஏற்கனவே வலுவிழந்து போயிருந்த அவனது கைகள், மேலும் வலுவிழந்து பின்னிக்கொண்டன. இதனை பார்த்து தத்தாத்ரேயர் மனமிரங்கி தாழ்ந்த குரலில் பேசலானார்.
‘சர்க்கரவர்த்தியின் புதல்வனே!, எவரோ உனக்கு என்னை பற்றி புகழ்ந்துரைத்ததைக் கேட்டு இங்கு வந்தாய். புண்ணியத்தை சேர்க்க வேண்டும் என்று எண்ணி, தாழ்ந்த புத்தியை உடைய எனக்கு பணிவிடைகள் செய்து பாவத்தை சேர்த்துக் கொண்டாய். என்னை வணங்கினால் வலிமை பெறுவாய் என்று எண்ணி வந்தாய். ஆனால் என்னால் உனக்கு சிறு நன்மையும் நிகழவில்லை. இதில் இருந்தே எனக்கு சக்தியில்லை என்பதை நீ அறியவில்லையா?. இனியாவது இங்கிருந்து விலகி நல்லவர்களை நாடிச்செல்’ என்று கூறினார்.
அந்த வார்த்தைகளை கேட்டு கார்த்தவீர்யன் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானான். அதை கண்களில் நிறைந்து நின்ற கண்ணீர் காட்டிக் கொடுத்தது. கர்க முனிவர் கூறிய தத்தரின் பரிசோதனை நினைவுக்கு வந்தது.
அருள்புரிந்த தத்தாத்ரேயர்
‘இறைவா! தாங்கள் மாயையின் தலைவர். சாமானியர் அல்ல. உம்முடன் இருக்கும் மாது, நிச்சயமாக லட்சுமிதேவியே!. உங்களின் மாயை தத்துவத்தை பிரம்மதேவராலேயே புரிந்து கொள்ள முடியவில்லை. என்னால் எப்படி புரிந்துகொள்ள முடியும். அனைத்தும் அறிந்த தாங்களே என்னை ஏமாற்ற நினைத்தால், இவ்வுலகில் மட்டுமின்றி, ஈரேழு உலகிலும் எனக்கு கதி யாது?. என் கைகள் மட்டுமல்ல, என் இரு கால்களும் போனாலும் கவலையில்லை. உன் அடியை மட்டும் விட்டு விலகும் எண்ணம் எனக்கில்லை’ என்று கண்ணீர் மல்க அவர் கால்களில் விழுந்து கதறினான். கார்த்தவீர்யனின் உறுதியான வார்த்தையை கேட்டு, தனது சுய உருவத்தை அவனுக்கு காட்டி அருளினார் தத்தர். பின்னர் ‘உனக்கு வேண்டிய வரங்களை கேள்’ என்றார். கார்த்தவீர்யன் தத்தரை வணங்கி தனக்கு தேவையானதை கேட்டான்.
எப்போதும் பற்றுடன்...
‘நாட்டு மக்களை காப்பாற்றுவதில் உள்ள தர்மம், அதர்மங்கள் எனக்கு தெரியவேண்டும். என் கைகள் ஆயிரமாக வேண்டும். யுத்தத்தில் என்னை எதிர்ப்போர் இருக்கக் கூடாது. நிலம், நீர், நெருப்பு மற்றும் எல்லாவற்றிலும் எனக்கு தடை ஏற்படக்கூடாது. என்னை நினைத்தால், அவர்கள் இழந்த பொருட்கள் கிடைக்க வேண்டும்’ என்று கேட்டான்.
மேலும் அவன் கேட்கையில், ‘சுவாமி! மேற்கண்ட சக்திகள் ஒருவனுக்கு இருக்குமாயின் அவன் கர்வம் மிகுந்து தவறான பாதைக்கு செல்வது இயற்கையானது. ஆகவே நான் எப்போதாவது வழி தவறினால், எனக்கு சரியான வழியை எடுத்துக் கூறும் சான்றோர் உறவு வேண்டும். என்னை தேடி விருந்தினர்கள் பலர் வர வேண்டும். எனது கருவூலம் குறையக்கூடாது. மனிதன் மறைவது நிச்சயம் என்பதால், எனது மரணம் மாவீரன் ஒருவனின் கையால் நிகழ வேண்டும். எப்போதும் உன்னிடம் நீங்காத பற்று கொண்டு இருக்க வேண்டும்’ என்று கூறி முடித்தான்.
No comments:
Post a Comment