ஒவ்வொரு மாதமும் உத்திர நட்சத்திரம் வந்தாலும் பங்குனி மாதத்தில் பங்கு பெறுகிற உத்திரம் தனிச்சிறப்பு பெறுகிறது. இந்த நட்சத்திரத்தை பக்தி நட்சத்திரம் என்றே பகரலாம்.
ஆம்! தெய்வங்களே தேர்ந்தெடுத்துக்கொண்ட மங்கள நித்திலமே பங்குனி உத்திரம். பாமாலை பாடிக்கொடுத்தும், பூமாலை சூடிக் கொடுத்தும் அரங்கனுக்கே ஆட்பட்ட ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணமும், பார்வதி - பரமேஸ்வரர் திருமணமும், தெய்வயானை - திருமுருகன் கல்யாணமும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் விவாகமும் நிகழ்ந்த நன்னாள் பங்குனி உத்திரத்தில்தான் என்று புராணங்கள் மூலம் அறியலாம்.
இந்தத் திருமணங்கள் மட்டுமா? ஒரே சமயத்தில் ஒரே மணமேடையில் இதிகாச ஜோடிகள் நால்வர் இணைந்ததும் இந்த சுபதினத்தில்தான். ராமன் - சீதை, பரதன்- மாண்டவி, லட்சுமணன் - ஊர்மிளை, சத்ருக்ணன்- சுருதகீர்த்தி என ஜகம்புகழும் புண்ணிய கதையான ராமாயணம் தெரிவிக்கின்றது.
கல்யாணக் கொண்டாட்டங்கள் மட்டுமல்ல! பிரசித்தி பெற்ற ஆலயங்களில் பெருவிழாவும் இந்நன்னாளில்தான். பழனியில் காவடி உற்ஸவம், திருமயிலையில் அறுபத்து மூவர் உற்ஸவம், திருச்செந்தூரிலும், சுவாமி மலையிலும் வள்ளி கல்யாணம், காஞ்சிபுரத்தில் கல்யாண உற்ஸவம், மதுரையில் மீனாட்சி கல்யாணம் என பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா!
பந்தள குமாரனாக மணிகண்ட பெருமான் கேரள பூமியில் அவதரித்ததும் இந்நன்னாளே! அதனால்தான் சபரிமலையில் இந்த தினத்தில் ருத்ர பாராயணம் மற்றும் மகா அபிஷேகம் ஹரிஹர சுதனுக்கு நடைபெறுகிறது.
வில் விஜயன் அர்ஜுனனுக்கு "பல்குனன்' என்றும் பெயர் விளங்கக் காரணம் பாண்டவரில் புகழ் பூண்டவனாக விளங்கும் அவன் இந்நன்னாளில் பிறந்ததால் தான்.
விசேஷமான இத்திருநாளில் விரதம் இருப்பதும், அன்னதானம் வழங்குவதும் நம் முன்வினைகளை நீக்கி நலம் அருளும். பங்குனி உத்திர விரதத்தை பாங்குறக் கடைப்பிடித்தே பாற்கடலில் தோன்றிய திருமகள் பெருமாள் மார்பில் இடம்பெற்றாள் எனப் பேசுகின்றன இதிகாசங்கள்.
இருப்பவர்களை சிறப்பாக வாழ வைப்பது மட்டுமல்ல இவ்விரதத்தின் மகிமை. இறப்பவரையும் எழுப்பவல்லது பங்குனி உத்திரம். ஆம்! நெற்றிக்கண் நெருப்பால் நிர்மூலமான மன்மதனை அவன் மனைவி ரதி தேவிக்காக சிவபெருமான் எழுப்பித் தந்ததும் இம்மங்கள நித்திலத்தில்தான்!
No comments:
Post a Comment