திருக்குற்றால மலையின் அடிவாரத்தில் பூலோக சொர்க்கமாக அமைந்துள்ள காசிமேஜர்புரம் என்ற ஊரில் தான் செண்பக சாது என்னும் சித்தர் அவதரித்தார்.
பூலோக கயிலாயம் என்றும் சித்தர்களின் சொர்க்கம் என்றும் போற்றப்படுவது மேற்கு தொடர்ச்சி மலை. இங்குள்ள திருக்குற்றாலம் சித்தர்களின் உறைவிடம். இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலையில் எங்கு பார்த்தாலும், சித்தர்களின் தவக்கூடங்கள் காணப்படுகின்றன. திருக்குற்றால மலையின் அடிவாரத்தில் பூலோக சொர்க்கமாக அமைந்துள்ள ஊர் காசிமேஜர்புரம். இந்த ஊரில் தான் செண்பக சாது என்னும் சித்தர் அவதரித்தார்.
இவரது பெற்றோர் சுப்பிரமணிய பிள்ளையும்- சடச்சி அம்மாளும் திருக்குற்றால கோவிலுக்கு சென்ற போது, குறத்தி வடிவில் வந்த ஒரு பெண் ‘உனக்கு ஆண் குழந்தை பிறந்து ஞானியாக திகழும்’ என வாக்குரைத்தார். குறத்தியாக வந்தவள் திருக்குற்றால ஆதிபராசக்தி என்று கூறுகிறார்கள்.
அந்த பெண் கூறியபடியே 1903-ம் ஆண்டு, அந்தத் தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அந்தக் குழந்தைக்கு குற்றாலம் செண்பகாதேவியின் பெயரையே சூட்டும் விதமாக ‘செண்பகம்’ என அழைத்தனர்.
அந்த குழந்தை சிறுவனானதும் பள்ளிக்கு அனுப்பினர். அவனுக்கு பள்ளிப் படிப்பில் நாட்டமில்லை. வளர்ந்த வேளையில் சில காலம் விவசாயம் செய்தார். அதன்பின் கடலை வியாபாரம் செய்தார். செண்பகத்திற்கு உரிய காலத்தில் திருமணம் செய்து வைத்தனர், அவரது பெற்றோர். இல்லறத்தை நல்லறமாய் நடத்திய செண்பகத்திற்கு, மூன்று ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. காலங்கள் சென்றது. செண்பகத்திற்கு இல்லறத்தில் இருந்த பற்று நீங்கியது.
அவர் அன்னை செண்பகாதேவி ஆலயமே கதியென்று கிடக்கத் தொடங்கினார். அங்கேயே சில நேரங்களில் தவத்தில் ஆழ்ந்தார். காவிரி உடை அணிந்து கொண்டு, சித்தன் போக்கு சிவன் போக்கு என்று அலைந்து திரியத் தொடங்கினார்.
கால்நடையாகவே பல புண்ணிய தலங்களுக்குச் சென்று நதிகளில் நீராடி தவம் இயற்றினார். அவரின் ஆன்மிக நாட்டம் அவரை காசி வரை அழைத்துச் சென்றது. அங்கு பல சாதுகளை சந்தித்தார். முடிவில் தவநிலையில் பேரானந்தம் அடைந்தார்.
ஒரு கட்டத்தில் மீண்டும் திருக்குற்றாலத்துக்கு திரும்பி வந்தார். தனது வீட்டில் தனி அறையில் பலகை ஆசனம் அமைத்தார். அதன் மீது அமர்ந்து தவமேற்ற ஆரம்பித்தார். தவநிலை மெருகேற மெருகேற அவருடைய பற்கள் அனைத்தும் உதிர்ந்தது.
தொடர்ந்து காசிமேஜர்புரம் சித்ரா நதிக்கரயில் ஓலையால் ஆன தவக்குடில் அமைத்தார். அங்கு ஒரு பிள்ளையாரையும் பிரதிஷ்டை செய்தார்.
செண்பகாதேவி அம்மன் சிலை, செண்பகசாது சுவாமி திருவுருவமும், அவர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கமும்.
செண்பக சாது சுவாமியின் மெஞ்ஞானம் வெளிப்பட ஆரம்பித்தது. சாதுவின் மனைவி (1950) தனது தாயார் வீடான கல்லிடைக்குறிச்சி சென்றார். வெகுநாளாகியும் வரவில்லை. இதற்கிடையில் தனது மகன் சச்சிதானந்தம் தந்தையிடம் சென்று, தாயார் இன்னும் வராதது பற்றி கேட்டுள்ளார். அதற்கு சாது சுவாமி, ‘உன் அம்மா தலையில் பாரத்தோடும், மடியில் சுமையோடும் இன்று வருகின்றாள்’ என்று கூறினார்.
அன்று மதியம் செண்பக சாது சுவாமியின் மனைவி, ஆற்றில் நிறைய மீன்களைப் பிடித்து கொண்டு, பையில் கட்டி தலையில் சுமையுடன் வந்து சேர்ந்தார். தொலைத் தொடர்பு வசதியற்ற அந்த காலத்தில், சுவாமி ஆறு மணிக்குச் சொன்னது, பன்னிரண்டு மணிக்கு நிறைவேறியது.
அதன் பிறகு சுவாமியை வீட்டில் எல்லோரும் மதிக்க ஆரம்பித்தனர். இனியும் வீட்டில் அமர்ந்து தவம் செய்வது ஏற்றதல்ல என நினைத்த செண்பக சாது சுவாமி, நிரந்தரமாக தான் அமைத்த குடிலிலேயே தங்கத் தொடங்கினார்.
சுவாமிகள் 1952-ல் ஓலைக்குடிசை கோவிலை கற்கோவிலாகக் கட்டினார். அங்கு சிவனை பிரதிஷ்டை செய்தார். மூலஸ்தானத்தை ஒட்டி, அறுங்கோண வடிவில் ஒன்பது கற்படிகளைக் கொண்டு ஆழ்குழி நிஷ்ட தவ அறையை அமைத்தார்.
அங்குதான் அவரின் அடுத்த தவநிலை தொடங்கியது. குழிக்குள் செல்லும் அவரை, பெரிய பலகையைக் கொண்டு மூடிவிடுவார்கள். உள்ளே இருந்தே தவம் செய்வார். பல நாட்கள் கழித்து அவர் வெளியே வரும் போது பல அற்புதங்கள் நிகழ்ந்தது.
மேற்கு தொடர்ச்சி மலையில் பரதேசி புடை உள்பட பல குகைகளில், பல நாட்கள் அவர் தவம் புரிந்திருக்கிறார். அங்கே பல சித்தர்களையும் சந்தித்திருக்கிறார். அந்த நேரத்தில் தான் ரசமணிகள் உருவாக்குதல், பாதரசத்தை கட்டுதல் போன்ற ரசவாதக் கலையை அவர் கற்றுத் தேர்ந்தார்.
செண்பக சாது சுவாமி, எங்கு சென்றாலும் பவுர்ணமி அன்று செண்பகாதேவியை வழிபட வந்துவிடுவார். செண்பகாதேவி அருவியில் குளித்துவிட்டு, அன்னையின் முன்பு அமர்ந்து தவமியற்றுவார். சுவாமி வாழும் போதே, ‘தனது வாழ்க்கை காலம் எட்டு.. எட்டா.. அறுபத்தி நாலு’ எனக் கூறி வந்தார். அதாவது 64 வயது என அர்த்தம். குறிப்பிட்ட காலம் வருவதற்கு ஆறுமாத காலம் முன்பே, மவுன தவம் இயற்றத் தொடங்கி விட்டார்.
கோவிலின் இடது புறம் அவரின் மவுனத் தவம் தொடங்கியது. அவரின் மகன் சச்சிதானந்தம் அருகில் இருந்து அவருக்கு சேவை செய்து வந்தார். ஒருநாள் தன் மகனை சைகையால் அழைத்தார் செண்பக சாது சுவாமி. அருகில் வந்த மகனிடம், பஞ்சாங்கத்தையும், ஒரு சிலேட்டையும் கொண்டு வரச்சொன்னார். அதில், தான் முக்தியடையும் நாளை எழுதி வைத்தார். தான் எப்போதுமே செண்பகாதேவி அம்மனை வணங்க வேண்டும் என்பதற்காக, தனது ஜீவ சமாதிக்கு அருகிலேயே, அம்மனின் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்யக் கூறினார்.
1967-ம் வருடம் தனது 64-வது வயதில் ஐப்பசி மாதம் 12-ந் தேதி பூர நட்சத்திரம் அன்று காலை 8.30 மணிக்கு, அவர் எழுதி வைத்த மாதிரியே அமர்ந்த நிலையில் முக்தி அடைந்தார்.
சுவாமியின் கட்டளைப்படியே அவ்விடத்திலேயே சமாதி வைத்தனர். அவர் வாழ்ந்த இடமும், அவர் பிரதிஷ்டை செய்த சிவபெருமானும், அவர் எழுதிய சிலேடும் தற்போதும் பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது. செண்பக சாது சுவாமி, அன்னையை வணங்கிய படி தற்போதும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவதாக நம்பப்படுகிறது.
திருக்குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர் புரத்தில் செண்பகசாது சுவாமி ஜீவசமாதி ஆலயம் காணப்படுகிறது. இங்கு வந்தவுடனே நம்மையறியாமலேயே உடலில் ஒருவித அதிர்வு ஏற்படுவதை உணரலாம். இங்கு வழிபட்டவர்களுக்கு நோய்கள் நீங்குகிறது. தடைபட்ட திருமணம் கை கூடுகின்றது. குழந்தை வரம் கிடைக்கின்றது. இங்கு வரும் மக்கள் மன சஞ்சலம் நீங்கி அமைதி பெறுகின்றனர். இந்த ஆலயத்தில் நித்திய வழிபாடும், ஆண்டுதோறும் சுவாமிக்கு ஐப்பசி மாதம் குருபூஜையும் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment