பங்குனி உத்திரம் இறைவழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாள். திருமணமாகாத இரு பாலரும் இந்நாளில் விரதம் மேற்கொண்டு வழிபடின் திருமணப்பேறு அருளக் கிடைக்கும்.
புராணங்களிலே பங்குனி உத்திரத்தில் நிகழ்ந்த சிறப்புகள் பற்றி விவரிக்கப்படுகின்றது. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவதும், விரதம் இருப்பதும் வழக்கம். இதில் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு. இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வத் திருமணங்கள் நடைபெற்றதாகப் புராணங்களில் இருக்கின்றன.
தமிழ் மாத கடைசி மாதமான பங்குனியில், பன்னிரண்டாவது நட்சத்திரமான உத்திரம் இடம்பெறும் புனித நாள்தான் பங்குனி உத்திரம். வளமான பலன்களைத் தரும் விரதங்களுள் பங்குனி உத்திர விரதமும் ஒன்று. இந்த விரதத்தைக் கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள்.
உத்திர நட்சத்திர நாயகன், அதாவது, அதிபதி சூரியன் அதே நாளில் பௌர்ணமி நிலவும் பொருந்தும்போது சூரியன், சந்திரனால் இரட்டைச் சிறப்புகள் கிடைக்கின்றன. சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இந்நாளில்தான். அன்னை மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் இந்நாளில்தான்.
ஆண்டு தோறும் மதுரையில் இத்திருமண விழாவை பங்குனி உத்திரத்தன்று சிறப்பாக செய்து வருகின்றனர். சிவனின் தவத்தைக் கலைத்ததால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இந்தநாளில்தான். முருகக் கடவுள் தெய்வானையை இந்த நாளில்தான் மணம் புரிந்துகொண்டார்.
மீனாட்சி- சுந்தரேஸ்வரர் பார்வதி-பரமேஸ்வரர்; சீதாதேவி-ஸ்ரீராமர்; இந்திராணி-தேவேந்திரன்; இருபத்தேழு நட்சத்திரங்கள்-சந்திரன் ஆகிய திருமணங்கள் நடந்தேறியது இந்தப் பங்கு உத்திரத்தன்றே. நம்பியின் மகளாக ஸ்ரீவள்ளி அவதரித்தது, மஹாலட்சுமி நாராயணனின் மார்பில் அமர்ந்தது, சரஸ்வதி பிரம்மதேவனின் வாக்கில் அமர்ந்தது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றதெல்லாம் பங்குனி உத்திர தினத்தன்றுதான்.
கோபத்திற்குப் பெயர் போனவர் துர்வாச முனிவர். இவர் வந்து கொண்டிருந்தபோது, அவரது திருக்கரத்தில் ஒளிவீசும் ஒரு அழகிய மலர் மாலை இருந்தது. அதனை மிகவும் பெருமையுடனும் பக்தியுடனும் ஏந்திக் கொண்டு வந்தார். அப்போது அந்த வழியாகத் தேவர்களின் தலைவனான இந்திரன் தன் ஐராவதம் என்னும் யானையில் ஏறிக் கொண்டு பவனி வந்தான்.
தேவர்களின் தலைவனான தன்னைப் பற்றி எல்லோரும் பெருமையாகப் பேசுவதைக் கேட்கக் கேட்க, இதனால் ஏற்பட்ட பெருமிதம் அவன் முகத்தில் தெரிந்தது. துர்வாச முனிவர் இந்திரனின் முன்னால் சென்று 'தேவேந்திரா!' உன் புகழ் எல்லா உலகங்களிலும் நிறைந்து இருக்கிறது. இப்போது அன்னை மகாலக்ஷ்மியைத் தரிசித்துவிட்டு அவர் அன்போடு அளித்த இந்த மலர் மாலையுடன் வந்து கொண்டிருக்கிறேன். அன்னை கொடுத்த இந்தப் பிரசாதத்தை ஏற்றுக் கொள்ள தேவர்களின் தலைவனான உனக்குத்தான் உரிமை இருக்கிறது. இதோ வாங்கிக் கொள்' என்று சொன்னார்.
தேவர்களின் தலைவனான தான் கேவலம் இன்னொரு தெய்வம் கொடுத்த மலர் மாலையை பிரசாதம் என்று வணங்கி வாங்கிக் கொள்வதா என்ற எண்ணம் அவனுக்கு. ஆனாலும், கொடுப்பவர் துர்வாசர் என்பதால் ஒன்றும் பேசாமல் வாங்கிக் கொண்டு அலட்சியமாக தன் கையால் தொடாமல் அங்குசத்தால் ஏந்தி யானையின் தலைமீது போட்டான். யானையோ இந்திரனுக்கும் மேலான அலட்சியத்துடன் இருந்தது.
ஆம், தன் தலையில் வைக்கப்பட்ட மலர் மாலையை உடனே தும்பிக்கையால் இழுத்துத் தன் கால்களின் கீழே போட்டு மிதித்துத் துவைத்து விட்டது. அன்னையின் பிரசாதத்திற்கு ஏற்பட்ட அவமரியாதையைக் கண்டதும் வழக்கம் போல் துர்வாசருக்குக் கோபம் வந்து விட்டது.
தேவேந்திரா, தேவர்களின் தலைவன், இத்தனைச் செல்வங்களின் தலைவன் என்ற மமதை, அகில உலகங்களுக்கும் அன்னையான மகாலக்ஷ்மியின் பிரசாதத்தையே அவமதிக்கும் அளவுக்கு உனக்கு ஆணவம் கொண்டாயே!.
எந்த செல்வம் இருப்பதால் இந்த விதமாய் நீ நடந்து கொண்டாயோ அந்த செல்வங்கள் அனைத்தும் அழிந்து போகட்டும்' என்று சாபம் கொடுத்தார். துர்வாச முனிவரின் சாபத்தின்படி இந்திர லோகத்தில் இருந்த எல்லாச் செல்வங்களும் பாற்கடலில் வீழ்ந்துவிட்டன. அன்னை லக்ஷ்மியும் பாற்கடலில் மறைந்தாள். தேவர்கள் பதறிப் போனார்கள். உடனே எல்லோரும் பாற்கடலில் பள்ளி கொண்டவனைப் போய் வணங்கினார்கள்.
இறைவனின் கட்டளைப்படி அசுரர்களின் உதவியோடு பாற்கடலைக் கடையத் துவங்கினார்கள். மந்தார மலையை மத்தாகவும் வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு அசுரர்கள் ஒரு பக்கமாகவும் தேவர்கள் ஒரு பக்கமாகவும் பாற்கடலைக் கடைந்து கொண்டனர். நாட்கள் பல சென்றன. அழிந்து போன செல்வங்கள் திரும்பி வருவதைப் போல் தெரியவில்லை. ஆனால், திடீரென்று வெப்பம் அதிகமாகிவிட்டது.
பாற்கடலில் இருந்து ஆலமென்னும் விஷம் வெளிவந்தது. அதே நேரத்தில் வாசுகிப் பாம்பும் உடல்வலி தாங்காமல் விஷத்தைக் கக்க ஆரம்பித்தாள். இவ்விரண்டு விஷமும் சேர்ந்து கொண்டு ஆலகாலமாகி எல்லா உலகையும் அழித்துவிடும் போல் உருவானது. உலகங்களின் துன்பத்தைக் கண்டு பொறுக்காத கருணாமூர்த்தியாகிய மகேசன் உடனே அந்த ஆலகாலத்தை கையினில் ஏந்தி விழுங்கிக் கொண்டார்.
காலகாலனாகிய அவரை எந்த விஷம் என்ன செய்ய முடியும்? ஆனாலும் அன்னை பார்வதியால் அதனைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை. அண்ணல் உண்ட விஷம் கழுத்திலேயே தங்கிவிடும்படி அவரின் கழுத்தில் கையை வைத்தாள். விஷம் அங்கேயே தங்கி நின்றது. விஷத்தின் வலிமையால் அண்ணலின் கழுத்து நீல நிறம் பெற்றது. அண்ணலும் 'நீலகண்டன்' என்ற திருப்பெயரைப் பெற்றார். பாற்கடலைக் கடைவதில் இன்னும் சில நாட்கள் தொடர்ந்தன.
எல்லா செல்வங்களும் ஒவ்வொன்றாக பாற்கடலில் இருந்து வெளிவரத் தொடங்கியது. அன்னை மகாலக்ஷ்மியும் பாற்கடலில் இருந்து தோன்றினாள். அலைமகள் என்ற திருநாமத்தை அடைந்தாள்.அப்படி அன்னை பாற்கடலில் இருந்து தோன்றிய பெருமை மிக்க திருநாளே பங்குனி உத்திரத் திருநாளனது. அன்னை பாற்கடலில் இருந்து தோன்றும் போதே கையில் ஒரு மலர் மாலையை ஏந்திக் கொண்டு தோன்றினாள். அதனை நேரே சென்று தன் கணவனாகிய திருமாலின் கழுத்தினில் அணிவித்தாள். இதனால் பங்குனி உத்திரத் திருநாள் அன்னை மகாலக்ஷ்மியின் அவதார நாள் மட்டுமன்றி திருமண நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
கங்கையினும் புனிதமான காவிரியின் நடுவில் உள்ள பூலோக வைகுண்டமாம் திருவரங்க நகரத்தில் பாம்பணையில் பள்ளி கொண்ட பெரிய பெருமாள் திருவரங்க நாதன் திருவரங்கநாயகித் தாயாருடன் சேர்ந்தத் திருக்கோலத்தில் அமர்ந்து காட்சி தருவது இந்த உன்னதமான திருநாளில்தான். வருடத்தில் வேறு எந்த நாளிலும் இந்த திவ்ய தரிசனம் கிடையாது.
அண்ணலும் தாயாரும் சேர்ந்து அமர்ந்திருக்கும் இந்தத் திருக்கோத்தைத் தரிசிப்பவர் நினைப்பதெல்லாம் நடக்கும் என்பது காலம் காலமாய் வரும் நம்பிக்கை. இந்நாளில் மற்ற வைணவ ஆலயங்களிலும் மணக்கோலத்தில் தாயாரும் பெருமாளும் காட்சி தருவார்கள். மேலும், காஞ்சி வரதராஜர் ஆலயத்தில் பெருந்தேவித் தாயார் சந்நதியில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையாள நாச்சியார், ஆண்டாள் மற்றும் பெருந்தேவித் தாயார் சகிதமாக வரதராஜர் காட்சி தருவார்.
காஞ்சியில் காமாட்சி ஏகாம்பரரேஸ்வரர் திருமண விழா நடைபெறும் போது, இதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வார்கள். மதுரையைப்போலவே,, தேவேந்திரன், நான்முகன், கலைவாணி ஆகியோரின் திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் நடந்தேறின. ஸ்ரீராமன் சீதை, லட்சுமணன் ஊர்மிளை, பரதன் மாண்டவி, சத்ருக்கன் ஸ்ருதகீர்த்தி என்று தசரத மைந்தர்கள் திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நடைபெற்றன.
இதே பங்குனித் திருநாளில்தான் வடநாட்டில் ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடப்படுவது வழக்கம். பங்குனி உத்திரத்தன்று சில கோயில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். அப்போது அந்த தலங்களில் உள்ள கடல், ஏரி, ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து, அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் கல்யாண வைபோகம்தான் என்பது சத்தியமான உண்மை. அதுபோல திருமழபாடியில் நந்தி கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்தான் நடக்கும் என்பதும் உண்மை.
பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சியருளை தருபவர்கள். அதனாலேயே அன்று திருவிளக்கு பூஜை செய்து பாவங்களை விலக்கிக் கொள்கிறோம். இதனால், பகை அகற்றி புண்ணியம் பெறலாம். நம் அம்மை காரைக்கால் அம்மையார் முக்தியடைந்த தினமும் பங்குனி உத்திரம்தான். அன்று தண்ணீர்ப் பந்தல் வைத்து நீர்மோர் தானம் தருவது மிகவும் புண்ணியத்தை தரும். நாற்பத்திரண்டு ஆண்டுகள் பங்குனி உத்திர விரதம் இருந்தவர்களின் மறுபிறவி தெய்வப் பிறவியாக அமையும்.
இந்தத் திருநாளில் லோபாமுத்திரை அகத்திய முனிவரையும், பூரணா-பூஷ்பாகலா சாஸ்தாவையும், ரதி மன்மதனையும் கல்யாணம் செய்து கொண்டனர் என்று கந்தபுராணத்தில் இருக்கிறது. மஹிஷியின் அட்டகாசம் தாங்க முடியாதிருந்த வேளையில், அவள் வாங்கிய வரத்தின்படி சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த மகனால்தான் தனக்கு அழிவு எனப் பெற்றிருந்தாள். ஆனால், ஆணும் ஆணும் எப்படி சேர்வது? பிள்ளை எப்படி பிறக்கும்? எனவே, இது நடக்காத விஷயமாதலால் அவள் தன்னை அழிக்க யாருமில்லை என்று எண்ணிக் கொண்டு அளவில்லாத அட்டூழியங்கள் மஹிஷி செய்து கொண்டிருந்தாள்.
பாற்கடலில் தோன்றிய அமுதத்தை தேவர்களுக்குக் கொடுப்பதற்காக விஷ்ணு மோகினியாக அவதாரம் எடுத்த போது மஹிஷி பெற்ற வரம் வேலை செய்ய தொடங்கியது. மோகினிதேவியும் சிவபெருமானும் இணைந்தனர். இதனால் ஹரிஹரசுதனான ஐயன் ஐயப்பன் பிறந்தான். மோகினிசுதன் பிறந்த தினம் பங்குனி உத்திரமாகிய திவ்வியத் திருநாள்.
சூரபதுமனும் அவன் தம்பியரும் செய்யும் தொல்லைகள் அளவிட முடியாமல் போயிருந்தன. சிவகுமாரனாலேயே தனக்கு அழிவு வரவேண்டும் என்று வரம் பெற்றதாலும் சிவபெருமான் காலங்காலமாக அப்போது தவத்தில் மூழ்கி இருந்ததாலும் தனக்கு தற்போதைக்கு அழிவு இல்லை என்றெண்ணி அட்டகாசம் செய்து கொண்டிருந்தான் சூரன். அன்னை தாக்ஷாயிணி இமயமலைக்கரசன் மகளாய் பர்வத ராஜகுமாரியாய் பார்வதியாய் தோன்றி சிவபெருமானை மணக்கத் தவம் செய்து கொண்டிருந்தாள்.
சிவபெருமானோ அன்னை தாக்ஷாயிணியைப் பிரிந்ததால் மனம் வருந்தி யோகத்தில் நிலை நின்று விட்டார். சூரனின் அழிவு நேர வேண்டுமாயின் அன்னை பார்வதியை ஐயன் மணக்கவேண்டும். அதற்காக தேவர்களின் தூண்டுதலின் படி காமன் தன் கணைகளை ஐயன் மேல் ஏவி அவரின் நெற்றிக் கண்ணால் சுடப்பட்டு அழிந்தான். ஆனால், காமன் கணைகள் தம் வேலையைச் செய்தன. காமேஸ்வரன் அன்னை பார்வதியை மணக்க சம்மதித்துவிட்டார்.
ரதிதேவியின் வேண்டுகோளுக்கிணங்க மன்மதனும் உயிர் பெற்று எழுந்து ஆனால் உருவம் இல்லாமல் அனங்கன் ஆனான். அன்னையும் அண்ணலும் திருமணம் செய்து கொண்ட நன்னாள் பங்குனி உத்திரத் திருநாள். இதனால் இன்றும் பல சிவாலயங்களில் திருமண வைபவம் பங்குனி உத்திரத்தன்று நடைபெறுகிறது.
தைப்பூசம், கந்தர் சஷ்டி, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் என்பன போல் பங்குனி உத்திரம் என்றாலே அது முருகன் கோயில் திருவிழா நாள் என்று தான் எல்லோருக்கும் உடனே தோன்றும். எங்கெல்லாம் முருகன் கோயில் கொண்டுள்ளானோ அங்கெல்லாம் பங்குனி உத்திரம் தவறாமல் கொண்டாடப்படுவதால் பங்குனி உத்திரம் என்றாலே குமரக்கடவுளின் நினைவே நமக்கு வருகிறது.
சம்பந்தர் பதிகத்தில் பங்குனி உத்திரவிழா
சென்னை மயிலாப்பூரில் வசித்த, சிவநேசர் என்பவர் தன் மகள் பூம்பாவையை திருஞானசம்பந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க எண்ணியிருந்தார். இச்சமயத்தில் தோட்டத்தில் மலர் பறிக்க சென்ற பூம்பாவையை, பாம்பு தீண்டிவிட உயிரிழந்தாள். மகளுக்கு இறுதி காரியங்களை செய்து முடித்தார் சிவநேசர். இதையறிந்த சம்பந்தர், பூம்பாவையை எரித்த சாம்பலை கொண்டு வரச்செய்தார்.
பங்குனி உத்திரத் திருநாளில் சிவனின் திருக்கல்யாணம் நடக்குமே! அதைக் காணாமலே போகிறாயே பூம்பாவாய்! என்ற பொருள்பட பாடலைப் பாடினார்.
சிவனருளால் பூம்பாவை உயிர் பெற்றாள். "பலி விழாப் பாடல் செய் பங்குனி யுத்திர நாள், ஒலி விழாக் காணாதே போதியோ பூம்பாவாய் என்பது அந்தப்பாடலிலுள்ள வரிகள்."
பங்குனியில் நந்திக்கு திருமணம்
சிலாத முனிவர் திருவையாறு தலத்தில் உறையும் ஐயாறப்பர் பெருமான் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர். ஆண்டுகள் பலவாகியும் மகப்பேறின்மையினால் மிகுந்த வருத்தமுற்றிருந்தார் சிலாதமுனிவர். தம் உயிரான ஐயாறப்பரைப் பூசித்து கடும் தவம் இருந்தார். தனக்கு அறிவார்ந்த மகன் வேண்டுமென்று பிரார்த்தித்தார்.
ஈசன் காட்சியாய் வந்து....சிலாத முனிவரே! என்னைப் போன்றே உனக்கொரு மகன் வேண்டும் என்றால் நீ புத்திரகாமேஷ்டி யாகம் செய்ய வேண்டும். யாகம் செய்ய யாக பூமியை உழும்போது பெட்டகம் ஒன்று தோன்றும். அதில் ஒரு புத்திரன் காணப்படுவான். அவனுக்கு ஆயுள் பதினாறு மட்டுமே. அவனை எடுத்துக்கொள்! என்று அசரீரியாகத் திருவாய் மலர்ந்தருளினார். ஈசனின் அருளை எண்ணி சிலாதமுனிவர் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார்.
இறைவன் அருளிய வண்ணம் யாக முடிவில் பூமியை உழுதார். கலப்பையில் ஒரு பெட்டகம் தட்டுப்பட்டது. முனிவர் அதைத் திறந்து பார்த்தார். அதில் நான்கு தோள்களும் மூன்று கண்களும் பிறையணிந்த முடியும் கொண்டு விளங்கும் ஒரு மூர்த்தியைக் கண்டார் வணங்கினார். ஐயாறப்பர் மீண்டும் அசரீரியாய், முனிவரே! பெட்டியை மூடித்திற என்று கட்டளையிட்டருளினார்.
பெட்டகத்திலிருந்த அம்மூர்த்தி முன்னைய வடிவம் நீங்கி பிரகாசத்தோடு அழகிய குழந்தை வடிவுடன் இருந்தது. அக்குழந்தையைக் கண்டு சிலாத முனிவரும் அவரது மனைவி சித்ராவதியாரும் பெருமகிழ்ச்சியும் பேரானந்தமும் அடைந்தனர். பெற்றோர் அக்குழந்தைக்கு "செபேசுவரர்" என்று நாமகரணம் செய்து வளர்த்து வந்தார்கள். செபேசுவரர் பதினான்கு வயதிற்குள் வேதாகம சாஸ்திரங்கள் உட்பட சகல கலைகளிலும் வல்லவரானார்.
அழகிலும் அறிவிலும் சிறந்த இம்மைந்தனை இன்னும் இரண்டு வருடத்தில் இழக்க நேருமே என்று ஏங்கி வருந்திய பெற்றோருக்கு ஆறுதல் கூறிவிட்டு ஐயாறப்பர் ஆலயத்தை அடைந்தார் செபேசுவரர். இறைவனைத் தொழுது வழிபட்டார். தனக்கு நீண்ட ஆயுளைத் தந்து பெற்றோரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்தருளும்படி வேண்டினார். பின்னர் அங்கிருந்த அயனரி தீர்த்தத்திலே நீராடிய பிறகு, இடுப்பளவு நீரில் காலின் மேல் காலையூன்றி ஒற்றைக் காலில் நின்று, பஞ்சாட்சர மந்திரம் உச்சரித்தபடியே நீண்ட காலம் தவம் செய்தார்.
செபேசுவரரின் அருமைத் திருமேனியை நீரில் வாழும் ஜந்துகள் அரித்துத் தின்றன. செபேசுவரரின் உறுதியான தவத்தையும், வைராக்கியத்தையும், அன்பையும் கண்டு மகிழ்ந்த இறைவன் ஐயாறப்பர் அவருக்குக் காட்சியளித்தார். செபேசுவரர் வேண்டிய படியே நிலையான நீண்ட ஆயுளைத் தந்தருளினார். அதோடு, நிலைத்த பதினாறு பேறுகளையும் தந்தருள வேண்டும் என்று வரமாக அருளினார்.
மேலும், செபேசுவரரது புண்பட்ட உடலை நலமுறச் செய்தல் வேண்டுமெனத் திருவுளங் கொண்டு கங்கை நீர், மேகநீர், பிரமன் கமண்டலநீர், அம்மையின் முலைப்பால், இடபநந்தியின் வாய்நுரைநீர் எனும் ஐந்து நீரினாலும் தாமே அபிஷேகம் செய்தார் இறைவன். இதனால் செபேசுவரர் உடல் ஊறு நீங்கிச் சூரியன் போல் பிரகாசித்தார். சிலாத முனிவர் தம் மகனுக்குத் திருமணம் செய்விக்க எண்ணினார்.
அதற்கான நடவடிக்கை மேற்கொண்டார். வசிஷ்ட முனிவரின் பவுத்திரியும், வியாக்ரபாதமுனிவருடைய புத்திரியும், உபமன்யு முனிவரின் தங்கையுமாகிய சுயம்பிரகாச அம்மையாரை தமது புதல்வன் செபேசுவரருக்குத் திருமணம் செய்விக்க விரும்பினார். இறைவன் ஐயாறப்பர் இறைவி அறம் வளர்த்த நாயகி ஆகியோரின் முன்னிலையில், திருமழபாடி வஜ்ர தம்பேசுவரர் கோயிலில் பவித்திரமான பங்குனித் திங்களில் புனர்வசு நட்சத்திரதினத்தில் செபேசுவரர்க்கும் சுயம்பிரகாச அம்மையாருக்கும் இனிதே திருமண விழா நடந்தேறியது.
பின் செபேசுவரர் ஐயாறப்பரால் உபதேசம் பெற்று கைலாயத்தில் சிவகணங்களுக்குத் தலைவராகும் பதவியும் முதன்மைத் திருவாயிலில் இருந்து காக்கும் உரிமையும், சைவ ஆச்சார்யருள் முதல் குருவாகும் தன்மையும் பெற்றார். இறைவன் அருளால் இத்தகைய பேறு பெற்ற செபேசுவரர் திருநந்தியெம்பெருமான் என்று அழைக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து ஐயன் ஐயாறப்பரும் அம்மை அறம் வளர்த்த நாயகியும், புதுமணத்தம்பதியரான நந்தியெம்பெருமானையும் சுயம்பிரகாச அம்மையாரையும் அழைத்துக் கொண்டு சப்த ஸ்தானத் தலங்களான திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய ஊர்களுக்குத் திருவுலா சென்று வருகிறார்கள்.
இந்த உலாவில், இறைவனும் இறைவியும் கண்ணாடிப் பல்லக்கிலும், நந்தியெம்பெருமானும் சுயம்பிரகாச அம்மையும் வெட்டிவேர் பல்லக்கிலும் உலா வருகிறார்கள். இந்நிகழ்ச்சி ஏழூர் திருவிழா என்று இன்றளவும் நடைபெற்று வருகிறது. தென்மாவட்டங்களில் சாஸ்தா கோயில்கள் மிக அதிகமாக இருக்கின்றன. பங்குனி உத்திரத்தன்று இங்குக் கூட்டம் அலைமோதும்.
பங்குனி உத்திர சிறப்பு
எல்லா நட்சத்திரங்களும் சிறப்பு மிக்கவைதான் என்றாலும், குறிப்பிட்ட தமிழ் மாதத்தில் வரும் சில நட்சத்திரங்கள் இன்னும் விசேஷமானவை. வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆவணி அவிட்டம், தைப்பூசம், மாசி மகம் இப்படி. இந்த வரிசையில் பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பானது.
அப்படி என்ன சிறப்பு இந்த நாளுக்கு உள்ளது?
சந்திரன் பவுர்ணமி நாளில் கூட சிறு களங்கத்துடன் தான் ஒளி தருவான். ஆனால், பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் இருப்பதால், உத்திர நட்சத்திரத்துடன் சேர்ந்து, ஏழாம் இடமாகிய கன்னியில் நின்று, முழு கலையையும் பெற்று பூமிக்கு ஒளி வழங்குவான். அந்த பூரண பவுர்ணமி நிலாவில் களங்கத்தைக் காண முடியாது. களங்கமில்லாத சந்திர ஒளி உடலுக்கும் மனதுக்கும் நிம்மதி தரும். பல நற்பலன்களைக் கொடுக்கும். எனவே, இந்த நாள் கூடுதல் பலன்களைத் தரக்கூடிய நாளாகக் கருதப்படுகிறது.
தெய்வமணம் கமழும் எண்ணற்ற திருநாட்களுள் பங்குனி உத்திரத்திரு நாளும் ஒன்று. இத்திருநாளை தெய்வீகத்திருமண நாளாகவே இந்து சமயம் போற்றிக் கொண்டாடுகிறது. பங்குனி மாதம் பவுர்ணமி திதியோடு உத்திரம் நட்சத்திரமும் சேர்ந்து வரும் திருநாளான பங்குனி உத்திரம் திருநாளில் தான் அநேகர தெய்வீக திருமணங்கள் நடந்தேறியுள்ளன. இந்நாளைக் கல்யாண விரதம் என்றும் அழைப்பர். பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் பவுர்ணமி வரும் நாளில் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. சந்திரன் உத்திர நட்சத்திரத்தில் இருப்பதால் இவ்விழாவிற்கு இப்பெயர் ஏற்பட்டது.
இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்யத் தேர்ந்தெடுத்தது. காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது, மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது, ராமர் சீதையை மணந்தது, லட்சுமணன், சத்ருகன் ஆகியோருக்கும் திருமணம் நடந்தது, இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது, திருப்பரங்குன்றத்தில் முருகன் தெய்வானை திருமணம் நடந்தது, ஆண்டாள் ரங்கமன்னார் திருமணம் நடந்தது, அர்ச்சுனன் பிறந்தது ஆகிய அனைத்தும் நடந்தது பங்குனி உத்திர நன்னாளில்தான். சமஸ்கிருதத்தில் பங்குனி மாதத்திற்கு பல்குணன் என்று பெயரும் உண்டு.
No comments:
Post a Comment