மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் பொதுதரிசனம் செய்வதாக இருந்தால் சுமார் ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் வரிசையில் கால்கடுக்க காத்திருந்து அம்மனைத் தரிசனம் செய்யும் நிலை ஏற்படுகிறது. அதற்குக் காரணம் எப்போது பூஜை நடைபெறும், எப்போது திரை விலக்கப்படும் என்ற விவரம் அறிந்திடாததேயாகும்.
மீனாட்சியம்மனை எப்போது தரிசிக்கலாம்...
மீனாட்சியம்மனுக்கு எந்த நேரத்தில் பூஜை செய்யப்படும் என்ற தகவலினை தெரிந்துகொண்டு அந்த நேரத்தில் சுலபமாக சுவாமியையும், அம்பாளையும் தரிசனம் செய்துவிட்டு வரலாம்.
தினமும் காலை 5 மணிக்கு அம்மன் சன்னதி வாசலில் சித்தி விநாயகர், முருகனுக்கு பூஜை செய்யப்படும். காலை 5.10 மணிக்கு பள்ளியறையில் உள்ள சுவாமி, அம்மனுக்கு பூஜை செய்தவுடன், காலை 5.15 மணிக்கு, மூலஸ்தானத்தில் தீபாராதனை காட்டி, திரை விலக்கப்படும். காலை 5.30 மணிக்கு பள்ளியறையிலிருந்து சுவாமி, தனது சன்னதிக்கு புறப்படுவார்.
அங்கு காலை 5.45 மணிக்கு பூஜைகள் செய்து, திரை விலக்கப்படும். பின், பரிவார தெய்வங்களுக்கு பூஜை செய்யப்படும். காலை 6.30 மணிக்கு அம்மன் சன்னதியில் அபிஷேகத்திற்காகத் திரை போடப்படும். காலை 6.45 மணிக்கு திரை விலக்கப்பட்டு, தீபாராதனை நடக்கும். மீண்டும் திரை போடப்பட்டு காலச்சந்தி பூஜை நடத்தப்படும். பின் காலை 7.15 மணிக்கு திரை விலக்கப்பட்டவுடன், காலை 10.30 மணி வரை பக்தர்கள் அம்மனை தரிசிக்கலாம்.
சுவாமி சன்னதியிலும் இதேமுறை பின்பற்றப்படுகிறது. மீண்டும் காலை 10.30 மணிக்கு திரை போடப்பட்டு அபிஷேகம் நடத்தப்படும். காலை 10.45 மணிக்கு திரை விலக்கப்பட்டு, தீபாராதனை காட்டி, மீண்டும் திரை போடப்படும். காலை 11.15 மணிக்கு திரை விலக்கப்பட்டவுடன் அலங்கார கோலத்தில் மதியம் 12.30மணி வரை அம்மனையும், சுவாமியையும் தரிசிக்கலாம். பின் நடை சாத்தப்படும்.
பக்தர்களின் வசதிக்காக, மாலை 3.45 மணிக்கு பூஜை செய்து, 4 மணிக்கு திரை விலக்கப்படும். இரவு 7.30 மணி வரை தரிசனம் செய்யலாம். இரவு 7.30 மணிக்கு அர்த்தசாம பூஜைக்காக திரை போடப்பட்டு, இரவு 8 மணிக்கு விலக்கப்படும். அம்மனை இரவு 9.15 மணி வரை தரிசிக்கலாம். பின், பள்ளியறை பூஜை நடக்கும்.
ஒருசில நாட்களில் சற்று முன்னுக்குப் பின் மாறுதல் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால், விசேஷ நாட்களில் கூடுதல் அபிஷேகங்களும், அலங்காரங்களும் செய்யப்படுவதால் பூஜை நேரத்தில் கட்டாயம் மாறுபடும்.
No comments:
Post a Comment