கயிலாயமுடையார் திருக்கோவில் சுவாமியையும், அம்பாளையும் வழிபாடு செய்து வந்தால், பூர்வ ஜென்ம சாபங்களில் இருந்து நிச்சயம் விடுபடலாம் என பக்தர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
திருச்சி அருகே சோழமாதேவியில் உள்ளது கயிலாயமுடையார் திருக்கோவில். உய்யகொண்டான் ஆற்றின் அருகே அமைந்துள்ள இந்த ஆலயம், பல வரலாற்றுச் சிறப்புகளை தன்னகத்தேக் கொண்டது. ஊரின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் இத்தல இறைவனின் பெயர் ‘கயிலாயமுடையார்’ என்பதாகும். இறைவனின் இன்னொரு பெயர் ‘கைலாசத்து பரமேஸ்வரர்’ ஆகும். இறைவியின் திருநாமம் கற்பகாம்பாள்.
இந்த கோவிலில் தினசரி ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறுகிறது. பிரதோஷம், சிவராத்திரி, சோமவாரம் போன்ற நாட்களில் இறைவன் மற்றும் இறைவிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. மார்கழி மாத தனுர் பூஜை இங்கு 30 நாட்களும் நடைபெறுகிறது.
இத்தலத்தில் அருள்பாலிக்கும் சுவாமியையும், அம்பாளையும் வழிபாடு செய்து வந்தால், பூர்வ ஜென்ம சாபங்களில் இருந்து நிச்சயம் விடுபடலாம் என பக்தர்கள் உறுதியாக நம்புகின்றனர். இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 9 மணி வரை திறந்திருக்கும்.
அமைவிடம்: திருச்சி - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் உள்ள திருவெறும்பூரில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோழமாதேவி என்ற கிராமத்தில் உள்ளது இந்த கயிலாயமுடையார் ஆலயம்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவெறும்பூர் சென்று அங்கிருந்து சூரியூர் அல்லது துப்பாக்கி தொழிற்சாலை செல்லும் நகர பேருந்தில் பயணித்து சோழமாதேவி பேருந்து நிலையத்தில் இறங்க வேண்டும். அந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது.
No comments:
Post a Comment