Saturday, 31 March 2018

இருமத்தூரில் பிரசித்தி பெற்ற கொல்லாபுரிஅம்மன் கோவில்

இருமத்தூரில் பிரசித்தி பெற்ற கொல்லாபுரிஅம்மன் கோவில்

ஆற்றங்கரையில் அமைந்துள்ள அழகான கிராமம்... எங்கு பார்த்தாலும் பசுமையாக காட்சி அளிக்கும் தோட்டங்கள்... அமைதியான இயற்கையான சூழலில் நம்மை வரவேற்கிறது இருமத்தூர்.

முன்னோர் வழிபாடு

தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கிராமம். தமிழகத்தில் பாயும் முக்கிய ஆறுகளில் ஒன்றான காவிரியில் தண்ணீர் வற்றினால் கூட இருமத்தூர் வழியாக ஓடும் தென்பெண்ணையாற்றில் தண்ணீர் வற்றுவது அரிது. ஆண்டு முழுவதும் இந்த ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் இருமத்தூர் முன்னோர் வழிபாட்டுக்கு பிரசித்தி பெற்ற இடமாக விளங்குகிறது.

முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காகவும், இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு நடத்துவதற்காகவும் இருமத்தூர் தென்பெண்ணையாற்றுக்கு தினமும் ஏராளமானவர்கள் வருகிறார்கள். குறிப்பாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இங்கு அதிக அளவில் திரண்டு வந்து புனித நீராடி முன்னோர்களை வழிபடுகிறார்கள். விவசாயம் பிரதான தொழிலாக உள்ள இந்த கிராமத்தின் பெரியவர்கள் கூறியதாவது:-

மாதேஸ்வரன் கோவில்

இருமத்தூரில் தென்பெண்ணையாற்றின் கரையில் 1888-ம் ஆண்டு கட்டப்பட்டுள்ள மாதேஸ்வரன் கோவில் உள்ளது. மாடுகளை வளர்க்கும் விவசாயிகள் அவற்றிற்கு நோய்கள் ஏற்படாமல் இருக்கவும், சினையாக உள்ள மாடுகள் பெண் கன்றுகளை பிரசவிக்க வேண்டியும் இந்த கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த வேண்டுதல் நிறைவேறினால் கன்று குட்டிகளை நேர்ந்து விடும் வழக்கமும் உள்ளது. மேலும் இங்கு கொல்லாபுரியம்மன் கோவில் உள்ள இடத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சுயம்பு வடிவில் அம்மன் சிலை உருவானதாக கூறப்படுகிறது.

கேரள மாநிலத்தில் உள்ள பகவதி அம்மன் கோவிலுடன் இந்த கோவிலுக்கு வரலாற்று ரீதியான தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கொல்லாபுரியம்மன் கோவில் அமைந்துள்ள இந்த பகுதி பிரசித்தி பெற்றதற்கு முக்கிய காரணமாக அமைந்த வரலாற்று நிகழ்வு ஒன்று உள்ளது. அதாவது சென்னை, பெங்களூரு மற்றும் சேலத்துக்கு மையப்பகுதியில் அமைந்துள்ள இருமத்தூர் மேட்டுப்பகுதியாகும். இயற்கையாகவே விமானங்கள் இறங்கி, ஏற வசதியாக உள்ள பகுதி என்பதால் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் விமான தளம் அமைக்க இங்கு இடம் தேர்வு செய்யப்பட்டது.

அம்மன் சிலையை எட்டி உதைத்த ஆங்கிலேயன்

தற்போது கொல்லாபுரியம்மன் கோவில் அமைந்துள்ள இடத்தின் அருகே கிழக்குப்பகுதியில் விமானங்கள் இறங்கி ஏறுவதற்கான ஓடு தளம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியை மேற்பார்வையிடுவதற்காக இந்த பகுதியில் வந்து தங்கிய ஒரு ஆங்கிலேய அதிகாரி, அம்மனை மக்கள் கூட்டம், கூட்டமாக சென்று வழிபடுவதை அறிந்து ஆச்சரியமடைந்தான். அம்மனின் கற்சிலையில் இறை சக்தி இருக்குமா? என்ற கேள்வி அவனுடைய மனதில் எழுந்தது. இதனால் பொதுமக்கள் அம்மனாக வழிபட்ட கற்சிலை உள்ள இடத்தை நேரில் பார்வையிட்ட அவன், அந்த சிலையை தனது காலால் எட்டி உதைத்தான். இதைப் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் அந்த ஆங்கிலேய அதிகாரிக்கு தீராத வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. விமானதளம் அமைக்கும் பணியை மேற்பார்வை செய்ய வந்த அவன் அம்மன் கோபத்துக்கு ஆளாகி உயிரிழந்தான். இறை நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட ஆங்கிலேய அதிகாரிக்கு அம்மன் தண்டனை கொடுத்து பழி தீர்த்ததாகவே மக்கள் கருதினார்கள். இந்த சம்பவம் விமான தளம் அமைக்க இருமத்தூர் பகுதிக்கு வந்த ஆங்கிலேயர்களை அதிர வைத்தது. அச்ச உணர்வையும் ஏற்படுத்தியது. இதனால் விமானதளம் அமைக்கும் பணியை தொடக்க கட்டத்திலேயே நிறுத்திய ஆங்கிலேயர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். பின்னர் இங்கு விமான தளம் அமைக்கும் முடிவையே கைவிட்டு விட்டனர்.


பக்தர்களுக்கு குறி சொல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள முள்ளால் ஆன மேடை

பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்காக கொல்லாபுரி அம்மன் கோவிலில் நூதன வழிபாடு நடத்தப்படுகிறது. கோவிலின் தெற்கு பகுதியில் தர்மபுரி- திருப்பத்தூர் சாலையின் ஓரத்தில் ஒரு பழமையான புளிய மரம் உள்ளது. திருட்டு போன பொருட்கள் கிடைக்க வேண்டி கொள்ளும் பக்தர்கள் கோழிகளை உயிருடன் கயிற்றில் கட்டி இந்த மரக்கிளைகளில் தொங்க விட்டு விடுகிறார்கள். இவ்வாறு கட்டப்பட்ட கோழிகள் இறந்து அவற்றின் உடல் காய்ந்து போவதற்குள் திருட்டு போன பொருட்கள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது.

இவ்வாறு திருட்டு போன பொருட்கள் கிடைத்தால் அம்மனுக்கு பொங்கல் வைத்தும், ஆடுகளை வெட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் உள்ளது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த கோவில் வளாகத்தில் ஏராளமான ஆடுகள், கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். வாகனங்களில் செல்லும்போது கொல்லாபுரிஅம்மன் கோவிலில் வழிபட்டால் வாகன விபத்துகள் ஏற்படாது என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் சரக்கு வாகனங்கள் உள்பட அனைத்து விதமான வாகனங்களையும் கோவில் வளாகத்தின் முன்பு நிறுத்தி சிறப்பு பூஜை நடத்திவிட்டு செல்லும் வழக்கம் உள்ளது.

முள்ளால் ஆன மேடை

இந்த கோவிலின் அருகே உள்ள வளாகத்தில் ஒரு மாடம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் கரடுமுரடான காரா முள்ளால் ஆன மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த முள் மேடையில் அமர்ந்து பக்தர்களுக்கு குறி சொல்லும் வழக்கம் கடந்த 2 தலைமுறைகளாக நடைமுறையில் உள்ளது. இந்த கோவிலில் பூர்வீகமாக பூஜை நடத்திய குடும்பத்தை சேர்ந்த ஒருவர் திங்கட்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் இங்குள்ள முள் மேடை மீது அமர்ந்து தியானத்தில் ஈடுபடுவார். பின்னர் அங்கு குறி கேட்க வந்து அமர்ந்திருக்கும் நூற்றுக்கணக்கானவர்களில் யார், எந்த பிரச்சினைக்காக வந்திருக்கிறார்கள்? என்பதை கூறி அவர்களை அழைத்து பிரச்சினை தீர்வதற்கான வழிபாட்டு முறை குறித்து கூறுவது வழக்கம்.

இருமத்தூரில் திப்பம்பட்டி கூட்டுரோடு அருகே உள்ள கோட்டை என்னும் பகுதி சங்க காலத்திற்கு முன்பே மக்கள் அதிக அளவில் வசித்த பகுதியாகும். பழங்காலத்தில் போர் வீரர்கள் இந்த பகுதியில் தங்கி போர் பயிற்சிகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. முன்பு இந்த பகுதியில் கோட்டை போன்ற மதில்சுவர்கள் இருந்தன. காலப்போக்கில் இவை சிதிலமடைந்து விட்டன. போரில் இறக்கும் வீரர்களை அடக்கம் செய்யும் இடமாகவும் விளங்கிய இந்த பகுதியில் ஏராளமானோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

போர் வீரர்கள் நினைவிடம்

போர் வீரர்கள் நினைவாக அடையாள கற்கள் வைக்கப்பட்டு நினைவு சின்னம் போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வீரர்களின் சிறப்பை போற்றும் நடுகல் வைக்கும் பழக்கம் இந்த பகுதியில் இருந்தே தொடங்கியிருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இந்த பகுதியில் பழங்காலத்தில் அடக்கம் செய்யப்பட்ட போர்வீரர்களின் வீரத்தை போற்றும் வகையில் இருமத்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 12 கிராமங்களை சேர்ந்த மக்கள் 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த பகுதிக்கு ஊர்வலமாக சென்று போரில் இறந்த மூதாதையருக்கு சிறப்பு வழிபாடு நடத்துகிறார்கள்.

இருமத்தூர் தென்பெண்ணையாற்று கரையின் தெற்கு பகுதியில் காவல் தெய்வமாக வணங்கப்படும் வேடியப்பன் சிலை உள்ளது. வெப்பாலை மரத்தின் கிளையை பிடித்தவாறு வேடியப்பன் சீடர்களுடன் இருப்பது போன்று இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் அருகே மகாபாரத இதிகாசத்தில் வரும் போத்துராஜா சிலை அமைந்துள்ளது. 11-ம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் இந்த சிலைகள் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

No comments:

Post a Comment