Thursday 22 March 2018

சிவலோக பதவி தரும் சிவனின் திருச்சடை

சிவலோக பதவி தரும் சிவனின் திருச்சடை

ஒவ்வொரு சடையும் ஒவ்வொரு சிவலிங்கம். சடைமுடியை தரித்தவருக்கு முன்பாக ஆயிரம் தலைமுறையினரும், பின்பு வரும் ஆயிரம் தலைமுறையினரும் சிவலோக பதவியைப் பெறுவார்கள்.

ஒருமுறை சிவபெருமானிடம், ‘சுவாமி! பிறவி நிலை நீங்கி முக்தி பெறும் உயிர்களுக்கு, நீங்கள் அருளும் ஆனந்த தாண்டவத்தை திருப்பேரூரில் அருளி செய்ததற்கு காரணம் என்ன?’ என்று கேட்டாள் பார்வதி தேவி.

அதைக் கேட்டு அகமகிழ்ந்த ஈசன், ‘தேவி! கோ முனியும், பட்டி முனியும் பேரன்புடன் சடைமுடி தரித்து விபூதி, ருத்ராட்சம் அணிந்து, வில்வ இலைகளைக் கொண்டு உபசாரம் செய்து, பல நீண்ட காலம் வேண்டி வணங்கி கேட்டுக்கொண்டதால் யாம் அந்த ஆனந்த தாண்டவத்தை பேரூர் தலத்தில் அருளிச் செய்தோம்’ என்றார்.

உடனே பார்வதி, ‘எம்பெருமானே அந்த திருச்சடைமுடியின் மகிமைகளை யாம் அறிந்து கொள்ள அருளிச் செய்யுங்கள்’ என்றார்.

‘தேவி! எமது வேடங்களில் சடைமுடியே சிறந்தது. ஒவ்வொரு சடையும் ஒவ்வொரு சிவலிங்கம். சடைமுடியை தரித்தவருக்கு முன்பாக ஆயிரம் தலைமுறையினரும், பின்பு வரும் ஆயிரம் தலைமுறையினரும் சிவலோக பதவியைப் பெறுவார்கள். திருச்சடையில் பொருந்திய ஒரு துளி நீர், ஒருவர் மீது படுமானால், அந்த நபரின் துன்பங்களும், பாவங்களும் நீங்கும்’ என்று அருளினார் சிவபெருமான்.

மேலும் அவர் கூறுகையில், ‘விபூதி தரிக்காமல் தவம் இருப்பவர், எத்தனை ஆண்டுகள் தவம் இருந்தாலும் அந்தத் தவத்திற்கான பலன் கிடைக்காது. திருநீறு தரித்து தவம் இருத்தலே சிறந்தது. ருத்ராட்சம் அணிந்தாலோ அல்லது மந்திரங்கள் சொல்லி ருத்ராட்ச மாலையில் உள்ள மணிகளை உருட்டியபடி ஜெபித்தாலோ பலன் உண்டு. வில்வம் கொண்டு என்னை பூஜித்தாலும் எனதருள் கிடைக்கும்’ என்றார்.

No comments:

Post a Comment