Thursday 29 March 2018

பங்குனி ஹஸ்தத்துப் பரமன்

Thiruvarangathamuthanar_(1)_-_Copy

'கோயில் நம்பி' என்றும்  'கோயில் பிள்ளை' என்றும் அழைக்கப்பட்ட ஒருவர் ஸ்ரீரங்கம் கோயிலை மிகுந்த திறனுடன் நிர்வகித்து வந்தார். கோயில் புராணம் வாசிக்கும் பணியையும், கோயில் சாவியை வைத்துக்கொள்ளும் பொறுப்பையும் செய்துவந்தார். அவரது இயற்பெயர் என்னவென்று எவருக்கும் தெரியாது. காஞ்சியிலிருந்து ஆளவந்தாருக்கு பிறகு ராமானுஜர் ஸ்ரீரங்கம் வந்து கோவிலின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். கோயில் நடைமுறையில் பல  நிர்வாக மாற்றங்களை ஏற்படுத்தினார்.

ராமானுஜரின் செய்கைகளால் தங்கள், நிர்வாக உரிமையில்  அவர் குறுக்கிடுவதாகக் கருதினர். முரண்பாடுகள் உண்டாகின. பலர் ராமானுஜருக்கு பல வகைகளில்  இடையூறு செய்தனர். கோவிலின்   நடைமுறைகளில்  பலகாலமாய்  பழகியிருந்த பெரிய கோயில் நம்பி தடையாக இருப்பதாக பலர் ராமானுஜரிடம் வாதிட்டனர், அவரை ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்திலிருந்து  வெளியேற்றாவிட்டால், ராமானுஜரின் எண்ணம் ஈடேறாது என்ற தகவலை    மனதில் ஊன்றினர். அவரும் கோவில் பிள்ளையை வெளியேற்ற நினைத்தார்.. அவர்கள்  ஒன்று நினைக்கப் பெருமாளின் திருவுள்ளம் வேறு ஒன்று நினைத்தது. 

ராமானுஜர்  ஒரு நாள் பெருமாள் புறப்பாட்டிற்காகக் காத்திருக்கும் போது, மண்டபத்திலேயே சற்றே கண் அயர்ந்தார்.  அரைகுறை தூக்கத்தில், பெருமாள் ஸ்ரீவைணவராய் தோன்றி  "கோயில் நம்பி நீண்ட காலமாக என்னையே நம்பி என்னுடன்  இருக்கிறார். அவரை வெளியேற்ற வேண்டாம்” என்று சொல்லி மறைந்து போனார்.

ராமானுஜரின் பிரதம சீடர்  மற்றும்  காரியதரிசி போல இருந்தவரான கூரத்தாழ்வானிடம் பல பணிகளுக்கு இடையூறு செய்யும்  கோயில் நம்பியை வெளியேற்றுவது பெருமாளுக்கு பிடிக்கவில்லை போலத் தெரிகிறது.  நாம் காஞ்சிபுரத்து பெருமாள் கோவில் கைங்கரியத்துக்குப் திரும்பிடலாமா என்றார். “பெருமாள் அப்படிச் சொன்னால்  நிச்சயம் பெரிய கோயில் நம்பியை மனம் மாற்றி விடுவார்” என்று கூரத்தாழ்வான் பதிலுரைத்தார். “அப்போது கோவில் நம்பியை திருத்தும் பணியை நீங்களே மேற்கொள்ளுங்கள்” என்ற பொறுப்பை அவரிடமே விட்டுவிட்டார். 

கூரத்தாழ்வான், பெரிய கோயில் நம்பியிடம் மெல்ல நட்புக் கொண்டு, உடையவரின்  பெருமை பண்களைச்  சொல்லி அவர்  மனத்தைப் பக்குவப்படுத்தினார்.  மெல்லமெல்ல கோயில் நம்பிக்கு  உடையவர் மீது பிடிப்பு உண்டாகி பக்தியாக மாறியது. 

ஒருநாள் கோவில் நம்பி தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ள  ராமானுஜரை வேண்டினார்.  "உங்களை மனம் மாறச் செய்த கூரத்தாழ்வானே உங்களுக்கு உரிய ஆச்சாரியன்" என்றார். mஇவரது  இலக்கிய அறிவையும், வாக்கு வன்மையையும் பாராட்டி 'அமுதன்' என்ற திருநாமத்தைச்  சூட்டினார் அதனால் "திருவரங்கத்தமுதனார்" என்றும் 'பிள்ளை அமுதனார்' என்றும் இவரை அனைவரும் அழைக்கத் தொடங்கினர். 

ஐப்பசி மாதம் அமுதனாருடைய தாயார் வைகுண்டபதவி அடைந்து, 11-ம் நாள் காரியத்துக்கு தம் உறவினர்கள் அல்லாது வேறு ஒரு நல்ல ஸ்ரீவைணவரை ராமானுஜரிடம் சொல்லி உணவு உண்ண அமர்த்த விரும்பினார். அன்று பரிமாறப்படும் உணவு இறந்து போனவரின் திருப்திக்கு ஏற்ப படைப்பதாக்க வைத்துக்கொள்ளப்படும். அன்று உண்பவரை சாப்பிட்டு முடித்த பிறகு உண்டது திருப்தியா எனக் கேட்பார் "திருப்தியாக உண்டேன்" என்று சொல்லி எழுந்தால், இறந்தவருடைய ஆத்மா திருப்தி அடைந்து மோட்சம் போகும் என்பது காலம் காலமாக வரும் நம்பிக்கை.

ராமானுஜர் கூரத்தாழ்வானை, அமுதனார் வீட்டுக்கு 11-ம் நாள் உணவு உண்ணப் பணித்தார். தனது ஆசாரியரே வந்ததால் அமுதனாருக்கு மிக்க மகிழ்ச்சி  அன்று கூரத்தாழ்வான் உணவு உட்கொண்ட பின் 'திருப்தி' கூறாமல் இருந்தார். அமுதனார் வேறு என்ன வேண்டும் என்றார்.

அமுதனாருடைய கோயில் புராணம் வாசிக்கும் பணியையும், கோயில் சாவி கொத்தையும் காணிக்கையாக கேட்டார். தன் குரு கேட்டு கொடுக்க மாட்டேன் எனச் சொல்லாமல் கொடுத்து அதனையும் கூரத்தாழ்வான் பெற்றார். அதன் பின்னரே "த்ருப்தியோஸ்மி" என்று கூறினார். அவற்றை உடையவரிடம் சமர்ப்பித்தார். ராமானுஜரும் மகிழ்ந்தார். 

அமுதனார் அதன்பின், கோயில் பணிகளில் அதிக ஈடுபாடுகொள்ளாமல் இருந்தார். ராமானுஜர் அனுபவத்துக்கும் திறமைக்கும் பொறுப்புக் கொடுத்து மதிப்பளிக்க நினைத்தார். நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தை ஸ்ரீரங்கத்தில் அரையர்கள் இசையோடு சேவித்த பின், அரையர்களுக்கு பெருமாள் பிரசாதங்கள் மற்றும் மரியாதையையும் கொடுத்து,  அவர்களைப் பல்லக்கில் ஏற்றிக்கொண்டு வீதி உலாவாக வீட்டில் விட்டு விட்டு வரும் பிரம்ம ரத மரியாதையைப் பெற்றுக்கொள்வார்கள். 

ராமானுஜர் 'திருவரங்கப்பெருமாள் அரையரிடம்' இயற்பா சேவிப்பதை மட்டும்  பெற்று பெரிய பெருமாள் சன்னதியில் அமுதனாரை இயற்பாவைச் சேவிக்க நியமனம் செய்தார். அமுதனாருக்கும் பிரம்ம ரத மரியாதையையும் கௌரவத்தையும் சேர்த்துத் தந்தார். அமுதனார் தனக்கு ஸ்ரீகோசத்தைப் (ஓலையை) பார்க்காமல் சேவிக்க வராது என்று ராமானுஜரிடம் சொன்னார். காரேய் கருணை ராமானுஜரோ அமுதனார் ஓலை பார்த்துச் சேவிக்க விசேஷ அனுமதியும் அளித்தார்.

அமுதனார் ராமானுஜர் மீது கொண்ட பற்றால்  ராமானுஜரைப் போற்றி சில பிரபந்தங்களை செய்து அவற்றை ராமானுஜர் முன் வைத்தார். அதை படித்துப் பார்த்த ராமானுஜர் தன்னைப் பற்றி அளவுக்கு அதிகமாக புகழ்ந்து இருப்பது தனக்கு பிடித்தமில்லை என்று அந்த ஓலைக்கட்டை கிழித்துப் போட்டுவிட்டார். வருத்தப்பட்ட திருவரங்கத்தமுதனார் என் கவிதையின் கருத்துக்கும் சொல்லுக்கும் பொருளுக்கும் தகுதியானவர். 

இதைப் போல் செய்து விட்டாரே என்று  கூரத்தாழ்வானிடம் கூறினார். அவர் அறிவுரைப்படி ஆழ்வார்களிடத்திலும் திவ்ய தேசங்களிடத்திலும் ராமானுஜர் கொண்ட பற்றைத் தெளிவுபடுத்தினார்.  ராமானுஜர் நூற்றந்தாதியை புதியதாக அமுதனார் எழுதினார். இன்னொரு முறை இப்போதுள்ள அந்தாதி வடிவை எழுதிக் கொண்டு போய் முயற்சித்தார். ஒவ்வொரு பாடலிலும் முதல் இரண்டு வரிகளில் ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியார்களின் பெருமைகளைப் பாடினார். பின் இரண்டு வரிகளில் அவர்களின் ஆசியும் தொடர்பும் கொண்ட ராமானுஜரின் பெருமையை எழுதினார். அதை ராமானுஜர் முன் வைத்தார். அவர் எடுத்துப் படிக்கக்கூடவில்லை. 

ஒருநாள்  ஸ்ரீரங்கத்தில் உள்ள காட்டு அழகிய சிங்கர் சன்னதியில் அமர்ந்து அனைவருக்கும் தாம் இயற்றிய நூலின் சிறப்புகள் ராமானுஜர் வாழ்வோடு வைத்துக் கொண்டு  விளக்கிக்கொண்டிருந்தார். தற்செயலாக ஸ்ரீ ராமானுஜர் அங்கு வந்தார். அவரும் நூற்றந்தாதியை முழுமையாகக் கேட்டார். மறுத்துச் சொல்ல முடியாதபடி ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியார் பெருமை கூறப்பட்டிருந்ததை ஏற்றுக்கொண்டார். இதை பிரபன்ன காயத்திரி என்றும் சொல்லுவர். 

பெருமாள் உலாவில் உடன் செல்லும் பழக்கம் உடையவருக்கு உண்டு. இந்த சம்பவத்திற்குப் பிறகு, சித்திரை மாதம் 11ம் திருநாளில் ராமானுஜர் கனவில் பெருமாள் தோன்றி "இன்று  தாள வாத்தியங்கள் கூட வர வேண்டாம்" என்று சொல்லிவிட்டார். அன்று பெருமாள் வீதி புறப்பாட்டின் போது வெறும் தீப்பந்தங்கள் மட்டும் இருக்க, இயற்பாவுடன் ராமானுஜ நூற்றந்தாதியை இயலாகச் சேவித்ததை, பெருமாள் கேட்டுக்கொண்டு சென்றார். (இந்தப் பழக்கம் இன்றும் அங்கு உண்டு).

ராமானுஜ நூற்றந்தாதியை இயலாகச் சேவிக்கும் போது கோஷ்டிக்கு வெகு அருகில் பெருமாள் எழுந்தருள்வார். அதற்குக் காரணம், இயல் கோஷ்டியில் தன்னையும் ஒருவராக ஆக்கிக்கொள்கிறார் எனப்படுகிறது. ராமானுஜ நூற்றந்தாதியை இயலாகச் சேவிக்கும்போது உடையவரின் பெருமையையும் நம்பெருமாள் செவிசாய்த்துக் கேட்கிறார் என்பதால் வாத்தியங்கள் இசைக்கப்படுவதில்லை என்பர். இன்றும் திருவரங்கம் கோவில் ரங்கநாதர் சன்னதியில்  இயற்பா சாற்றி முடித்த பின், அதனுடன் நூற்றந்தாதியும் சேவிக்கப்படுகிறது.

பிற்காலத்தில் நாலாயிரத்தைத் தொகுக்கும் போது இயற்பாவோடு ராமானுஜ நூற்றந்தாதியை சேர்த்துள்ளார்கள். ராமானுஜ நூற்றந்தாதியின் 108 பாட்டுக்களைச்  சேர்த்தால்தான் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தின் பாட்டுகள் எண்ணிக்கை மொத்தம் 4000 என ஆகும். 

திருவரங்கத்திலேயே இருந்தவராதலால் ஊர் பெயரோடு அமுதன் என்ற பெயர் சேர்த்து திருவரங்கத்தமுதனார் என்று வழங்கப்பட்டுள்ளது. கிடைக்கும் ஆதாரங்கள் அடிப்படையில் மூங்கில்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர் எனப்படுகிறது. அவர் எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்ற குறிப்பு இல்லை. ஆனால் அவர் ராமானுஜரைக் காட்டிலும் மூத்தவர் என்ற குறிப்புக் கிடைக்கிறது. அவர் 108 ஆண்டு காலம் வாழ்ந்தார் என்றும் சொல்லப்படுகிறது. 

நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் இவர் பாடல் சேர்க்கப்பட்டுள்ளதால் இவரை ஆழ்வார்கள் வரிசையில் வைக்கலாம், உடையவரின் சீடராக இருந்த காரணத்தால் ஆசாரியர்கள் வரிசையிலும் வைக்கலாம் எனச் சொல்லுவோர்களும் உண்டு. எங்கிருந்தாலும் இவருக்கு வைணவத்தில் ஒரு இடம் உண்டு, திருவரங்கத்தில் மட்டும் ஸ்ரீ சுதர்சனர் சன்னதியில் இந்த ராமானுஜதாசர் சிலா உருவில் இருக்கிறார். இவருக்கு வேறு எங்கும் விக்ரக வழிபாடு என்பது இல்லை எனவும் சொல்லப்படுகிறது.

எதிர்வரும் பங்குனி ஹஸ்தம் 31.03.2018 இவரது அவதார திருநட்சத்திர தினமாகும். 

No comments:

Post a Comment