நம் உயிரைப் பறிக்க எமன் என்றொருவன் இருக்கிறான். பேச்சுவழக்கில் எமன் என்று குறிப்பிட்டாலும், "யமன்' என்பதே சரியாகும். இவன் விவஸ்வானுக்கும், சரண்யூவிற்கும் பிறந்தவன். இவனுடைய தங்கை "யமி'. இவளே யமுனை என்னும் நதியாக ஓடி வளம் சேர்க்கிறாள். இரட்டையர்களாகப் பிறந்த யமனும், யமியும் மனிதகுலத்தின் முதல் பிறவிகளாக உலகில் இருந்தார்கள். தீக்கடவுளான அக்னிதேவன் யமனுக்கு மிக நெருங்கிய நண்பன். உடம்பைத் தீயால் எரித்தபின், ஆன்மாவை எமனிடம் சேர்ப்பவன் அக்னியே. ஒருமுறை பணிச்சுமை காரணமாக அக்னிதேவன் சோர்வடைந்து கடலுக்குள் ஒளிந்து கொண்டான். தீயால் நடைபெறும் யாகம், ஹோமம் முதலிய எச்செயலும் இல்லாமல் உலகமே ஸ்தம்பித்துப் போனது. தேவர்கள் யாவரும் அக்னியை தேடிஅலைந்தனர். அக்னியின் நண்பனான எமனே, அவனை மீண்டும் கண்டுபிடித்து கொண்டு வந்து சேர்த்தான். யமனின் தூதர்களாக இருநாய்கள் உள்ளன. அவை இந்திரனின் நாயான சரமாவின் இரு குட்டிகளாகும். சரமாவின் இரு குட்டிகளும் கரும்பழுப்பு நிறத்தில் நான்கு கண்களுடன் இருப்பதாகவும், எமலோகத்திற்கு செல்லும் பாதையை உயிர்களுக்கு காட்டுவதாகவும் ரிக்வேதம் குறிப்பிடுகிறது.
Saturday, 30 September 2017
ஒருமுறை நவக்கிரகங்களில் ஒன்றான சனி ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்ய ஆயத்தமானார். இதனால், நாட்டில் கடும்பஞ்சம் உருவாகும் என்பதை, ஜோதிடர்கள் மூலம் அறிந்த தசரத சக்கரவர்த்தி, சனீஸ்வரனுடன் போருக்குப் புறப்பட்டார். சூரிய மண்டலத்திற்கு மேலே இருக்கும் நட்சத்திரமண்டலத்திற்கு சென்றார். சனீஸ்வரர் அவரிடம், "" தசரத சக்கரவர்த்தியே! வாரும்! உம் தவபலத்தையும், வீரத்தையும் பாராட்டுகிறேன். வேண்டும் வரத்தை தருகிறேன்,'' என்றார். அவரிடம் தசரதர், ""சனீஸ்வரரே! ரோகிணி நட்சத்திரத்திற்கு செல்ல வேண்டாம்,'' என்று வேண்டிக்கொண்டார். சனீஸ்வரரும் சம்மதித்து அருள்புரிந்தார். அப்போது அவரைப் போற்றி தசரதர் பாடிய சனி ஸ்தோத்திரம் புகழ்பெற்றதாகும்.
சூரியன், பார்வதி, திருமால்,விநாயகர், சிவன் ஆகிய ஐந்து தெய்வங்களையும் ஒரே இடத்தில் வழிபடும் முறைக்கு "பஞ்சாயதன பூஜை' என்று பெயர். நர்மதை நதியில் ஓங்கார குண்டத்தில் கிடைக்கும் கல்லை சிவனாகவும், சுவர்ணமுகி ஆற்றில் கிடைக்கும் கல்லை சக்தியாகவும், நேபாளத்தில் இருக்கும் கண்டகியில் கிடைக்கும் சாளகிராமக் கல்லை விஷ்ணுவாகவும், தஞ்சாவூர் வல்லத்தில் கிடைக்கும் ஸ்படிகத்தை சூரியனாகவும், கோணபத்ர ஆற்றில் கிடைக்கும் கல்லை கணபதியாகவும் பூஜிப்பர். ஆனால், உலகில் உள்ளது ஒரே பரம்பொருள் தான். அதையே பலரும் பலவிதமாகச் சொல்கிறார்கள்' என்பதை "ஏகம் ஸத் விப்ராம் பஹுதா நாதாந்தி' என்று வேதம் குறிப்பிடுகிறது.
தலையெழுத்தை மாற்றும் பரிகாரம் ஒருமனிதனுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை "அவனவன் தலையெழுத்துப்படி நடக்கும்' என்று குறிப்பிடுவர். பிறந்த நட்சத்திரம், திதி, வாரம், கரணம், யோகம் ஆகிய ஐந்தும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த ஐந்தும் சேர்ந்ததை "பஞ்சாங்கம்' என்று குறிப்பிடுவர். தலையெழுத்தை படைப்புக்கடவுளான பிரம்மாவே தன் கையால் நம் தலையில் எழுதுவதாக ஐதீகம். அதனால் இதற்கு "பிரம்ம லிபி' என்றும் பெயருண்டு. இதன்படி நவக்கிரகங்களும் மனித வாழ்வில் நன்மையோ, தீமையோ ஏற்படுத்துகின்றன. இறைபக்தியால் மட்டுமே பிரம்மலிபியை மாற்ற முடியும். அருணகிரிநாதர் முருகப்பெருமானைப் போற்றும்போது, "நின் கால்பட்டு அழிந்தது அயன்(பிரம்மா) கையெழுத்தே' என்று குறிப்பிடுகிறார். இதனால் தான், "பக்திக்கு மிஞ்சிய பரிகாரம் இல்லை' என்று சொல்லுவர்.
வேடுவனாக வாழ்ந்த வால்மீகி சிவபெருமானை நோக்கி தவம் இருந்த தலம் திருப்புத்தூர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் உள்ளது. கொன்றை வனமாக இருந்த இங்கு, புற்றின் அடியில் இறைவன் காட்சியளித்தார். அதனால், இவ்வூருக்கு திருப்புற்றூர் என்ற பெயர் உண்டானது. பின் திருப்புத்தூர் என மருவிவிட்டது. இங்குள்ள மூலவருக்கு "திருத்தளிநாதர்' என்பது திருநாமம். இங்குள்ள யோகபைரவர் சந்நிதி மிகவும் புகழ்பெற்றது. கால்பெருவிரலைத் தரையில் ஊன்றி மேற்குநோக்கி காட்சி தருகிறார். சூரபத்மன் தேவலோகத்தின் மீது படையெடுத்து, இந்திரன் மகன் ஜெயந்தனை சிறையில் அடைத்ததோடு, பூதஉருவத்தையும் பெற்றான். ஜெயந்தன் இங்குள்ள யோகபைரவரை வழிபட்டு தோஷம் நீங்கப்பெற்றான். ஜெயந்தனுக்கும் தனி சந்நிதி இங்குள்ளது. தேய்பிறை அஷ்டமி நாட்களில் யோகபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடக்கும். ஞாயிறு மாலை ராகுகாலம் இவருக்கு உகந்தது. எதிரிகளின்தொல்லை, வழக்கு, கடன்தொல்லை ஆகியவற்றில் இருந்து விடுபட இவரை வழிபடுவர்.
சிவபெருமானை முழுமுதற்கடவுளாகப் போற்றுபவை பன்னிருதிருமுறைகள். இவை சிவனடியார்களால் பாடப் பட்டவை. இப்பாடல்களில் ஐந்து நூல்களை மட்டும் "பஞ்சபுராணம்' என்று போற்றுவது மரபு. கோயில்களில் சிவபெருமானுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெறும்போது பன்னிருதிருமுறைகளைப் பாட பொறுமையோ, நேரமோ, மனமோ இல்லாமல் இருந்தால் பஞ்சபுராணத்தையாவது அவசியம் ஓதுவார்கள் ஓதவேண்டும் என்ற விதியை பெரியவர்கள் ஏற்படுத்தினர். தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகிய ஐந்து நூல்களில் இருந்து ஒவ்வொரு பாடலைத் தேர்ந்தெடுத்துப் பாடுவதே "பஞ்சபுராணம் ஓதுதல்' ஆகும். ஐந்தெழுத்து மந்திர நாயகனான சிவனை பஞ்சபுராணம் என்னும் "அஞ்சுபாடல்' பாடி வழிபட்டால் கஷ்டங்கள் "பஞ்சாய்' பறந்திடும்எளிதாக அருள்பெறலாம் என்பர்.
மகாவிஷ்ணுவின் திருமேனி கார்மேகம் போல கருமை நிறம் கொண்டது. ஆனால், இரண்டு கண்கள் மட்டும் தாமரை மலர் போல சிவந்திருக்கின்றன. இதனை திருப்பாவை பாசுரத்தில் ஆண்டாள், "கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்' என்று குறிப்பிடுகிறாள். கிருஷ்ணாவதாரத்தில் மட்டுமல்ல, பெருமாள் எந்த அவதாரம் எடுத்தாலும் அவருடைய கண்கள் அகன்றதாகவே இருக்கும். மந்த்ரராஜ பத ஸ்தோத்திரத்தில், நரசிம்ம மூர்த்தியை, "விருத்தோத்புல்ல விசாலாட்சம்' என்று குறிப்பிடுகின்றனர். "எத்தனை பக்தர்கள் வந்தாலும் தாயுள்ளத்தோடு அருட்பார்வை செலுத்தும் கண்கள்' என்று இதற்கு பொருள். திருமாலின் கண்கள் விசாலமாக இருக்கின்றன. பாசுரத்தில் குறிப்பிடும், "செங்கண்' என்பதற்கு செவ்வரி ஓடிய சிவந்த கண், விசாலமான கண், அருள்புரியும் கண் என்று பொருள்.
சரணாகதி அடைய விரும்புபவர்கள், உடனடி பலன் பெறுவதற்கான சூட்சுமத்தை ராமாயண காவியத்தின் அயோத்தியாகாண்டம் நமக்கு உணர்த்துகிறது. ராமன் காட்டுக்கு கிளம்பிவிட்டார். லட்சுமணன் உடன் வருவதாக தெரிவித்தும் ராமபிரான் சம்மதிக்கவில்லை. ஆனால், லட்சுமி தாயாரின் அம்சமான சீதாதேவி ராமனுடன் வந்தே தீருவேன் என்று அடம் பிடிக்கிறாள். இதுதான் சரியான சமயம் என்று கருதி லட்சுமணனும் ""அண்ணா! நானும் காட்டுக்கு உங்களுடன் வருகிறேன்,'' என்று சரணாகதியாக விழுந்து வணங்கினான். தஞ்சம் என வந்தவர்களை லட்சுமி தாயாரின் மனம் எப்போதும் மறுப்பதில்லை. அதனால் தான், பெருமாளை வணங்குவதற்கு முன், தாயாரை வணங்கவேண்டும் என்ற நியதியை, பெருமாள் கோயில் வழிபாட்டில் ஏற்படுத்தி வைத்தார்கள். நாராயணன், நரசிம்மன், ஹயக்ரீவர் ஆகிய திருநாமங்களோடு லட்சுமியையும் இணைத்துச் சொல்லும் மரபும் ஏற்பட்டது.
"நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்' என்று எட்டெழுத்து மந்திரமான "ஓம் நமோ நாராயணாய' என்பதை, நமக்கு தெரியப்படுத்துகிறார் திருமங்கையாழ்வார். இம்மந்திரத்தை ஜெபிப்பவர்கள் நல்ல குடிப்பிறப்பு, வளமான செல்வ வாழ்வு பெற்று வாழ்வர். வாழ்வில் நேரும் துன்பம் அனைத்தும் நீங்கும். நீள்விசும்பு என்னும் சொர்க்கத்தில் வாழும் பேறு கிடைக்கும். தைரியம் அதிகரிக்கும். பெற்ற தாயை விட நமக்கு உற்ற துணையாக அவனே முன்நிற்பான். நல்ல குடிப்பிறப்பு என்றால் அவரவர் பிறந்த ஜாதியை இங்கு ஆழ்வார் குறிப்பிடவில்லை. "திருமாலின் அடியவர்கள் நாங்கள்' என்று பெருமைப்படும் பக்தர் குலத்தோடு நம்மைச் சேர்ப்பார். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், "நாராயணா என்னா நாவென்ன நாவே! திருமால் புகழ் கேளா செவி என்ன செவியே' என்கிறார்.
கஷ்டம் வந்து விட்டதா? மனிதர்களின் காலில் விழுந்து பலனேதும் இல்லை. கடவுளின் திருவடியை நம் இருகைகளாலும் பற்றிக் கொள்வதே சிறந்த சரணாகதி. "நீ தான் எனக்கு கதி' என்று கெட்டியாக இறைவனின் திருவடிகளைப் பற்றிக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு அவதாரத்திலும் இறைவனுக்கு எத்தனையோ முகங்கள், கைகள், ஆயுதங்கள் இருக்கலாம். ஆனால், அவருக்கு பாதங்கள் (கால்கள்) என்னவோ இரண்டு மட்டும் தான். ஏனென்றால், அவரை வணங்கும் நமக்கு இரு கைகள் மட்டுமே. சரணாகதி அடைய வரும் அன்பர்கள் தன் இருகைகளாலும் பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற கருணையோடு இருதிருவடிகளைத் தாங்கி நிற்கிறார். இதனையே, "அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்' என்று இறைவனின் திருவடியின் பெருமையை குறிப்பிடுவது வழக்கம்.
Friday, 29 September 2017
சிலருக்கு வாழ்வில் எதைச் செய்ய முயன்றாலும் ஏதாவது ஒருவிதத்தில் தடங்கல் உண்டாகும். அப்படி செய்து முடித்தாலும் அதை அனுபவிக்கும் பாக்கியம் கிடைப்பதில்லை. இவ்வாறு காரியத்தடங்கல் ஏற்படுவதற்கு முற்பிறவியில் செய்த பாவங்களே காரணம். இவர்களை "யோகக்கட்டைகள்' என்று கேலி செய்வார்கள்.
முற்பிறவியில் நல்வினைப்பயன் இருக்குமானால், இப்பிறவியில் செய்யும் எல்லாச் செயல்களும் வெற்றியைத் தரும். அதுவே எதிர்மறையான செயல்களை சம்பந்தப்பட்டவர்களோ அல்லது அவர்களின் முன்னோரோ செய்திருந்தால், தடங்கல் ஏற்பட்டு விடும். இதை ஒரு எளிய ஸ்லோகத்தின் மூலம் சரி செய்யலாம். ராமாயணத்தை இந்தியில் "ராமசரிதமானஸ்' துளசிதாசர் எழுதியுள்ளார். அதில் பாலகாண்டத்தில் வரும்,
"பந்தௌ நாம ராம் ரகுபர் கோ!
ஹேது க்ருஸானு பானு ஹிமகர் கோ!!
பிதி ஹரி ஹர்மய பேத் ப்ரான் ஸோ!
அகுண அனூபம் குண நிதான் ஸோ!!
என்ற ஸ்லோகம் இந்த தடங்கலை சீர்செய்யும்.
இதைச் சொல்ல முடியாதவர்கள் பொருளைச் சொல்லலாம்.
""ரகுநாதா! உன் நாமத்தை வணங்குகிறேன். அக்னி, சூரியன், சந்திரன் எல்லாமே அந்நாமத்தில் அடங்கி உள்ளன. ராமநாமத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்தியின் அம்சங்களும் உள்ளன. வேதத்தின் உயிர்நாடியும், நிர்குணமானவனும், நற்குணங்களின் இருப்பிடமாகவும் இருக்கும் ராமநாமத்தை போற்றுகின்றேன்''
இந்த ஸ்லோகத்தைச் சொல்ல எவ்வித விரதமும் இருக்க வேண்டியதில்லை. நேரம் காலமும் இல்லை. தினம் 3 முறை தொடர்ந்து ஜெபித்து வருவோருக்கு முன்வினைப் பாவம் நீங்கி அனுகூலம் உண்டாகும்.
வைணவ திவ்யதேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம், திருநாராயணபுரம் ஆகிய நான்கும் மண்டபத்தலங்களாகப் போற்றப்படுகின்றன. ஸ்ரீரங்கம் போக மண்டபமாகவும், திருப்பதி புஷ்ப மண்டபமாகவும், காஞ்சிபுரம் வரதராஜர் கோயில் தியாக மண்டபமாகவும், கர்நாடகா திருநாராயணபுரம் நாராயணப்பெருமாள் கோயில் ஞான மண்டபமாகவும் திகழ்கிறது.
நாரதர், மைத்ரேயர், வியாசர், பிருகு, சாண்டில்ய மகரிஷி ஆகியோருக்கு மகாவிஷ்ணு இத்தலத்தில் ஞானம் வழங்கியதால் இத்தலம் ஞானமண்டபம் என்று போற்றப்படுகிறது. நாரதபுராணம், யாதவகிரி மகாத்மியம் ஆகியவற்றில் இத்தல சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்த ராமானுஜர் கர்நாடகப்பகுதியில் தங்கி வைணவத்தைப் பரப்பினார். பிட்டிதேவராயன் என்னும் சமண மன்னனை விஷ்ணு பக்தனாக்கினார். அவன் "விஷ்ணுவர்த்தன்' என்று தன் பெயரை மாற்றிக் கொண்டான். ராமானுஜர் இங்கு தங்கிய காலத்தில், நாராயணபுரத்திலுள்ள துளசிக்காட்டில் தான் புற்றில் மறைந்து இருப்பதை பெருமாள் கனவில் உணர்த்தினார். ஆதிவாசி மக்களின் உதவியுடன், அவர் பெருமாள் சிலையை எடுத்து பிரதிஷ்டை செய்தார். அம்மக்களை "திருக்குலத்தார்' என்று பெயரிட்டு விஷ்ணு பக்தர்களாக்கினார். மன்னன் விஷ்ணுவர்த்தன் பெரும்பொருள் செலவில் திருநாராயணபுரம் கோயிலைக் கட்டினான்.
உயிரைக் காக்க அக்காலத்தில் மன்னர்கள் இரும்புக்கவசம் அணிந்து கொண்டனர். அதுபோல, கவச நூல்களைப் பாராயணம் செய்தால் நம்மைச் சுற்றி தெய்வத்தின் மந்திரசக்தி கவசமாகத் துணைநிற்கும் என்பர். கவசப்பாடல்களில் கந்தசஷ்டி கவசம் மிகவும் புகழ்பெற்றது. தேவராய சுவாமிகளால் எழுதப்பட்ட இந்நூல், ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் அரங்கேற்றப்பட்டது. காங்கேயத்தை மையமாகக் கொண்டு சென்னிமலை, ஊதிமலை, வட்டமலை, சிவன்மலை,திருமுருகன்பூண்டி ஆகிய மலைகள் உள்ளன. இவற்றில் தலைசிறந்தது சென்னிமலை. "சென்னி' என்ற சொல்லுக்கே "தலை' என்று தான் பொருள்.
சிரகிரி, சென்னியங்கிரி, புஷ்பகிரி, சிகரகிரி என்ற பெயர்களும் இதற்குண்டு. தேவராய சுவாமிகள் கவசத்தில் "சிரகிரி வேலா சீக்கிரம் வருக!' என்று இத்தல முருகனை வேண்டுகிறார். இங்கு மூலவராக கைலாசநாதரும், பெரியநாயகியும் வீற்றிருக்கின்றனர். புண்ணாக்குச் சித்தருக்கு சமாதியும் இங்குள்ளது. கந்தசஷ்டியும், தைப்பூசமும் சிறப்பான விழாக்கள். அக்னிஜாத சுப்பிரமணியர், சவுரபேய சுப்பிரமணியர், சரவணபவன், தேவசேனாதிபதி ஆகிய பெயர்களிலும் முருகப்பெருமான் கோஷ்டத்தில் வீற்றிருக்கிறார்.
தாயிற் சிறந்த கோயிலுமில்லை என்பது பெரியோர் வாக்கு. அவளது பெருமையை பறை சாற்றும் விதமாக சிவபெருமானே, ரத்தினாவதி என்னும் கர்ப்பவதிக்கு தாயாக வந்து பிரசவம் செய்தருளினார். இப்பெருமான் திருச்சி மலைக்கோட்டையில் அருள்பாலிக்கிறார். மலையின் மத்தியில் சுயம்புமூர்த்தியாக மேற்கே நோக்கி வீற்றிருக்கும் இவருக்கு "தாயுமானவர்' என்பது திருநாமம். வடமொழியில் "மாத்ருபூத ஈஸ்வரர்' என்பர். இவரது துணைவியான "மட்டுவார்குழலி அம்மன்' தனி சன்னதியில் காட்சிதருகிறாள். சாரமாமுனிவர் என்பவர், நாகலோகத்தில் இருந்து, கொண்டு வந்த செவ்வந்தி மலர்களால் தாயுமானவரைப் பூஜித்து பேறு பெற்றதாக தலவரலாறு கூறுகிறது.
திருநாவுக்கரசர் தாயுமானவரை தேவாரப்பாடலில், ""சிராப்பள்ளி சிவனை நினைத்தால் உள்ளம் குளிர்கிறது'' என்று போற்றியுள்ளார். சிவபெருமானின் 64விதமான மூர்த்தங்களில் ஒன்றான கங்காள மூர்த்தத்தை இங்கு தரிசிக்கலாம். திரிசிரன் என்னும் அசுரன் சிவபெருமானை வழிபட்டதால் திரிசிரபுரம் என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு.
சிவபெருமானுக்கு நாரதர் கொடுத்த மாங்கனியால் கைலாயமே இரண்டாகிப் போனது. கனிக்காக மனம் நொந்த முருகன், கோபித்துக் கொண்டு அம்மையப்பரை விட்டு கிளம்பினார். ஈசனும், தேவியும் பிள்ளையைத் தேடி அலைந்தனர். இறுதியில் ஓரிடத்தில் பாலகன் முருகனைக் கண்டுபிடித்து மகிழ்ச்சி அடைந்தனர். அத்தலமே நாமக்கல் அருகில் உள்ள மோகனூர் என்னும் பெயரில் விளங்குகிறது. மகன் திரும்ப கிடைத்ததால் ஏற்பட்ட"மகனூர்' என்ற பெயரே மோகனூராக மாறியதாகக் கூறுவர்.
இங்குள்ள சுவாமிக்கு "அசலதீபேஸ்வரர்' என்பது திருநாமம். இவரது சந்நிதியில் ஆடாமல் அசையாமல் தீபச்சுடர் எரிவதால் இப்பெயரால் வழங்கப்படுகிறார். மதுகரவேணி என்னும் பெயரில் அம்பிகை கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறாள். தேவார வைப்புத்தலமான இத்தலத்தை திருநாவுக்கரசர், சுந்தரர் பாடியுள்ளனர். ஆடிப்பெருக்கு நாளில், இங்குள்ள குமரித்துறை என்னும் காவிரி தீர்த்தத்தில் நீராடி முளைப்பாரி எடுப்பதும், புதுமணத்தம்பதியர் பிள்ளைவரம் வேண்டி வழிபாடு செய்வதும் பெரிய திருவிழாவாக நடைபெறும்
ராஜேந்திரச் சோழனால் கட்டப்பட்ட சிவாலயம், அரியலூர் அருகிலுள்ள கங்கை கொண்ட சோழபுரமாகும். இங்குள்ள சரஸ்வதி "ஞானசரஸ்வதி'யாக போற்றப்படுகிறாள். ஜடாமகுடத்துடன் அட்சமாலை, கமண்டலம், சுவடி ஆகியவற்றை ஏந்தி நிற்கும் இவள், சூசி ஹஸ்தத்துடன் காட்சிதருகிறாள். ஆள்காட்டி விரலைத் தவிர மற்ற விரல்களை வளைத்து மடக்கி இருக்கும் நிலைக்கு "சூசிஹஸ்தம்' என்று பெயர். "நமக்கு மேலான இறைவன் ஒருவன் இருக்கிறான் என்ற ஞானத்தோடு மனிதன் வாழவேண்டும்' என்பது இம்முத்திரையின் பொருள். தாமரை மலரில் அர்த்த பத்மாசன நிலையில் அமர்ந்திருக்கும் ஞானசரஸ்வதியை வழிபட பிள்ளைகள் படிப்பில் முன்னேற்றம் பெறுவர்.
சிறுவர் யாருமில்லை
திருமலைநம்பி திருப்பதி பெருமாள் சேவையை தன் உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர். இளம் வயதில் தொடங்கிய கோயில் பணியை தள்ளாத முதுமையிலும் தளராமல் செய்து வந்தார். ஒருமுறை, ராமானுஜர் திருமலைக்கு வந்திருக்கிறார் என்பதை அறிந்து ஆர்வத்துடன்
அடிவாரம் வந்தார்.
அவரிடம் ராமானுஜர், ""இந்த தள்ளாத வயதிலும் ஏன் இப்படி கஷ்டப்படுகிறீர்கள்? உங்களைவிட சிறியவர் வேறு யாராவது இருந்தால் அவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கக்கூடாதா?'' என்று வாஞ்சையோடு கேட்டார்.
""திருமலை முழுவதும் தேடிப்பார்த்துவிட்டேன். என்னைவிடச் "சிறியவர்' யாரும் இங்கு இருப்பதாகத் தெரியவில்லை,''. திருமலைநம்பிகளின் இந்தப் பதிலைக் கேட்டு, அவரது கடமையுணர்வையும், பணிவையும் கண்ட ராமானுஜர் மலைத்துவிட்டார்.
ராமனின் கருணை உள்ளம்
தன்னைவிட ராமபக்தியில் சிறந்தவர்கள் வேறு யாருமில்லை என்ற எண்ணம் ஆஞ்சநேயருக்கு உண்டானது. இருந்தாலும், ராமரிடமே இதைக் கேட்டுவிட்டால் முழுமையான சந்தோஷம் என்ற எண்ணத்துடன் துள்ளிக் குதித்தோடினார்.
""சுவாமி! ராமபக்தியில் சிறந்தவர் யார் என்று சொல்லுங்களேன்'' என்று ராமரிடம் கேட்டார்.
""இதிலென்ன சந்தேகம். சீதாதேவி தான்! அவள் தான் என் மீது அளவுகடந்த பக்தி கொண்டிருக்கிறாள்,'' என்று பதிலளித்தார். ஆஞ்சநேயருக்கு தூக்கி வாரிப்போட்டது. சிலையாக நின்றுவிட்டார். அவரது மவுனத்தைக் கண்ட ராமர், ""ஆஞ்சநேயா! நான் நலமாக வாழவேண்டும் என்று அவள் தானே அனுதினமும் நெற்றியில் செந்தூரத் திலகம் இடுகிறாள்,'' என்று விளக்கம் கொடுத்தார்.
அவ்வளவுதான்! ராமர் நலமோடு இருக்கவேண்டும் என்பதற்காகமேனி முழுவதும் செந்தூரம் பூசிக் கொண்டு வந்து நின்றார் ஆஞ்சநேயர். இதைக் கண்ட ராமன் நெக்குருகி, "ஆஞ்சநேயா! உன்னை விட எனது பக்தியில் சிறந்தவர் வேறு யாருமில்லை,'' என்பதை உலகுக்கு உணர்த்தவே இந்த நாடகமாடினேன்,'' என அன்போடு சொல்லி மார்புடன் அணைத்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியின் அடிப்படையிலேயே, ஆஞ்சநேயர் கோயிலில் செந்தூரம் பிரசாதமாகத் தரும் வழக்கம் ஏற்பட்டது.
பாலும் வேணும்! தயிரும் வேணும்!
தெனாலிராமன் சிறுவனாக இருந்த போது, காளி உபாசனையில் ஈடுபட்டார். ஒருநாள் தியானத்தில் இருந்தபோது, காளியே நேரில் வந்து காட்சி அளித்தாள். ""என் செல்லக் குழந்தையே! வேண்டும் வரம் தருகிறேன்,'' என்று சொல்லி ஒரு கிண்ணத்தில் பாலும், ஒரு கிண்ணத்தில் தயிரும் கொடுத்து, ""பாலைக் குடித்தால் நீ அறிவாளியாகத் திகழ்வாய். தயிரைக் குடித்தால் செல்வந்தனாக வாழ்வாய். எதுவேண்டுமோ அதை எடுத்துக் கொள்,'' என்றாள் பாசத்துடன். தெனாலிராமன் அவளிடம்,""தேவி! குடிப்பதற்கு எது ருசியாக இருக்கும் என்று பார்த்துக் கொள்கிறேன்,'' என்று சொல்லி இரண்டையுமே ஒரு நொடியில் குடித்து விட்டார்.
பின்பு தேவியிடம், ""மனிதவாழ்விற்கு கல்வியும் செல்வமும் இருகண்கள் அல்லவா! ஒன்றில்லாமல் மற்றொன்று பயன்படாது. அதனால், இரண்டையும் குடித்துவிட்டேன்,"' என்று சொல்லி சிரித்தான். சமயோசித புத்தியுடன் செயல்பட்ட சிறுவனை காளி ஆசிர்வதித்து மறைந்தாள்.
ஆதிசங்கரரின் தாய் ஆர்யாம்பாள், தங்கள் ஊரிலுள்ள பூர்ணாநதிக்கு சென்று தினமும் நீராடுவார். இதற்காக வெகுதூரம் செல்ல வேண்டியிருந்தது. ஒருநாள், களைப்பால் மயங்கி விழுந்துவிட்டார். சங்கரர் ஓடிச்சென்று தாயை வீட்டுக்கு அழைத்து வந்தார். அதன்பிறகு, பூர்ணாநதிக்குச் சென்று, ""நதித்தாயே! என் தாயாரால் தினமும் உன்னைத் தேடி வர முடியவில்லை. அதனால், என் வீட்டிற்கு நீ வா'' என்று பிரார்த்தித்தார். தாயின் துன்பம் தாளாத மகனின் பாசம் கண்டு, பூர்ணாநதித்தாய் மனம் மகிழ்ந்தாள். அன்றிரவே சங்கரரின் வீட்டுப்பக்கமாக நதியின் பாதை திரும்பியது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நதி திசைமாறியதால், கரையில் இருந்த கிருஷ்ணன் கோயில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. அப்பகுதியை ஆண்ட அரசரின் உதவியோடு மீண்டும் கிருஷ்ணருக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்தார் ஆதிசங்கரர்.
ங்கை நதிக்கரையில் சங்கரர் சீடர்களுடன் அமர்ந்து இருந்தார். அப்போது, முதிய அந்தணர் ஒருவர் வந்தார். வியாசரின் பிரம்மசூத்திரங்களை விளக்கிக் கொண்டிருந்தார் சங்கரர். பிரம்மசூத்திரத்தின் மூன்றாவது பிரிவில் முதலாவது சூத்திரத்தின் உரையை தனக்குக் கூறும்படி அந்தணர் கேட்டார். சங்கரரும் விரிவாக விளக்கம் அளித்தார். அந்தணர் வடிவில் வந்த மனிதர், வியாசராக காட்சியளித்து, பிரம்மசூத்திரத்தை உலகில் பரப்பும்படி சங்கரரை வாழ்த்தினார். ""பதினாறு வயதோடு என் ஆயுள் முடிவதால் அது சாத்தியமில்லையே,'' என அவரிடம் சங்கரர் கூறினார். உலக நன்மைக்காக இன்னும் 16 ஆண்டுகள் இப்பூமியில் வாழ்வாயாக!'' என்னும் வரத்தைக் கொடுத்து மறைந்தார் வியாசர்.
Thursday, 28 September 2017
ஆந்திரா, ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜுன சுவாமியை தரிசனம் செய்து விட்டு சங்கரர் வந்து கொண்டிருந்தார். அவரை காபாலிகன் (மந்திரவாதி) ஒருவன் கண்டான். அவன் உக்ர பைரவரின் அருள்பெறுவதற்காக யாகம் நடத்திக் கொண்டிருந்தான். பூரண ஞானம் நிறைந்த சந்நியாசியைப் பலியாக யாகத்தீயிலிட்டால் தனக்கு அருள் கிடைக்குமென சங்கரரிடம் தெரிவித்தான். சங்கரரும் சம்மதம் தெரிவித்தார். ""எனது சீடர்கள் யாரும் இல்லாதவேளையில், தலையை வெட்டிக்கொள்ளும்படி கூறினார். இதை ஞானதிருஷ்டியால் அறிந்த அவரது சீடர் பத்மபாதர், நரசிம்ம மந்திரத்தை ஜெபித்து விஷ்ணுவை தியானித்தார். உடனே நரசிம்ம மூர்த்தி பத்மபாதர் உடலில் புகுந்து ஆவேசமானார். கர்ஜனையோடு காபாலிகனை ஒருநொடியில் கொன்று அழித்தார். உடனே ஆதிசங்கரர் லட்சுமி நரசிம்மர் மீது "கராவலம்ப ஸ்தோத்திரம்' பாடினார்.
"அவதரித்தல்' என்பதற்கு "இறங்குதல்' என்று பொருள். வைகுண்டத்தில் இருக்கும் மகாவிஷ்ணு சில அவதாரங்கள் எடுத்து பூமிக்கு இறங்கி வந்தார். அவதாரம் செய்யாமல் அங்கிருந்தபடியே தீயவர்களை அவரால் அழித்துவிடமுடியும். இருந்தாலும், துஷ்ட நிக்ரஹம் செய்வதை விட, சிஷ்டபரிபாலனமாகிய நல்லவர்களைக் காக்கும் செயலை தானே நேரடியாகச் செய்ய எண்ணி மண்ணுலகிற்கு வந்தார். தன்னைப் பார்த்து உலகில் வாழும் மற்ற மக்களும் தர்மங்களை கடைபிடிக்க விரும்பினார். நல்லவர்களைக் காத்தல், தீயவர்களை அழித்தல், தர்மத்தை நிலைநாட்டல் ஆகிய மூன்று லட்சியங்கள் ஒவ்வொரு அவதாரத்திற்கும் உண்டு.
சிருங்கேரியில் சங்கரருக்கு கிரி என்ற சீடர் இருந்தார். தனது பெயருக்கேற்றாற் போல், கேள்வி கேட்பதோ, விவாதம் செய்வதோ இல்லாமல் கிரியாகவே(மலையாகவே) ஆடாமல், அசையாமல் பாடம் கேட்பார். சங்கரர் மீது அபார பக்தி கொண்டவர். நேரத்தை எல்லாம் குருசேவைக்கே அர்ப்பணித்து வந்தார். ஒருநாள் சங்கரரின் துணிகளைத் துவைக்கச் சென்றார். கிரி வந்தவுடன் பாடம் தொடங்கலாம் என்ற எண்ணத்தில் சங்கரர் காத்திருந்தார். சீடர்கள் அவரிடம், ""குருவே! கிரிக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இங்கிருக்கும் சுவரும் கிரியும் ஒன்று தான்,'' என்று சொல்லிச் சிரித்தனர். இதைக்கேட்ட சங்கரர், கிரியை அப்@பா@த பண்டிதனாக மாற்றுவதற்காக தியானத்தில் ஆழ்ந்தார். துணி துவைத்த கிரிக்கு கணப்பொழுதில் ஞானம் உண்டானது. உபநிஷதக் கருத்துக்கள் அடங்கிய பாடல் ஒன்றை "தோடக' ராகத்தில் பாடியபடியே மடத்தை நோக்கி வந்தார். அப்பாடலுக்கு "தோடகாஷ்டகம்' என்றும், கிரிக்கு "தோடாகாச்சாரியார்' என்றும் பெயரிட்டு சங்கரர் மகிழ்ந்தார். திறமை வேண்டுமென்பதில்லை, தெரிந்த வேலையை சரியாகச் செய்தாலே நிறைந்த பலன் கிடைத்துவிடும் என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் புரிந்து கொள்ளலாம்.
மகாபாரதத்தில் விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரம் இடம்பெற்றுள்ளது. இது பீஷ்மர் தர்மபுத்திரருக்கு உபதேசித்ததாகும். 150 ஸ்லோகங்களைக் கொண்ட இதில் விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்கள் கூறப்பட்டுள்ளன. சிவன், ராமன், கிருஷ்ணர், லலிதாசகஸ்ர நாமங்கள் பல தெய்வங்களுக்கும் இருந்தாலும் விஷ்ணு சகஸ்ரநாமமே புகழ்பெற்றதாக விளங்குகிறது. இந்நூலுக்கு ஆதிசங்கரர், பராசரபட்டர், ராகவேந்திரர் மூவரும் அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் ஆகிய மூன்று தத்துவங்களிலும் உரை எழுதியுள்ளனர். போருக்கு முன் கிருஷ்ணர் கீதையை அர்ஜுனனுக்கு உபதேசித்தார். போர் முடிந்த பிறகு தர்மருக்கு பீஷ்மர் சகஸ்ரநாமத்தை உபதேசிக்கிறார். அப்போது கிருஷ்ணரும் இந்த நாமத்தைக் கேட்டு மகிழ்கிறார்.
பகவானைக் காட்டிலும் அவருடைய திருநாமத்திற்கு மகத்துவம் அதிகம். ஏதாவது பலன் கருதி விஷ்ணுசகஸ்ர நாமத்தைப் பாராயணம் செய்பவர்கள் ஒரு மண்டலம் செய்வர். அரைமண்டலமாக 24நாட்களும், கால்மண்டலமாக 12 நாட்களும் பாராயணம் செய்யலாம். விஷ்ணுசகஸ்ரநாமம் பாராயணம் செய்தால் நோய்கள் நீங்கி உடல் பலம் பெறும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. துன்பத்திற்கு காரணமான முன்வினைப் பாவத்தைப் போக்குவதில் விஷ்ணுசகஸ்ரநாமம்ஈடுஇணையற்றதாகக் கருதப்படுகிறது.
சத்ரபதி வீரசிவாஜியின் குரு சமர்த்த ராமதாசர். ஆஞ்சநேய பக்தரான இவர், தன் அதீதபக்தியால் ராமனின் பிறப்போடு அனுமனின் பிறப்பையும் இணைத்து விட்டார். தசரத சக்கரவர்த்தி புத்திர காமேஷ்டியாகம் நடத்திய போது, கிடைத்த தெய்வீகப் பாயசத்தை தன் மனைவியரான கோசலை, கைகேயி, சுமித்ரை ஆகிய மூவருக்கும் கொடுத்தார். அதைக் குடித்த அவர்கள் ராமன், பரதன், லட்சுமணன், சத்ருக்கனன் ஆகிய குழந்தைகளைப் பெற்றனர். லட்சுமண, சத்ருக்கனரின் தாயான சுமித்ரா அருந்திய பாயாசத்தில் ஒருபங்கை வாயு தேவன் எடுத்துச் சென்று அஞ்சனாதேவிக்கு வழங்கினார். அதைப் பருகிய அவள், ராமனுக்கு ஈடான அனுமனைப் பெற்று மகிழ்ந்தாள் என்கிறார் இவர்.
சில ஆண்களுக்கு ஜாதக ரீதியாக தாரதோஷம் ஏற்படுவதுண்டு. செவ்வாயினால் உண்டாகும் இந்த தோஷத்திற்காக, வாழை மரத்தை வெட்டும் பரிகாரம் செய்யும்படி ஜோதிடர்கள் சொல்வர். வாழையை தாரமாகக் கருதி வெட்டுவதால் மட்டும் தோஷம் நீங்கி விடுவதில்லை.
இதெல்லாம் மனதிருப்திக்காக செய்யப்படும் வெறும் சடங்கு மட்டுமே. "பக்திக்கு மிஞ்சிய பரிகாரம் இல்லை' என்பதை மனதில் கொள்ள வேண்டும். செவ்வாயால் உண்டாகும் எந்த தோஷமாக இருந்தாலும் அதற்கு முருகவழிபாடே மிகச்சிறந்தவழி. அருணகிரிநாதர் போன்ற அருளாளர்கள், ""முன்செய்த பழிக்குத்துணை முருகா எனும் நாமம்'என்றுநமக்கு காட்டியவழிகாட்டியுள்ளனர் .
செவ்வாய் தோஷத்தால் அவதிப்படுபவர்கள் அருகிலுள்ள முருகன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமைகளில் பாலபிஷேகம் செய்ய வேண்டும். இயலாதவர்கள் இன்னும் எளியபரிகாரமாக காலை, மாலை இருவேளையும் "துதிப்போர்க்கு வல்வினை போம்' என்று துவங்கும் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும். இதை எழுதிய தேவராய சுவாமிகள், "கவசம் படிப்போருக்கு நவகோள்(நவக்கிரகங்கள்) மகிழ்ந்து நன்மை அளித்திடும்' என்று பாடலுக்குள்ளேயே குறிப்பிட்டுள்ளார். செவ்வாய் தலமான பழநிக்குச் சென்று வழிபடுவதும் நன்மை தரும்.
""உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒலியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே'' என்னும் கந்தரநுபூதிப்பாடலை விளக்கேற்றும் நேரங்களில் 3 முறை சொல்ல வேண்டும். வந்தவினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொன்னால் கதிகலங்கிடும் என்ற உண்மையை உணருங்கள். உங்களுக்கான நல்ல மதியையும் விதியையும் முருகப்பெருமானே வகுத்தருள்வான் என்று பூரணமாக நம்புங்கள். அவனருளால் எல்லாம் நன்மையாக நடக்கும்.
நல்ல ஒழுக்கமும், உயர்ந்த பக்தியும் கொண்டவர் களிடம் இருந்து மட்டும் உணவைப் பெற்று மகிழுங்கள். ஒரு கடவுள் வணக்கமே மேலானது, பிற தெய்வங்களை வணங்குதல் பாவமாகும்.
கடவுளின் பக்தர்களுக்கு பணி செய்வதால் தான் கடவுளை அடைய முடியும் என்பதை உங்கள் இதயத்தில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
கடவுளுடைய பக்தர்களுக்குப் பணி செய்யத் தன் னையே எவன் தியாகம் செய்யாமல் இருக்கிறானோ, அவன் சிறந்தவனாக இருந்தாலும் அழிந்து விடுவான்.
தன் உறவினர்களை எப்படி நேசிக்கிறீர்களோ அவ் வாறே கடவுளின் பக்தர்களைப் பாடி மகிழ வேண்டும்.
காலையில் எழும்போது ஆன்மீகச் சொற்களை உச்சரித்துப் பழக வேண்டும்.
கடவுளுக்கு முன்னால், ஆசிரியருக்கு முன்னல் கடவுளின் பக்தனுக்கு முன்னால் காலை நீட்டித் தூங்குதல் கூடாது.
கோயில், விமானம், கோபுரம் ஆகியவற்றைக் கண்டதும் மரியாதையுடன் தலைவணங்குதல் வேண்டும்.
ஒருவனுடைய பிறப்பைப் பற்றியோ, தொழிலைப் பற்றியோ எண்ணாமல் அவனுடைய கொள்கை களைப் பின்பற்றி பணிவிடை செய்வதே மேலான தாகும்.
இறையருளைப் பெறுவதற்கு ஆதாரம் அன்புதான். மனதில் அன்பு ஊற்றெடுக்க வேண்டுமானால், எல்லா உயிர்களையும் நேசிப்பது ஒன்று தான் வழியாகும்.
அன்னதானம் செய்பவர்களை கடவுளின் அம்சம் என்று சொல்ல வேண்டும். பசி புத்தியை தடுமாறச் செய்யும். பசி என்னும் தீயை அன்னத்தால் அணைக்க வேண்டும். அன்னமிடுபவர்கள் பெருங் கருணையாளர்கள் என்றால் மிகையில்லை.
பெரியவர்களைக் கண்டால் பணிவுடன் நடந்து கொள்ளுங்கள். தவறு செய்தால் அதனைத் திருத்திக் கொள்ள முயலுங்கள். நற்குணங்களை பின்பற்றி நல்லவர்களாக வாழுங்கள்.
ஆன்மீக உணர்வுடன் ஆண்டவனின் சரண டைந்தால் நம் மனம் தூய்மை பெறும். தூய மனம் பேரின்பத்தில் வாசலைத் திறந்துவிடும் சக்தி படைத்தது.
மரணம் எப்போது வேண்டுமானாலும் நம்மைத் தேடி வரலாம். மனிதர்கள் நம் நிலையாமை தன்மையை உணர்ந்து கொள்ளத் தவறி விட்டனர். அதனால் பொன்னாசை, மண்ணாசை, பெண்ணாசை கொண்டு அலைகிறார்கள்.
மனம் என்னும் கடிவாளத்தை உறுதியாகப் பிடித்தால்தான் நம் புலன்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.
1923 ல் நடந்த உண்மை சம்பவம் திருப்பரங்குன்றம் முருகப் பெருமானை தரிசித்து விட்டு ஒரு உயர் நிலை பள்ளி மாணவன் திரும்பி வரும்போது நாகர்கோவிலிலிருந்து வந்த கிறித்தவப் பாதிரியார் மைக்கேல் தம்புராசு. இந்துக்களையும் அவர்க ள் வழிபாடுகளையும் இழிவு படுத்தி ஒரு சிறு கல்லின் மேல் நின்று கொண்டு மதப்பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார் ,
இயல்பிலேயே இந்திய கலாசார மதத்தின்மீதும் நாட்டின்மீதும் காதல் கொண்டிருந்த அந்த சிறு வனுக்கு சுளீர் எனக் கோபம் வந்தாலும் அமைதி யாக அங்கு சென்று அந்த மதமாற்ற பாதிரியின் பேச்சை கேட்டுக் கொண் டிருந்தான் அந்தசிறுவன்.. தொடர்ந்து பாதிரியார் மைக்கேல் தம்புராசு இந்து மதத்தை விஞ்சித்து கொண்டே யிருந்தார்…
“பாவிகளே! கல்லை வணங்காதீர்கள், இதோ நான் நிற்பதும் ஒரு கல், இதே கல் தூண் கோவிலில் உள்ள சிலையாக அமைக்கப்பட்டுள்ளது. இரண்டும் ஒன்றுதான். அக் கல்லை வணங்குவது பாவம், கூடாது…!
பாதிரியார் பேச்சை மேலும் கேட்டுக் கொண்டிருக்க விரும்பவில்லை அச் சிறுவன். அவன் பாதிரியாரின் பேச்சை இடைமறித்தான் …!
சிறுவன்: “பாதிரியார் அவர்களே! ஓருசந்தேகம், அதை நீங்கள் நிவர்த் தி க்க வேண்ட்டும் !
பாதிரியார்:“என்ன சந்தேகம்? அதை விளக்கத்தானே ஆண்டவன் என்னை .. உங்களிடம் அனுப்பி உள்ளான் தயங்காமல் கேள் சிறுவனே !
சிறுவன்: “அப்படியனால் நான் கேட்பதை வைத்து என் மேல் கோபப்பட க்கூடாது நீங்கள்…!”
பாதிரியார்: “எனக்கேன் வருகிறது கோவம்?” எதுவானா லும் கேளுங்கள் . . .!
சிறுவன்: “நான் நிற்பதும் ஒரு கல் கோவிலின் உள்ளே சிலையாக இருப் பதும் கல் என்று குறிப்பிட்டீர்கள்…”
பாதிரியார்: “இரண்டும் கல் தான் இதிலென்ன . . . !”
சிறுவன்: “சில பாதிரிமார்களுக்கு தாயார், அக்காள், தங்கை, உறவுப் பெண்களும் உண்டு”.
பாதிரியார்: “ஆமாம்…!”
சிறுவன்: “சில பாதிரிமார்களுக்கு மனைவியும் மக்களும் இருக்கிறார்கள் .”
பாதிரியார்: “உண்மை தான்”
சிறுவன்: “இவர்கள் அனைவரும் பெண்கள் தானே…?”
பாதிரியார்: “சந்தேகம் என்ன வந்தது இதிலே அனைவரும் பெண்கள் தான் ?”
சிறுவன்: “அவர்கள் அனைவரும் ஒரே பெண்கள்தான் என்ற நிலை ஏற் படுமேயானால்..! உங்கள் மனைவியை பாவிக்கிற மாதி ரி தங்களது தாய், தங்கையர்களை பாவிக்க முடியுமா? அப்படிபாவித்தால் அவர்களை என்ன சொல்லும் உலக ம்.. .? நீங்கள் இதில்… இதற்க்கு தயவுகூர்ந்து விளக்கம் சொல்லுங்கள் ?”
எதிர்பாராது எழுந்த அதிர்சிகரனமான கேள்வியை அது வும் ஒரு பள்ளி சிறுவனிடம் இதை எதிர்பார்க்காமல் இடியோசை கேட்ட நாகம் போலாகி விட்டார் பாதிரியார், திகைத்து போய் ஒரு நிமிடம் உடல் அசைவை மறந்து நின்றார்… .
அது வரையிலும் வாயைடைத்துப் போய்நின்ற பொருங்கூட்டத்தினர் எழுப்பிய ஆரவாரங்கள், கையோலிகள் விண்னையெட்டும் அளவிற்கு உயர்ந்தெழுந்தன. பல வினாடிகளுக்குப் பின் தெளிவு பெற்றார் பாதிரியார் ……
பாதிரியார்: “தம்பி இங்கே வாருங்கள் பிற மதங்களை ப்பழிக்கக் கூடாது என்பது ஆண்டவன் இட்ட கட்டளை களில் ஒன்றாகும், அதை மறந்தேன், தக்க சமயத்தில் வந்து உதவி செய்தீர்கள்.
உண்மையிலேயே அறிவுமுதிர்ச்சி பெற்ற ஓர் தலைவன். நல்ல எதிர் காலம் உண்டு. நீங்கள் தேவன்தான். நன்றி” என சொல்லிவிட்டு, அடுத்த வினாடியே அக் கூட்டத்தை விட்டு பாதிரியார் வெளியேறினார் .
அந்த சிறுவன்தான் இன்று உலகம் போற்றும் உத்தமர், பசும்பொன் தந்த உ.முத்துராமலிங்கத் தேவர்
Wednesday, 27 September 2017
வாரத்தில் மூன்றாம் நாள் செவ்வாய். ""செவ்வாயோ வெறும்வாயோ?'' என்று சொல்வதுண்டு. அதனால், செவ்வாயன்று சுபவிஷயங்களைச் செய்யத் தயங்குவர். ஆனால், இந்த நாளை "மங்களவாரம்' என்று ஜோதிடசாஸ்திரம் சிறப்புடன் குறிப்பிடுகிறது. தமிழகத்தில் செவ்வாய்க்கிழமையில் முகூர்த்தநாள் குறிப்பதில்லை. ஆனால், கேரளமக்கள் மங்களவாரம் என்று செவ்வாயன்றும் திருமணவைபவம் நடத்துவர்.
செவ்வாயன்று முருகன், ராகுகாலத்தில் துர்க்கை, காளி,மாரி ஆகியோரை விரும்பி வழிபடுவர். நவக்கிரகத்தில் செவ்வாயை "சகோதரகாரகர்' என்று குறிப்பிடுவர். இவரை வழிபட்டால் சகோதரர் உறவு பலப்படும். பிரிந்த சகோதரர்கள் ஒன்று சேர, செவ்வாய்க்கு செவ்வரளி மாலை சூட்டி வழிபடவேண்டும்.
தற்போது திருமணம் என்பது ஒரு ஆடம்பரமாக நடைபெறும் ஒரு விஷேசமாக மாறிவருகிறது. காசு இருந்தால் லட்சக்கணக்கில் திருமண மண்டபங்களுக்கு வாடகை கொடுத்து மிகுந்த ஆடம்பரமாக செய்யப்படும் ஒரு நிகழ்ச்சியாக மட்டும் மாற்றப்பட்டுள்ளது.
திருமணம் என்பது இரண்டு நபர்கள் மனமும் ஒன்றாக கலந்து இல்வாழ்க்கையில் ஒன்றிணைந்து சமுதாயத்திற்கும், மக்களுக்கும் எந்தவித தீமையும் செய்யாமல் வாழும் காலம்வரை நன்மைகள் புரிந்து, இறை சக்தியின் அருளால் இம்மைக்கும் (வாழும் காலம்) மறுமைக்கும் (உடலை விட்டு பிரிந்து இறைவனை அடைவது) எந்தவித கெடுதலும் வராமல், வசதி வாய்ப்புடன் வாழ முயற்சிக்கும் ஒருவித சடங்காகத்தான் நமது முன்னோர்கள் வகுத்தனர்.
காலப்போக்கில் இந்நிலை மாறி காசு, பணம், வசதி, வாய்ப்பு, ஜாதி, மதம் போன்றவை மனித மனங்களில் குடி கொண்டதால், இன்றைய திருமணம் என்பது ஆடம்பரம் என்பது குடிகொண்டு, திருமணத்தின்போது பார்ட்டி, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று தன் நிலை மாறிச் சென்று கொண்டிருக்கிறது.
ஆதி காலத்தில் அரசன் முதல் ஆண்டி வரை அனைவரும் திருக்கோவில்களில் இறைவனின் சன்னதி முன்பு நின்று தங்களது வாழ்க்கைத்துணையின் கரம் பற்றினர்.
மேலும், இறைவன் சாட்சியாக ஒருவருக்கொருவர் அன்பு, பண்பு, சுகம், துக்கம் போன்றவற்றை பகிர்ந்து வாழ்க்கையை நடத்துவோம், நீதி, நேர்மை, உண்மை, பக்தி போன்றவற்றை தவறாது கடைபிடித்து எங்கள் கால இறுதியில் இறை பாத கமலங்களை சரணடைவோம். என்று இறைவனின் முன்நின்று மாலை மாற்றி இறைவன் முன் வாக்குறுதி அளித்து தங்கள் வாழ்க்கையைத் துவங்கினர்.
இறை நம்பிக்கையும், இறை பக்தியும் அவர்கள் மனத்தில் ஆழ பதிந்ததால், தங்களது வாழ்க்கைத் துணைக்கு துரோகம் செய்யாமலும், விட்டுக்கொடுத்தும் வாழ்க்கையை நடத்திவந்தனர்.
ஆனால் கால நிலை மாற்றம், வசதி வாய்ப்பு, ஆன்மீக நாட்டமின்மை, அதிகாரப்போக்கு, ஜாதி, மதவெறி போன்ற காரணங்களால் திருமணம் என்பது இன்றைக்கு ஆடம்பரமாக நடத்தப்படும் ஒரு கூத்தாக மாறிவிட்டது.
கோவில்களில் திருமணம் செய்வதால் ஏற்படும் பலன்கள்:
ஒரு சில ஜாதகர்களுக்கு கோயிலில் திருமணம் செய்து வைத்தால்தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.பொதுவாகவே வழிபாட்டுத் தலங்களில் வைத்துக் கொள்வது நல்லது. வாழ்க்கைத் துணையை ஆலயத்தில் ஏற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது. அதற்காகத்தான் பண்டைய காலங்களில் கோயில்களை எழுப்பிய மன்னர்கள் பல நூற்றுக்கணக்கானோர் அமரும் வகையில் ஆயிரம்கால் மண்டபங்களையும் கட்டி வைத்தனர்.
மன்னர் காலத்தில் கணவன்-மனைவி பிரிவு என்பது மிகவும் அபூர்வமான நிகழ்வாக இருந்தது. தலைமுறைகள் மாற்றத்தினால் பிரிவு அதிகரித்துள்ளது என்று சிலர் கூறினாலும், அந்தக் காலத்தில் இறைவனை சாட்சியாகக் கொண்டு வாழ்க்கைத் துணை ஏற்றுக் கொண்டவர்கள், பிரிவதற்கு யோசிப்பர். அதற்கு காரணம் இறைவன் மீதுள்ள பக்தி, பயம்.
மேலும், கோயிலில்/வழிபாட்டுத் தலங்களில் எப்போதும் மந்திரங்கள் ஜபித்தல், ஸ்லோகங்கள் ஓதுதல், இறைவனைப் பற்றிய பாடல்கள், தெய்வீக நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுவதால் எப்போதும் நேர்மறைக் கதிர்கள் அங்கு இருக்கும். எனவே அங்கு மாங்கல்யம் சூட்டிக் கொள்வது சிறப்பான பலன்களைத் தரும்.
மேற்கண்ட காரணத்தால்தான் நம் முன்னோர்கள் வசதி இருந்த போதிலும் திருமணத்தை திருக்கோயில்களில் நடத்தினர்.
பரசுராமரும், ராமரும் திருமாலின் இரு அவதாரங்கள். ராமரும், பரசுராமரும் தாயிற் சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற கொள்கை உடையவர்கள். இருவருமே ஆயுதத்தைக் கையில் தாங்கி காட்சிதருவர். பரசுராமர் கோடரியையும், ராமர் கோதண்டம் என்னும் வில்லையும் ஏந்தியிருப்பார்கள். இருவருமே தந்தையால் வாழ்வில் துன்பம் அடைந்தவர்கள். ராமரோ போர்த்தொழில் புரியும் க்ஷத்திரியவம்சத்தில் அவதரித்தவர்.
பரசுராமர் உயிர்களை நேசிக்கும் அந்தணர் குலத்தில் அவதரித்தவர். பரசுராமர், தன் தந்தையான ஜமதக்னி முனிவரை, கார்த்தவீரியன் என்னும் மன்னன் கொன்றதற்காக, நாடாளும் மன்னர்கள் வம்சத்தையே அடியோடு அழிப்பதாக சபதம் ஏற்றவர். ராமர் வேடுவர், அரக்கர், குரங்கு, அணில்,பறவை என்று உயிர்க்குலம் அனைத்திடமும் அன்பு காட்டியவர். மன்னர்களை அழிக்க சபதமேற்ற பரசுராமர் ராமரையும் கொல்ல முயன்றார். ஆனால், ராமபிரானிடம் தோற்றார். காரணம், பரசுராமர் பிறரைத் தண்டிப்பதில் மகிழ்ச்சி கொண்டார். ராமரோ மன்னிப்பதில் மகிழ்ச்சி கண்டார். ஒருவேளை, ராமர் பரசுராமரைக் கொன்றாலும், ராஜ தர்மப்படி குற்றமாகாது. அந்தணரான பரசுராமரைக் கொல்வதில் ராமருக்கு உடன்பாடில்லை. எனவே அவர் தொடுத்த அம்பு பரசுராமரின் உயிரை எடுக்காமல், தவசக்தியை மட்டும் எடுத்துக் கொண்டு திரும்பியது. கடவுளே மனிதனாய் பிறந்தாலும் கூட, மன்னிக்கும் குணம் வேண்டும் என்பதை அறிவுறுத்தவே இந்த அவதார நிகழ்வுகள் இறை சித்தத்தால் நடந்தன.
கேரளத்தின் கொங்கண தேசத்தில் சித்திரை மாதத்தில் உத்ர நட்சத்திரத்தில் புளிஞர் குடியில் பிறந்தவர் கொங்கணர் பிறந்தார் கொங்கணரின் குரு போகர் ஆவார். கொங்கணர் சிறந்த அம்பிகை பக்தர். அம்பிகையை வழிபடும் முறையையும் மந்திரங்களையும் போகர் கொங்கணருக்கு உபதேசித்துள்ளார்.
கொங்கணர் குருநாதரைச்சுற்றி வந்து வணங்கிவிட்டு, உடனே கிளம்பி சென்று உயர்ந்த மலை ஒன்றின் மேல் ஏறி அதன் உச்சியில் அமர்ந்து அம்பிகையை நினைத்து தவம் செய்து கொண்டிருக்கையில் மனதிற்குள் ஏதோ தோன்றவே, தவத்தைக் கைவிட்டு சக்தி வடிவங்கள் சொன்ன அற்புதமான ஒரு யாகத்தை ஆரம்பித்தார்.
அப்பொழுது கௌதமர் அவர் முன் வந்து “கொங்கணரே, தவத்தைச் செய்து அதன்மூலம் தான் சிவத்தை அடைய வேண்டும். எனவே யாகத்தை விடு, தவம் செய்” என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். எனவே யாகமும் நிறுத்தப்பட்டது.
தில்லையை அடைந்த கொங்கணர் மறுபடியும் யாகத்தை செய்ய ஆரம்பித்தார். யாகம் முடிந்ததன் பயனாக கொங்கணருக்கு ஏராளமான சித்திகள் கிடைத்தன. அதனால் நிறைய குளிகைகளை உண்டாக்கினார்.
யாகம், தவம் என்று மாறி மாறி ஒரே சிந்தனை இல்லாமல் இருந்தார் கொங்கணார்.
ஒருநாள் கொங்கணர் திருமழிசை ஆழ்வாரிடம் சென்று செம்பை பொன்னாக்கும் குளிகை ஒன்றினைப் பெருமையுடன் கொடுத்து, “இது காணி கோடியை போதிக்கும்” என்றார். ஆழ்வாரோ தம் உடம்பின் அழுக்கையே திரட்டி கொடுத்து “இரசவாதக் குளிகை இது காணி கோடியை ஆக்கும்” என்று கொடுத்தார். ஆழ்வாரின் பெருமையினை கண்ட கொங்கணர், அவரோடு நட்புறவு கொண்டார். திருமழிசையாழ்வார் சந்திப்பிற்கு பிறகு தவத்தில் ஈடுபட்டார்.
கடுந்தவம் பலன் தந்தது. இரும்பையும் செம்பையும் தங்கமாக்கும் இரசவாதத்தில் கருத்தைச் செலுத்தாமல் தங்கத்தை வீசி எறிந்தார். தன் சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பிச்சை எடுத்த உணவை மட்டுமே உண்டார்.
ஒருநாள் இவர் தவம் செய்து கொண்டிருந்த மரத்தின் மேலிருந்த ஒரு கொக்கு இவர் மேல் எச்சம் இட்டது. கொங்கணர் அந்தக் கொக்கை உற்றுப் பார்த்தார். உடனே கொக்கு எரிந்து சாம்பலாகியது.
தன் தவச்சிறப்பை வியந்து தற்பெருமை கொண்ட கொங்கணர், திருவள்ளுவர் வீட்டிலே பிச்சையின் பொருட்டு வந்தார். அப்பொழுது வாசுகி அம்மையார் திருவள்ளுவருக்கு உணவு படைத்துக் கொண்டிருந்தார். அதன் பின் காலதாமதமாக பிச்சையிட வந்ததால் சினம் கொண்ட கொங்கணர், மாதே! என்னை இவ்வளவு காலம் காக்க வைத்தாயன்றோ? என்று கூறி விழித்து நோக்கினார். ஆனால் அவ்வம்மையார் உடனே எரிந்து சாம்பலாகிவிடவில்லை. கொங்கணர் திகைப்புடன் பார்த்தார். உடனே வாசுகி அம்மையார் நகைத்து “கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா!” என்று கூறினார். தான் காட்டில் செய்த செயல் இவ்வம்மையாருக்கு எவ்வாறு தெரிந்தது என்று வியந்து அவரின் கற்பின் வலிமையை உணர்ந்து மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
திருவள்ளுவர் வீட்டிலிருந்து கிளம்பி வரும் வழியில் பெற்றோருக்குப் பணிவிடை செய்து அவர்களைத் தெய்வமாக வழிபடும் தர்மவியாதன் என்பவனைச் சந்தித்தார்.
கொங்கணரைப் பார்த்ததும் தர்மவியாதன் ஓடிவந்து வணங்கினான். “சுவாமி! வாசுகியம்மையார் நலமாக இருக்கிறார்களா?” என்று கேட்டார். கொங்கணருக்கு மேலும் வியப்பு. “அப்பா! நான் அங்கிருந்து தான் வருகிறேன் என்பது உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்.
தர்மவியதன், “சுவாமி! வாசுகி அம்மையார் கணவரிடம் பக்தி கொண்ட பதிவிரதை, அடியேன் பெற்றோர்கள்தான் தெய்வம் என்பதை உணர்ந்து அதன்படி செயல்படுபவன். இதனால் தான் எங்களிடம் ஏதோ சக்தி இருக்கவேண்டும்” என்று கூறி அவரிடம் விடைபெற்றான்.
கொங்கணர் உண்மையை உணர்ந்தார். அவரவர் தர்மப்படி கடமையைத் தவறாமல் செய்வது, தன்னடக்கத்துடன் இருப்பது ஆகியவைகள் மனிதனிடம் தெய்வ சக்தியை உண்டாக்குகிறது என்பதை உணர்ந்த கொங்கணருக்கு மனம் கனிந்தது.
காசியில் எழுந்தருளி இருக்கும் விஸ்வநாதர் பாணலிங்கமாகவும், ராமேஸ்வரத்தில் அருள்பாலிக்கும் ராமலிங்கம் மணல் லிங்கமாகவும் காட்சி தருகின்றனர். இறக்க முக்தி (பிறப்பற்ற நிலை) காசியிலும், தரிசிக்க முக்தி ராமேஸ்வரத்திலும் கிடைக்கும். ராமாயணத்திற்கும், காசிராமேஸ்வரத்திற்கும் மிகுந்த தொடர்பு உண்டு. ராமேஸ்வரத்தில் அனுமலிங்கத்திற்கே முதல் மரியாதையும், பூஜையும் நடத்துவர். இந்த லிங்கத்திற்கு "காசிலிங்கம்' என்றும் பெயருண்டு. ராமபிரான் பூஜித்ததால் அவருடைய பெயரால் மூலவரை "ராமநாதர்' என்று அழைக்கின்றனர். காசியில் ஒவ்வொருநாளும் இரவும் நடைபெறும் சப்தரிஷிபூஜையின் போது ஏழுபண்டாக்கள் பூஜை செய்வர். அப்போது "ராம்' என்று பொறிக்கப்பட்ட தங்கத்தாலான வில்வஇலைகளால் விஸ்வநாதருக்கு அர்ச்சனை செய்யப்படும். காசியில் இறக்கும் உயிர்களின் காதில், "ராமா' என்று, சிவபெருமானே ஜெபித்து மோட்சம் அளிப்பதாக ஐதீகம். காசி யாத்திரை, ராமேஸ்வரத்தில் நீராடி ராமநாதரைத் தரிசித்த பின்னரே நிறைவு பெறுகிறது. 2000 மைல் தொலைவில் அமைந்துள்ள இவ்விரு தலங்களையும் சேர்த்து "காசி ராமேஸ்வரம்' என்று சொல்லும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.
புரட்டாசி மாதத்தை சைவ மாதமாக முன்னோர்கள் மாற்றியதற்கான அற்புதக் காரணங்கள் உள்ளன.
புரட்டாசி மாதம் வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம்.
ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. பல மாதம் வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும்.
அதனால்தான் இந்த மாதத்தை சூட்டை கிளப்பிவிடும் மாதமாக புரட்டாசியை கூறுவார்கள்.
இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது. இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும். அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல் சளி தொந் தரவு அதிகரிக்கும்.
இதுபோன்ற சளி தொந்தரவை துளசி இலை கட்டுப்படுத்தும். இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து (அசைவம் ஒதுக்கி) பெருமாள் கோவிலுக்கு போகும் வழக்கத்தை ஏற்படுத்தினர். மேலும் அந்த மாதத்தில் பெருமாள் கோவிலில் வழங்கப்படும் தீர்த்தமும் இயற்கை மருத்துவ குணத்துடன் தயாரிக்கப்படுவதால், துளசியும் தீர்த்தமும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வெகுவாக அளிக்க உதவும்.
இதுபோன்ற பல்வேறு நல்ல விஷயங்கள் மக்களுக்கு பயன்பட வேண்டும் என்ற காரணத்தால்தான் புரட்டாசி மாதத்தை பெருமாளுக்கு உகந்த மாதமாக மாற்றி, மக்களுக்கு நன்மை பயக்கும் விரத முறைகளை அனுசரிக்க முன்னோர்கள் வழிகாட்டினர்.
இந்தமாதத்தில் சைவ உணவை மட்டும் சாப்பிட்டால் பல்வேறு நோய்களி லிருந்து மக்கள் காப்பாற்றப்படுவார்கள் என்ற நோக்கத் தில்தான் புரட்டாசியில் அசைவத்தை தவிர்த்தனர் நம் முன்னோர்கள். நாமும் இந்த மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறையை கடைப்பிடித்து உடலையும், மனதையும் காத்துக்கொள்வோம் வாருங்கள்.
நீராடும் போது, நாம் குளிக்கும் நீரை கங்கையாகக் கருதி குளிக்கவேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதை, சிந்து, காவிரி ஆகிய ஏழுநதிகளையும் சப்ததீர்த்தம் என்று குறிப்பிடுவர். நீராடத் துவங்கும்போது கிழக்கு அல்லது வடக்கு முகமாக நின்று, "கங்கேச யமுனா சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதா சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதம் குரும்' என்னும் ஸ்லோகத்தை சொல்லிவிட்டு குளித்தால் சாதாரண குளியல் கூட புனிதநீராடலாக மாறிவிடும்.
அழகரின் திருவருளாலும் வருகிற வருடம் முழுவதும் அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களை அழகர் அவர்களுக்கு படியளப்பதாக ஐதீகம். படி அளந்தால் படியளக்கும் அழகரின் பெருமைகளை உணர்ந்தவர்கள் ஏராளம்.
மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியை, அகத்திய முனிவர் திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் அமைந்துள்ள அழகர் சுந்தரராஜருக்காக அருளினார். மாதம் மும்மாரி மழை பொழிந்து தாமிரபரணி ஆற்றினால் வளம் பெற்ற ஊர்கள் ஏராளம். இந்த நதிக்கரையில் அமைந்து உள்ள சீவலப்பேரி அழகர் சுந்தரராஜருக்கு ஒரு விசேஷம் உண்டு.
அது என்னவென்றால், ஆண்டு தோறும் தை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த கோவிலில் உள்ள விநாயகருக்கு மழை பெய்ய வேண்டி சிறப்பு பூஜை நடைபெறும். இந்த பூஜை முடிந்த பின்னர் இங்குள்ள அழகருக்கு படி அளக்க வேண்டும். அதாவது அழகர் கோவில் கொடி மரம் முன்பு பெருமாளுக்கு அந்த வருடத்தில் விளைந்த பொருட்களை அவரவர் வசதிப்படி படி அளப்பு செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்தால் விநாயகர் அருளாலும், அழகரின் திருவருளாலும் வருகிற வருடம் முழுவதும் அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களை அழகர் அவர்களுக்கு படியளப்பதாக ஐதீகம். படி அளந்தால் படியளக்கும் அழகரின் பெருமைகளை உணர்ந்தவர்கள் ஏராளம்.
அழகருடைய காவல் தெய்வங்களுக் கும், பரிவார தேவதைகளுக்கும் கூட இது பொருந்தும். தினமும் காலை அழகரின் பிரசாதத்துக்கு தேவையான அரிசியும், கருவறை தீபத்துக்கு தேவையான எண்ணெய்யும் அருகில் உள்ள சுடலைமாட சுவாமியின் கோவிலில் இருந்து சுடலைமாட சுவாமியின் மேற்பார்வையில் பூசாரி ஒருவர் கொண்டு வருவார். அதன்பிறகே அழகருக்கு நைவேத்தியம் தயார் செய்யும் பணியும், கருவறை தீபமும் ஏற்றப்படுகிறது.
ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அழகருக்கு ராஜபரிபாலன உற்சவம் நடைபெறும். இந்த உற்சவம் மிகவும் விசேஷமானது. அன்றைய தினம் ராஜ அலங்காரத்தில் அழகர் கம்பீரமாக ஊரை வலம் வந்து கொலுமண்டபத்தில் அமர்வார். அவர்(அழகர்) முன்பு கோவில் கணக்காளர், அந்த வருடத்தின் கணக்கு வழக்குகள், மாதா மாதம் நடந்த விசேஷங்கள், படி அளந்தவர்கள், மழை விவரம், விளைச்சல் போன்ற முக்கியமான தகவல்களை மிகவும் பவ்யமாக படிப்பார்.
பின்னர் அந்த ஊருக்கு தேவையான விஷயங்கள், குறைகள் போன்றவற்றை பகவானிடம்(அழகரிடம்) கூறுவார்கள். கோவிலுக்கு திருப்பணிக்கு உதவியவர்களுக்கு மரியாதை செய்யப்படும். அத்துடன் அந்த வருட கணக்கு முடிக்கப்படும்.
இந்த உற்சவத்தினால்(ராஜ பரிபாலன உற்சவம்) அழகர் மக்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி பண்ணுவதாக ஐதீகம். எனவே நமது முன்னோர்கள் வகுத்தளித்த பூஜை முறைகளை பின்பற்றி நாமும் உயர்வோமாக!.
சீவலப்பேரி பெயர்க்காரணம் உடைய ஊர். பொதிகை மலையில் உள்ள பெருமாளை அகத்திய மகரிஷி இங்கே பிரதிஷ்டை செய்து சிவபெருமானின் தலையில் உள்ள கங்கையில் இருந்து ஒரு கையில் நீர் முகந்து அழகருக்காக தாமிர பரணி நதியையும் உருவாக்கினார். பெருமாள் இங்கு வந்தவுடன் ஸ்ரீதேவியான மகாலட்சுமியும் இங்கு வருகிறாள். இந்த ஊரில் ஓடுகின்ற தாமிரபரணியால் செழித்து திகழும் இந்த பிரதேசத்தை பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டு நன் நாதனான அழகரையும், ஊரையும் மூன்று முறை வலம் வந்து அவருடன் இணைகிறாள். இதனால் இந்த பிரதேசம் ஸ்ரீவலம்வந்த பேரி என்றானது. தற்போது சீவலப்பேரி என்று அழைக்கப்படுகிறது.
மகாலட்சுமியின் அருளால் ஒருகாலத்தில் சீவலப்பேரி பட்டினம், மிகப்பெரிய வியாபார தலமாக திகழ்ந்தது. சந்தைகள், நீர்வழி வியாபாரம் என்று செழித்து இருந்தது. தலைநகரமாகவும் விளங்கியது. இந்த தகவல்கள் அழகர் கோவில் கருவறையை சுற்றி உள்ள கல்வெட்டுக்கள் மூலம் தெரிய வருகிறது.
குழந்தைகள் வீட்டில் சத்தம் போட்டுக் கொண்டு விளையாடினால் கம்முன்னு இருங்க' என்று பெரியவர்கள் கண்டிப்பது வழக்கம். "கம்' என்ற சொல் அமைதியைக்குறிக்கிறது. காரியம் ஆகவேண்டுமானாலும் அருளாளர்கள் "கம்' என்று தான் இருக்கச் சொல்கிறார்கள். "கம்' என்பது விநாயகருக்குரிய பீஜ மந்திரமாகும். பீஜம் என்றால் "விதை'. விதை விதைத்தால் பயிர் வளரும். பக்தியோடு "கம்' என்னும் மந்திரத்தைச் சொல்லி, கணபதியின் திருவடிகளைப் பிடித்துக் கொண்டால் வாழ்வில் வெற்றி கிடைக்கும்.
Tuesday, 26 September 2017
1 தன லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ புஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் செல்வத்தின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்,வணங்குகிறேன்,வணங்குகிறேன்.
2 வித்யா லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் கலை, கல்வியின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.
3 தான்ய லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ க்ஷுதா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் உணவு பொருட்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.
4 வீர லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ த்ரூதிரு ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் வீரம், வெற்றியின் அம்சமாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.
5 ஸௌபாக்ய லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ முஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் சுகம், நிம்மதியின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.
6 சந்தான லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ மாத்ரூ ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் தாயாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.
7 காருண்ய லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ தயா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.
8 ஆதி லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ லக்ஷ்மீரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அனைத்து செல்வங்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.
இந்த மந்திரம் கூறி வழிபட்டாலே போதும் எல்லா நன்மைகளும் வந்து சேரும்.
கங்கைக் கரையில் உள்ள புண்ணிய தலங்களில் சிறப்பானவை காசி, பிரயாகை, ஹரித்துவார். பிரயாகை தான் தற்போதைய "அலகாபாத்'. இங்கு யமுனைநதி கங்கையோடு கலக்கிறது. அலகாபாத் அருகில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்றும் சேரும் "திரிவேணிசங்கமம்' புண்ணிய தீர்த்தமாக விளங்குகிறது. திருப்பாவையில் "மாயனை மன்னு வடமதுரை மைந்தனை தூயபெருநீர் யமுனைத் துறைவனை' என்று கண்ணபிரானின் சிறப்பை யமுனை நதியோடு இணைத்து, ஆண்டாள் குறிப்பிடுகிறாள். யமுனைக்கரையில் அமர்ந்து சொல்லும் காயத்ரி ஜபத்திற்கு விசேஷபலன் உண்டு. இங்கு சரஸ்வதி "அந்தர்வாகினி'யாக (கண்ணுக்கு தெரியாமல் மறைவாக இருக்கும் நதி) ஓடுகிறது. திரிவேணி சங்கமத்தை "தீர்த்தங்களின் ராஜா' என்று குறிப்பிடுவர். இங்கு வெண்ணிற கங்கையும், கருமை நிற யமுனையும் கலப்பதைக் காணமுடியும். பிரம்மாயாகம் செய்த தலம் என்பதால் "பிரயாகை' என்றபெயர் உண்டானது.
படிப்பில் மந்தமாக இருக்கும் குழந்தைகள் சிறந்து விளங்க தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் இந்த ஸ்லோகத்தை சொல்லி வரலாம்.
வந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம்
ஹஸ்தாப்யா மப்யப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம்
பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர பிரஹ்மாதிபிஸ் சேவிதாம்
பார்ஸேவே பங்கஜஸங்க்க பத்மநிதிர் யுக்தாம் ஸதா ஸக்திபி:
ஒரு செயலை செய்ய முடிவெடுத்தால், அது அதிவிரைவில் முடிய வேண்டும் என ஆசைப்படுகிறோம். ஒரு மாணவன் "இந்த கடினமான பாடம், பத்தே நிமிடத்தில் என் மனதில் பதிந்து விடாதா?' என எதிர்பார்க்கிறான். இப்படி எல்லாருக்கும் ஏதோ ஒரு விதத்தில் அவசரம் இருக்கிறது. ஆன்மிகவாதிகள் கைலாயத்தை அடைவதில் நான் முந்தி,நீ முந்தி என போட்டியிடுகின்றனர். அவ்வை, சுந்தரர், சேரமான் பெருமாள் ஆகியோர் கைலாயத்தை அடைய ஆசைப்பட்டனர். சுந்தரர் யானையிடம், சேரமான் பெருமாள் குதிரையிலும் சென்றனர். யானையை குதிரை முந்தியது. ஆனால், வாகனம் ஏதுமில்லாத அவ்வை இவர்களுக்கு முன்னதாகவே கைலாயம் போய்விட்டாள்.
தன்னைப் பாடும்படி விநாயகர் அவ்வையிடம் கேட்டார். "ஐயனே! நீ இருக்குமிடமே கைலாயம் போன்றது தான். இப்போது, கைலாயத்தில் நின்றபடியே பாடுவதாக உணர்கிறேன்,'' என்று சொல்லி, "சீதக்களப செந்தாமரைப்பூம்' என்று அகவல் பாடி முடித்தாள். விநாயகருக்கு ஏக சந்தோஷம். தும்பிக்கையால் அப்படியே மேலே தூக்கி கைலாயத்தில்கொண்டு சேர்த்து விட்டார். ஆக, விநாயகரை வணங்குபவர்கள் எதையும் முந்திச்செய்யும் ஆற்றல் பெறுவர். "முந்தி முந்தி விநாயகனே' என்று பாடுவது கூட இதனால் தான்!
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது பெருமாளுக்கு மகிழ்ச்சியைத் தரும், சனியின் பார்வையும் பலவீனமடையும்.
புரட்டாசி மாதம் முழுவதும் விரதமிருந்து பெருமாளை வழிபட சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். புரட்டாசி மாதத்தில்தான் சனி பகவான் பிறந்தார். எனவே, புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது பெருமாளுக்கு மகிழ்ச்சியைத் தரும், சனியின் பார்வையும் பலவீனமடையும்.
அன்று முழுவதும் உபவாசம் இருப்பது சிறப்பாகப் பேசப்படுகிறது. கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கருணை மிகுந்த ஆஞ்சநேயசாமி, சனியின் பிடியிலிருந்து காப்பாற்றுவார்.
ஆஞ்சநேயரை வணங்கும் பக்தர்களை சனிபகவான் தொந்தரவு செய்வதில்லை. புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது. கடன் வாங்கவும் கூடாது. ஆனால் தர்மம் நிறையச் செய்யலாம்.
காகத்திற்கு அன்று ஆலை இலையில் எள்ளும் வெல்லமும் கலந்த அன்னம் வைத்தால் சனியின் தாக்கம் நீங்கும்.
புரட்டாசி சனிக்கிழமையன்று சிவாலயங்களுக்குச் சென்று சனி பகவானை வழிபட்டு வணங்கினால், சனி தோஷம் நீங்கும். புனிதமிக்க புரட்டாசி மாதத்தில் வரும் விரதங்கள் புண்ணிய பலன் அதிகம் தரும் என்பது ஐதீகம்.
ஜேஷ்டா விரதம், மகாலட்சுமி விரதம், தசாவதார விரதம், கதளி கவுரிவிரதம், அநந்த விரதம், பிரதமை, நவராத்திரி பிரதமை, சஷ்டி, லலிதா விரதம் போன்றவை விசேஷமானவை.
""கீதா கங்கா ச காயத்ரீ கோவிந்தேதி ஹ்ருதி ஸ்திதே'' என்ற ஸ்லோகத்தை வடமாநில மக்கள் காலையில் எழுந்தவுடன் சொல்வார்கள். கீதை, கங்கை, காயத்ரி, கோவிந்தா என்ற நான்கு சொற்களும் "க' வரிசையிலுள்ள எழுத்துக்களில் துவங்குபவை. இந்த ஸ்லோகத்தைச் சொன்னால், பிறப்பில் இருந்து விடுபடலாம் என்கிறது இந்த ஸ்லோகம்.
நவராத்திரி நாட்களில் அன்னையின் அருள்பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜிக்க இயலாதவர்கள் சரஸ்வதி பூஜை அன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினால் போதும், அம்பிகையின் அருள் பூரணமாய் கிடைக்கும்.
சரஸ்வதி பூஜை அன்று வீடுகளிலும், அலுவலகங்களிலும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். அவ்வாறு வழிபாடு செய்வதற்கு முன்பு, வழிபாடு செய்ய இருக்கும் இடத்தை தூய்மைப்படுத்த வேண்டும். சந்தனம், தெளித்து குங்குமம் இட வேண்டும்.
சரஸ்வதியின் படத்திற்கும், படைக்கப்பட வேண்டிய பொருட் களுக்கும் சந்தனம் தெளித்து குங்குமம் இடவும், படத்திற்கு பூக்கள் வைத்து அலங்கரிக்க வேண்டும்.
அன்னையின் திருவுருவின் பார்வையில் புத்தகங்களா வைத்து அதன் முன்பாக வாழையிலை விரித்து அதில் படையலுக்காக சமைக்கப்பட்டவைகளை வைக்க வேண்டும்.
சுண்டல், சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவற்றை கலைவாணிக்கு நைவேத்தியங்களாக படைக்கலாம். வாழை இலையை வைத்து அதில் பொறி, கடலை, அவல், நாட்டு சர்க்கரை, பழங்களை வைக்க வேண்டும். செம்பருத்தி, ரோஜா, வெண்தாமரை மலர்கள் அன்னைக்கு உகந்த மலர்களாகும். இவற்றால் மாலைகள் தொடுத்து அன்னைக்கும், அவள் உறைந்திருக்கும் புத்தகங்களுக்கும் அணிவித்தல் வேண்டும்.
எதற்கும் விநாயகரே முழு முதலானவர், எனவே மஞ்சளில் பிள்ளையார் பிடித்து பூஜையில் வைத்து சுக்லாம் பரதரம் விஷ்ணும் சஸிவர்ணம் சதுர்புஜம்! ப்ரசந்த வதனம் தீயாயேத் சர்வ விக்நோப சாந்தயே’ என்று கூறி விநாயகரை வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல் வேண்டும்.
சரஸ்வதி பூஜையின் போது ‘துர்க்கா லட்சுமி சரஸ் வதீப்யோ நம’ என்று கூறி பூஜையை ஆரம் பிப்பது நன்று. பூஜையில் கலசம் வைத்தும் கலைவாணியை வணங்கலாம். கலசம் வைத்து அம்பிகையை முறைப்படி எழுந்தருளச் செய்து பூஜிப்பதால் கூடுதல் நலன் கிடைக்கும்.
பூஜையின் போது வீட்டில் உள்ள குழந்தைகள், பெண்கள் உள்பட அனைவரும் கலைவாணிக்குரிய பாடல்களைப் பாடி வணங்கலாம். சகலகலாவல்லி மாலை பாடல்களை பாராயணம் செய்யலாம்.
நவராத்திரி நாட்களில் அன்னை யின் அருள்பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜிக்க இயலாதவர்கள் சரஸ்வதி பூஜை அன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினால் போதும், அம்பிகையின் அருள் பூரணமாய் கிடைக்கும்.
நாக தோஷத்தை நிவர்த்தி செய்யும் நாகம்மா அருள்பாலிக்கும் ஆலயம் ஒன்று திம்மராய சமுத்திரத்தில் உள்ளது. ஸ்ரீ சுயம்பு நாகமணி தேவி ஆலயம் என்பது இந்த ஆலயத்தின் பெயராகும்.
தோஷ நிவர்த்தி தலங்கள் பல உண்டு. நாக தோஷ நிவர்த்தி தலங்களும் பல உண்டு. நாக தோஷத்தை நிவர்த்தி செய்யும் நாகம்மா அருள்பாலிக்கும் ஆலயம் ஒன்று திம்மராய சமுத்திரத்தில் உள்ளது. ஸ்ரீ சுயம்பு நாகமணி தேவி ஆலயம் என்பது இந்த ஆலயத்தின் பெயராகும்.
சுமார் 400 ஆண்டுகள் பழமையானது இந்த ஆலயம். ஒரு கருவ மரமும் அதையொட்டி ஒரு புற்றும் வளர்ந்து வர மக்கள் அந்தப் புற்றை நாகம்மாவாகப் பாவித்து வணங்கி வரத்தொடங்கினர். மரமும் வளர்ந்தது. புற்றும் வளர்ந்தது. இரண்டடி, மூன்றடி என்று தொடங்கி புற்று பத்தடி உயரத்திற்கு மேல் வளர்ந்தது. அதைத் தொடர்ந்து அந்த கிராம மக்கள் சார்பில் புற்றின் முன் ஒரு விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அந்த விக்கிரகத்தின் கீழ் பகுதி சிவலிங்கமாகவும், மேல் பகுதியில் அன்னையின் சிரசும் அமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட பின் அன்னையின் உருவம் மட்டுமே தெரியும் அமைப்பாக உள்ளது. அன்னை நாகமணி தேவியின் சன்னிதிக்கு வந்து வேண்டுவோருக்கு வேண்டும் அனைத்தும் கிடைப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
அன்னையின் கருவறையில் அன்னை இன்முகத்துடன் அமர்ந்திருக்க அந்த கருவறை முழுவதையும் மண்புற்று ஆக்கிரமித்துள்ளது. அந்தப் புற்றில் ஒரு நாக குடும்பமே வசிப்பதாக ஆலய நிர்வாகி எந்தவித பதற்றமும் இன்றி கூறுவது நம்மை சிலிர்க்க வைக்கிறது. அதில் வசிக்கும் சில நாகங்கள் அவ்வப்போது வெளியில் வருவது உண்டாம். பக்தர்கள் பலரும் அதைப் பார்த்திருப்பதாக மெய்சிலிர்த்தபடி தெரிவிக்கின்றனர். கருவறையில் எப்போதாவது வலம் வரும் நாகத்தை ஆராதனை செய்யவரும் அர்ச்சகர் பொருட்படுத்துவது இல்லையாம்.
ஆலய அமைப்பு :
ஆலயம் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ஒருபுறம் கொள்ளிடம் ஆறு ஓட, சாலையை விட்டு மறுபுறம் இறங்கினால் கோவிலை தரிசனம் செய்யலாம். ஆலய முகப்பின் இடதுபுறம் காளியும் வலதுபுறம் பேச்சியம்மனும் அருள் பாலிக்கின்றனர். உள்ளே நுழைந்ததும் மகா மண்டபமும் அருகே சூலமும் சிம்மமும் உள்ளன. உட்பிரகாரத்தில் மேற்கில் மகாலிங்க சாஸ்தா, கொம்பரேஸ்வரர், காமாட்சி அம்மன், கலிங்கு நர்த்தனார், சப்த மாதாக்கள், மகாலட்சுமி, ஆஞ்சநேயர் திருமேனிகள் அருள்பாலிக்கின்றன. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். அத்துடன் கிழக்கில் காத்தவராயன் சன்னிதியும் உள்ளது.
கருவறையின் முன் இருபுறமும் துவாரபாலகிகள் வீற்றிருக்க நாகம்மா அன்னை வடதிசை நோக்கி அருள்பாலிக்கிறாள். அன்னையின் தலைக்கு மேல் நாகம் படம் எடுத்து ஆடுவது போன்ற அமைப்பு உள்ளது.
புற்றில் உள்ள கருவை மரத்தில் காளிதேவியும், புற்றில் நாகம்மாவும், வெளியே அங்காளப் பரமேஸ்வரியும் வாசம் செய்வதாக பல நூறு ஆண்டுகளாக நம்பிக்கை உள்ளது. ஆலய தல மரங்கள் கருவை, வேம்பு என இரு மரங்கள்.
காவல் தெய்வங்கள் :
மகாமண்டபத்தை விட்டு வெளியே வந்தால் அகன்று விரிந்த ஆலய வளாகம் உள்ளது. பல காவல் தெய்வங்கள் அங்கு அருள்புரிகின்றனர். மேற்கில் அங்காளப்பரமேஸ்வரி, வடக்கில் கருப்புசாமி, முனிஸ்வரர், மதுரைவீரன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். கிழக்கில் நெல்லி மரமும் அதன் அடியில் பைரவரும் அருள்பாலிக்கின்றனர். தவிர சுடலை மாடசாமி, சாம்புக மூர்த்தி, சமயபுரத்தம்மன் சன்னிதிகள் உள்ளன. தலவிருட்சமான வேம்பு அன்னை சமயபுரத்தம்மன் சன்னிதிக்கு பின்புறம் இருக்கிறது. இந்த வேம்பு மரம் அடியில் மூன்று கிளைகளாகப் பிரிந்துள்ளது. பின்னர், ஒவ்வொரு கிளைகளும் மூன்று மூன்று கிளைகளாகப் பிரிந்து பார்ப்பவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த் திக் கொண்டிருக்கிறது.
பூஜையும் விழாக்களும் :
அன்னை நாகமணிக்கு ஞாயிற்றுக்கிழமை ராகு கால பூஜை நடைபெறுகிறது. மாலை 4.30 முதல் 6 மணி வரை நடைபெறும், இந்த பூஜையில் கலந்து கொள்வதால் சகல தோஷங்களும் விலகும் என்கின்றனர் பக்தர்கள். இந்த ஆலயத்தில் தீர்த்த பிரசாதமாக, புற்று மண் கலந்த நீரை வழங்குகிறார்கள். பல வியாதிகளை குணமாக்கும் வல்லமை இந்த தீர்த்தத்திற்கு உண்டு என்கின்றனர், தீர்த்த நீரை வாங்கிப் பருகி நோய் தீர்ந்த பக்தர்கள்.
வைகாசி மாதம் வளர்பிறை பூரம் நட்சத்திரம் அன்று தொடங்கி 9 நாட்கள் இந்த ஆலயத்தில் திருவிழா நடைபெறுகிறது. முதல் நாள் காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கும். 7–ம் நாள் கரகம், பால்குடம், அக்னி சட்டி முதலியவைகளுடன் சுமார் 200–க்கும் மேற்பட்டோர் கொள்ளிட நதியில் இருந்து புறப்பட்டு ஆலயம் வந்து சேருவார்கள். 8–ம் நாள் அடசல் பூஜையும், 9–ம் நாள் மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறும். அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஊஞ்சல் உற்சவம் வெகு சிறப்பாக நடத்தப்படுகிறது.
அன்னையிடம் தங்கள் குறைகளைக் கூறி வேண்டிக் கொள்பவர்கள், தங்களது வேண்டுதல் பலித்ததும் அன்னைக்கு புடவை சாத்துவதுடன், அம்பாள் சன்னிதியில் விளக்கு ஏற்றி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டு நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றனர். இந்த ஆலயம் ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் அமைப்பில் அமைந்துள்ளது வியப்பான தகவலாகும்.
யாக பூஜை:
தை மாதம் அஸ்த நட்சத்திரம் சஷ்டி திதியில் வரும் அம்மன் பிறந்த நாள் அன்று, அன்னையின் முன் மகா மண்டபத்தில் விசேஷ ஹோமம் நடத்தப்படுகிறது. பல நூறு பக்தர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.
ஒரு முறை இந்த யாகம் நடந்த போது ஓர் அதிசயம் நடந்துள்ளது. கொழுந்து விட்டு எரிந்த யாகத்தீயில் அன்னையின் உருவம் தீப்பிழம்பாய் மேலெழுந்து, கூடியிருந்த பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்ததாக கூறுகிறார்கள்.
அந்த உருவத்தின் கையில் கத்தியும், தலையில் பிறையும் இருப்பது புகைப்படத்தில் கூட தெளிவாகத் தெரிகிறது. அந்த புகைப்படம் ஆலயத்தில் மாட்டி வைக்கப்பட்டுள்ளது.
அன்னையின் சன்னிதியில் நாம் நுழையும் போது நம் மனதில் இனம் தெரியாத சிலிர்ப்பு உண்டாகி மனம் இலகுவாக மாறுவதை நம்மால் நிச்சயமாக உணர முடியும்.
ஆலயம் காலை 5½ மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7½ மணி வரையிலும் திறந்திருக்கும். தினசரி இரண்டு கால பூஜை மட்டுமே இங்கு நடைபெறுகிறது.
திருவானைக்கோவிலிருந்து கல்லணை செல்லும் சாலையில் உள்ளது திம்மராய சமுத்திரம். இங்குதான் இந்த ஆலயம் உள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த ஆலயத்திற்கு செல்ல பேருந்து வசதி உள்ளது. முதியோர் இல்லம் என்ற நிறுத்தத்தில் இறங்கினால் அருகிலேயே ஆலயம் உள்ளது. ஆட்டோ வசதியும் உண்டு.
வேண்டியதை வேண்டியபடி அருளும் நாகமணி தேவியை நாமும் ஒரு முறை தரிசித்து வரலாமே!
ஏழாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆட்சி செய்த மகேந்திர பல்லவனின் ஆட்சிக்கு முன்னதாக செங்கல், மரத்தால் தான் கோயில்கள் எழுப்பப்பட்டன. மகேந்திரவர்ம பல்லவர் தான் முதல் கற்கோயில் எடுத்தவர். அதாவது, பாறைகளை வெட்டி துண்டுகளாக்கி இவர் கோயில் கட்டவில்லை. மலையைக் குடைந்து செதுக்கி கோயிலாக்கினான். எட்டாம் நூற்றாண்டில் வந்த இரண்டாம் நரசிம்மவர்மனான ராஜசிம்ம பல்லவன் தான், பாறைகளை துண்டுளாக்கி கோயில் கட்டினான். அவ்வாறு எழுப்பப்பட்ட முதல் கோயில் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில். அவ்வகையில், முதல் கற்கோயிலாக இதை எடுத்துக் கொள்ளலாம். குன்றுகளைக் குடைந்த கோயிலை "குடைவரைக் கோயில்' என்றும், பாறைகளைத் துண்டுகளாக்கி எழுப்பிய கோயிலை "கட்டடக்கோயில்' என்றும் சொல்வர். இதற்கு கற்றளி, கல்தளி என்ற பெயரும் உண்டு. "தளி' என்றால் "கோயில்'
இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறார் என்பதால் "தூணிலும் இருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார்' என்று குறிப்பிடுவர். கடவுளுக்கு "விஷ்ணு' என்ற திருநாமம் உண்டு. விஷ்ணு என்றால் "எங்கும் வியாபித்திருப்பவர்' என்று பொருள். ஆனாலும், எங்கு இருக்கிறார் என்று கண்டுபிடிக்க இயலாது. பூமியில் தண்ணீர் இல்லாத இடம் இல்லை. எங்கும் நிறைந்திருக்கிறது. ஆனால், எல்லா இடத்திலும் ஊற்றெடுப்பதில்லை. யாரொருவர் முயற்சியுடன் கடப்பாரையால் பூமியைத் தோண்டுகிறாரோ அங்கே நீர் சுரக்கிறது. அதுபோல, உள்ளத்தை பக்தி என்னும் கடப்பாரை கொண்டு தோண்டினால் அங்கே அருள் சுரக்கும். "உலக ஆசை' என்னும் மண்பரப்பு அருள் என்னும் நீரை மூடி இருக்கிறது. அந்த ஆசை மண்ணைத் தோண்டி ஓரமாகக் கொட்டிவிட்டால், அருள் வெளிப்படத் தொடங்கிவிடும். ஆன்மிகத்திற்கு மட்டுமல்ல, வாழ்வில் எதைப் பெற வேண்டுமானாலும் முயற்சி தேவை. அது விடாமுயற்சியாகத் தொடர்ந்து இருத்தல் அவசியம்.
Monday, 25 September 2017
திருமால் துயில் கொள்ளும் பாற்கடலில் வியூக மூர்த்திகள் எனப்படும் நால்வர் இருக்கின்றனர். இவர்களை ஒரு தூணுக்கு ஒப்பிடுகின்றனர். இதற்கு "வியூக யூக ஸ்தம்பம்' என்று பெயர். "ஸ்தம்பம்' என்றால் "தூண்'. முதல் மூர்த்தி மனிதனின் விழிப்பு நிலையைக் கவனிப்பார். இன்னொருவர் கனவு நிலையைக் கவனிப்பார். மற்றொருவர் ஆழ்ந்த தூக்கநிலையைக் கவனிப்பார். கடைசி மூர்த்தி மயக்கநிலையைக் கவனிப்பார். ஒரு மனிதன் விழித்திருக்கும்போது "எல்லாம் தானே' என்று மமதை கொள்கிறான். அரைகுறை தூக்கத்தில் காணும் கனவும் உண்மைச் சம்பவம் போலவே அவன் மனதில் படுகிறது. ஆழ்ந்து தூங்கிவிட்டால் இறந்தவனுக்கு சமமானவனாகி விடுகிறான். கண்விழித்ததும் ""உறங்கியதும் நானே, விழித்ததும் நானே, இந்த உலகத்தை நானே இயக்குகிறேன்,'' என்ற மமதை கொள்கிறான். இந்த நிலைகள் மாறி மாறி அவனுக்குள் ஏற்படுகின்றன. இவ்வாறான மமதை மயக்கத்தில் இருந்து, அவனைக் கடத்தி இறைவனுடன் இரண்டறக் கலக்க வைக்கும் பணியை இந்த வியூகமூர்த்திகள் செய்கின்றனர்.
உண்மையை மட்டுமே பேச வேண்டும், சத்தியநெறியை மட்டும் கடைபிடிக்க வேண்டும். என்ன வந்தாலும், எது நடந்தாலும் இதயத்து மாளிகையில் சத்தியத்தை மட்டுமே குடியமர்த்த வேண்டும். இதனால், என்ன லாபம் என்பதற்கு உதாரணகர்த்தா திருக்கடையூர் அபிராமி பட்டர்.
இவர் மீது பொறாமை கொண்ட சிலர், சரபோஜி ராஜாவிடம் சென்று, ""நமது ஊர் அபிராமி கோயிலில் ஒரு பைத்தியம் வேலை செய்கிறது. அம்பாள் முன்னால் கண்ணை மூடிக்கொண்டு ஏதேதோ பிதற்றுகிறது. இவரது பிதற்றலைக் கேட்டு அம்பாளுக்கும் கஷ்டம், பக்தர்களுக்கும் கஷ்டம்,'' என்றனர். ஆனால், அம்பாள் எல்லாம் அறிந்தவள் அல்லவா! அபிராமிபட்டர் சத்தியநெறி தவறாதவர், தன் முன்னால் அமர்ந்து சத்தியத்தை மட்டுமே பேசுபவர் என்பதை ஊருக்கு உணர்த்த முடிவெடுத்தாள்.
ஒருநாள் சரபோஜி கோயிலுக்கு வந்தார்.
""இன்று என்ன திதி?'' என பட்டரிடம் கேட்டார். அவர் அம்பாளின் முகத்தை பூரணசந்திரனாகக் கற்பனை செய்து லயித்திருந்த வேளை அது. ""பவுர்ணமி'' என்றார்.
""இன்று அமாவாசையல்லவா! பவுர்ணமி என்கிறானே, நிச்சயம் இவன் பைத்தியம் தான்,'' என்று நினைத்த சரபோஜி, ""இதுதான் பவுர்ணமி வானமா?'' என்று கேலியாக சிரித்தபடியே தலையைத் தூக்கினார். நிஜமாகவே வானில் சந்திரன் இருந்தான். அதாவது, சத்தியம் பேசுபவர்கள், தவறாகவே ஏதும் சொன்னாலும் கூட அது சத்தியமாகி விடுகிறது. அதனால் தான் சத்தியத்தைக் கடைபிடிக்கும் மகான்கள் சொல்வதெல்லாம் பலித்து விடுகிறது. சத்தியத்தின் மதிப்பை அறிந்து சத்தியத்தின் பக்கம் திரும்புங்கள். கலியுகத்தில் இது சாத்தியமா என்றெல்லாம் சாக்குப்போக்கு சொல்லாமல் சத்தியத்தின் பக்கம் போனால் நன்மை நமக்குத்தான்!
கிருஷ்ணன் வேடிக்கை செய்வது போல சேவை செய்தவர். காளிங்கன் என்னும் பாம்பு மக்களைத் துன்புறுத்தியது. இவர் அதன் மேல் ஏறி நடனமாடுவது போல நடித்து அதைக் கொன்று மக்களைக் காத்தார். உரலை இழுப்பது போல் வேடிக்கை காட்டி, மரமாக நின்ற கந்தர்வர்களைக் காத்தார். ஒரு குன்றையே தூக்கி குடை போல் பிடித்து, இந்திரன் தந்த பெருமழையில் இருந்து மக்களைக் காத்தார். விளையாட்டான நிகழ்வாக இருந்தாலும், இதிலுள்ள சேவையின் தன்மையை அளவிட முடியாது. ஒரு வீட்டில் தீட்டு ஏற்பட்டால், அவர்கள் மற்றவர்களோடு ஒட்டாமல் விலகியிருப்பது போல, சேவை செய்யாத ஒவ்வொரு நாளையும் தீட்டுநாளாகக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொண்டால் சேவை மனப்பான்மை தானாகவே வந்து விடும். உயிர்களுக்கு செய்யும் சேவை, அம்மையப்பனாக இருக்கிற சிவபார்வதிக்கும், விஷ்ணு லட்சுமிக்கும் செய்ததற்கு சமம். திரு மூலர் தனது நூலான திருமந்திரத்தில், ""மக்களுக்கு செய்கிற உதவி, சாட்சாத் ஈஸ்வரனுக்கு செய்யப்படும் பூஜைக்கு சமம்'' என்கிறார்.
கும்பகோணம் அருகிலுள்ள நாச்சியார் கோயிலில் இருந்து 5கி.மீ., தொலைவில் குடவாசல் செல்லும் ரோட்டி<லுள்ளது திருச்சேறை சாரநாதப் பெருமாள் கோயில். 108 திவ்யதேசங்களில் ஒன்றான இத்தலத்தை திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். ஒருசமயம், உலகம் அழிந்த வேளையில், பிரம்மா இங்கிருந்தே மண் எடுத்து குடம் செய்து வேதங்களைப் பாதுகாத்ததாக தலவரலாறு கூறுகிறது. காவிரியன்னை இங்குள்ள அரசமரத்தடியில் தவமிருந்தபோது, பெருமாள் குழந்தை வடிவில் சங்குசக்ரதாரியாக காட்சி அளித்தார். இங்குள்ள சாரபுஷ்கரணி (குளம்)கரையில், பெருமாள் காவிரித்தாயின் மடியில் தவழும் கோலத்தைக் காணலாம். பெருமாளுடன் இங்கு வந்தபோது, அவருடன் ஸ்ரீதேவி,பூதேவி, நீளாதேவி, மகாலட்சுமி, சாரநாயகி என்னும் ஐந்து தேவியர் உடன் வந்ததாகக் கூறுவர். அதனால், இத்தலத்திற்கு ""பஞ்சலட்சுமி தலம்''என்ற சிறப்புப்பெயர் உண்டு. ஐந்து லட்சுமிகளின் ஆனந்தக்காட்சியை இங்கு காணலாம்.