Wednesday, 20 September 2017

ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி


நாயன்மார்களில் சிவபெருமானை நண்பராகப் பெறும் பேறு பெற்றவர் சுந்தரர். அதனால், இவருக்கு "தம்பிரான் தோழர்' என்ற சிறப்புப் பெயரும் உண்டு. "தம்பிரான்' என்றால் "சிவன்'. இவருடைய கனவில் ஒருநாள் ஈசன்தோன்றி, "நான் கானப்பேர் என்ற இடத்தில் தங்கியுள்ளேன்' என்று கூறி மறைந்தார். ("கானப்பேர்' என்ற புராணப்பெயரையுடைய தலம் சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலாகும்). சுந்தரர் தன்னுடன் இருந்த சேரமான்பெருமாள் நாயனாரையும் அழைத்துக்கொண்டு கானப்பேர் என்னும் புறப்பட்டார். ""கானப்பேர் உறை காளையே!'' என்று சிவனைப் போற்றிப் பாடினார். சண்டாசுரனை வதம் செய்த காளி, காளையப்பரை வணங்கி, அழகான வடிவம் பெற்று, "சவுந்தரநாயகி' என்ற பெயர் பெற்று சிவனை மணம் புரிந்தாள். காளியை மணந்ததால் இவருக்கு "காளீசர்' என்ற பெயரும் உண்டு. இந்தக் கோயிலில் காளீசர்- சவுந்தரநாயகி சன்னதி தவிர, இரண்டு சிவன் சன்னதிகள் உள்ளன. சொக்கநாதர் மீனாட்சியம்மனோடும், சோமேசர் சவுந்திரநாயகியோடும் வீற்றிருக்கின்றனர். இதில் மருதுபாண்டிய மன்னர்கள் கட்டிய கோபுரம் சோமேசர் சந்நிதிக்கு நேரே அமைந்துள்ளது. இந்திரனின் ஐராவதம் என்ற யானை, ஒரு சாபத்தால் காட்டானையாக அலைந்து காளையப்பரை வணங்கி சாபவிமோசனம் பெற்றதாக, சம்பந்தரின் தேவாரப்பாடலில் இடம்பெற்றுள்ளது. 

No comments:

Post a Comment