தாயிற் சிறந்த கோயிலுமில்லை என்பது பெரியோர் வாக்கு. அவளது பெருமையை பறை சாற்றும் விதமாக சிவபெருமானே, ரத்தினாவதி என்னும் கர்ப்பவதிக்கு தாயாக வந்து பிரசவம் செய்தருளினார். இப்பெருமான் திருச்சி மலைக்கோட்டையில் அருள்பாலிக்கிறார். மலையின் மத்தியில் சுயம்புமூர்த்தியாக மேற்கே நோக்கி வீற்றிருக்கும் இவருக்கு "தாயுமானவர்' என்பது திருநாமம். வடமொழியில் "மாத்ருபூத ஈஸ்வரர்' என்பர். இவரது துணைவியான "மட்டுவார்குழலி அம்மன்' தனி சன்னதியில் காட்சிதருகிறாள். சாரமாமுனிவர் என்பவர், நாகலோகத்தில் இருந்து, கொண்டு வந்த செவ்வந்தி மலர்களால் தாயுமானவரைப் பூஜித்து பேறு பெற்றதாக தலவரலாறு கூறுகிறது.
திருநாவுக்கரசர் தாயுமானவரை தேவாரப்பாடலில், ""சிராப்பள்ளி சிவனை நினைத்தால் உள்ளம் குளிர்கிறது'' என்று போற்றியுள்ளார். சிவபெருமானின் 64விதமான மூர்த்தங்களில் ஒன்றான கங்காள மூர்த்தத்தை இங்கு தரிசிக்கலாம். திரிசிரன் என்னும் அசுரன் சிவபெருமானை வழிபட்டதால் திரிசிரபுரம் என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு.
No comments:
Post a Comment