Wednesday 20 September 2017

அல்லிக்கேணியில் ஐந்து பெருமாள்


சுமதி என்னும் மன்னன் வேங்கடமலையில் சீனிவாசப்பெருமாளை வழிபட்டு அர்ஜுனஉபதேசக் கோலத்தில் திருமாலைக் காணவேண்டும் என்ற தவத்தில் ஆழ்ந்தான். அம்மன்னனுக்கு பார்த்தசாரதியாக திருமால் காட்சி தந்த தலம் திருவல்லிக்கேணி. இப்பெருமாளுக்கு வேங்கடகிருஷ்ணன் என்பது திருநாமம். இதே தலத்தில் அத்திரி முனிவரின் தவத்திற்கு மகிழ்ந்த திருமால் நரசிம்மராக எழுந்தருளி அருள்புரிந்தார். மதுமான் மகரிஷி தவம் செய்து, பெருமாளை ராமச்சந்திர மூர்த்தியாக கண்டு அருள்பெற்றார். அப்போது சீதா, லட்சுமண, பரத,சத்ருக்கனர்களும் ராமனோடு உடன் வந்து அருள்புரிந்தனர். சப்தரோமர் ரிஷிக்காக திருமால் கஜேந்திர வரதராக இங்கு காட்சியளித்ததாகவும் திருவல்லிக்கேணி தலவரலாறு கூறுகிறது. திருமாலுடன் ஊடல்கொண்ட திருமகள், பூலோகத்தில் தவம் செய்து பிருகுமகரிஷியின் மகளாக அவதரித்தாள். பின்னாளில் பெருமாளே ரங்கநாதராக வந்து திருமகளை ஏற்றுக்கொண்டார். மணக்கோலத்தில் இந்த பெருமாளும் தாயாரும் ஒரு சேர காட்சியளிக்கின்றனர். இப்படி வேங்கடகிருஷ்ணர், நரசிம்மர், ராமர், கஜேந்திரவரதர், ரங்கநாதர் என்று ஐந்து வடிவங்களில் பெருமாளைக் காண வேண்டுமானால், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்குச் செல்ல வேண்டும். 

No comments:

Post a Comment