Friday 29 September 2017

பணிவு... அன்பு... புத்தி...


சிறுவர் யாருமில்லை

திருமலைநம்பி திருப்பதி பெருமாள் சேவையை தன் உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர். இளம் வயதில் தொடங்கிய கோயில் பணியை தள்ளாத முதுமையிலும் தளராமல் செய்து வந்தார். ஒருமுறை, ராமானுஜர் திருமலைக்கு வந்திருக்கிறார் என்பதை அறிந்து ஆர்வத்துடன் 
அடிவாரம் வந்தார்.

அவரிடம் ராமானுஜர், ""இந்த தள்ளாத வயதிலும் ஏன் இப்படி கஷ்டப்படுகிறீர்கள்? உங்களைவிட சிறியவர் வேறு யாராவது இருந்தால் அவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கக்கூடாதா?'' என்று வாஞ்சையோடு கேட்டார்.

""திருமலை முழுவதும் தேடிப்பார்த்துவிட்டேன். என்னைவிடச் "சிறியவர்' யாரும் இங்கு இருப்பதாகத் தெரியவில்லை,''. திருமலைநம்பிகளின் இந்தப் பதிலைக் கேட்டு, அவரது கடமையுணர்வையும், பணிவையும் கண்ட ராமானுஜர் மலைத்துவிட்டார். 

ராமனின் கருணை உள்ளம்

தன்னைவிட ராமபக்தியில் சிறந்தவர்கள் வேறு யாருமில்லை என்ற எண்ணம் ஆஞ்சநேயருக்கு உண்டானது. இருந்தாலும், ராமரிடமே இதைக் கேட்டுவிட்டால் முழுமையான சந்தோஷம் என்ற எண்ணத்துடன் துள்ளிக் குதித்தோடினார்.

""சுவாமி! ராமபக்தியில் சிறந்தவர் யார் என்று சொல்லுங்களேன்'' என்று ராமரிடம் கேட்டார்.

""இதிலென்ன சந்தேகம். சீதாதேவி தான்! அவள் தான் என் மீது அளவுகடந்த பக்தி கொண்டிருக்கிறாள்,'' என்று பதிலளித்தார். ஆஞ்சநேயருக்கு தூக்கி வாரிப்போட்டது. சிலையாக நின்றுவிட்டார். அவரது மவுனத்தைக் கண்ட ராமர், ""ஆஞ்சநேயா! நான் நலமாக வாழவேண்டும் என்று அவள் தானே அனுதினமும் நெற்றியில் செந்தூரத் திலகம் இடுகிறாள்,'' என்று விளக்கம் கொடுத்தார்.

அவ்வளவுதான்! ராமர் நலமோடு இருக்கவேண்டும் என்பதற்காகமேனி முழுவதும் செந்தூரம் பூசிக் கொண்டு வந்து நின்றார் ஆஞ்சநேயர். இதைக் கண்ட ராமன் நெக்குருகி, "ஆஞ்சநேயா! உன்னை விட எனது பக்தியில் சிறந்தவர் வேறு யாருமில்லை,'' என்பதை உலகுக்கு உணர்த்தவே இந்த நாடகமாடினேன்,'' என அன்போடு சொல்லி மார்புடன் அணைத்துக் கொண்டார். 
இந்நிகழ்ச்சியின் அடிப்படையிலேயே, ஆஞ்சநேயர் கோயிலில் செந்தூரம் பிரசாதமாகத் தரும் வழக்கம் ஏற்பட்டது.

பாலும் வேணும்! தயிரும் வேணும்!

தெனாலிராமன் சிறுவனாக இருந்த போது, காளி உபாசனையில் ஈடுபட்டார். ஒருநாள் தியானத்தில் இருந்தபோது, காளியே நேரில் வந்து காட்சி அளித்தாள். ""என் செல்லக் குழந்தையே! வேண்டும் வரம் தருகிறேன்,'' என்று சொல்லி ஒரு கிண்ணத்தில் பாலும், ஒரு கிண்ணத்தில் தயிரும் கொடுத்து, ""பாலைக் குடித்தால் நீ அறிவாளியாகத் திகழ்வாய். தயிரைக் குடித்தால் செல்வந்தனாக வாழ்வாய். எதுவேண்டுமோ அதை எடுத்துக் கொள்,'' என்றாள் பாசத்துடன். தெனாலிராமன் அவளிடம்,""தேவி! குடிப்பதற்கு எது ருசியாக இருக்கும் என்று பார்த்துக் கொள்கிறேன்,'' என்று சொல்லி இரண்டையுமே ஒரு நொடியில் குடித்து விட்டார்.

பின்பு தேவியிடம், ""மனிதவாழ்விற்கு கல்வியும் செல்வமும் இருகண்கள் அல்லவா! ஒன்றில்லாமல் மற்றொன்று பயன்படாது. அதனால், இரண்டையும் குடித்துவிட்டேன்,"' என்று சொல்லி சிரித்தான். சமயோசித புத்தியுடன் செயல்பட்ட சிறுவனை காளி ஆசிர்வதித்து மறைந்தாள். 

No comments:

Post a Comment