Monday, 25 September 2017

ராமாயணம் பற்றிய செய்திகள்


துளசிதாசரின் இனிய நூல்
தமிழில் கம்பராமாயணம், சமஸ்கிருதத்தில் வால்மீகி ராமாயணம் போல, இந்தியில் "ராம் சரித் மானஸ்' (ராமனின் கதை) என்ற நூல் மிகவும் புகழ் பெற்றது. ஆஞ்சநேயரின் அம்சமான துளசிதாசர் என்பவர் எழுதிய இனிய கதை இது. இது சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. இந்தியில் இந்த நூல் வெளியான பிறகு தான், வடமாநிலங்களில் ராமபக்தி வேகமாகப் பரவியது. மிக எளிய நடையில் எழுதப்பட்ட நூல் இது. ஆஞ்சநேயர் வழிபாட்டில் மிகவும் பிரசித்தமான "அனுமன் சாலீஸா' இந்த நூலில் சமஸ்கிருத சேர்க்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. துளசிதாசரும் ஆஞ்சநேயரைப் போல மூல நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வைதேகி- பெயர்க்காரணம்
சீதைக்கு "வைதேகி' என்று பெயர் உண்டு. விதேகநாட்டில் பிறந்தவள் என்பதால் இந்தப் பெயர் வந்ததாகச் சொல்வர். விதேக நாட்டை ஆட்சி செய்தவர் ஜனகர். இவர் ஒரு ராஜரிஷி. பதவியில் இருந்தாலும் அதிகாரம், செல்வத்தின் மீது பற்றில்லாமல் இருந்தார். "விதேகம்' என்ற சொல்லுக்கு "உடல் மீதான ஆசையை விடுத்தல்' என்ற பொருளும் உண்டு. இதன் அடிப்படையில் வைதேகி என்ற சொல்லுக்கு "உடலைத் துறந்தவள்' என்று பொருள் கொள்ளலாம். உடலை உண்மையெனக் கருதி, அதற்கு நகையணிந்து, வாசனைத் திரவியம் பூசும் வழக்கம் இன்று வரை நம்மிடம் விடவில்லை. ஆனால், ராணியாய் பிறந்தாலும், ராஜாவுக்கு வாழ்க்கைப்பட்டாலும், எல்லா இன்பங்களையும் துறந்து காட்டில் வசித்தாள் சீதை. இந்த காரணத்தாலும் இவள் வைதேகியானாள். 

தொந்தரவு செய்பவர்களுக்கு என்ன பெயர் வைக்கலாம்?
யாராவது உங்களைத் தொந்தரவு செய்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு என்ன பட்டப்பெயர் வைக்கலாம் என்று யோசிக்கவே வேண்டாம். ஏனெனில் "ராவணன்' என்ற பெயர் அவர்களுக்கு பொருத்தமானது. ராவணனின் உண்மைப் பெயர் "தசமுகன்'. "தசம்' என்றால் "பத்து'. பத்து முகங்களை உடையவன் என்பதால் இந்தப்பெயர் வந்தது. இவன் சிவபக்தனாக இருந்தான். ஒரு கட்டத்தில் மமதை அதிகமாகி, சிவன் தங்கியிருந்த கயிலாயமலையையே தன் கையால் பெயர்த்தெடுத்தான். கயிலாயம் குலுங்கியது. தன்னைத் தொந்தரவு செய்த தசமுகனை "ராவணா' என்று அழைத்தார் சிவன். "ராவணன்' என்றால் "தொந்தரவு செய்பவன்' என்று பொருள். தன் பெயருக்கேற்றபடி, அவன் ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமான ராமனுக்கும், மகாலட்சுமியின் அவதாரமான சீதைக்கும் பெரும் தொந்தரவு செய்து, ராமனின் கையால் மரணத்தை தழுவினான்.

சீதையின் தந்தை சீரத்வஜர்
சீதையின் தந்தை ஜனகர் அல்லவா? சீரத்வஜர் என்கிறீர்களே என்பவர்கள் மேற்கொண்டு படிக்கலாம். மிதிலாபுரியை தலைநகராகக் கொண்ட விதேக நாட்டின் அரசர் ஜனகர். குழந்தையில்லாத இவர், புத்திரகாமேஷ்டி யாகம் செய்வதற்காக, தங்கக்கலப்பை கொண்டு பூமியை உழுது சமன் செய்த போது, ஒரு பெட்டியைக் கண்டெடுத்தார். அதில் இருந்த பெண் குழந்தைக்கு "சீதை' என்று பெயரிட்டார். "ஸுதம்' என்ற சொல்லுக்கு "கலப்பை கொழுவின் நுனி' என்று பொருள். கொழுநுனி மூலம் கிடைத்தவள் என்பதால் "சீதா' என்று பெயரிட்டார். இவரது நிஜப்பெயர் "சீரத்வஜர்'. இவர் "நிமி' என்ற மன்னனின் பரம்பரையில் வந்தவர். அந்த பரம்பரையில் வந்த அனைவருக்கும் "ஜனகர்' என்ற பொதுப்பெயர் அவரவர் பெயருடன் இணைக்கப் பட்டிருக்கும். "ஜனகர்' என்ற சொல்லுக்கு "தந்தை' என்று பொருள். நாட்டு மக்களுக்கு தந்தை போல் கண்டிப்பும் கனிவும் நிறைந்த சேவை செய்தவர்கள் என்பதால் இந்தப்பெயர் இணைக்கப்பட்டது. சீதையின் தந்தை ஜனகர், மகாலட்சுமிக்கே தந்தையாகும் பாக்கியம் பெற்றார்

No comments:

Post a Comment