Wednesday, 20 September 2017

தம்பதி சமேதராய் வாங்க!


ஸ்ரீசைதன்யர், ஜெயதேவர், புரந்தரதாசர், நாராயணதீர்த்தர், சூர்தாசர் என்று பல மகான்கள் கிருஷ்ணபக்தியுடன் வாழ்ந்தனர். இவர்களில், நாராயணதீர்த்தர் 16ம் நூற்றாண்டில் வாழ்ந்தார். ஆந்திரா, குண்டூர் மாவட்டத்தில் உள்ள காஜாவில் பிறந்த இவர், இளம்வயதிலேயே துறவறம் ஏற்றார். தீர்த்தயாத்திரையாக பல தலங் களுக்குச் சென்று வழிபட்டார். காவிரிக்கரையிலுள்ள வரகூர் வரதவெங்கடேசப்பெருமாள் மீது "ஸ்ரீகிருஷ்ணலீலா தரங்கிணி' பாடினார். இப்பாடல் கிருஷ்ண ஜனனத்தில் இருந்து ருக்மணி கல்யாணம் வரையுள்ள பகுதியைக் கொண்டது. ""நாராயணதீர்த்தர் என்னும் மலையில் கண்ணனின் அருள்மழை பொழிந்ததால், கிருஷ்ணலீலா தரங்கிணி என்னும் நதி பெருக்கெடுத்தது. அந்நதிநீர் பக்தர்களின் உள்ளம் என்னும் வயலில் பாயட்டும். அதனால், பக்திப்பயிர் செழித்தோங்கட்டும்,'' என்று அந்தப் பாடலில் குறிப்பிடுகிறார். இக்கோயிலில் லட்சுமிநாராயணனாக பெருமாள் காட்சி அளிக்கிறார். பிராட்டியை விட்டுப்பிரியாதவராகப் பெருமாள் இங்கு அருள்பாலிப்பதால், இங்கு தம்பதியராய் வருவது சிறப்பானது. வரகூர் மக்கள் இந்த பெருமாளை குலதெய்வமாக ஏற்றுள்ளனர். வேலை கிடைத்தவுடன், முதல்மாத சம்பளத்தை இந்த பெருமாளுக்குசெலுத்துவதாக வேண்டிக் கொள்கிறார்கள். தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியிலுள்ள திருக்கண்டியூர் (11 கி.மீ.,) சென்று, அங்கிருந்து திருக்காட்டுப்பள்ளி (13 கி.மீ.,) செல்ல வேண்டும். இங்கிருந்து 2 கி.மீ., ஆட்டோவில் சென்றால் வரகூரை அடையலாம். 

No comments:

Post a Comment