Friday, 24 November 2017

மகா பெரியவரின் மாணவர்


காஞ்சி மகாபெரியவர் ஒருநாள் காமாட்சி அம்பாள் சந்நிதி தெருவில் பவனி வந்து கொண்டிருந்தார். அப்போது, ஒரு முதியவர் அவரைத் தரிசிக்க வீட்டு வாசலில் நின்றார். பெரியவர் அவரிடம்,""ஏம்ப்பா! ராமச்சந்திரா! உன்னுடைய ஆறு பிள்ளைகளும் சவுக்கியமா?'' என்றார்.

அந்த முதியவர் மகாபெரியவரின் மாணவர். பெரியவரிடம் வேதம் படித்த பெருமை அவருக்குண்டு. மகாபெரியவர் தன்னிடம் இவ்வாறு கேட்டதும் அவர் அசந்து விட்டார். அத்துடன், அவரது இளமைக்கால நினைவுகளும் மனதுக்குள் புரளத் துவங்கின. அதுபற்றி அவரே சொல்கிறார்.

""1938ல் பிறந்த எனக்கு 11 வயதில் உபநயனம். கீழம்பி என்ற இடத்திலுள்ள வேத பாடசாலையில் படிப்பு... இந்தியாவின் தலைசிறந்த வேத ஆசிரியர்களான பண்டிதர் வேப்பத்தூர் சுப்பிரமணிய சாஸ்திரிகள்,சிதம்பரம் ரங்கநாத சாஸ்திரிகள்,போலகம் ராமா சாஸ்திரிகள், சிதம்பரம் ரங்கநாத சாஸ்திரிகள், ஆந்திரா மண்டலி வெங்கடேச சாஸ்திரிகள், எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் ஆகியோரிடமெல்லாம் பாடம் படித்தேன். ஆனால், இதையெல்லாம் விட, காஞ்சிபுரத்திலுள்ள ஓரிக்கை கிராமத்தில் மகாபெரியவர் சந்திர சேகரேந்திர மகா சுவாமிகளிடம் "பர்த்ருஹரி' (வைராக்கிய சதகம்) என்னும் பாடம் படித்தேனே!அதுதான் ஹைலைட்,''என்றார்.,

""பெரியவரிடமே பாடம் படித்த பெருமைக்குரியவர் தான் நீங்கள். ஆம்..உங்கள் குழந்தைகளைப் பற்றி பெரியவர் ஏதோ சொன்னாரே! அதுபற்றி சொல்லுங்க@ளன்,' 'என்றதும், ""நான் பெரியவரின் மாணவர் என்பது மட்டுமே அவருக்கு தெரியும். 

மற்றபடி, எனது குடும்பம் பற்றி பெரியவருக்கு தெரியாது. எனக்கு நான்கு மகன்கள், இரண்டு மகள்கள். இப்படி ஆறு பேர் இருப்பது பெரியவருக்கு எப்படி தெரிந்தது? அவர்களை நலம் விசாரிக்கிறாரே! அவர் தெய்வப்பிறவி என்பதால் தான், நமக்குள் நடக்கும் எல்லா விஷயங்களும் அவருக்குத் தெரிகின்றன,' 'என்று வியந்தார்.

இந்த முதியவரின் பெயர் ராமச்சந்திர சாஸ்திரிகள். இவரது குடும்பம் "நீலக்கல்' வகையறாவைச் சேர்ந்தது. நீலக்கல் என்பது மன்னர் காலத்திய பட்டம். இவரது முன்னோர்களில் ஒருவரான முத்துசுவாமி சாஸ்திரிகளின் துணைவி தர்மசம்வர்த்தினி அம்மையார், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகளின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. ஐம்பது ஆண்டுகளாக காமாட்சியம்மனுக்கு சேவை செய்து வருகிறார். 

ஒருமுறை, மகாபெரியவர் இவரை அழைத்து, ""உன் வம்சத்தின் பெயருக்கேற்ப, காமாட்சியம்மன் கோயில் தங்க விமானத்தில் ஒரு நீலக்கல் வை,'' என்றார். ராமச்சந்திர சாஸ்திரிகளும் அவ்வாறே செய்தார். கோயில் ஆபரணக் கொட்டடிக்கு (பொக்கிஷம்) ஐந்து சாவிகள் உண்டு. இதில் இரண்டு இவரது பொறுப்பில் இருக்கிறது.

No comments:

Post a Comment