1927ம் ஆண்டில் காஞ்சி மடத்திற்கு ஒரு நாய் வந்தது. மகாபெரியவரின் பார்வையில் அது பட்டது. அது அங்கேயே இருக்கட்டும் என சொல்லிவிட்டார்.
அந்த நாய் மடத்தில் கொடுக்கும் உணவை மட்டுமே சாப்பிடும். மடத்திற்கு வருபவர்கள் என்ன கொடுத்தாலும் சாப்பிடாது. தெருப்பக்கம் போனாலும், அங்கே கிடைப்பவற்றையும் உண்ணாது. தினமும் அதைக் குளிப்பாட்டி, நெற்றியில் திலகமிடுவார்கள். பெரியவரைக் காணவரும் பக்தர்களுக்கு எந்த இடைஞ்சலும் செய்யாது. மடத்தின் கால்நடைகளையும், பொருட்களையும் பாதுகாக்கும். மடத்து ஊழியர்கள் கண்ணயர்ந்து விட்டால், இது தூங்காமல் விழித்திருக்கும். நாயின் இந்த குணத்தை அறிந்த பெரியவர் ஒவ்வொரு நாள் மாலையிலும் புன்னகையுடன், "நாய்க்கு உணவு கொடுத்தாகி விட்டதா?'' என்று வாஞ்சையுடன் கேட்பார்.
சில நேரங்களில் ஊழியர்கள் உணவிட மறந்து விட்டால், பட்டினியாகவே கிடக்கும். பெரியவர் உபவாசம் (உண்ணாநோன்பு) இருக்கும் நாட்களிலும் அது சாப்பிடாது.
பெரியவர் மற்ற ஊர்களுக்கு முகாமிட பல்லக்கில் செல்லும் போது, பல்லக்கின் அடியிலேயே நாயும் செல்லும். யாத்திரை கிளம்பினால், அவருடன் செல்லும் யானையின் கால்களுக்கு இடையில் நடக்கும்.
ஒருநாள், பெரியவர் ஒரு ஊரில் முகாமிட்டிருந்தபோது, சிறுவன் ஒருவன் அதன் மீது கல்லை வீசியதில் காயம் ஏற்பட்டது. நாய் வலி தாங்காமல் குரைத்துக் கொண்டே இருந்தது. பெரியவருக்கு தெரிந்தால் என்னாகுமோ என பயந்த மடத்து அதிகாரிகள், ""நாயை ஏதாவது ஊரில் விட்டு வந்து விடுங்கள்,'' என உத்தரவிட்டனர்.
ஊழியர்களும் அதைப் பிடித்துக் கொண்டு, 40 கி.மீ., தள்ளி இருந்த ஒரு கிராமத்திற்கு கொண்டு சென்று கட்டிப் போட்டு விட்டு வந்து விட்டனர். ஆனால், நாய் விட்டதா என்ன...! கட்டை அறுத்துக்கொண்டு, ஊழியர்கள் மடத்திற்கு திரும்பும் முன்பே, வேறு ஏதோ வழியில் முகாமுக்கு வந்து விட்டது.
அன்றுமுதல், அது உயிர் வாழ்ந்த வரை, மகாபெரியவரைத் தரிசிக்காமல் சாப்பிட்டதில்லை. பெரியவரைத் தரிசிக்க வரும் பக்தர்களெல்லாம், இந்த அதிசய நாயையும் பார்த்துவிட்டே செல்வார்கள்.
பக்தி என்பதே நன்றி மறவாமை தான்! ஆம்..நன்றி மிக்க இந்த நாயின் பக்தி நமக்கும் நன்றி மறவாமல் இருக்க பாடம் கற்றுத்தருகிறது.
No comments:
Post a Comment