அமிர்தம் பெறும் நோக்கத்துடன் தேவர்களும், அசுரர்களும் மந்தார மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை நாணாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தனர். அப்போது வாசுகி, துன்பம் தாளாமல் நஞ்சைக் கக்கியது. இதைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபெருமானின் உதவியை நாடினர். அதனை ஒரு திவலையாக்கி சிவன் குடித்தார். கழுத்து நீலமானதால் "நீலகண்டன்' என பெயர் பெற்றார். தொடர்ந்து பாற்கடலைக் கடைந்த போது, துவாதசி திதிநாளில் அமிர்தம் வெளிவந்தது. தங்களுக்கு உதவிய சிவனுக்கு நன்றி செலுத்த மறந்தனர். திரயோதசி திதியன்று தங்களின் தவறை உணர்ந்து சிவனிடம் மன்னித்தருள வேண்டினர். இறைவனும் மன்னித்து ஏற்றுக் கொண்டதன் அடையாளமாக, நந்தியம்பெருமானின் கொம்புகளுக்கு நடுவில் நின்று நடனமாடினார். அந்த புனித வேளையே "பிரதோஷம்'. அப்போது சிவனைத் தரிசித்த தேவர்கள் விருப்பம் அனைத்தும் நிறைவேறப் பெற்றனர்.
முக்திவரத்தையும் இறைவன் அவர்களுக்கு வழங்கினார். பிரதோஷத்தன்று சிவபார்வதி இருவரும் ஆனந்ததாண்டவம் ஆடும்போது, எல்லா தேவதைகளும் சிவனை தரிசிக்க ஒன்று சேர்வதாக ஐதீகம். தேவதைகள் புல்லாங்குழல் வாசித்தும், மத்தளம் முழங்கியும் அவரை வழிபடுவர். தேவலோக கந்தர்வர்கள், யட்சர்கள் தேவகானங்களை பாடுவர். நாட்டிய பெண்களான அப்சரஸ் நடனமாடுவர். இந்நேரத்தில், ஸ்கந்த புராணத்திலுள்ள பிரதோஷ அஷ்டகத்தைப் படிப்பது சிறப்பு.
No comments:
Post a Comment