Saturday, 25 November 2017

சிவலிங்கவடிவில் சனிபகவான் !

v7

மனிதர்களின் ஆயுளை நிர்ணயிக்கும் சனிபகவான் எந்திரம் பொறித்த, சிவலிங்க வடிவில் திருவண்ணாமலை மாவட்டம், ஏரிக்குப்பத்தில் எந்திர சனீஸ்வரராக கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார். மூலவர்- எந்திர சனீஸ்வரர்; தீர்த்தம்- பாஸ்கர தீர்த்தம். 

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை ஆண்ட சிற்றரசர் ஒருவர், இங்கு சனீஸ்வரருக்கு கோயில் எழுப்ப விரும்பினார். சனீஸ்வரர், "ஈஸ்வரர்' என்ற பட்டம் பெற்றவர் என்பதால் அதன் அடிப்படையில் எந்திரங்களை பிரதிஷ்டை செய்து, சிவலிங்கத்தின் பாண வடிவிலேயே சிலை அமைத்து கோயில் எழுப்பினார். பின்னர் பல ஆண்டுகள் கழிந்த நிலையில் கோயில் அழிந்து போனாலும் அந்த சிலை மட்டும் அப்படியே திறந்த வெளியில் இருந்தது. 

பக்தர்கள் அந்த லிங்க பாணம் இருந்த இடத்தில் புதிதாக கோயில் எழுப்பினர். எந்திரங்களுடன் இருப்பதால் மூலவர் எந்திர சனீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். நவக்கிரகங்களில் ஒருவரான சனிபகவான் ஏரிக்குப்பத்தில் எந்திர சிவலிங்க வடிவில் காட்சியருள்கிறார்.

மூலஸ்தானத்தில் தாமரை பீடத்தின் மீது இரண்டரை அடி அகலம், ஆறரை அடி உயரத்துடன் அமைந்த சிவலிங்க அமைப்பில் சனீஸ்வரர் காட்சி அருள்கிறார். சிலையின் உச்சியில் சூரியனும் சந்திரனும் அமைந்துள்ளனர். அவர்களுக்கு நடுவில் சனிபகவானின் வாகனம் காகம் இருக்கிறது.

லிங்கபாணத்தின் மத்தியில் அறுகோண அமைப்பிலுள்ள ஷட்கோண எந்திரம் உள்ளது. இச்சிலையில் "நமசிவாய' சிவ மந்திரம் , பீட்சாட்சர மந்திரம், லட்சுமி கடாட்ச மந்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. 

கோயிலைச் சுற்றிலும் வயல் வெளிகள் அமைந்துள்ளன. கோயில் முகப்பில் ஐந்து காகங்கள் பூட்டிய தேரில் சனீஸ்வரர் வருவது போன்ற சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

சனிபகவான் ஆயுளையும் தொழிலையும் நிர்ணயம் செய்பவர். எனவே, பக்தர்கள் நீண்ட ஆயுள் பெறவும் தொழில் மேன்மைக்காகவும் எள் தீபமிட்டு வழிபடுகின்றனர். சனிபெயர்ச்சியால் உண்டாகும் தோஷம் நீங்கவும் ஜாதக ரீதியாக சனி நீச்சம் பெற்றவர்களும் நிவர்த்திக்காக வேண்டுதல் செய்கின்றனர். திருமணம், குழந்தை பாக்கியம், வழக்குகளில் வெற்றி பெறவும் ஏரிக்குப்பம் சனீஸ்வரரை வந்து வழிபாடு செய்கின்றனர். 

No comments:

Post a Comment