Friday 16 March 2018

வியாசர் பெற்ற சாபம்

ஆன்மிக கதை: வியாசர் பெற்ற சாபம்

மகாவிஷ்ணு, பரசிவன் இருவரில் யார் பெரியவர்? என்பதில் எழுந்த வாதத்தின் முடிவில் வியாசருக்கு கிடைத்த சாபத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்.

காசி திருத்தலத்தில் கூடி இருந்த முனிவர்களுக்கு இடையே ஒரு சர்ச்சை எழுந்தது. மகாவிஷ்ணு, பரசிவன் இருவரில் யார் பெரியவர்? என்பதில் எழுந்த வாதம் அது. இரு தரப்பினரும் வியாசரை நோக்கி வணங்கி, ‘தவ சீலரே! நீங்கள் சொல்லுங்கள். பரம்பொருள் விஷ்ணுவா? சிவனா?’ என்றனர்.

வியாச முனிவரும், ‘வேதங்கள் எல்லாம் பரம்பொருள் என்று அழைப்பது மகாவிஷ்ணுவைத் தான். எனவே அவர் தான் பரம்பொருளாக இருக்க முடியும்’ என்று தன் கருத்தை தெரிவித்தார்.

சிவனிடம் பக்தி கொண்ட முனிவர்கள் சிலர், இந்தக் கருத்தை ஏற்க மறுத்தனர். ‘வியாசரே! உங்களுடைய கருத்தை காசி விஸ்வநாதர் சன்னிதி முன்பாக வைத்து கூறுங்கள், நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்’ என்றனர்.

வியாசரும் கங்கை நதியில் நீராடி, விஸ்வநாதரின் சன்னிதி முன்பு நின்று, தனது இரு கரங்களையும் தலைக்கு மேல் உயர்த்தி, ‘பரம்பொருள் என்பவர் விஷ்ணுவே’ என்று உரக்க முழங்கினார்.

ஈசனின் சன்னிதி முன்பு காவல் புரிந்த நந்தியம்பெருமான், இந்த வார்த்தையைக் கேட்டு ஆத்திரம் அடைந்தார். ‘ஆதி பரம்பொருளான ஈசனின் சன்னிதி முன்பாக நின்று, விஷ்ணு தான் பரம்பொருள் என்கிறாயா?’ என்றவர், ‘உன்னுடைய இரு கைகளும், நாவும் நின்று போகட்டும்’ என்று சபித்தார்.

அவ்வளவு தான்! வியாசரால் தலைக்கு மேலே தூக்கிய கைகளை கீழே இறக்க முடியவில்லை. பரம்பொருள் விஷ்ணுவே என்று உச்சரித்த நாவால் மேற்கொண்டு எந்த வார்த்தையும் பேச முடியவில்லை.

செய்வதறியாது திகைத்த வியாசர், ‘வேதங்கள் எடுத்துரைத்த தாங்கள் தான் பரம்பொருள் என்று நான் கூறியது தவறா?’ என்று விஷ்ணுவை நோக்கி தியானித்தார்.

அவர் முன்பு தோன்றிய மகாவிஷ்ணு, ‘வேதங்கள் நான் தான் பரம்பொருள் என்று கூறினாலும், அருட்சக்தியாகிய சிவன் எங்கும் வியாபித்து இருப்பதால், அவரே ஆதி பரம்பொருள்’ என்று கூறி மறைந்தார்.

இதையடுத்து வியாசர், சிவபெருமானை நோக்கி தியானித்தார். அவர் முன் தோன்றிய ஈசன், ‘நீவிர்.. நந்தியிட்ட சாபம் நீங்க, திருப்பேரூர் சென்று வழிபடுங்கள்’ என்றார்.

வியாசரும் திருப்பேரூர் வந்து காஞ்சி நதியில் நீராடி, ஆதி அரசம்பலவாணரை வழிபட்டு மனம் உருகி தியானித்தார். அப்போது அவரது சாபம் நீங்கி, தலைக்கு மேல் இருந்து கைகள் கீழிறங்கியது. நாவும் வார்த்தைகளை உச்சரிக்கத் தொடங்கியது. ஆதி பரம்பொருளின் மகிமையை உணர்ந்த வியாச முனிவர், அவரை துதித்து வணங்கினார். 

No comments:

Post a Comment