Monday 12 March 2018

மருந்து ஒவ்வாமைக்கு கிரகங்கள் காரணமா ?

Related image

எதற்கெடுத்தாலும் மருந்து, மாத்திரைகளை நம்பியிருக்காமல் பாரம்பரிய உணவு வகைகளை உட்கொண்டும், உடற்பயிற்சி செய்தும் நம் ஆரோக்கியத்தைக் காக்க வேண்டும். எல்லா மருந்து மாத்திரைகளும் எல்லோருடைய உடம்பிற்கும் ஒத்துப் போவதில்லை. குறிப்பாக இன்றைய நவீன உலகில் பயன்படுத்தப்பட்டு வரும் ஆன்ட்டி பயாடிக் மாத்திரைகள் பக்க விளைவுகளை உண்டாக்கிவிடுகின்றன. இருமல், ஜுரம், தலைவலி என எல்லாவற்றிற்கும் உடனடியாக மருத்துவரை நாடவேண்டிய அவசரமும், அவசியமும் நம் வாழ்வியலில் ஒன்றிவிட்டது. உடனடியாக சரியாக வேண்டும் என்ற அவசரம், வீரியம் மிகுந்த மாத்திரைகளை உட்கொள்ள வைக்கிறது. இதனால் உண்டாகும் பக்க விளைவுகளைப் பற்றி நாம் 
யோசிப்பதேயில்லை. 

பிறந்து சில மாதங்களே ஆன குழந்தை இரவு நேரத்தில் சரியாக தூங்காமல் அழுதுகொண்டே இருக்கிறது என்றால் அதற்கான காரணம் என்ன என்பதை அறிய நாம் முயற்சிப்பதில்லை. மாறாக குழந்தையை எவ்வாறு தூங்க வைப்பது என்பது பற்றி மட்டும் யோசிக்கிறோம். மருந்து, மாத்திரைகள் கொடுத்து குழந்தையை உறங்க வைத்து நாமும் உறங்கிவிடுகிறோம். இதனால் எதிர்காலத்தில் அந்தக் குழந்தை எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறது என்பதை அந்த நேரத்தில் உணர மறுக்கிறோம். உறங்க வைக்கும் மருந்துகள் அனைத்துமே மனித மூளையின் செயல்வேகத்தைக் குறைக்கக் கூடியவை. அதிலும் குறிப்பாக ஜென்ம லக்னத்தில் கேது அமர்ந்திருந்தாலும் அல்லது, ஜென்ம ராசியில் அதாவது ஜாதகத்தில் சந்திரனுடன் கேது இணைந்திருந்தாலும் ‘டிரக் அலர்ஜி’ உண்டாகும். இதுபோன்ற அமைப்பு உடையவர்கள் ஆன்ட்டி பயாடிக் மருந்துகளை அதிகம் உபயோகிக்கக் கூடாது. அதிலும் சனி மற்றும் கேதுவின் இணைவினைப் பெற்றவர்களுக்கு வீரியம் மிக்க மருந்துகளினால் உடலின் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படுவதோடு உடலின் மேற்தோலிலும் அலர்ஜி, அரிப்பு முதலான நோய்கள் உண்டாகின்றன.

மருந்து, மாத்திரைகளின் உற்பத்தி மட்டுமல்ல, நோயாளிகளின் எண்ணிக்கை கூட நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துகொண்டே செல்கிறது. இதற்கு ஆதாரமாக மெடிக்ளெய்ம் பாலிசிகளைச் சொல்ல முடியும். இன்ஷ்யூரன்ஸ் நிறுவனங்கள் தங்கள் மெடிக்ளெய்ம் பாலிசிகளின் பிரிமியம் தொகையை நடப்பு தணிக்கை ஆண்டில் மூன்று மடங்காக உயர்த்திவிட்டன. காரணத்தை அறிய முற்பட்டபோது கடந்த ஆண்டு நோயினால் பாதிக்கப்பட்டு இன்ஷ்யூரன்ஸ் தொகையைப் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், இன்ஷ்யூரன்ஸ் நிறுவனங்கள் நஷ்டமடையாமல் பாதுகாக்க வேண்டி பிரிமியம் தொகை உயர்த்தப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். முன்பெல்லாம் நூறு பேரிடம் பிரிமியம் வாங்கி ஒருவருக்கு உண்டான மருத்துவ செலவினை இன்ஷ்யூரன்ஸ் நிறுவனங்கள் ஈடுசெய்தன. ஆனால், தற்காலத்தில் பத்து பேரில் ஒருவருக்கு ஆண்டுதோறும் ஏதோ ஒரு நோய்க்கான செலவினைத் தர வேண்டியிருக்கிறது என்கிறார் ஒரு அதிகாரி. அவர் தரும் புள்ளிவிவரத்தை ஆராய்ந்தால் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் நாம் என்று நம்மை அதிர்ச்சி அடைய வைக்கிறது.

இப்பொழுது நம் மனதில் எழும் கேள்வி இதுதான். இந்த அளவிற்கு நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயருகின்றது என்றால் இவர்கள் அத்தனை பேருக்கும் கிரக நிலை சரியில்லையா? எல்லோருடைய ஜாதகத்திலும் சனி, ராகு, கேது போன்ற தீய கிரகங்கள் பாதிப்பைத் தருகிறார்களா? அல்லது பொதுவாக தற்காலத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் கிரகங்களின் சஞ்சாரமா என்ற சந்தேகம் நம் மனதில் இடம் பிடிக்கிறது. தற்காலத்தில் மட்டுமல்ல, ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏதோ ஒரு நோயினால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை வரலாற்று உண்மை நமக்கு உணர்த்துகிறது. ஆனால், அந்த காலத்தில் நோய்களுக்கான மருந்துகள் சரிவர கிடைக்காததாலும், நோயினைப் பற்றி அறிந்து கொள்வதற்கான பரிசோதனை முறைகள் இல்லாததாலும் உயிரிழப்பு உண்டானது. தற்காலத்தில் என்ன நோய், எந்த உறுப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டும் கூட அதனைச் சரிசெய்ய இயலவில்லை. மருந்துகள் இன்றி நோயின் வீரியம் அதிகமான காலம் போய் தற்போது மருந்துகளின் வீரியத்தினாலேயே நோய்கள் உண்டாகும் காலம் வந்து விட்டது!

டிரக் அலர்ஜி என்ற வார்த்தை தற்போது மிகவும் சகஜமாகிவிட்டது. உடல்நிலை சரியில்லை, மருத்துவமனைக்குச் சென்று வருகிறேன் என்று சொல்லி நடந்து சென்றவர், திரும்ப வரும்போது பிணமாகத்தான் வந்தார் என்று சொல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வருகிறது. அதிலும் அரசு மருத்துவமனைகளை விட தனியார் மருத்துவமனைகளின் மீது புகார் சொல்வது பெருகிவிட்டது. பொதுவாக எல்லா மருந்துகளையும், மருத்துவர்களையும் குறை சொல்வது நம் நோக்கமல்ல. அதே நேரத்தில் நாமும் நம் உடல்நலத்தின் மீது அக்கறை கொண்டு இந்த நோய்க்கு இந்த மருந்து உட்கொண்டால் அதன் பக்க விளைவுகள் எப்படி இருக்கும் என்ற அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டிய சூழலில் வாழ்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

திருச்சியைச் சேர்ந்த ஒரு சிறுவனின் ஜாதகம் அவனுடைய வலிமையான அமைப்பையே தெரிவித்தது. ஆயினும் சமீபத்தில் வந்த ஜுரத்திற்கு மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததில் காது கேட்கும் திறன் குறைந்துவிட்டதாக அவனது பெற்றோர் கூறியபோது அதிர்ச்சியாகவே இருந்தது. தற்போது சந்திர தசையில் சுக்கிர புக்தி நடந்து வரும் வேளையில் மட்டுமல்ல, இதுபோன்ற குறை அந்தச் சிறுவனின் வாழ்வினில் எப்போதுமே உண்டாவதற்கு கிரக நிலை துணைபுரியவில்லை என்பதே உண்மை. எனினும் மருந்துகளின் வீரியத்தால் காது கேட்கும் திறன் குறைந்திருக்கிறது. வலிமையான ஜாதக அமைப்பினைக் கொண்ட அந்த சிறுவன் விரைவில் குணமடைந்துவிடுவான், கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று அவர்களுக்கு தைரியமூட்டி அனுப்பியிருந்தோம். கொஞ்சம், கொஞ்சமாக அந்தக் குறைபாட்டிலிருந்து மீண்டு வருவதாகவும், தற்போது எவ்வளவோ பரவாயில்லை என்றும், இன்னும் சில நாட்களில் முற்றிலுமாக அவன் குணமடைந்துவிடுவான் என்றும் அவனது பெற்றோர்கள் தொலைபேசியில் தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. 

அந்தச் சிறுவனின் ஜாதகம் இதோ:

மருந்துகளின் வீரியத்தால் பக்கவிளைவுகள் உண்டாகி அதன் காரணமாக பல வகையிலும் இழப்பு அதிகரித்து வருகிறதே என்ற புள்ளி விவரத்தின் அடிப்படையில் தற்கால கிரக நிலையை ஆராய்ந்ததில் அப்படி ஒன்றும் பெரிய பாதிப்பினைத் தரக் கூடிய வகையில் கிரகங்களின் சேர்க்கை இல்லை என்ற உண்மையே புலப்படுகிறது. பொதுவாக தற்போது நிலவிக் கொண்டிருக்கின்ற கிரக சஞ்சார நிலையினால் பெருத்த பாதிப்புகள் ஏதும் உண்டாகாது. நாம்தான் நம் வாழ்வியல் சூழ்நிலையை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 

எதற்கெடுத்தாலும் மருந்து, மாத்திரையை நாடுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். தும்மினால் ஒரு மாத்திரை, தூக்கத்திற்கு ஒரு மாத்திரை, தலைவலிக்கு ஒரு மாத்திரை, வயிற்று வலிக்கு ஒரு மாத்திரை, பசியெடுக்க ஒரு மருந்து, தூங்க ஒரு மருந்து என்ற பழக்கத்திலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும். பாரம்பரிய மருத்துவத்தை மீண்டும் பழகிக் கொள்ள வேண்டும். 

கஷாயம் என்ற வார்த்தையை இன்றைய இளைய தலைமுறையினர் கேள்விப்பட்டிருப்பார்களா என்பதே சந்தேகமாக உள்ளது. ஒரேயொரு கஷாயம் தலைவலி, வயிற்றுவலி, பசியின்மை என பல நோய்களையும் போக்கும் தன்மை கொண்டது. நாமாக வலியச் சென்று மருந்து மாத்திரைகளின் பிடியில் சிக்கிக்கொண்டு கிரகங்களைக் குறை கூறுவதில் அர்த்தமில்லை.

முன்பெல்லாம் ஜோதிடம் பார்க்க வருபவர்களில் 50 வயதைக் கடந்தவர்கள் மட்டும் தங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பற்றி கேட்பார்கள். ஆனால் , தற்போது பிறந்த குழந்தை முதல், ஓடியாட வேண்டிய டீன் ஏஜ் பிள்ளைகளின் பெற்றோர்கள் கூட தங்கள் குழந்தைகளின் ஆரோக்யம் எப்படி இருக்கிறது, அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகிறது, ஜாதகத்தை நன்றாகப் பார்த்துச் சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள். தற்போது ஜாதகம் பார்க்க வருபவர்களில் பெரும்பாலானோர் உடல் ஆரோக்கியம் பற்றிக் கேட்கத் தவறுவதில்லை. நூற்றில் ஒருவர் கேட்ட காலம் போய் தற்போது எல்லோருமே கேட்பதுதான் வருத்தத்தைத் தருகிறது. இதற்கு கிரகங்களின் சஞ்சார நிலை காரணம் அல்ல. நமது உணவுப் பழக்கவழக்கமும், உடனடி நிவாரணம் தேடும் அவசரமும், சோம்பல்தன்மையும், வாழ்வியல் நடைமுறையும்தான் காரணம். குளிர்சாதன வசதியின்றி பயணம் செய்வதற்குக் கூட தயங்குகிறோம். உடலை சொகுசாக வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டும் நாம் ஆரோக்கியமாக உடலை வைத்திருக்கிறோமா என்று யோசிப்பதில்லை. கிரகங்களைக் குறை கூறுவதை விடுத்து பாரம்பரிய பழக்கத்திற்கு மாறுவோம். உடல்நலம் காப்போம்.

No comments:

Post a Comment