Saturday 10 March 2018

திருவண்ணாமலையில் வியக்க வைக்கும் விழாக்கள்

திருவண்ணாமலையில் வியக்க வைக்கும் விழாக்கள்

பழமையான ஆலயங்களில் பிரம்மோற்சவம் மற்றும் உற்சவ விழாக்கள் நடப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த உற்சவங்களுக்கு முன்னோடி தலம் எது என்று கேட்டால் ஆய்வாளர்கள் அனைவரும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தைத்தான் கை காட்டுகிறார்கள்.

மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இத்தலத்தில் தினம், தினம் விழாக் கோலமாக இருந்துள்ளது. ஒவ்வொரு மன்னனும், ஒவ்வொரு உற்சவத்தை அறிமுகம் செய்ததால் இத்தலம், உற்சவங்களின் முன்னோடி என்று கருதப்படுகிறது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இத்தலத்தில் வருடத்துக்கு 365 நாட்களும் விழா நடந்ததாக குறிப்புகள் உள்ளன. தற்போது விழாக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. அப்படி இருந்தும் தற்போதும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் சுமார் 250 நாட்கள் விழாக்கள் நடப்பதாக முதன்மை சிவாச்சாரியார்களில் ஒருவரான ரமேஷ் சிவாச்சாரியார் தெரிவித்தார்.

பொதுவாக ஆலயங்களில் ஆண்டுக்கு ஒரு தடவைதான் பிரம்மோற்சவம் நடத்துவார்கள். சில ஆலயங்களில் இரு பிரம்மோற்சவம் நடத்தப்படுவதுண்டு. திருவண்ணாமலை அருணாசலேஸ்வர் ஆலயத்தில் ஆண்டுக்கு 4 தடவை பிரம்மோற்சவம் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் வேறு எந்த சிவாலயத்திலும் இல்லாத அதிசயம் இது.

ஆனி மாதம் தட்சிணாயன புண்ணிய காலம், ஆடி மாதம் பூரம், கார்த்திகை மாதம் தீபம் மற்றும் தை மாதம் உத்திராயண புண்ணிய காலம் ஆகிய 4 தடவை பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. இதற்காக 3 தடவை அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு உள்ள தங்கச் கொடி மரத்திலும், ஒரு தடவை அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரத்திலும் கொடி ஏற்றப்படும்.

ஒவ்வொரு பிரம்மோற்சவமும் 10 நாட்கள் நடைபெறும். சோழ மன்னர்கள் இந்த பிரம்மோற்சவங்களை மிக பிரமாண்டமாக நடத்தியதாக கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளன.

இக்கோவிலில் தினமும் 6 கால பூஜை நடத்தப்படுகிறது. அந்த பூஜைகளே பக்தர்களின் மனதைக் கொள்ளைக் கொள்ளும் வகையில் இருக்கும். அது போல அமாவாசை, பவுர்ணமி, கிருத்திகை, பிரதோசம், சதுர்த்தி ஆகிய நாட்களில் நடக்கும் பஞ்ச பருவ பூஜைகளும் சிறப்பாக நடத்தப்படுகிறது. இவை மட்டுமா...... ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வகையிலான திருவிழா திருவண்ணாமலை ஆலயத்தில் நடைபெறுகிறது.

சித்திரை மாதம் 10 நாட்கள் வசந்த உற்சவம் நடத்து வார்கள். 10-வது நாள் இரவு மன்மத தகனம் நடைபெறும். தமிழ்நாட்டில் வேறு எந்த சிவாலயத்திலும் இந்த விழா நடத்தப்படுவதில்லை. வைகாசி மாதம் முருகனுக்கான வைகாசி விசாகம் விழா, ஆனி மாதம் தட்சிணாயன புண்ணிய காலம் பிரமோற்சவம் நடைபெறும்.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். அந்த மாதம் உண்ணாமுலை அம்மனை சிறப்பு செய்ய கொடி ஏற்றப்பட்டு 10 நாட்கள் விழா நடைபெறும்.

பத்தாவது நாள் உண்ணாமுலை அம்மன் சன்னதி முன்பு தீ மிதி விழா நடைபெறும். தமிழ்நாட்டில் எந்த சிவாலயத்திலும் தீ மிதி விழா நடத்தப்படுவதில்லை. ஆனால் அண்ணாமலையார் ஆலயத்தில் தீ மிதி விழா நடத்துகிறார்கள். திருவண்ணாமலை ஆலய அதிசயங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. அடுத்து ஆவணி மாதம் அடுத்தடுத்து பல விழாக்கள் தொடர்ந்து நடத்தப்படும். ஆகஸ்டு 15-ந்தேதியை ஸ்ரீ அருணாகிரிநாதர் விழாவாக கொண்டாடுவார்கள்.

ஆவணியில் விநாயகர் சதுர்த்தி விழா இத்தலத்தில் மிகவும் கோலாகலமாக இருக்கும். விநாயகப் பெருமானுக்கு இருக்கும் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு திருவண் ணாமலை ஆலயத்துக்குள்தான் இருக்கிறது. இதனால் அந்த விநாயகருக்கு ஆவணி சதுர்த்தி திருவிழா தடபுடலாக இருக்கும். ஆவணி மூலம் தினத் தன்று பிட்டுக்கு மண் சுமந்த கதை விழாவாக நடைபெறும். சுக்ல சதுர்த்தி தினத்தன்று நடராஜர் அபிஷேகம் நடைபெறும். இப்படி ஆவணி மாதம் முழுக்க விழாக்கோலமாக இருக்கும்.

புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழாவை 10 நாட்கள் நடத்துவார்கள். அம்மன் கோவில்களில் நவராத்திரி 10 நாட்களும் 10 விதமான அலங்காரம் செய்து பக்தர்களை பரவசப்படுத்துவார்கள். இந்த 10 நாட்களும் அம்மன் என்ன அலங்காரத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கிறாள் என்பதை அறிய பெண்கள் மத்தியில் ஆர்வம் ஏற்படும். மகிஷாசூரனை அம்பாள் அழித்த கதை நிகழ்வுக்கு ஏற்ப அந்த அலங்காரங்கள் அமையும். இத்தகைய சிறப்புப் பெற்ற நவராத்திரி திருவிழா திருவண்ணாமலை ஆலயத்தில் சிறப்பாக நடைபெறும்.

திருவண்ணாமலை தலத்தில்தான் சிவராத்திரி தோன்றியது என்பதை ஏற்கனவே நீங்கள் படித்து இருப்பீர்கள். சிவராத்திரி மட்டுமல்ல நவராத்திரியும் இந்த தலத்தில்தான் தோன்றியது. அதை உறுதிபடுத்தும் வகையில் புரட்டாசி மாதம் 10 நாள் நவராத்திரி விழா நவரசமாக நடைபெறும்.

ஐப்பசி மாதம் முருகப்பெருமானுக்குரிய கந்த சஷ்டி திருவிழா 6 நாட்கள் விழாவாக நடைபெறும். சஷ்டி தினத்தன்று முருகன், உண்ணாமுலை அம்மன் சன்னதிக்கு வந்து தாயாரிடம் சக்திவேல் பெறுவார். பிறகு வீதி உலா வந்து அவர் சூரனை சம்ஹாரம் செய்வது கண்கொள்ளக் காட்சியாக இருக்கும்.
மறுநாள் முருகன்-தெய்வானை திருமணம், அண்ணாமலையர் ஆலயத்துக்குள் சிறப்பாக நடைபெறும்.

கார்த்திகை மாதம் தீபத் திருவிழா நடைபெறும். திருவண்ணாமலை ஆலயத்தின் 4 பிரம்மோற்சவங்களில் கார்த்திகை மாதம் நடக்கும் தீபத் திருவிழா பிரம்மோற்சவம்தான் இத்தலத்தின் மிகப்பெரும் திருவிழாவாகும். 10-ம் நாள் மலை உச்சியில் ஏற்றப்படும் தீப தரிசனம் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். 11 நாட்கள் இந்த தீபம் தொடர்ந்து எரியும். தமிழகத்தில் எந்த ஆலயத்திலும் இத்தகைய தீபம் ஏற்றும் அற்புதம் நிகழ்வதில்லை.

பொதுவாக ஒரு கோவிலில் நடத்தப்படும் விழாவை மற்ற கோவில்களில் நடத்த மாட்டார்கள். ஆனால் திருவண்ணாமலையில் நடக்கும் தீபத் திருவிழாவை ஒவ்வொரு சிவாலயத்திலும் வேறு விதமாக நடத்துகிறார்கள். பெரும்பாலான ஆலயங்களில் தீபம் ஏற்றுவதற்குப் பதில் சொக்கப்பனை கொளுத்துவார்கள். தீபம் ஏற்ற மலை இல்லாததால் தீப தண்டம் அமைத்து, அதில் ஜோதி தரிசனம் பெற சொக்கப்பனை கொளுத்தும் வழக்கம் உள்ளது.

இந்த வழக்கம் திருவண்ணாமலையில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள ஆலயங்களில் பரவி இருப்பதாக கூறப்படுகிறது. இதுவும் திருவண்ணாமலை தலத்துக் குண்டான தனிச்சிறப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மார்கழி மாதம் வைணவத் தலங்களில் வைகுண்ட ஏகாதசியை பிரமாண்டமாக கொண்டாடுவார்கள். பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் அனைத்து வைணவத் தலங்களிலும் திறக்கப்படும்.

சைவத்தின் தலைமைப் பீடமாகக் கருதப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்திலும் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடத்தப்படுகிறது. அன்றைய தினம் கருவறையை சுற்றி உள்ள பிரகாரத்தில் அமைந்துள்ள வேணுகோபால சுவாமி பெருமாள் சன்னதியில் இருந்து ஜோதி எடுத்து வரப்பட்டு சொர்க்க வாசலை கடக்கும் என்று பெரும்பாலானவர்கள் தாங்கள் எழுதியுள்ள நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். இது தவறான தகவலாகும்.

வைகுண்ட ஏகாதசி தினத்தன்று சொர்க்கவாசல் திறப்புக்குரிய சாவியை வேணுகோபால சுவாமிகள் சன்னதியில் வைத்து சிறப்புப் பூஜைகள் நடத்துவார்கள். பெருமாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பிறகு அந்த சாவி மேளம் தாளம் முழுங்க எடுத்து வரப்படும். அந்த சாவியை கொண்டு சொர்க்கவாசல் திறக்கப்படும். அப்போது பக்தர்கள் “அரோகரா” கோஷம் எழுப்பியபடி சொர்க்கவாசலை கடந்து செல்வார்கள்.

தமிழ்நாட்டில் எந்த சிவாலயத்திலும் இத்தகைய சொர்க்க வாசல் திறப்பு திருவிழா நடப்பதில்லை. தை மாதம் உத்திராயண புண்ணிய கால பிரம்மோற்சவம் 10 நாட்கள் நடத்தப்படுகிறது. அப்போது திருவூடல் உற்சவம் தை 2-ந்தேதி மாட்டுப் பொங்கலன்று நடைபெறும். பிருங்கி முனிவரால் சிவனுக்கும் பார்வதிக்கும் ஒரு தடவை ஊடல் ஏற்பட்டது. சில நாட்களில் ஊடல் தீர்ந்து மீண்டும் ஒன்று சேர்ந்தனர். அது திருவண்ணாமலையில் திருவூடல் உற்சவமாக கொண்டாடப்படுகிறது.

இந்த உற்சவம் நடக்கும் வீதி “திருவூடல் வீதி” என்று அழைக்கப்படுகிறது. திருவூடல் பார்த்தால் மறுவூடல் இல்லை என்பது ஐதீகம். இந்த விழா வேறு எந்த ஆலயங்களிலும் இல்லாத சிறப்பாகும் என்று ரமேஷ் சிவாச்சாரியார் தெரிவித்தார். மாசி மாதம் மகா சிவராத்திரி திருவிழா நடைபெறும். மாசி மகம் நட்சத்திரம் தினத்தன்று வல்லாள மகாராஜாவுக்காக சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிகொண்டாபட்டு கிராமத்துக்கு சென்று ஒரு மகன் தனது தந்தைக்கு திதி கொடுப்பது போல அண்ணாமலையார் திதி கொடுப்பது வித்தியாசமானது. 

தமிழ்நாட்டில் எந்த தலத்து ஈசனும் இப்படி யாருக்கும் திதி கொடுப்பது இல்லை. அதுபோல பங்குனி உத்திரம் திருவிழா 6 நாட்கள் நடைபெறும். அன்று அம்பாள் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த திருமணத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.

இப்படி எந்த மாதத்தை எடுத்துக் கொண்டாலும் அண்ணாமலையார் ஆலயத்தில் ஆரவாரமான, அதிசயமான விழாக்களுக்கு குறைவே இல்லை. இந்த விழா நாட்கள் எந்தெந்த தேதிகளில் வருகிறது என்பதைத் தெரிந்து கொண்டு சென்று வழிபட்டால், அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை தாயாரின் அருளை முழுமையாகப் பெற முடியும்.

விழா நடக்கும் நாட்களில்தான் திருவண்ணாமலை ஆலயம் கோலாகலமாக இருக்கும் என்று நினைக்காதீர்கள். அண்ணாமலையாருக்கு தினமும் 6 கால பூஜைகள் மிக பிரமாண்டமாக நடப்பதால் அதைப் பார்க்கும் போதே திருவிழா கோலமாக தோன்றும்.

குறிப்பாக 6 கால பூஜைகளில் அண்ணாமலையாருக்கும் உண்ணாமுலை அம்மனுக்கும் செய்யப்படும் அபிஷேகங்கள், அலங்காரங்கள், தீபாரதனைகள் தனித்துவம் கொண்டவை. அந்த பூஜை சிறப்புகளை அடுத்த வாரம் பார்க்கலாம்.

No comments:

Post a Comment