Sunday 11 March 2018

வியாதி குணமாக பைரவருக்கு மிளகு தீப வழிபாடு

வியாதி குணமாக பைரவருக்கு மிளகு தீப வழிபாடு

அம்மாசத்திரம் காலபைரவர் திருக்கோவில் கால பைரவருக்கு 9 வாரம் தொடர்ச்சியாக மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், சர்வ வியாதியும் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து கிழக்கே சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது அம்மாசத்திரம் காலபைரவர் திருக்கோவில். திருவிடைமருதூரில் இருந்து சென்றாலும் 4 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலயத்தை அடையலாம். கால பைரவரை தேய்பிறை அஷ்டமிகளில் அஷ்ட லட்சுமிகளும் வழிபடுவதாக ஐதீகம். தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபட்டால் எல்லாவிதமான நலன்களும் வந்து சேரும்.

இந்த ஆலயத்தில் உள்ள கால பைரவர் நோய்கள் பலவற்றை தீர்க்கும் வல்லமை கொண்டவராக திகழ்கிறார். தீராத வியாதியால் அவதிப்படுபவர்கள், இத்தல கால பைரவருக்கு 9 வாரம் தொடர்ச்சியாக மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், சர்வ வியாதியும் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். மேலும் அஷ்டமி தினத்தில் பைரவருக்கு விபூதி அலங்காரம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. 

5 அஷ்டமி தினங்கள், பைரவருக்கு மாதுளம் பழச்சாற்றினால் அபிஷேகம் செய்தால் திருமணத்தடை நீங்கி, விரைவில் திருமணம் கை கூடும். கால பைரவருக்கு சத்ரு சம்ஹார ஹோமம் செய்து வழிபட்டால் பில்லி, சூனியம், உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும் என தலபுராணம் கூறுகிறது.

இது தவிர இத்தல கால பைரவருக்கு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகு கால நேரத்தில், சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அர்ச்சனைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. அஷ்டமி திதி, பவுர்ணமி தவிர வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சகல சம்பத்தும், பொன் பொருளும் கிடைக்கும்.

No comments:

Post a Comment