Saturday 10 March 2018

சுந்தரருக்கு அருள்பாலித்த பட்டீஸ்வரர்

சுந்தரருக்கு அருள்பாலித்த பட்டீஸ்வரர்

சிவபெருமான் வீற்றிருக்கும் அனைத்து தலங்களுக்கும் சென்று வழிபட்டு சிவதொண்டு செய்து வந்தார், சுந்தரர். அதன் ஒரு பகுதியாக பேரூர் வந்து பட்டீசுவரரை தரிசிக்க ஆவல் கொண்டார்.

கீழ்வானில் ஆதவன் விழித்திருந்தான். அவன் பாய்ச்சிய பொன்னிற கதிர்களை பூமாதேவி உள்வாங்கிக்கொண்டாள். அந்த அதிகாலை வேளையில் அகத்தியர் தோற்றுவித்த காவிரியில் போய் கலந்து கொண்டிருந்தாள், காஞ்சிமாநதி என்று அழைக்கப்படும் நொய்யல்.

‘ஓம் சிவாய நம’ என உச்சரித்துக் கொண்டே காஞ்சிமாநதியில் சுந்தரர் புனித நீராடினார். கயிலாயத்தில் ஈசனுக்குத் தொண்டு செய்து கொண்டிருந்த சுந்தரர், அங்குள்ள நந்தவனத்தில் உமாதேவியரின் பணிப்பெண்கள் கமிலினி, அநிந்திதை ஆகியோர் மீது மையல் கொண்டார். அவர்களும் சுந்தரர் மீது மயக்கம் கொண்டனர். இதை அறிந்த சிவபெருமான், அவர்கள் மூவரையும் பூலோகத்தில் மானிடர்களாகப் பிறக்கும்படி சபித்தார்.

பூலோகத்தில் பிறந்த சுந்தரர் திருமணம் செய்ய முன்வந்தபோது, அவரை தன் திருவருளால் தடுத்தாட்கொண்டார் பரமன்.

இதையடுத்து சிவபெருமான் வீற்றிருக்கும் அனைத்து தலங்களுக்கும் சென்று வழிபட்டு சிவதொண்டு செய்து வந்தார், சுந்தரர். அதன் ஒரு பகுதியாக பேரூர் வந்து பட்டீசுவரரை தரிசிக்க ஆவல் கொண்டார்.

இறைவனை தரிசிக்க உள்ளத்தூய்மை அவசியம். அதை போல் உடல்தூய்மையும் அவசியம். அதனால் புனித நீராடிவிட்டு பட்டீஸ்வரரை தரிசிக்க பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்தபடி கோவிலை நோக்கி நடக்கலானார்.

இதற்கிடையில், தன் பக்தனின் பக்தியை சோதிக்க நினைத்த சிவபெருமான், உமாதேவியுடன் விவசாய பணியாள் உருவம் கொண்டு கருவறையில் இருந்து வெளியே வந்தார். தனது தோளில் மண்வெட்டியை சுமந்தபடி, அசல் விவசாயியைப் போலவே தோன்றினார், ஈசன். குடியானவன் தோற்றத்தில் கருவறையை விட்டு வெளியே வந்த ஈசனைப் பார்த்து, நந்தியம்பெருமான் திடுக்கிட்டார்.

‘எம் பெருமானே! தாங்கள் திடீரென்று இந்த திருக்கோலம் பூண்டது ஏன்?’ என்று ஆச்சரியத்துடன் வினா எழுப்பினார்.

அதற்கு பட்டீஸ்வரர், ‘நான் சுந்தரரின் பக்தியை சோதிக்க விரும்புகிறேன். நானும் உமையவளும் அருகில் உள்ள வயல்வெளியில் சென்று வேலை பார்க்கிறோம். சுந்தரர் என்னை தரிசிக்க இங்கு வருவான். அவனிடம் நான் இருக்கும் இடத்தை கூறாதே’ என்று கூறிக்கொண்டு உமையவளுடன் வெளியே சென்றார். அவரோடு சிவகணங்களும் மானிட உருவத்தில் அவரைப் பின் தொடர்ந்தனர்.

அருகில் இருந்த வயல்வெளியில் இறைவனும் இறைவியும், சிவ கணங்களும் பணி செய்யத் தொடங்கினர். இந்தநிலையில் கோவிலுக்குள் நுழைந்த சுந்தரர், அங்கு கருவறையில் இறைவனும், இறைவியும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி யடைந்தார்.

‘இறைவா! இதென்ன சோதனை..! உன் திருக்கோல தரிசனத்தை தரிசிக்காமல் இவ்விடத்தை விட்டு செல்ல மாட்டேன். நீ எங்கு இருக்கிறாய்?. உன் இருப்பிடத்தை அறிந்து அங்கே வந்து நான் தரிசிப்பேன்’ என்று மனதுக்குள் சுந்தரர் சொல்லிக் கொண்டார்.

பின் நந்தியம்பெருமானை வணங்கி நின்றார். ‘நந்திபெருமானே! உமையதொரு பாகனை சுமந்து செல்லும் பாக்கியம் பெற்றவரே! உம்மை தரிசிப்பதில் நாம் பேறு பெற்று உள்ளோம். இருப்பினும் அகிலத்தை ரட்சிக்கும் அந்த ஆனந்த பரமனின் திருக்கோலத்தை தரிசிக்க பல மைல்கள் கடந்து வந்துள்ளேன். அந்த திருக்கோலத்தை தரிசிக்கும் பேறு தங்கள் திருவருளால் எனக்கு கிடைக்க வேண்டும்’ என்று கூறி வணங்கினார்.

சுந்தரரின் சிவபக்தியில் தன்னை மறந்த நந்தியம் பெருமான், ‘சிவனடியார்களை ஏமாற்றினால் அந்த பாவம் கொடியது. அது சிவ பக்தியை ஏமாற்றியது போல் ஆகும். இது அந்த பரமன் நடத்தும் நாடகம். இதில் நாம் சிக்கி கொள்ளக் கூடாது’ என்று நினைத்த நந்திதேவன், சுந்தரரை அழைத்து அவரது காதில் பட்டீஸ்வரரும், பச்சைநாயகி அம்மனும் எழுந்தருளியிருக்கும் இடத்தைக் கூறினார்.

சுந்தரர், வயல்வெளியை நோக்கிச் சென்றார். அங்கு இறைவனும், இறைவியும் பணியாள் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களை அறிந்து சுந்தரர் வணங்கி தன்னுடைய வணக்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டினார்.

அன்னை உமையவளும், ‘போதும் சுவாமி! சுந்தரருக்கு விளையாட்டு காண்பித்தது’ என்று கூறியதை அடுத்து, இருவரும் தங்களுடைய திவ்ய தரிசனத்தை சுந்தரருக்கு காண்பித்து அருள் பாலித்தனர்.

அதே வேளையில் சிவபெருமானின் கோபம் நந்தியம்பெருமானின் பக்கம் சாய்ந்தது. ‘இருப்பிடத்தை சுந்தரருக்குச் சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்த பிறகும், இருப்பிடத்தை கூறியிருக்கிறார் என்றால் என்ன தைரியம்’ என்று நினைத்தவர், ‘நந்தி..!’ என்று உரக்கக் கத்தியபடியே கோவிலுக்குள் நுழைந்தார்.

அவரது அந்த சத்தத்தைக் கேட்டு அனைத்து சிவ கணங்களும் அதிர்ச்சியில் உறைந்து விட்டன. உழவன் வேடத்தில் தனது திருக் கரத்தில் மண்வெட்டியுடன் நந்தியை நோக்கி வேகமாக வந்தார் பட்டீஸ்வரர். அவரது கோபத்தைக் கண்டு திடுக்கிட்ட நந்தியம் பெருமான், ‘சிவாய நம’ என்று பணிந்து நின்றார். மேலும் தன்னுடைய தவறை நினைத்து வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்டார்.

ஆனால் கடும் கோபத்தில் இருந்த ஈசன், தன் கையில் இருந்த மண்வெட்டியைக் கொண்டு, நந்தியின் தாடையைத் தாக்கினார். இதில் அவரது தாடை உடைந்து விட்டது. நந்தியின் முகத்தில் இருந்து வழிந்த ரத்தத்தைப் பார்த்ததும் ஈசன் தன்னிலைக்கு வந்தார். ‘என்ன காரியம் செய்து விட்டோம்’ என்று நினைத்தவர், தன் பக்தனையே தாக்கி விட்டோமே என்று வருத்தம் கொண்டார்.

கோபம்... அந்த சிவனைக் கூட, தன் நிலையை மறக்க வைத்து விடும் போல.. அதனால் தான் கோபத்தை ‘சத்ரு’ என்று கூறுகிறார்கள்.

நந்தியின் தாடையில் வழிந்த குருதியை தன் திருக்கரங்களால் துடைத்தார். வெள்ளமென வந்த குருதி நின்றது.

‘நந்திகேசவா..! என்பால் கொண்டுள்ள உன் அன்பு தெரியாமல் தவறிழைத்து விட்டேன். ஆயினும் எனது உத்தரவை மீறியதற்காக தண்டனை கொடுத்து விட்டேன். எனினும் என் திருநடன தரிசனத்தை காணும் பாக்கியத்தை நீ பெறுவாயாக..’ என்று அருள்பாலித்தார்.

நந்தியம்பெருமானும், ‘தங்கள் மீது தவறு ஏதும் இல்லை சுவாமி. தங்கள் உத்தரவை மதிக்காததால் தான் என் தாடை தங்கள் திருக்கரங்களால் இந்த தண்டனை கிடைத்தது. முப்புரம் எரித்த தங்களின் கோபக் கனலில் இருந்து, நான் எரியாமல் தப்பி விட்டேனே! மன்மதனை அழித்த கோபக் கனல் என் மீது சிறிது நேரத்தில் பாசமாய் மாறி விட்டதே! அந்த வகையில் நான் பாக்கியசாலி தான்’ என்று கூறி சிவபெருமானை பணிந்து நின்றார்.

நந்தியம் பெருமானின் பக்தியில் மெய்சிலிர்த்த பட்டீஸ்வரர் அவருக்கு அருள்பாலித்து விட்டு கருவறையில் எழுந்தருளினார்.

பட்டீஸ்வரரின் திருமுகத்தை தரிசிக்கும் பேறு பெற்றவராக நந்தியம்பெருமான், அவரை தரிசித்து கொண்டே ‘சிவாய நம’ என அவரின் திருமந்திரத்தை உச்சரிக்கத் தொடங்கினார். அகில உலகை ரட்சிக்கும் அந்த பரமனின் திருநடன தரிசனத்தை தரிசிக்கும் பேறு கிடைக்க வேண்டும் என்று தியானத்தில் ஆழ்ந்தார் நந்தியம்பெருமான்.

No comments:

Post a Comment