
சூரிய வம்ச மன்னன் துந்துமாரனுக்கு சுவேதன் என்ற மகன் இருந்தான். 9வயதில் சுவேதனின் ஆயுள் முடிந்துவிடுமென ஜோதிடர்கள் கணித்தனர். விஷயமறிந்த மன்னன் குலகுருவான வசிஷ்டரிடம் சுவேதனை அனுப்பினான். குலகுரு அவனுக்கு ஆயுள்மந்திரத்தை உபதேசம் செய்து தெற்குதிசை நோக்கி அனுப்பினார். வழியில் கண்ட குளக்கரையில் இருந்த வில்வமரத்தின் அடியில் வடக்கு நோக்கி அமர்ந்து குலகுரு சொன்ன ஆயுள்விருத்தி மந்திரத்தை, ஜெபிக்கத் தொடங்கினான் சுவேதன். ஒருமாதகாலம் தொடர்ந்து மந்திரம் சொல்லி, மந்திரசித்தி பெற்றதுடன், விஷ்ணுவின் தரிசனமும் பெற்றான். அவர் அவனது மரணகண்டத்தை போக்கி அருள்செய்தார். அவன் தவம் செய்த குளம் "சுவேத புஷ்கரணி' என்று பெயர் பெற்றது. இதனையே தமிழில் "வெள்ளைக்குளம்' என்று அழைத்தனர். அப்பெயர் மருவி வெள்ளக்குளம் என்றானது. சிறுவனுக்கு அருளிய பெருமாள், "அண்ணன் பெருமாள்' என்ற பெயரில் இங்கு அருள்பாலித்து வருகிறார்.
சீர்காழியில் இருந்து 8 கி.மீ., தொலைவில் உள்ள திருநாங்கூரில் 11 திருப்பதிகள் உள்ளன. அதில் ஒன்றே அண்ணன் கோயில். திருமலை வேங்கடவனையும், அண்ணன் கோவில் பெருமாளையும் பற்றி திருமங்கையாழ்வார் பாடும் போது,""அண்ணா! என் துன்பத்தைப் போக்கி அருள் வாயே,'' என்று கூறியுள்ளார். இங்குள்ள தாயாருக்கு திருப்பதியைப் போன்றே அலர்மேல் மங்கை என்று பெயர் சூட்டப் பட்டுள்ளது. திருப்பதி வெங்கடாசலபதிக்கு செய்ய வேண்டிய நேர்த்திக்கடன்களை அண்ணன் பெருமாளுக்குச் செலுத்தும் வழக்கம் உள்ளதால் தென்திருப்பதிகளில் ஒன்றாகவும் விளங்குகிறது. ""அண்ணா அடியேன் இடரைக் களையாயே'' என்று திருமங்கையாழ்வார் பாசுரம் பாடிய தலம் இது.
No comments:
Post a Comment