காஷ்யபர், கபிலர், துர்வாசர் ஆகிய முனிவர் களிடையே பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்களில் யார் சிறந்த கடவுள் என்று அறிவதென ஒப்பந்தம் ஏற்பட்டது.
இதற்கு தீர்வு வேண்டி முருகப்பெருமானைத் தஞ்சம் அடைந்தனர். தானே ஆதிபரம்பொருள் என்பதையும், படைத்தல், காத்தல், அழித்தல் என முத்தொழில் களையும் தானே முன்னின்று நடத்துவதையும் அவர்களுக்கு முருகன் உணர்த்தினார்.
இப்பெருமானே இலஞ்சி என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டிருக்கிறார். இவருக்கு ‘வரதராஜகுமாரர்' என்று பெயர். மூன்று முனிவர் களுக்கும் முருகன் அருளிய நிகழ்ச்சியின் அடிப்படையில் ஐப்பசி மாதம், கந்தசஷ்டி விழாவின் போது முதல்நாள் படைக்கும் தொழில் புரியும் பிரம்மனாகவும், இரண்டாம்நாள் காக்கும் தொழில் புரியும் விஷ்ணுவாகவும், மூன்றாம் நாள் அழித்தல் தொழில் புரியும் ருத்ரனாகவும், நான்காம் நாள் மறைத்தல் தொழில் புரியும் மகேஸ்வரனாகவும், ஐந்தாம் நாள் அருளல் தொழில் புரியும் சதாசிவமாகவும் இவர் அலங்கரிக்கப்படுகிறார்.
அருவித்தலமான குற்றாலத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரத்தில் இந்தக்கோயில் அமைந்துள்ளது. ‘இலஞ்சி’ என்றால் நீர்நிலை, அருள், செல்வம் என்றும் பொருள்கள் உண்டு. நீரினைப் போல குளிர்ச்சியாக, தனது பக்தர்கள் வேண்டும் வரங்களை அருளும் கலியுகவரதனாக இருக்கிறார் இவ்வூர் குமரன். இந்தக் கோயிலில் மற்றொரு அதிசயமும் உண்டு. முருகனுக்கு ஆறுமுகம் தான்! ஆனால், இந்தக் கோயில் முகப்பில் சுதை வடிவில், பத்துதலைகளுடன் கூடிய முருகனைத் தரிசிக்கலாம்.
No comments:
Post a Comment