
வடமாநிலங்களில் ராமாயணத்தை தெருக்கூத்தாக நடிப்பார்கள். அதில் குகனைப் பற்றி வரும் உரையாடல் சுவாரஸ்யமாய் இருக்கும். இரண்டு ஓடக்காரர்கள் அக்கூத்தில் இடம்பெறுவர். குகனைப் பார்த்து ராமர்,""என்னை நீ நதியைத் தாண்டி அக்கரையில் சேர்ப்பாயா?'' என்று கேட்பார்.
குகன் ராமனிடம்,""அவ்வாறே செய்கிறேன், ஆனால், நீங்கள் படகில் ஏறும் முன் உங்கள் பாதங்களைக் கழுவி விடுகிறேன். அதன் பின் ஏறுங்கள்!'' என்பான்.
ராமன். "" ஏன் அவ்வாறு செய்ய வேண்டுமென்கிறாய்?'' என்று சந்தேகம் எழுப்பியவுடன், ""பகவானே! உங்கள் கால்தூசுக்கும் சக்தி உண்டு. அகல்யாவைக் காப்பாற்றிய பாதங்கள் இவை. உயிரற்ற கல்லே பெண்ணாக எழும்போது, மரத்தால் செய்த என் ஓடமும் பெண்ணாக மாறிவிட்டால் என் வயிற்றுப்பாட்டுக்கு என்ன செய்வது?'' என்று பதில் அளிப்பான். இப்படி சொல்லி ராமனின் பாதங்களைக் கழுவும் பாக்கியத்தைப் படகோட்டி குகன் பெறுவான்.
ராமன், சீதை, லட்சுமணன் மூவரும் கங்கையின் அக்கரையில் சேர்ந்தவுடன், படகோட்டி குகனின் கூலியை வாங்கிக் கொள்ளும்படி ராமன் பணம் தருவான். அதை ஏற்க மறுக்கும் குகன், "" ஒரே தொழிலைச் செய்யும் இருவர் தமக்குள் காசு கொடுப்பதும் வாங்குவதும் கூடாது. நான் கங்கையைத் தாண்டி மக்களை அக்கரையில் சேர்க்கும் தொழிலைச் செய்கிறேன். நீங்களும் படகோட்டியே. உயிர்களைப் பிறவிக்கடலில் இருந்து மீட்டு வைகுண்டத்தில் சேர்க்கும் பணியைச் செய்கிறீர்கள்.'' என்பான். ராமநவமி நிகழ்ச்சியின் போது, இந்தக் காட்சியைப் பாடலாகப் பாடும் கலைஞர்கள், மிகவும் உருக்கமாகவும் நடிப்பார்கள்.
No comments:
Post a Comment