Wednesday, 13 September 2017

அங்காளம்மனான காளிதேவி


காளிதேவியே அங்காளம்மனாகப் பிறந்தாள். "அங்காளம்' என்ற சொல்லுக்கு "இணைதல்' என்று பொருள். வல்லாள கண்டன் என்ற அசுரன் கடும் தவம் செய்து சிவதரிசனம் பெற்றான். பிறவியை முடித்த ஒருவரால் தான் தனக்கு அழிவு வர வேண்டும். எந்த ஆயுதத்தாலும் தன்னை அழிக்க முடியாது என்று வரம் பெற்றான். இதனால் தன்னை யாராலும் அழிக்க முடியாது என்ற ஆணவத்தில் தேவர்களை துன்பப்படுத்தினான். அழியாவரம் பெற்ற அவன் 108 பெண்களை மணந்தாலும் குழந்தை வரம் மட்டும் கிடைக்கவில்லை.குழந்தையில்லாத அவன் மேலும் நெறி கெட்டு திரிந்தான். வல்லாளகண்டனின் கொடுமைக்கு முடிவு கட்ட சிவன் முடிவெடுத்தார். பார்வதி தேவியை அழைத்து, நீ மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி, காந்திமதி, மாரியம்மன், காளியாகவும் ஆறு பிறவிகள் எடு. ஏழாவது பிறவி பற்றி நான் பிறகு சொல்வேன் என்றார். அதன்படி அன்னை பார்வதி ஆறு பிறவிகள் எடுத்து மக்களுக்கு அருள்பாலித்தாள். காளியாக உருவெடுத்த போது, சிவனையும் மிஞ்சிய சக்தியாக எண்ணி, அவரை நடனப்போட்டிக்கு அழைத்தாள். அந்த போட்டியில் தோல்வி அடைந்தாள். வெட்கம் தாளாமல் தன்னையே எரித்து கொண்டாள்.அவளது அங்கம் வெந்தது. அங்கம் என்றால் உடல். சாம்பலான காளியை மீண்டும் ஒன்று கூட்டினார் சிவன். அவள் உயிர் பெற்று எழுந்தாள். அங்கத்தில் இருந்து அவள் பிறந்ததால் "அங்காளம்மன்' எனப்பட்டாள்.

பம்பை பிறந்த கதை
வல்லாளகண்டன் என்ற சாகாவரம் பெற்ற அசுரனுக்கு குழந்தைகள் இல்லை. அவன் மேல் மிகவும் பாசம் கொண்ட கண்டி என்ற மனைவி குழந்தை வரத்துக்காக ஒரு முதியவளிடம் குறிகேட்டாள். காளிதேவியே முதியவளாக உருமாறி வந்ததை அவள் அறியவில்லை. குறிசொன்ன அவள்""நான் தரும் திருநீறை சாப்பிடு. குழந்தை பிறக்கும். ஆனால், உன் கணவன் இறந்துவிடுவான். பரவாயில்லையா?'' என்றாள். தன் கணவனுக்கு தான் எளிதில் சாவு வராதே என்ற தைரியத்தில் கிழவி கொடுத்த திருநீறைச் சாப்பிட்டு கர்ப்பமானாள். வெளியூர் சென்றிருந்த வல்லாளகண்டன் தன் மனைவி கர்ப்பமான செய்திகேட்டு அவள் மேல் சந்தேகப்பட்டான். காட்டிற்கு தூக்கிச் சென்று அவளைக் கொல்ல உத்தரவிட்டான். ஆனால், பாம்பு வடிவில் வந்த காளி காவலர்களை விரட்டிவிட்டு அவளைக் காப்பாற்றினாள். அவளை அரண்மனைக்கு அழைத்து வந்து, நடந்ததைச் சொன்னாள் முதியவள். வல்லாளனும் நம்பிவிட்டான். குழந்தை பிறக்கும்  சமயத்தில், வல்லாளனிடம் முதியவள், ""குழந்தை பிறக்கும் போது விளக்குகளை அணைத்துவிட வேண்டும்,'' என்றாள். வல்லாளனும் காரணம் புரியாமல் விளக்கை அணைத்தான். உடனே முதியவள்,""இருளா, வெளியே வா,'' என்றாள். கண்டியின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு குழந்தை வந்தது. கண்டி இறந்தாள். ஆத்திரமடைந்த வல்லாளகண்டன், முதியவளைக் கொல்லப் பாய்ந்தான்.  அவள் அங்காளம்மனாக பெருவடிவம் கொண்டு அவனை ஆட்கொண்டாள்.  ""வல்லாளனே! என் கையால் மரணமடையும் நீ முக்தியடைவாய். உன்னை இனி என் கோயில்களில் பம்பை என்ற மேளமாகப் பயன்படுத்துவர். உன் மகன் இருளன் என் வாசலில் பாதுகாப்பாக இருப்பான்,'' என்றாள். காவல் தெய்வ கோயில்களில் உள்ள இருளப்ப சுவாமி இவனே! இன்றுவரை பம்பை மேளமும் கோயில்களில் ஒலித்து வருகிறது. 

No comments:

Post a Comment