Friday 17 November 2017

வலிப்பு நோயை தீர்க்கும் பத்ரவல்லீஸ்வரர் திருக்கோவில்

வலிப்பு நோயை தீர்க்கும் பத்ரவல்லீஸ்வரர் திருக்கோவில்

பத்ரவல்லீஸ்வரர் கோவில் தீர்த்தத்தில் நீராடி இத்தல இறைவனை வழிபாடு செய்தால் வலிப்பு நோய், நரம்பு கோளாறு நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருவீழிமிழலையில் உள்ளது பத்ரவல்லீஸ்வரர் திருக்கோவில். முன் காலத்தில் இந்த ஆலயம் இருந்த பகுதியில் காத்யாயன முனிவர் வசித்து வந்தார். அவரது மகளாகப் பிறந்த பார்வதி தேவி, காத்யாயினி என்ற பெயருடன் வளர்ந்து வந்தார். காத்யாயினியை மணம் முடிக்க சிவபெருமான், முதியவர் வேடத்தில் அங்கு வந்தார்.

அவரை யார் என்று அறியாத முனிவர், ‘ஒரு முதியவருக்கு என் மகளைக் கட்டிக் கொடுக்க விருப்பமில்லை’ என்று மறுத்து விட்டார். இதையடுத்து தனது நெற்றிக்கண்ணைத் திறந்து, தான் யார் என்பதை முனிவருக்கு உணர்த்தினார் ஈசன். அதன்பிறகே தனது மகளான காத்யாயினியை சிவபெருமானுக்கு முனிவர் மணம் முடித்து வைத்தார். இறைவனுக்கும், இறைவிக்கும் திருமணம் நடைபெற்ற தலம் என்பதால், இங்குள்ள இறைவனை ‘மாப்பிள்ளை சுவாமி’ என்றும் அழைக்கிறார்கள். சிம்ம ராசிக்காரர்கள் இத்தல அம்பாளை தரிசித்தால், திருமணத் தடை நீங்கி, நல்ல துணை கிடைக்கும் என்பது ஐதீகம்.

தல வரலாறு :

புரூரவஸ் என்ற அரசனின் மனைவி பத்ரவல்லிக்கு, வலிப்பு நோய் உண்டானது. பல இடங்களில் சிகிச்சைப் பெற்றும், அந்த நோய் குணமாகவில்லை. இதையடுத்து திருவீழிமிழலை விழிநாதரை வணங்கி, தன் வலிப்பு நோய் நீங்க முறையிட்டாள். அன்றிரவு அவள் கனவில் தோன்றிய ஈசன், ‘திருவீழிமிழலை தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் நோய் நீங்கப் பெறுவாய்’ என்று அருளினார்.

அதன்படியே பத்ரவல்லியும், தீர்த்தத்தில் நீராடி, நோய் நீங்கப் பெற்றாள். தன்னுடைய நோயைப் போக்கிய இறைவனுக்கு ஆலயம் அமைக்க பத்ரவல்லி விருப்பம் கொண்டாள். அவளின் எண்ணத்தை விநாயகப்பெருமானிடம் சொல்லி வேண்டினாள். அவர் வழங்கிய பணமுடிப்பை கொண்டு ஆலயத்தை நிர்மாணித்ததாக கூறப்படுகிறது.

இந்த ஆலயத்திற்கு இன்னொரு வரலாறும் சொல்லப்படுகிறது. அதையும் பார்க்கலாம்.

மகாவிஷ்ணுவின் சக்ராயுதத்தை சலந்தரன் என்ற அரக்கன் பறித்துச் சென்றான். அதனை மீட்டுத் தரும்படி, சிவபெருமானை வேண்டினார் திருமால்.

‘பூலோகத்தில் வீழிச்செடிகள் அடர்ந்த இடத்தில் இருக்கும் என்னை அனுதினமும் பூஜித்து வந்தால், சக்ராயுதம் கிடைக்கும்’ என்று அருளினார் ஈசன்.

அதன்படி விஷ்ணுவும் மனம் தளராமல், தினமும் சிவ பூஜை செய்து வந்தார். விஷ்ணுவின் பெயரால் தீர்த்தம் உண்டாக்கி, அதில் இருந்து நீரை எடுத்து அபிஷேகம் செய்ததுடன், தினமும் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு ஈசனை வழிபட்டார். ஒருநாள், சிவபெருமானின் திருவிளையாடலால் ஆயிரம் தாமரை மலர்களில் ஒன்று குறைந்தது. அந்த ஒரு தாமரை மலருக்குப் பதிலாக, தன்னுடைய ஒரு கண்ணையே மலராக அர்ப்பணித்தார் விஷ்ணு.

அவரது பூஜையில் மகிழ்ச்சியடைந்த சிவபெருமான், சலந்தரனை வதம் செய்து சக்ராயுதத்தை மீட்டு விஷ்ணுவிடம் வழங்கினார். விஷ்ணு, சிவபெருமானுக்கு அர்ப் பணித்து பூஜை செய்த கண்மலர், இறைவனின் பாதத்தில் இருப்பதை இன்றும் காணலாம்.

இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி இத்தல இறைவனை வழிபாடு செய்தால் வலிப்பு நோய், நரம்பு கோளாறு, திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் பூந்தோட்டம் என்ற இடம் உள்ளது. அங்கிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் திருவீழிமிழலை இருக்கிறது.

No comments:

Post a Comment