Thursday, 16 November 2017

எண்ணங்களை ஈடேற்றும் சிதம்பரேஸ்வரர் கோவில்

எண்ணங்களை ஈடேற்றும் சிதம்பரேஸ்வரர் கோவில்

முதலாம் குலோத்துங்கச் சோழன் அழகுற கட்டிய ஆலயம் ஒன்று புள்ளம்பாடி கிராமத்தில் உள்ளது. இந்த ஆலயம் தற்போது சிதம்பரேஸ்வரர் என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது.

தென் தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்களில், சோழர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக கருதப்படுகிறார்கள். இவர்கள் தாங்கள் ஆண்டு வந்த பகுதிகளில் எல்லாம் ஆலயங்களை அமைப்பதில் ஆர்வம் கொண்டிருந்தனர் என்பதை வரலாறு மூலம் நாம் அறிய முடிகிறது. அவர்கள் கட்டிய ஆலயங்கள் பல நூறு ஆண்டுகளைக் கடந்து, இன்றும் சோழ மன்னர்களின் பெயரை பறைசாற்றிக் கொண்டிருப்பது சொல்லித தெரியவேண்டியதில்லை.

முதலாம் குலோத்துங்கச் சோழன், சோழ நாட்டை ஆண்ட காலத்தில் (கி.பி.1080) அழகுற கட்டிய ஆலயம் ஒன்று புள்ளம்பாடி கிராமத்தில் உள்ளது. சுமார் 900 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், அந்த கிராமத்தின் மகுடமாக திகழ்கிறது என்றால் மிகையல்ல. இந்த ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகள் மூலம் பல தகவல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. கல்வெட்டில் இந்த ஊரின் பெயர் புள்ளன்பாடி என்றும், இது கானக்கிளியூர் நாட்டுப் பிரிவின் கீழ் இருந்த ஊர் என்றும், கோவிலின் பெயர் ‘மதுராந்தக ஈஸ்வரம்’ என்றும் காணப்படுகிறது.

மதுராந்தகன் என்பது முதலாம் ராஜேந்திரனின் பெயர் ஆகும். அவரது பெயரால், இவரது பேரன் குலோத்துங்கன் கட்டிய ஆலயம் இது. இந்த ஆலயம் கடந்த 11.11.2012-ல் குடமுழுக்கு திருவிழா கண்டது. அதன் மூலம் தற்போது இந்த ஆலயம் புதுப்பொலிவு பெற்றுத் திகழ்கிறது.

ஆலய அமைப்பு :

இந்த ஆலயம் தற்போது சிதம்பரேஸ்வரர் என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. இந்தக் கோவில் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் ஐந்து நிலை ராஜகோபுரம் கம்பீரமாக வீற்றிருக்கிறது. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே நுழைந்ததும், நந்தியும், கொடிமரமும் காணப்படுகின்றன. அடுத்துள்ள மகாமண்டபத்தின் வலது புறம் அம்பாள் சன்னிதி இருக்கிறது. இத்தல அன்னையின் திருநாமம் ‘சிவகாமி அம்மை’ என்பதாகும். அன்னை கருவறையில் நின்ற கோலத்தில் புன்னகை தவழும் இன்முகத்துடன் அருள்பாலிக்கிறாள்.

மகாமண்டபத்தை அடுத்து துவாரபாலகர்கள் இருபுறமும் கம்பீரமாக நிற்க அர்த்தமண்டபமும், அதை அடுத்து இறைவன் சிதம்பரேஸ்வரரின் கருவறையும் உள்ளது. கருவறையில் சிவலிங்கத் திருமேனியுடன் இறைவன் கீழ் திசை நோக்கி அருள்புரிகிறார். மகாமண்டபத்தின் இடதுபுறத்தை உற்சவர் சிலைகள் அலங்கரிக்கின்றன. மத்தியில் உச்சி விதானத்தில் 12 ராசிகளும் வடிக்கப்பட்ட ஸ்ரீசக்கரம் உள்ளது. இறைவனையும், இறைவியையும் மகாமண்டபத்தின் மத்தியப் பகுதியில் நின்று கரங்குவித்து வணங்கும் பக்தர்கள், சற்றே தங்கள் தலையை உயர்த்தி தங்களது ராசி பதிக்கப்பட்ட சக்கரத்தையும் வணங்குவது இங்கு வழக்கமான ஒன்றாகும்.

துர்க்கை, சிதம்பரேஸ்வரர்

இறைவனின் தேவக்கோட்டத்தின் தென்புறம் நர்த்தன கணபதி மற்றும் தட்சிணாமூர்த்தியும், மேல்திசையில் மகாவிஷ்ணுவும், வடக்கில் பிரம்மாவும், கோஷ்ட துர்க்கையும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். திருச்சுற்றின் கிழக்கில் சூரியன், சந்திரன், காலபைரவர், சனீஸ்வரன், நீலாதேவி, ஜோஸ்டா தேவி ஆகியோரும், தெற்கில் துர்க்கை, அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், மெய்பொருள் நாயனார் ஆகியோரது திருமேனிகளும், மேற்கில் சித்தி விநாயகர், வள்ளி- தெய்வானை சமேத சண்முகநாதர், கஜலட்சுமி ஆகியோர் திருமேனிகளும் உள்ளன.

இந்த ஆலயத்தில் இரண்டு தல விருட்சங்கள் உள்ளன. அவை வன்னிமரம் மற்றும் வில்வமரம். ஆலயத்தின் தெற்குப் பிரகாரத்தில் இந்த இரண்டு தல விருட்சங்களும் செழித்து வளர்ந்து தழைத்தோங்கி நிற்கின்றன. ஆலயத்தின் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் வீற்றிருந்து அருள்புரிகிறார்கள். சுமார் 900 ஆண்டுகளைக் கடந்த இந்த ஆலய முகப்பானது கிழக்கு திசையில் ஐந்து நிலை ராஜகோபுரத்தால் அலங்கரிக்கப்படுவது போல், வடக்கு மற்றும் தெற்கு வாசல்களை மூன்று நிலை கோபுரங்கள் அலங்கரிக்கின்றன.

திருவிழாக்கள் :

நவராத்திரியின் போது 9 நாட்களும் உற்சவர் அம்மனை, தினம் ஒரு அலங்காரத்தில் அலங்கரிக்கிறார்கள். அந்த அம்மனை மகாமண்டபத்தில், பக்தர்கள் தரிசனம் செய்ய அமர்த்தி இருப்பார்கள். இந்த அலங்கார அழகைக் காணவே பக்தர்கள் கூட்டம் இந்த நாட்களில் ஆலயத்தில் அலைமோதும். 10-ம் நாள் விஜயதசமி அன்று அம்பு போடும் திருவிழா வெகு விமரிசையாக நடந்தேறும்.

மார்கழி 30 நாட்களும் இறைவன், இறைவிக்கு மார்கழி பூஜை சிறப்பாக நடைபெறு கிறது. ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகமும், மாதப் பிரதோஷங்களும் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. கார்த்திகை சோமவார நாட்களில் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

தைப்பூசம் பங்குனி உத்திரம், கந்தசஷ்டி 6 நாட்களும் முருகப்பெருமானுக்கும், தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.

கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை அன்று சொக்கப்பனை திருவிழா மிக அமர்க்களமாக நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை ராகு கால நேரத்தில் துர்க்கைக்கு நடைபெறும், சிறப்பு ஆராதனையில் ஏராளமான பெண்கள் கலந்து கொள்கின்றனர்.

ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும். பக்தர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் சிதம்பரேஸ்வரரையும் சிவகாமியம்மையையும் புள்ளம்பாடி சென்று நாமும் ஒரு முறை தரிசிக்கலாமே.

திருச்சி- அரியலூர் நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது புள்ளம்பாடி என்ற கிராமம். திருச்சியில் இருந்து புள்ளம்பாடி செல்ல பேருந்து வசதிகள் உள்ளன. 

No comments:

Post a Comment