Saturday 30 June 2018

ஸ்ரீரங்கமும் ஸ்ரீசுதர்சன சதகமும்

ஸ்ரீரங்கமும் ஸ்ரீசுதர்சன சதகமும்

ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் சக்கரத்தாழ்வாருக்கும் அரங்கனுக்கும் தொடர்பு உண்டு. ஒரு முறை காவிரியில் அரங்கனுக்கு தெப்ப உற்சவம் நடைபெற்ற நேரம் காவிரியில் வேகம் அதிகரித்தது. அரங்கனை அந்த வெள்ளத்தில் இருந்து மீட்க முடியுமா என்ற பயம் ஏற்பட்ட போது ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருந்த கூரநாராயண ஜீயர் என்பவர், சுதர்சன சதகத்தை இயற்றி ஸ்ரீசுதர்சனரை வேண்ட... காவிரி வெள்ளம் குறைந்து, அரங்கள் கரையேறினான். இந்த சுதர்சன சதக பாராயணம் பல சங்கடங்களைப் போக்கும் மாமருந்தாகும்.

கும்பகோணத்தில் சக்கரத்தாழ்வாருக்கு என்றே தனிக் கோவில் அமைந்துள்ளது. வேறெங்கும் காண முடியாத அமைப்பு அது. மேலும், இங்கு மூலஸ்தானத்தில் சக்கரத்தாழ்வார் (மூலவரும் உற்சவரும்) சுதர்சனவல்லித் தாயாருடன் காட்சியளிக்கிறார். தவிர, விஜயவல்லித் தாயாரும் பிரகாரத்தில் தனிக்கோவில் கொண்டு காட்சியளிக்கிறார்.

இவரை தரிசிக்க தட்சிணாயன, உத்தராயன வாசல்கள் அமைந்துள்ளன. தை முதல் ஆனி வரை உத்தராயன வாசல் வழியாகச் செல்ல வேண்டும். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன வாசல் வழியாகச் செல்ல வேண்டும். சூரிய பகவானின் கர்வத்தை அடக்கியவர் சக்கரபாணி என்கிறது தலவரலாறு. அதனால் இத்தலத்தை பாஸ்கர க்ஷேத்திரம் என்றும் போற்றுவர்.

இந்து சமயத்தில் விரதத்தின் முக்கியத்துவம்

இந்து சமயத்தில் விரதத்தின் முக்கியத்துவம்

விரதங்களை மெற்கொள்பவர், காலையில் எழுந்து தம் கடைமைகளை முடித்து, முன்னாளும் உபவாசியராய், குரு, சுக்ரர், அஸ்தம் உதயம் மூடங்களாகிய காலங்களையும், மலமாஸங்களையும் சிங்க மகா அத்தமனங்களையும், விஷ கண்ட முதலிய ஷட்கண்டங்களையும், தீய நாட்டங்களையும், தவிர்த்துக் குற்றமில்லாச் சுப தினமாகிய நாள்களில் விரதங்களைத் தொடங்கல் வேண்டும். 

சுமங்கலிகள் புருஷன் கட்டளையின்படி விரதங்களை மேற்கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு அல்லாத நங்கை கணவனை இழக்கிறதேயன்றி நரகத்தையும் அடைகிறாள். 

விரதம் தொடங்கும் நாளுக்கு முதனாள் முழுகி ஒரு பொழுதுண்டு மறுநாள் ஸ்நானம் செய்து தானாதிகள் செய்து சங்கல்பஞ் செய்து ஜபம், பூஜை முதலிய முடித்து வேதியரைப் பூசித்துத் தட்சணை முதலியவை யதாசக்தி அளித்து நியமாகார முதலிய உள்ளவராய் மாம்சாதிகள், தாம்பூலம் அபயங்கனம், தஜஸ்வலையர், சண்டாளர், பாபிகளைத் பாபிகளைத் தீண்டாது, பெண் போகம் நீத்தல் வேண்டும். விரத பங்கம் நேரிடின் மூன்று நாள் ஆகாரமின்றியிருத்தல் வேண்டும்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அணையா விளக்கு

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அணையா விளக்கு

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்காக அகல் விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தனர். இதனையொட்டி கோவில் நிர்வாகம் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலமாக அகல் (நெய், எண்ணெய்) விளக்கினை விற்பனை செய்து வந்தனர். இதன் மூலம் கோவிலுக்கு வருமானம் கிடைத்து வந்தது.

இந்தநிலையில் சமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அகல் விளக்கு விற்பனையை முழுமையாக தவிர்ப்பது என்று கோவில் நிர்வாகம் முடிவு செய்து, அதன்படி சிறிது சிறிதாக அகல் விளக்கு விற்பனையை குறைத்து வந்தனர்.

இந்தநிலையில் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவின்படி நடப்பு பசலி ஆண்டான வருகிற (ஜூலை) 1-ந்தேதி முதல் அகல் விளக்கு விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் தங்களின் வேண்டுதலுக்காக பாதுகாப்பான முறையில் விளக்கேற்ற அணையா (வாடா) விளக்கு ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கண்ணாடி குவளையில் முக்கோண வடிவில் சுமார் 3 அடி உயரத்தில் விளக்கு தயாரிக்கப்பட்டுள்ளது.

அணையா விளக்கின் மேல் பகுதியில் நெய் ஊற்றுவதற்காக குவளை பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த விளக்கு 24 மணி நேரமும் (கோவில் நடை சாத்திய பின்பும்) அணையாமல் தீபம் பிரகாசிப்பதற்காக விளக்கின் மைய பகுதியில் 15 லிட்டர் கொள்ளவு கொண்ட பாத்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

விளக்கின் அடிப்பகுதியில் 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட வடிக்கட்டிய நெய்யை சேமிக்க கூடிய பாத்திரமும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பக்தர்கள் தாங்கள் நேர்த்திக்கடனாக கொண்டு வரும் நெய்யை ஊற்றி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த அணையா விளக்கு கோவிலுக்குள் 6 இடங்களில் வைக்கப்படுகிறது. மேலும் இந்த கோவிலின் துணை கோவிலான சொக்கநாதர் கோவிலிலும் ஒரு அணையா விளக்கும் வைக்கப்பட உள்ளது.

கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக அகல் விளக்குகள் விற்று கோவிலுக்கு வருமானத்தை பெற்று தந்த கோவில் நிர்வாகம், அணையா விளக்கில் தீபம் ஏற்றுவதற்காக, 50, 100 கிராம் நெய் பாக்கெட்டுகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்து சமய அறநிலைய துறை கமிஷனரிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மழைக்காக வித்தியாசமான வேண்டுதல் செய்த சித்தர்

மழைக்காக வித்தியாசமான வேண்டுதல் செய்த சித்தர்

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ள குக்கிராமத்தில் தான் பெரியசாமி என்ற சிறுவன் வசித்து வந்தான். அப்போது நம் நாட்டில் வெள்ளையர்கள் ஆதிக்கம் நடந்து கொண்டிருந்தது. பெரியசாமியைத் தவிர அந்த கிராமத்தில் இருந்த அனைவரும் வேறு ஒரு மதத்திற்கு மாறியிருந்தனர். ஏன் பெரியசாமியின் குடும்பத்தினரும் கூட மதம் மாறியிருந்தனர். அவனுடைய வீட்டில் மொத்தம் 7 பிள்ளைகள். அதில் பெரியசாமியின் எண்ணத்தில் மட்டும் ஈசன் இருந்து ஆட்சி செய்து கொண்டிருந்தார்.

அனுதினமும் சிவனையே பூஜித்து வந்தான். ஆனால் அவனது வழிபட்டிற்கு வீட்டில் உள்ளவர்களாலேயே இடையூறு ஏற்பட்டதால், அந்தச் சிறுவன் அங்கிருந்து புறப்பட்டு திருவண்ணாமலை சென்றான். அங்கு சிவனை வணங்கி அண்ணாமலையாரே கதி என்று கிடந்தான்.

காலங்கள் பல கழிந்து விட்டன. அவனது வயதும் உயர்ந்து விட்டது. திருவண்ணாமலையில் தான் பெரியசாமி சித்தராக உருமாறினார். அதை அவரது கனவில் தோன்றி சிவபெருமான் உணர்த்தினார். ஒருநாள் இறைவழிபாட்டை முடித்து விட்டு, மடம் ஒன்றில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவரது கனவில் தோன்றிய ஈசன், ‘என் புகழ் பரப்பி, எனக்கு உனது பிறப்பிடமான தென்தமிழகத்தில் கோவில் ஒன்றைத் எழுப்புவாயாக. அந்தக் கோவில் தென் திருவண்ணாமலை என திகழும்' என்றுரைத்தார்.

விழித்தெழுந்தப் பெரியசாமி சித்தர் திகைத்தார். அவரது எண்ண ஓட்டம் பலவாறாக ஓடியது. ‘நமது ஊரோ வேறு ஒரு மதத்தை தழுவியிருக்கும் பகுதி. அங்கு எப்படி திருவண்ணாமலையை உருவாக்க முடியும்?’ என்று நினைத்தார்.

ஆனால் இறைவனே சொல்லி விட்டார், இனி தடையில்லை என்று மனதை தைரியப்படுத்தினார். ஒரு கார்த்திகை திருநாள் அன்று, தீபம் ஏற்றும் வேளையில் திருவண்ணாமலையே களை கட்டியிருந்தது. அனைவரும் மலையை நோக்கி தீபம் ஏற்றக் கிளம்பினர். இவரும் மலை மீது ஏறி தீபமேற்றலாம் எனச் சென்றார். அப்போது ஒருவர் அவரை தடுத்தார்.

கோபமடைந்த பெரியசாமி சித்தரோ.. ‘நீங்கள் அண்ணா மலையாரின் தீபத்தை மலையில் ஏற்றுகிறீர்கள். நான் தலையிலேயே ஏற்றுகிறேன்' என்று சபதமிட்டார்.

அதன் பிறகு ஒரு நிமிடம் கூட அங்கே நிற்கவில்லை. சிவபெருமானை நோக்கி, ‘பெருமானே! நீ கனவில் கூறியபடி தென்திருவண்ணாமலை அமைக்க என்னோடு வா..' என கூறி, அங்கிருந்து பிடிமண்ணை எடுத்துக்கொண்டார். பின் கோபுரத்தை நோக்கி இரு கைகளையும் தூக்கி வணங்கினார். ‘இறைவா என்னோடு வா. தென்னாட்டு மக்களுக்கு உன் அருளாசியைத் தா' என்று வேண்டியபடி, ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

பல இடங்களில் உள்ள சிவ தலங்களை வணங்கியபடியே சங்கரன்கோவில் வந்தடைந்தார். சங்கர நாரயணரை மனதுருக வேண்டிக்கொண்டு, தான் பிறந்த ஊருக்கு வந்து சேர்ந்தார். அங்கு, திருவண்ணாமலையில் இருந்து கொண்டு வந்த பிடி மண்ணை வைத்து சிவ பூஜை செய்யத் தொடங்கினார். அவரது வழிபாட்டிற்கு அவரது சகோதரர்கள் இடையூறு செய்தனர்.

‘இனி இங்கிருப்பது உகந்தது அல்ல’ என நினைத்து, அங்கிருந்து திருவண்ணாமலை பிடி மண்ணுடன் பனவடலி சத்திரம் என்ற ஊருக்கு வந்தார். அங்கேயும் அவரால் சிவ வழிபாட்டை சரியாகத் தொடர முடியவில்லை. அங்கிருந்து மேற்கே 6 கிலோமீட்டர் தொலைவில் அழகான மலையைக் கண்டார். ஆகா.. இது வல்லவோ.. தென் திருவண்ணாமலை என ஆனந்தக் கூத்தாடினார். அம் மலையின் அடிவாரம் அப்போது முத்து கிருஷ்ணாபுரம் என அழைக்கப்பட்டது. முத்துகிருஷ்ணாபுரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தேர்வு செய்தார். அவ்விடத்தில் பிடி மண்ணை வைத்து வணங்க ஆரம்பித்தார்.

இறைவனிடம் தான் இசைந்தது போலவே இவ்வூரை திருவண்ணாமலையாக்க வேண்டுமே, தன்னை மலை மீது ஏறக் கூடாது என தடுத்தவரிடம், தலையில் தீபம் ஏற்றுவேன் என்று சபதமிட்டோமே.. அதை நிறைவேற்ற வேண்டுமே.. முதலில் இவ்விடம் இறைவனுக்கு முழுவதும் சொந்தமான இடமாகவேண்டும் என்று நினைத்தார்.

அதற்காக அந்த இடத்துக்குச் சொந்தக்காரனமான ஊத்துமலை ஜமீன்தார் இருதாலய மருத்தப்ப தேவரிடம் சென்றார். ‘சிவபெருமானுக்கு கோவில் கட்ட இடம் தரவேண்டும்’ எனக் கேட்டார்.

அவரும் அதற்கு இணங்கி தற்போது கோவில் உள்ள இடத்தைத் தானமாக கொடுத்து விட்டார். அதுவரை முத்துகிருஷ்ணாபுரம் என அழைக்கப்பட்ட அவ்வூர், அதன்பிறகு ‘அண்ணாமலை புதூர்’ என்று அழைக்கப்பட்டது.

தீபத்தைத் தலையில் சுமக்க பெரியசாமி சித்தர், நாள் குறித்தார். திருக்கார்த்திகை தினத்தன்று, தனது தலையில் துளசி மாலையை, சும்மாடு போல் மடக்கிக் கட்டிக் கொண்டார். அதற்குள் மிகப்பெரிய திரியை தயார் செய்து, எண்ணெய் விட்டு தீபம் எரியச் செய்தார். இதை ஊரே அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

‘வெறும் தலையில் சாமியார் தீபம் எரிய விடுகிறார். அத்தீபம் விடிய விடிய எரிகிறது’ என்ற செய்தி காட்டூத்தீ போல அக்கம் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு பரவியது. இதனால் மக்கள் பெரியசாமி சித்தரை அதிசயத்துடன் காண ஓடோடி வந்தனர். அவருக்கு வேண்டிய உதவிகளை காணிக்கையாகக் கொடுத்தனர். அந்த காணிக்கையை சிவ தொண்டுக்கு சித்தர் பயன்படுத்தினார்.

அவ்வூரில் அண்ணாமலையாருக்கு சிறியக் கோவில் ஒன்றை கட்டினார். அங்கே இறைவனின் ஐம்பொன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தார். அச்சிலை தற்போதும் கர்ப்பக்கிரகத்தில் மூலவர் சிலைக்கு வலப்புறத்தில் உள்ளது. மூலவராகக் கல்லால் ஆன சிவலிங்கமும் காணப்படுகிறது. திருவண்ணாமலையில் சிவனின் பின்புறத்தில் மேற்கு திசையில் மலை காணப்படும். தென் திருவண்ணாமலையான இங்கே சிவனின் முன் புறத்தில் கிழக்கு திசையில் மலை காணப்படுகிறது. இங்குள்ள மலைமீது சப்தக்கன்னிமார் கோவிலும் உள்ளது. தெப்பக்குளமும் இருக்கிறது.

பெரியசாமி சித்தர், சுமார் 3 ஆயிரம் அடி உயரமுள்ள இந்த மலைக்கு தினமும் சென்று விடுவார். அங்குள்ள தெப்பக்குளத்தில் நீராடுவார். அதன் பின் அங்கிருந்து அபிஷேகம் செய்யக் குடத்தில் நீரை எடுத்துக்கொண்டு கீழே இறங்கி கோவிலுக்கு வருவார். தினந்தோறும் பெரியசாமி சித்தரின் வழிபாடு மலையில் உள்ள தெப்பக்குள நீரில் தான் நடந்துள்ளது.

ஆரம்பக் காலக்கட்டத்தில் தனியொரு மனிதனாகவே மலைமீது ஏறி கார்த்திகை தீபம் ஏற்றியுள்ளார். மலை மீது தீபம் எரிவதைப் பார்த்த மக்களுக்கு பெரும் ஆச்சரியம். ‘திருவண்ணாமலையில் தீபம் எரிவதைப் போல, நம்மூர் பகுதியிலும் தீபம் எரிகின்றதே’ என்று சுற்றுவட்டார மக்கள் ஆச்சரியப்பட்டனர். மலை மீது தீபம் எரிவது வருடந்தோறும் திருக்கார்த்திகை நாளில் வழக்கமானது. ஒரு முறை மலை மீது எரியும் தீபத்தைப் பார்க்க மறுநாள் காலையில் பொதுமக்கள் சிலர் மலைக்குச் சென்றுள்ளனர். சென்றவர்களுக்கு பெருத்த ஆச்சரியம்.

ஆம்.. தீபம் எரிந்தது மலை மீது அல்ல.. மலையில் அமர்ந்து தவம் இயற்றிக்கொண்டிருந்த பெரியசாமி சித்தரின் தலை மீது. இதைக் கண்டு மக்கள் அனைவரும் பெரியசாமி சித்தரை வணங்கத் தொடங்கினர். அதன்பிறகுதான் ஊரார் ஆதரவு கிடைத்தது.

அடுத்து வந்த வருடங்களில் பெரியசாமி சித்தர், தலையில் ஏற்றிய தீபத்துடன் வீடு வீடாகச் சென்று அருளாசியும் வழங்கி உள்ளார். தீபம் அணைந்து விடாமல் இருக்க ஒவ்வொரு வீட்டிலும் எண்ணெய் ஊற்ற ஆரம்பித்தனர். அப்படி எண்ணெய் ஊற்றினால், அவர்களுக்கு வேண்டிய வரமெல்லாம் கிடைக்கிறது என நம்பிக்கை மக்களுக்கு பிறந்தது.

தென் திருவண்ணாமலை

கொதிக்கும் எண்ணெய் தலை வழியாக அவர் தேகமெல்லாம் வழிந்தோடினாலும், அதனால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லையாம். சித்தர் மீது மிகவும் பாசம் கொண்ட பலர் தங்களது தேவைகளைக் கேட்டறிந்து, அது நிறைவேறியவுடன் அவருக்கு காணிக்கையையும் வழங்கி வந்தனர்.

ஒரு நாள் இப்பகுதியில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் தண்ணீர் இன்றி மக்கள் தவித்தனர். பெரியசாமி சித்தரிடம் வந்து வாக்கு கோரினர். அவர், ‘4 கிலோ மிளகாய் வத்தல் கொண்டு வாருங்கள்' என்றார்.

மக்களும் அதுபோலவே செய்தனர். அவர் அந்த வத்தலை சிவபெருமான் முன்பு பரப்பி வைத்தார். அதன் பின் விரதம் மேற்கொண்டு, வெறும் வயிற்றில் வத்தலை சாப்பிட ஆரம்பித்தார். அனைவரும் திகைத்தனர். வத்தலை வெறும் வயிற்றில் சாப்பிடுகிறாரே.? அய்யோ.. சுவாமிக்கு என்ன ஆச்சு என்று துடித்தனர்.

பெரியசாமி சித்தர், அங்குள்ள ஓடக்கரையில், சூரியன் சுட்டெரிக்கும் மணலில் படுத்து உருண்டார். வத்தல் சாப்பிட்டதால் உடலுக்குள் எரிச்சல், சுட்டெரிக்கும் வெயிலால் உடலுக்கு வெளியிலும் எரிச்சல். சித்தரின் முரட்டுத் தனமான பக்தியின் தவத்தை மெச்சிய வருண பகவான், கண் திறந்தார்.

சுள்ளென்று சுட்டெரித்துக் கொண்டிருந்த பகல் பொழுது வானம், மழையை பொழிந்தது. பெரியசாமி சித்தரின் தேகம் குளிர்ந்தது. ஓடக்கரையில் தண்ணீர் வழிந்தோடத் தொடங்கியது. அந்த பூமி மழையால் செழிக்க ஆரம்பித்தது. மக்கள் மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தனர். பெரியசாமி சித்தரின் அருளாசியை நினைத்து பக்திப் பரவசம் கொண்டனர்.

பெரியசாமி சித்தர், ஊர் ஊராக சென்று மக்களிடம் காணிக்கை பிரித்து, சுமார் 75 ஏக்கர் நிலம் வாங்கிக் கோவிலுக்கு எழுதி வைத்தார். அதோடு மட்டுமல்லாமல் கோவிலுக்கு ஒரு கல் மண்டபமும் கட்டினார். தன்னுடைய சொந்த முயற்சியில் தெப்பக்குளம் வெட்டி, கோவிலுக்கு தெப்ப உற்சவமும் நடத்தினார்.

கோவிலை மென்மேலும் உயர்த்த வேண்டும் என நினைத்த அவர், தீபத்தைத் தலையில் எரிய விட்டப் படியே இரவு நேரத்தில் பல ஊருக்கு சென்று காணிக்கை பிரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

பக்கத்து கிராமத்தில் திருடர்கள் தொந்தரவு இருந்தக் காலம் கட்டம் அது. பல இடங்களில் இரவு தீ வெட்டி திருடர்கள் கூட்டமாக வந்து ஊரைக் கொள்ளையடித்துச் சென்று விடுவார்கள்.

ஒருநாள் பெரியசாமி சித்தர், தலையில் தீபம் ஏற்றியபடி ஒரு கிராமத்துக்கு காணிக்கை பிரிக்கச் சென்றார். அப்போது அவருடன் அவர் மீது அதிக பக்தி கொண்டவர்கள் சிலரும் சென்றனர். வருவது தீவெட்டி திருடர்கள் என நினைத்து ஊர்மக்கள் தீடீரென்று இவர்களை சுற்றி வளைத்தனர். தொடர்ந்து தாக்கவும் ஆரம்பித்து விட்டனர். உடன் வந்தவர்கள் எல்லாம் ஓடி விட்டனர். தலையில் சுடருடன் நின்ற பெரியசாமி சித்தரை, பொதுமக்கள் அனைவரும் திருடர்களின் தலைவன் என்று நினைத்தனர்.

சித்தரை குறிப்பிட்ட ஓரிடத்தில் நிறுத்தினர். 10 கட்டு காய்ந்த ஓலையைக் கொண்டு வந்து, அவரைச் சுற்றிப் போட்டனர். பின்னர் தீயைக் கொளுத்தினர். சித்தர் தப்பித்து சென்று விடக்கூடாது என்று சுற்றி வளைத்து நின்று கொண்டனர். 10 கட்டு ஓலையும் எரிந்து சாம்பலானது.

இப்போது சுற்றி நின்ற பொதுமக்கள் அனைவரும் திகைப்பில் மூழ்கியிருந்தனர். சித்தருக்கு என்ன ஆனது? 

அதிசயம் நிறைந்த ஆலயங்கள்

அதிசயம் நிறைந்த ஆலயங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது கோட்டையூர். இங்குள்ள நூற்று ஒன்று சாமி மலை மீது உள்ள குகையில் ஒரு அடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கு இருக்கிறது. இதில் இளநீர் விட்டு தீபமேற்றினால் அது பிரகாசமாக எரியும் அதிசயத்தைக் காணலாம்.

ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாய் பகுதியில் ஒரு கதவு தென்படும். அதன் வழியாக கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.

திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில், 6 நாழிகைக்கு ஒரு முறை சிவலிங்கம் வர்ணம் மாறுகிறது.

திருக்கழுக்குன்றத்தின் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயத்தையும் இங்கே பார்க்கலாம்.

திருச்செந்தூரில் சூரனை வதம் செய்ததும், தாமரை மலரைக் கொண்டு சிவபூஜை செய்தார், முருகப்பெருமான். அதை உணர்த்தும் வகையில் மூலவர் சிலையின் வலது கையில் தாமரை மலர் உள்ளது.

ராகு பகவானுக்கு உரியவை

ராகு பகவானுக்கு உரியவை

ஒருவரது ஜாதகத்தில் ராகு கிரகம் யோகம் செய்யக்கூடாது என்பார்கள். அவ்வாறு யோகம் செய்யும் போது, மிகப் பெரிய கெடுதலையும் செய்து விடுவார் என்பது பொதுவான கருத்து.

காரகன் - பிதாமகன்
தேவதை - பத்திரகாளி
தானியம் - உளுந்து
உலோகம் - கருங்கல்
நிறம் - கறுப்பு

குணம் - தாமஸம்
சுபாவம் - குரூரர்
சுவை - புளிப்பு
திக்கு - தென் மேற்கு
உடல் அங்கம் - முழங்கால்

தாது - இல்லை (நிழல் கிரகம் என்பதால்)
நோய் - பித்தம்
பஞ்சபூதம் - ஆகாயம்
பார்வை நிலை - தான் நின்ற ராசியில் இருந்து 7-ம் இடத்தை முழுமையாகவும், 3, 10 இடங்களை கால் பங்கும், 5,9 ஆகிய இடங்களை அரை பங்கும், 4,8 இடங்களை முக்கால் பங்கும் பார்ப்பார்.

பாலினம் - பெண்
உபகிரகம் - வியாதீபாதன்
ஆட்சி ராசி - இல்லை
உச்ச ராசி - விருச்சிகம்

மூலத்திரிகோண ராசி - இல்லை
நட்பு ராசி - மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம்
சமமான ராசி - இல்லை
பகை ராசி - மேஷம், கடகம், சிம்மம்

நீச்ச ராசி - ரிஷபம்
திசை ஆண்டுகள் - பதினெட்டு ஆண்டுகள்
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் - ஒன்றரை ஆண்டுகள்
நட்பு கிரகங்கள் - சுக்ரன், சனி
சமமான கிரகங்கள் - புதன், குரு

பகையான கிரகங்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய்
அதிகமான பகையான கிரகம் - சூரியன்
இதர பெயர்கள் - வஞ்சன், நஞ்சன், கரும்பாம்பு
நட்சத்திரங்கள் - திருவாதிரை, சுவாதி, சதயம்

மூவலூர் மார்க்க சகாயேசுவரர் ஆலயம் - நாகப்பட்டினம்

மூவலூர் மார்க்க சகாயேசுவரர் ஆலயம் - நாகப்பட்டினம்

திரிபுர சம்ஹாரத்தில் திருமாலுக்கும் பிரம்மனுக்கும் ஏற்பட்ட சாபத்தை நீக்கிய இறைவன் வாழும் ஆலயம், மகிஷாசுரனை வதம் செய்த துர்க்கையின் தோஷம் நீக்கிய தலம் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்த, மூவலூர் மார்க்க சகாயேசுவரர் ஆலயம்.

ஆதியில் இத்தலம் புன்னை மரங்கள் நிறைந்து காணப்பட்டதால், இது புன்னாகவன ஷேத்திரம் என வழங்கப்பட்டது. இறைவன் ‘புன்னாகவனேசுவரர்’ என்று அழைக்கப்பட்டார்.

ருத்ரன், திருமால், பிரம்மா மூவருக்கும் இத்தலத்து இறைவன் வழிகாட்டி தன்னை வெளிப்படுத்தியதால், இறைவனுக்கு ‘வழிகாட்டிய வள்ளல்’ என்றும், ‘மார்க்க சகாயேசுவரர்’ என்றும் பெயர் வழங்கலானது. இதே போல் மூவரும் வழிபட்ட ஊர் இது என்பதால், ‘மூவரூர்’ என அழைக்கப்பட்டது. இதுவே மருவி தற்போது ‘மூவலூர்’ என்றாகிஇருக்கிறது.

தலபுராணம் :

வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சனி என்ற மூன்று அசுரர்களும் முறையே பொன், வெள்ளி, இரும்புக் கோட்டைகளைக் கட்டி, தேவர்களையும் மக்களையும் வாட்டி வதைத்து வந்தனர். தன்னிடம் சரணாகதி அடைந்த தேவர்களையும் மக்களையும் காத்திட திருவுள்ளம் கொண்டார் ஈசன். அதைத் தொடர்ந்து பிரம்மா, திருமால், தேவர்கள் உள்ளிட் டோரைக் கொண்டு தேர் பூட்டி திருவதிகை நோக்கி புறப்பட்டார்.

அப்போது திருமால், பிரம்மா மற்றும் தேவர்கள் உள்ளிட்டோர் ‘அசுரர்களை அழிக்கும் செயல் தங்கள் உதவியினாலேயே நடக்கிறது’ என்று எண்ணி கர்வம் கொண்டனர். இந்த கர்வத்தால் திருமால், பிரம்மா, தேவர்கள் அனைவருக்கும் சாபம் ஏற்பட்டது.

மனம் வருந்திய திருமால், பிரம்மா மற்றும் தேவர்கள் இறைவனிடம் சாப விமோசனம் வேண்டினர். அவரது ஆலோசனைப்படி காவிரி தென்கரையில் உள்ள புன்னாகவனேசுவரரைத் தேடி வந்தனர். இறைவனின் கருணையால் அங்கு சிவலிங்கம் வெளிப்பட்டது. அவரை வணங்கி வழிபட்டு தோஷம் நீங்கினர் என தலபுராணம் கூறுகிறது.

மற்றொரு தல புராணம் :

திரிபுரம் தகனம் ஆன பிறகு திருமாலும், பிரம்மனும், இந்திரனோடு திரிபுரம் எரித்த அம்பைத் தேடி வந்தனர். அப்போது வேடன் உருவில் வந்த மாயூரநாதர், அவர்களை எதிர்கொண்டு அழைத்தார். அவர்களைப் புன்னாக வனத்திற்கு அழைத்துச் சென்று, அங்கே வனத்தில் மறைந்திருந்த இறைவனின் லிங்கத் திருமேனியைக் காட்டி மறைந்தார். அவர்களுக்கு வழிகாட்டியதால் இறைவன் ‘வழிகாட்டிய வள்ளல்’ என்றும், ‘மார்க்க சகாயேசுவரர்’ என்றும் வழங்கப்பட்டார்.

மகிஷாசுரன் தன் தவ வலிமை யால், ‘ஆண்களால் தன் உயிருக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாது’ என்ற வரத்தை சிவ பெருமானிடம் கேட்டுப் பெற்றான். அவனைப் பொறுத்தவரை, பெண்கள் எல்லாரும் சக்தியற்றவர்கள் என்ற எண்ணம் இருந்தது. அந்த எண்ணத்தால் தேவர்களுக்கும், மக்களுக்கும் தீராத துயரத்தைத் தந்து வந்தான். பாதிக்கப்பட்ட அனைவரும் இறைவனிடம் முறையிட்டனர். அசுரனை வதம் செய்வது பெண் சக்தியால் மட்டுமே இயலும் என்பதால், அன்னை பார்வதியை நாடுமாறு சிவபெருமான் அறிவுறுத்தினார்.

அதன்படி தேவர்கள் அனைவரும், அன்னையிடம் சென்று முறையிட்டனர். அதற்குச் செவி மடுத்த அன்னை துர்க்கையாக வடிவம் பூண்டு, அசுரனை வதம் செய்து அழித்தாள். பிறகு தனது கோர முகம், அழகிய முகமாக மாற, மூவலூரில் தீர்த்தம் உண்டாக்கி, இறைவனை வழிபட்டு வந்தாள். அதன் பயனால், அன்னை அழகிய திருவுருவம் பெற்றாள். மீண்டும் இறைவனை மணம்புரிய தவம் இயற்றினாள். அதன்படியே இறைவனை மணந்தாள் என தலபுராணம் கூறுகிறது. இச்சம்பவம் பங்குனி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் நிகழ்ந்தது. இந்த ஐதீகம் இன்றும் இந்த ஆலயத்தில் விழாவாக நடைபெறுகிறது.

ஆலய அமைப்பு :

கிழக்கு நோக்கிய நிலையில் ராஜகோபுரம் எழிலாக அமைந்துள்ளது. இருபுறமும், விநாயகர், முருகன் சன்னிதிகள் காணப்படுகின்றன. ராஜகோபுரத்தில் நுழைந்ததும், எதிரே கொடிமரம், பலிபீடம், நந்திதேவர் காட்சி தருகின்றனர். இடதுபுறம் தலமரமான புன்னை மரமும், அதனடியில் ஆதி மார்க்க சகாயேசுவரரும் காட்சியளிக்கின்றனர். ஆலயத்தின் உள்ளே வலதுபுறம் சவுந்திரநாயகி, அருகில் மங்களாம்பிகை சன்னிதிகளும், எதிரே சப்தமாதர், நவ நாகங்கள் சன்னிதியும் அமைந்துள்ளன.

நடுநாயகமாக இறைவன் மார்க்க சகாயேசுவரர் எளிய வடிவில் ஒளிவீசும் முகத்தோடு அருள் வழங்குகின்றார். பல்வேறு அற் புதங்களை நிகழ்த்திய இறைவன் வழிகாட்டும் வள்ளல், மார்க்க சகாயேசுவரர் எளிய வடிவிலும் கிழக்கு முகமாய் அருளாசி வழங்குகின்றார்.

புன்னை வனத்தில் இறைவன் தோன்றியதால் இவ்வாலயத்தின் தலமரம் புன்னை ஆகும். சந்திர புஷ்கரணி, துர்கா புஷ்கரணி, உபமன்யு முனிவர் வழிபட்ட ‘உபமன்யு கூபம்’ எனும் கிணறு, காவிரி நதியில் அமைந்துள்ள பிப்பிலர் தீர்த்தகட்டம் என தீர்த்தங்கள் நிறைந்த தலமாக மூவலூர் திகழ்கின்றது.

பங்குனி ஆயில்யத்தில் சவுந்திரநாயகி திருக்கல்யாண உற்சவம், உத்திர நட்சத்திரத்தில் பஞ்சமூர்த்திகளுக்கு தீர்த்தவாரி, தைப்பூசம், நவராத்திரி, மகா சிவராத்திரி, மாசி மகம், தீர்த்தவாரி, பிரதோஷம் உள்ளிட்ட சிவாலய விழாக்கள் சிறப்பாக நடை பெறுகின்றன.

இத்தலத்து இறைவனை, அன்னை பார்வதி, திருமால், பிரம்மா, சந்திரன் வழிபட்டுள்ளனர். மகா சிவராத்திரியின் நான்காம் காலத்தில் நவ நாகங்களும், ரத சப்தமியில் சப்தமாதர்களும் வழிபட்டுப் பேறுபெற்றனர். இது தவிர, கர்மசேனகியர் என்ற மன்னன், பிப்பிலர் என்ற உபமன்யு முனிவர் என பலரும் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

இந்த ஆலயம் இதய நோய்களுக்கு சிறந்த பரிகாரத் தலமாக திகழ்கின்றது. இதய நோய் உள்ளவர்கள் திங்கட்கிழமைகளில் 11 நெய் தீபம் ஏற்றி, சுவாமிக்கு அர்ச்சனை செய்தும், பாலாபிஷேகம் செய்தும், அபிஷேக பாலை அருந்தியும் வந்தால் நோய் குணமாவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இரண்டு அம்மன்கள் :

இவ்வாலயத்தில் சவுந்திர நாயகி யுடன், மங்களாம்பிகை என்ற அம்மனுக்கும் தெற்கு முகமாய் தனி சன்னதி அமைந்துள்ளன. அன்னை இருவரின் வடிவங்களும் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன. அமாவாசை தோறும் சவுந்திரநாயகிக்கு சிறப்பு அபிஷேகமும், லலிதா திரிசடையும், சிறப்பு ஆராதனையும் செய்யப்படுகிறது. 

கல்வெட்டுகள் :

இத்தலத்தில் 1925-ம் ஆண்டு தொல்லியல் ஆய்வறிக்கை மூலம் எட்டு கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. இதில் விக்கிரம சோழ தேவன் (கி.பி.1120), மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி.1189), மூன்றாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1225) காலக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு உள்ளன. இவற்றின் வாயிலாக நிலக்கொடை, அந்தணர்களுக்கு வழங்கப்பட்ட கொடை, பூஜைகள் செய்ய வழங்கப்பட்ட பொற்காசுகள், இறைவன்- இறைவிக்கு வழங்கிய ஆபரண கொடை என பல்வேறு செய்திகளை அறிய முடிகிறது. இறைவன் ‘மூவலூர் உடைய நாயனார்’ என்று அழைக்கப்பட்டிருக்கிறார். 

இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அமைவிடம் :

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் மூவலூர் அமைந்துள்ளது. மயிலாடுதுறை - கும்பகோணம் வழித்தடத்தில் மயிலாடுதுறைக்கு மேற்கே 5 கி.மீ தூரத்தில், மயிலாடுதுறை ஜங்சன் இருக்கிறது. அங்கிருந்து 1 கி.மீ. தொலைவில், மூவலூர் அமைந்துள்ளது. மூவலூர் தேரடி பேருந்து நிறுத்தத்திற்கு அருகே ஆலயம் அமைந்துள்ளது. 

Friday 29 June 2018

முன்னேற்றம் தந்த சமயோசிதம்


சுந்தரவல்லியும், அவளது கணவன் சுந்தரனும் முருக பக்தர்கள். இவர்களுக்கு மூன்று மகள்களும், இரண்டு மகன்களும் இருந்தனர். பிள்ளைகளை வளர்க்க பணப்பற்றாக்குறை ஏற்பட்டது.

இந்த நிலையிலும் ஒரு புன்செய் நிலத்தை வாங்கினான் சுந்தரன். அதில் ஒரு மரம் இருந்தது. மரத்தை வெட்டி நிலத்தைப் பண்படுத்தி, பயிர் செய்ய எண்ணினான். 

சுந்தரவல்லியும் அவனுமாய் இணைந்து மரத்தை வெட்ட கோடரியை ஓங்கினர். அதில் இருந்து ஒரு பூதம் வெளிப்பட்டது. “நில்லுங்கள்! இம்மரத்தில் நான் நீண்ட நாட்களாய் குடியிருக்கிறேன். இதை வெட்டினால், உங்களை கொல்வேன்,” என பயமுறுத்தியது.

பழநி முருகன் அருள் பெற்றிருந்த சுந்தரவல்லி கலங்கவில்லை. அவள் பூதத்திடம், “ஊரில் எத்தனையோ மரங்கள் உள்ளன. அதில் ஏதாவது ஒன்றில் தங்கிக் கொள். போய் விடு. எங்கள் பிழைப்பைக் கெடுக்காதே,” என்றாள்.

பூதம் மறுத்தது. மறுநாள் முருகன் கோயிலில் அபிஷேக தீர்த்தம் வாங்கி வந்து மரத்தின் மீது தெளித்தாள். சக்தி மிக்க தீர்த்தம் கண்டு அஞ்சிய பூதம் வெளியேறியது. மரம் வெட்டப்பட்டது. இருப்பினும், இவர்களை பழிதீர்க்க எண்ணியது பூதம்.

தம்பதியர் நிலத்தைப் பண்படுத்தி சோளம் பயிரிட்டனர். விளைந்து வரும் வேளையில் பூதம் கடும் மழையை வரவழைத்தது. பயிர் தண்ணீரில் மூழ்கியது. சுந்தரன் கலங்கினான்.

சுந்தரவல்லி அவனை தேற்றி, “அன்பரே! பழநியாண்டவர் நம்மைக் காப்பார். இந்நிலத்தை உழ ஏற்பாடு செய்யுங்கள். தண்ணீருள்ள நிலம் நன்செய்யாக மாறும். நன்செய் நிலத்தில் நெல் நன்றாக விளையும். நெல் விளைந்தால் நல்ல லாபம் கிடைக்கும்,” என்றாள். மனைவி சொல்படியே கணவனும் செய்தான். நெல் செழித்து வளர்ந்தது. அதைப் பார்த்து பெருமைப்பட்டான் சுந்தரன். ஆனால், பூதம் மீண்டும் வந்தது.

“சுந்தரா! நீ அறுவடை செய்யும்போது கட்டுக்கு இரண்டு படி நெல்தான் தேறும்,” என சாபமிட்டது. கவலையில் இருந்த சுந்தரனை மனைவி தேற்றினாள். “பயம் வேண்டாம். என் பக்தி உண்மையானால், பழநி முருகன் நம்மை காப்பான். அறுவடை நடக்கட்டும்,” என்றாள்.

அறுவடை நடந்தது. கூலியாட்களை அழைத்த சுந்தரவல்லி, “ஒரு கட்டில் இரண்டு கதிர்களை மட்டும் வையுங்கள்,” என்றாள். களத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ஒவ்வொரு கட்டையும் அடித்த போது, இரண்டு படி நெல் கிடைத்தது. 

இப்படியே, கட்டுக்கு இரண்டுபடி வீதம், ஏராளமான நெல் சேர்ந்தது. பூதத்தின் சாபம், பழநியாண்டவனின் அருளாலும், சுந்தரவல்லியின் பதிபக்தி, சமயோசிதத்தாலும் ஏராளமாக நெல் கிடைத்தது. பார்த்தீர்களா! பக்தியுடன், சமயோசிதமும் சேர்ந்து விட்டால் வாழ்வில் முன்னேற்றம் தான்.

சுயநலம் கூடாது


ஒரு பெரியவருக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். ஒருவரை ஒரு விவசாயிக்கும், மற்றொருவரை மண்பாண்ட தொழிலாளிக்கும் கட்டி வைத்தார். இருவர் மீதும் மிகுந்த பாசம் கொண்டவர். 

ஒருநாள் அவர், விவசாயி மருமகன் வீட்டிற்கு போனார். மகள் தந்தையிடம், “அப்பா! எங்கள் நிலங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டன. மழை பெய்ய வேண்டுமென்று கடவுளிடம் வேண்டுங்கள்,” என்றாள். அவரும் சரியென சொல்லி விட்டு, இளையவள் வீட்டுக்குச் சென்றார்.

அவள் தந்தையிடம், “அப்பா! நாங்கள் பானைகள் செய்து உலர வைத்துள்ளோம். மழை பெய்தால், எல்லாம் கரைந்து விடும். நல்ல வெயிலடிக்க வேண்டுமென நீங்கள் எனக்காக வேண்டுங்கள்,” என்றாள். யாருக்காக கடவுளை வணங்குவது என தந்தைக்கு தெரியவில்லை. குழப்பத்தில் ஆழ்ந்தார். ஒரு துறவியிடம் சென்று பிரச்னையைச் சொன்னார்.

துறவி பெரியவரிடம், “இதிலென்ன குழப்பம்! யாருக்கு என்ன நேரத்தில் என்ன வேண்டுமோ, அதைக் கொடு கடவுளே என வேண்டுதல் செய். அவர் எல்லாருக்கும் நன்மை செய்வார்,'' என்றார். யாருக்கு எதைத் தரவேண்டுமென கடவுளுக்கு தெரியும். அவரிடம் பொறுப்பை விடுங்கள். கடமையை செய்யுங்கள்.

துன்பங்கள் தீர்க்கும் தீப்பாஞ்ச நாச்சியார் திருக்கோவில்

துன்பங்கள் தீர்க்கும் தீப்பாஞ்ச நாச்சியார் திருக்கோவில்

இறைவனுக்கு அடுத்ததாக நாம் மிகவும் போற்றுவது நமது குடும்பத்தில் உயிர்நீத்த முன்னோர்களைத் தான். அதிலும் வீரமரணமுற்ற அல்லது தியாக மரணமுற்ற நம் முன்னோர்களை தெய்வமாக வழிபடுவது தொன்றுதொட்டு நாம் கடைப்பிடித்துவரும் மரபுகளில் ஒன்று. இவர்களின் நினைவேந்தலில் இருந்தே பெரும்பாலான சிறுதெய்வங்களின் வழிபாடு தோன்றியதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக மரணம் இரு வகையானது. ஒன்று இயற்கையாக வருவது, அது வரும் வரை காத்திருக்க விரும்பாத நம் முன்னோர்களில் சிலர் வடக்கிருந்து உயிர் நீத்தல், வாளைச் செங்குத்தாகத் தரையில் நிறுத்தி அதன்மேல் பாய்ந்து உயிர்விடல், கழுவில் தானே அமர்ந்து உயிர் நீத்தல், உயர்ந்த இடங்களில் அல்லது கோபுர உச்சிகளில் ஏறிக் கீழே விழுந்து உயிர்நீத்தல் மற்றும் நஞ்சு அருந்தி உயிர்நீத்தல் போன்ற பலவழிகளில் தன்னுயிரை மாய்த்துக் கொண்டதாகக் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது.

மற்றொரு வகையான மரணம் போரிட்டு மடிவது அல்லது துணிந்து உயிர்தியாகம் செய்வது, அதாவது தன்னைத்தானே பலியிட்டுக் கொள்வது. இதில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்களது இன்னுயிரை நீத்து மக்கள் மனதில் நீங்காத இடம்பெற்றனர். மன்னர்கள் மரணமுற்றவுடன் அவரது பட்டத்தரசிகள் உடன்கட்டை ஏறியதும், சில பெண்கள் தீக்கு தன்னுயிரை தாரை வார்த்து மாய்ந்ததும் இவ்வகை தியாக மரணங்களாகும்.

முற்காலத்தில் ஊர் நலத்தின் பொருட்டும், போரின்போதும், காவல் பணியின் போதும், நீர்நிலைகளை பாதுகாக்கும் போதும் தன்னுயிரை தியாகம் செய்தவர்களின் வீரத்தை மெச்சி, அவர்கள் மரணமடைந்த இடத்தில் நடுகல் எடுக்கப்பட்டது. அவர் களது மனைவியும் சந்ததியினரும் மன்னர்களாலும், மக்களாலும் ஆதரிக்கப்பட்டனர்.

அதேபோல் ஆணுக்கு நிகராக மரணத்தை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்ட பெண்களின் தியாகத்தைப் போற்றும் விதமாக ‘சதிக்கல்’ எனப்படும் நினைவுக்கல் நட்டு அல்லது சிலை வைத்து மரியாதை செய்யப்பட்டது. அத்துடன் அப்பெண்ணின் வம்சத்தார் வழிபாடும் செய்தனர். உயிர்நீத்தவர்களுக்கு மாலையிட்ட அம்மன், பாவாடைக்காரி, பூவாடைக்காரி, வேப்பில்லைக்காரி என்றும், தீப்புகுந்து உயிர் நீத்த பெண்ணுக்கு ‘தீப்பாஞ்சாயி’ என்ற பெயரும் இட்டு வழிபட்டனர்.

இந்த தீப்பாஞ்சாயி அம்மனே, சில ஊர்களில் ‘தீப்பாய்ந்த நாச்சியார்’ என்று அழைக்கப்படுகிறார். சிலர் இவரை ‘திரவுபதி’ என்றும் குறிப்பிடுவதுண்டு. சங்ககாலத்திலிருந்து இன்றுவரை இவ்வகையான வழிபாடு நாடு முழுவதும் உள்ள மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இவ்வழிபாடு ஏறக்குறைய பெரும்பாலான சமூகத்தவர்களிடம் காணப்படுகிறது.

தீப்பாய்ந்த பெண்ணின் தியாகத்தை போற்றி தீமிதிப்பது, அவள் தன் கணவன் அல்லது தனக்கு பாதுகாப்புக் கொடுத்தவர்களை பிரிய மனமின்றி வானுலகம் சென்று மங்களம் அடைந்தாள் என்பதை உணர்த்தும் விதமாக அவளை வழிபட வரும் பக்தர்களுக்கு மஞ்சளை பிரசாதமாக வழங்குவது போன்ற சடங்குகள் சதியை நினைவூட்டும் ஒரு வழக்கமாக இன்றளவும் மக்களால் பின்பற்றப்பட்டு வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு அமைக்கப்பட்ட ஆலயங்களில், இருவேறுபட்ட வழிபாட்டு முறைகள் நடைமுறையில் இருக்கின்றன. முதலாவது தியாகப் பெண்ணை, முழுக்க முழுக்க அம்மனின் அவதாரமாக கருதி அம்மன் கோவில் முறைப்படி பூஜைகள் செய்வார்கள். இரண்டாவதாக அக்னிபிரவேசம் செய்த சீதையுடன் ஒப்பிட்டு வைணவ சம்பிரதாயப்படியும் பூஜை புனஸ்காரங்கள் நடத்தப்படுகின்றன.

இத்தகைய தீபாஞ்சாயி அம்மன் ஆலயங்களில் ஒன்றே, கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகிலுள்ள அள்ளுர் தீப்பாஞ்ச நாச்சியார் திருக்கோவில்.

வெள்ளாற்றின் கரையில் அமைந்துள்ள சேத்தியாதோப்பு முற்காலத்தில் அடர்ந்த கானகமாகவும், படைப்பிரிவு அமைவிடமாகவும் இருந்துள்ளது. இப்பகுதி வழியாக குதிரையில் சென்ற ஒரு வீரர், ஒரு சிறுமியை கண்டெடுத்து புகலிடம் தந்து வளர்த்து வந்தார். ஒருநாள் அவ்வீரருக்கு திடீர் மரணம் ஏற்பட்டு இறந்து போனார். அவர்மீது பேரன்பு கொண்டிருந்த அப்பெண் அதை ஏற்கமுடியாமல் ஒரு தீக்குண்டம் ஏற்படுத்தி, தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்றாள். 

அதனைத் தடுத்தவர்களிடம் ‘நான் மக்களுக்கு காப்பாகத் திகழ்வேன்’ என்று கூறி, எடுத்த முடிவிலிருந்து பின்வாங்காது தீப்புகுந்து மறைந்தாள். அத்தெய்வப் பெண் வாக்கினை உறுதி செய்வதுபோல், அவள் உயிர் நீத்த தீக்குண்டத்தில் மங்கலப் பொருட்களான மஞ்சள், வெற்றிலை, எலுமிச்சை, ஆடை, திருத்தாலி ஆகியவை தீயில் வாடாமல் இருந்தது. இதைக்கண்டு அதிசயித்த மக்கள் அந்தப் பெண்ணை ‘தீப்பாஞ்சாயி அம்மன்’ என்று பெயரிட்டு வழிபாடு செய்யத் தொடங்கினர் என்பது செவி வழி செய்தியாக கூறப்படுகிறது.

கோவில் அமைப்பு

வீராணம் ஏரியில் இருந்து உபரிநீரை வெளியேற்றும் கால்வாய்களில் ஒன்றான பாழ் வாய்க்காலுக்கு வடக்காகவும், தேசிய நெடுஞ் சாலைக்கு தெற்காகவும், தாமரைக்குளத்தின் மேற்காகவும் அமைந்துள்ள பசுஞ்சோலை வளாகத்தில் இவ்வாலயம் கிழக்கு முகமாய் அமைந்துள்ளது. பிரதான சாலை வடக்கே அமைந்துள்ளதால் கோபுரம் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. நாச்சியார் சன்னிதி, உள்மண்டபம், வெளி மண்டபம் என கடந்த நாற்பது ஆண்டு களில் ஆலயம் படிப்படியாக விரிவடைந்துள்ளது.

ஆலயத்தில் நடுநாயகமாக காஞ்சி மாமுனிவரின் ஆலோசனையின்படி, மாமல்லபுரம் கணபதி ஸ்தபதி வடித்த தீப்பாய்ந்த நாச்சியார் திருவுருவம் இருக்கிறது. அன்னை வலக்கரத்தில் தாமரையுடன், வலது திருவடி முன்வந்து அருளிப்பதுபோல் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். அன்னையின் அருள் பீடத்தில் ஏழு கனலுடன் தீயும், மங்கலப்பொருட்களும் இருப்பதைக் காணலாம். ஐம்பொன்னாலான உற்சவர், மூலவருடன் கருவறையிலேயே வீற்றிருந்து அருள்கிறார்.

தாயாரை வலம் வந்து வணங்கும்போது சக்கரத்தாழ்வார் சன்னிதியில் யோக நரசிம்மரையும் சேவிக்கலாம். அருகே ஆலய தலவிருட்சமான புங்க மரத்தையும், இன்னுமொரு பிரார்த்தனை மரத்தையும் காணலாம். பிரகாரத்தின் வடக்கே ஐயப்பன் சன்னிதி அமைந்துள்ளது. இந்தச் சன்னிதியில் சுற்றுப்புறத்தில் உள்ள கிராமமக்கள் இருமுடி கட்டி சபரி யாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். உள் மண்டபத்தின் வடகிழக்கில் ராமர் திருவடிநிலை என்னும் ஸ்ரீபாதுகா சன்னிதி, நவகோள்களும் வணங்கும் கோலத்தில் ஐந்து ஆயுதங்களான சங்கு, சக்கரம், கதை, வாள், வில் ஆகிய படைசூழ ஆதிசேஷ ஆசனத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு ஸ்ரீமான் வேதாந்ததேசிகரின் பாதுகா சஹஸ்ரத்தில் சொல்லப்பட்டுள்ளபடி அமைக்கப்பட்டிருப்பது சிறப்பானதாகும். அருகில் தாயாருக்கு எதிராக இலங்கையில் தூது சென்று சீதையைக் காத்த அனுமன் சிறு உருவில் சேவை சாதிக்கிறார்.

வெளி மண்டபத்தின் சிறப்பு

ஆண்டுதோறும் கிள்ளைக்கடலுக்கு தீர்த்தவாரி காண செல்லும் ஸ்ரீமுஷ்ணம் பூவராகப்பெருமாள், மாசிமகத்தின் போது இந்த ஆலயத்தின் வெளிமண்டபத்தில் வந்து அமர்கிறார். பின்னர் அந்த நாள் முழுவதும் திருமஞ்சன சேவையை ஏற்று வழிப்பயணம் மேற்கொள்வது சிறப்பானதாகும். இம்மண்டபத்தில் ராமாயணத்தில் வரும் அக்னி சம்பந்தமான காட்சிகள் அனைத்தும் தொகுப்பாக அழகான ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. மேலும் இந்த மண்டபத்தில் ராமன்-சீதை திருமணம், ராமர் பட்டாபிஷேகம், பரமபதநாதன், பாற்கடல்நாதன், சீதா அக்னிப் பிரவேசம் முதலான வண்ணமிகு சுதைச் சிற்பங்களும், தீபாஞ்சாயி அம்மனின் புனித வரலாற்றை விளக்குவதாக உள்ளன. ஆலயத்தின் கிழக்கே அமைந்துள்ள தாமரைக் குளக்கரையில் அரசு மற்றும் வேம்பு மர நிழலில் தும்பிக்கை ஆழ்வார் என்னும் விநாயகர் சன்னிதி இருக்கிறது. அங்கு நாகர்களும் உள்ளன. இத்திருக்குளத்தில் திருமண தம்பதி கள் பாலிகை கரைப்பது வழக்கமாக உள்ளது. 

அமைவிடம்

விக்கரவாண்டி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சேத்தியாதோப்பில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் வெள்ளாற்றின் தென்கரையில் இவ்வாலயம் அமைந்துள்ளது. சென்னை, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், கும்பகோணம், ஜெயங்கொண்டம் ஆகிய ஊர்களில் இருந்து நேரடி பேருந்து வசதி உள்ளது. 

புண்ணியம் தரும் கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில்

புண்ணியம் தரும் கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில்

‘திருநணா’ என்று அழைக்கப்படும் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில், பவானியில் உள்ள சிவன் கோவில் ஆகும். சேலத்தில் இருந்து 56 கி.மீ தொலைவிலும், ஈரோட்டில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் ‘சங்கமேஸ்வரர்’, அம்பிகை ‘வேதநாயகி’ ஆவர். காவிரி, பவானி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி ஆகிய மூன்று நதிகளும் கூடும் இடமானதால் ‘கூடுதுறை’ என்றும் சொல்லப்படுகிறது. அம்மன், நதி, தலம் மூன்றிற்கும் பவானி என்றே பெயர். இத்தலம் வந்து நீராடி, இறைவனை தரிசிப்பவர்களுக்கு ‘யாதொரு தீங்கும் நண்ணாது (நெருங்காது)’ என்ற அடிப் படையில் இத்தலத்திற்கு ‘திருநணா’ என்ற புராணப்பெயர் குறிப்பிடப்படுகிறது.

அமுத கலசம்:

பாற்கடல் கடைந்து எடுத்த அமிர்தத்தில் தேவர்களுக்கு அளித்ததுபோக மீதம் இருந்தது. அதை தவ முனிவர்களுக்கு வழங்க வேண்டும் என்று பெருமாள் விரும்பினார். இதையடுத்து கருடனிடம் அமுத கலசத்தைக் கொடுத்து, பராசர முனிவரிடம் ஒப்படைக்கச் சொன்னார். முனிவர் அமுத கலசத்தை பாதுகாப்பாக ஓர் இடத்தில் மறைத்து வைத்தார். லவணாசூரனின் நான்கு புதல்வர்களும் கலசத்தைத் தேடி அங்கும் வந்த நிலையில், பராசர முனிவர் வேதநாயகியிடம் முறையிட்டார். அன்னையிடம் இருந்து நான்கு சக்திகள் கிளம்பி, அசுரர்களை அழித்தது. இதையடுத்து பராசர முனிவர் அமுத குடத்தை எடுத்தபோது, அதில் லிங்கம் இருந்தது. ஈசன் அங்கு ஓர் அமுத தீர்த்தம் உருவாக்க அது பவானி, காவிரியுடன் கலந்து முக்கூடலாக மாறியதாக ஐதீகம்.

ராஜ கோபுரம் :

மூன்று நதிகளும் கூடும் இடத்திற்கு வட கரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கோவிலின் ராஜகோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும், 7 கலசங்களையும் உடையதாக அமைந்துள்ளது. கோவிலில் சங்கமேஸ்வரர், வேதநாயகி சன்னிதிகள் மட்டுமல்லாமல் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் சவுந்திரவல்லி தாயார் ஆகியோருக்கும் சன்னிதிகள் அமைந்து சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்கட்டாக உள்ளது.

குபேரன் தரிசித்த தலம் :

பூலோகத்தில் உள்ள புனிதத் தலங்களைத் தரிசிக்க விரும்பிய குபேரன், இந்தத் தலத்துக்கு வந்தபோது ஞானிகள், முனிவர்கள், கந்தர்வர்கள் அனைவரும் தவம் செய்வதைக் கண்டான். மேலும், மான், பசு, புலி, யானை, சிங்கம், நாகம், எலி உள்ளிட்ட உயிரினங்களும் சண்டையின்றி, ஒன்றாக நீர் அருந்துவதுடன், தவம் செய்பவர்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பதையும் பார்த்து ஆச்சரியமடைந்தான். அங்கு குபேரன் செய்த தவத்தில் மகிழ்ந்து, ஹரியும் சிவனும் அவனது விருப்பப்படி இந்தத் தலம் ‘தட்சிண அளகை’ என்று அழைக்கப்படும் என்றும் அருள் செய்தனர்.

சூரிய பூஜை :

நான்கு வேதங்களும் இங்கு தீர்த்தங்களாக உள்ளதால் இங்கு வேண்டிக்கொண்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை. கோபுரமே லிங்கமாக வழிபடப்படுவதால், கோபுரத்திற்கு வெளியே நந்தி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் மாசி மகம், ரத சப்தமிக்கு மூன்றாம் நாளன்று சூரிய ஒளி சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்ரமணியர் மீது பட்டு, சூரிய பூஜை நடப்பது சிறப்பானது.

அம்பிகை சன்னிதி :

அம்பிகை வேதநாயகி சன்னிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அதற்கு வலப்பக்கம் சுப்பிரமணியர் சன்னிதி இருக்கிறது. சுப்பிரமணியர் சன்னிதியைக் கடந்து அமைந்துள்ள மூலவர் சங்கமேஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்கிறார். இத்தலத்தில் வீற்றுள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். அருகில் ஜுரஹரேஸ்வரர் உருவம் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்தபோது அடியார்களை பிடித்த சுரநோய் நீங்க ஜுரஹரேஸ்வரரை வழிபட்டு நோய் நீங்கப் பெற்றார்கள் என செய்தி உண்டு. இங்கு 63 நாயன்மார்களின் உருவங்கள் உள்ளன.

தென் திரிவேணி சங்கமம் :

வட இந்தியாவில் உள்ள அலகாபாத்தில் கங்கையுடன் யமுனை, சரஸ்வதி நதி இரண்டும் சங்கமிக்கும் தலம் ‘திரிவேணி சங்கமம்’ எனப்படுகிறது. அங்கு சரஸ்வதி நதி கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுபோல், தமிழகத்தில் பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என மூன்று நதிகளும் கூடும் இடம் ‘தென் திரிவேணி சங்கமம்’ என்று அழைக்கப்படுகிறது. பவானி கூடுதுறை, பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சக்தி மிக்க தலமாகத் திகழ்வதால், ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் இங்கு நீராடி, பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வது மிகுந்த புண்ணியம். அதனால், பித்ரு தோஷங்கள் நீங்கும் என்பதாகவும் ஐதீகம்.

தல விருட்சம்.. இலந்தை :

இக்கோவிலின் தல விருட்சம் இலந்தை மரம். வேதமே மரத்தின் வடிவெடுத்து வந்திருப்பதாக ஐதீகம். கோவிலில் உள்ள சனீஸ்வர பகவான் சக்தி வாய்ந்தவர் என்ற நம்பிக்கை உள்ளது. குறிப்பாக, இங்குள்ள உள்ள அமுதலிங்கத்தின் பாணப் பகுதியை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு ஆவுடையாரை வலம் வர குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு ஏற்படும் என்பதும் மக்களின் நம்பிக்கையாகும். 

ஆங்கிலேயரின் அனுபவம் :

1804-ம் ஆண்டில் கோயம்புத்தூர் கலெக்டராக (ஈரோடு மாவட்டம் பிரிக்கப்படாத காலம்) இருந்தவர், வில்லியம் காரோ. 1804-ம் வருடம் ஜனவரி 11-ம் நாளன்று கடுமையான மழையுடன், இடியும் மின்னலுமாய் இருந்தது. அந்த இரவு நேரத்தில், கோவில் வளாகத்துக்கு வெளியே குடியிருப்பு வளாகத்தில் உள்ள அறையில் கலெக்டர் வில்லியம் காரோ உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவரது அறைக்கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. 

உடனே வெளியே வந்த கலெக்டரை, ஒரு சிறிய பெண், ‘உடனே வெளியில் வாருங்கள்.. ஆபத்து..’ என கூறி அழைத்தாள். அதிர்ச்சியுடன் அவளைப்பின் தொடர்ந்து கோவில் வரை சென்ற கலெக்டர், அந்தப் பெண் வேதநாயகி சன்னிதிக்குள் சென்று மறைந்து விட்டதை கண்டு வியப்போடு நின்று விட்டார். அந்த நேரத்தில் அவர் குடியிருந்த பங்களா இடிந்து விழுந்தது கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

தன்னுடைய உயிரைக் காப்பாற்றியதற்காக, அம்பிகை வேதநாயகிக்கு காணிக்கையாக தந்தத்தில் கட்டில் ஒன்று செய்து அவரது கையொப்பமிட்டு ஆலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார். இந்த தந்தக் கட்டில் இன்றும் இந்த உண்மையை பறைசாற்றியபடி அங்கே இருக்கிறது. 

Thursday 28 June 2018

பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வாஸ்து குறிப்புகள்

பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வாஸ்து குறிப்புகள்

வாஸ்து சாஸ்திரங்கள் கூறும் வாழ்க்கைக்கு தேவையான செல்வம் மற்றும் நல்ல உடல் நிலைக்கு தேவையான ஆரோக்கியம் ஆகியவற்றை பெற அருமையான வாஸ்து டிப்ஸ் இதோ! 

உறங்கும் போது, தலையை தெற்கு திசை நோக்கி இருக்க வேண்டும். கபா தோஷங்கள் இருந்தால், இடது பக்கம் திரும்பியும், பிடா தோஷம் இருந்தால், வலது பக்கம் நோக்கி தூங்க வேண்டும்.

வீட்டின் நடுவே படிக்கட்டுகள் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அது முக்கிய உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே வீட்டின் ஓரமாக படிக்கட்டை அமைக்கலாம். வீட்டின் மத்திய பகுதி காலியாக இருக்க வேண்டும் அல்லது எந்த ஒரு கனமான மரச்சாமான்களையும் வைத்திருக்கக் கூடாது.

தலைக்கு மேல் உள்ள உத்தரங்கள் வீட்டின் மைய பகுதி வழியாக செல்ல கூடாது. ஏனெனில் அவை குழப்பமான மனநிலையை ஏற்படுத்தும். வீட்டின் தென் கிழக்கு பகுதியில் பூமிக்கு அடியில் தண்ணீர் தொட்டி இருக்கக் கூடாது. ஏனெனில் அது உடல்நல பிரச்சனைகள் அதிகம் ஏற்படுத்தும்.

வீட்டின் அக்னி மூலையில், அதாவது வீட்டின் தென் கிழக்கு மூலையில் தினமும் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது மிகவும் நல்லது. வீட்டை சுற்றியுள்ள சுவரும் அதன் கதவும் ஒரே உயரத்தில் இருக்க வேண்டும். கதவின் இரு பக்கங்களிலும் சிட்ரஸ் பழங்கள் அல்லது செடிகளை வளர்க்கலாம்.

உங்கள் வீட்டில் யாரேனுக்கும் உடல்நலம் சரியில்லை என்றால், அவரின் அறையில் சில வாரங்களுக்கு மெழுகுவர்த்தியை எரிய வைப்பது நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்.

வீட்டின் தென் திசையை நோக்கி ஆஞ்சநேயர் படத்தை வைத்திருப்பது, வீட்டில் உள்ளவர்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் வீட்டின் செல்வ நிலை அதிகரிக்கும்.

குரு பகவானின் அருள் கிடைக்க விரதம் இருப்பது எப்படி?

குரு பகவானின் அருள் கிடைக்க விரதம் இருப்பது எப்படி?

ஜோதிட ரீதியாகவும், அனுபவ ரீதியாகவும் பின்வரும் நற்செயல்களை செய்து, குருவின் அருளைப் பெறலாம்.

* வியாழக்கிழமைகளில், பகலில் விரதம் இருந்து, மாலையில் சிவன் கோயிலுக்கு சென்று, தட்சிணா மூர்த்தியை  வழிபடுவதன் மூலம் குருவின் அருளைப் பெறலாம்.

* வியாழக்கிழமைகளில், கொண்டக் கடலை சுண்டல் செய்து, பக்தர்களுக்கும், ஏழைகளுக்கும் தானம் செய்வதாலும், குரு பகவானின் அருளைப் பெறலாம்.

* ஒரு ஏழைப் பெண்ணின் பிரசவ செலவை ஏற்பதன் மூலமும், குருவின் அருளைப் பெறலாம்.

* ஒரு ஏழைக் குழந்தையின் கல்விச் செலவை ஏற்பதன் மூலமும், குருவின் அருளைப் பெறலாம்.

* தாங்கள் படித்த பள்ளியின்ஆசிரியர் எவரேனும், ஓய்வு பெற்றவர் இருப்பின் அவரைத் தேடிச் சென்று வணங்கி, அவருக்கு ஏதேனும் உதவி தேவைப்படின் செய்து, ஆசி பெறுவதால், குருவின்அருளைப்பெறலாம்.

* வியாழக்கிழமை மாலை வேளைகளில், வீட்டில் தீபத்தின் முன் அமைதியாக உட்கார்ந்து குருவே துணை என்று 108 முறையோ 1008 முறையோ அல்லது அதற்கு மேலோ மனதில் சொல்லி வந்தால் போதும், தங்கள் மனக்குழப்பத்தை தீர்த்து, குடும்பத்தில்அமைதியை நிலவச்செய்வார்.

* சிவனை வழிபடுபவர்கள் எனில் வேதத்தில் சொல்லப்பட்ட பஞ்சாட்சர மந்திரமான “ஓம் நமசிவாய” என்ற மூல மந்திரத்தை மனதில் தியானித்தால் மௌன குருவான சிவனே, உங்களுக்கு வழித்துணையாக வருவார், இது உறுதி !

திருவண்ணாமலைக்கும் 9 என்ற எண்ணுக்கும் உள்ள தொடர்பு

திருவண்ணாமலைக்கும் 9 என்ற எண்ணுக்கும் உள்ள தொடர்பு

திருவண்ணாமலைக்கு “நவதுவார பதி” என்றும்  ஒரு  பெயர்  உண்டு.  அதற்கு 9 நுழைவாயில்களைக் கொண்ட நகரம் என்று அர்த்தமாகும். திருவண்ணாமலைக்கும் 9 என்ற எண்ணுக்கும் நிறைய தொடர்பு உண்டு.

அதில் ஒன்று, திருவண்ணாமலை ஆலயத்தில் 9 கோபுரங்கள் இருப்பதாகும். இந்த 9 கோபுரங்களில் 4 கோபுரங்கள் பெரியது. 5 கோபுரங்கள் “கட்டை கோபுரம்” என்றழைக்கப்படும் சிறிய கோபுரங்களாகும். அந்த 9 கோபுரங்கள் விபரம் வருமாறு:-

1. ராஜகோபுரம் (கிழக்கு), 2. பேய்க் கோபுரம் (மேற்கு),
3. திருமஞ்சன கோபுரம் (தெற்கு), 4. அம்மணியம்மாள் கோபுரம் (வடக்கு), 5. வல்லாள மகாராஜா கோபுரம், 6. கிளி கோபுரம்,
7. வடக்கு கட்டை கோபுரம், 8. தெற்கு கட்டை கோபுரம்,
9. மேற்கு கட்டை கோபுரம்.

1. ராஜகோபுரம்

திருவண்ணாமலை ஆலயத்தில் கிழக்கு திசையில் கம்பீரமாக ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. இந்த கோபுரத்துக்கு ராயர் கோபுரம் என்றும் ஒரு பெயர் உண்டு. தென்னகத்தில் மிகப்பெரும் ஆன்மிக பணி செய்த மன்னரான கிருஷ்ண தேவராயர் இந்த கோபுரத்தை கட்டுவதற்கு அடித்தளம் அமைத்தார் என்பதால் அவர் பெயரால் இந்த கோபுரம் அழைக்கப்படுகிறது.

ஒரு காலத்தில் இந்த கோபுரம்தான் தமிழ்நாட்டிலேயே மிக உயர்ந்த கோபுரமாக திகழ்ந்தது. அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. தஞ்சையை ஆண்ட ராஜராஜசோழன் தஞ்சை பெரிய கோவிலை அமைக்கும்போது கருவறை கோபுரத்தை 216 அடிகள் உயரம் கொண்டதாக அமைத்து இருந்தார். அவருக்கு பிறகு 15-ம் நூற்றாண்டில் தென்னகத்தை ஆண்ட கிருஷ்ண தேவராயர் தனது வெற்றிகளுக்கு நினைவாக திருவண்ணா மலையில் பிரமாண்டமான ராஜகோபுரத்தை அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தார். ராஜராஜன் சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தை விட அதிக உயரம் கொண்டதாக திருவண்ணாமலை ஆலயத்தின் ராஜகோபுரம் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

1550களில் அந்த ராஜ கோபுரத்தை கட்டும் பணியை கிருஷ்ண தேவராயர் தொடங்கி தீவிரப்படுத்தி இருந்தார். 135 அடி நீளம், 98 அடி அகலத்தில் அடித்தளம் அமைத்து ராஜகோபுரத்தை அவர் எழுப்பினார். ஆனால் அதன் பணிகள் முடிவதற்குள் அவர் காலம் முடிந்து விட்டது. இதையடுத்து அந்த ராஜகோபுரத்தை கட்டும் படி சிவநேசர், லோகநாதர் என்ற முனிவர்கள் தஞ்சையை ஆண்ட செவ்வப்ப நாயக்கரிடம் தெரிவித்தனர். அதை ஏற்று செவ்வப்ப நாயக்கர் திருவண்ணாமலை ராஜ கோபுரத்தை கட்டி முடித்தார்.

கிருஷ்ணதேவராயரின் ஆசைப்படி தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தை விட ஒரு அடி உயரமாக 217 அடி உயரத்துடன் திருவண்ணாமலை ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. ஆங்கிரச ஆண்டு கார்த்திகை மாதம் புதன்கிழமை பவுர்ணமி ரோகிணி நட்சத்திர நாளில் அந்த ராஜகோபுரத்தில் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அந்த ராஜகோபுரம் பார்க்க பார்க்க கண்களுக்கு சலிப்பே தராத சிறப்பை கொண்டது. எவ்வளவு நேரம் பார்த்தாலும் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கும்.

தஞ்சை பெரிய கோவில் கோபுரம் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு சாரம் கட்டி அமைக்கப்பட்டது என்று சொல்வார்கள். அதேபோன்றுதான் இந்த கோபுரமும் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு சாரம் கட்டி பெரிய பெரிய பாறாங்கற்களை கொண்டு வந்து அழகுற கட்டி முடிக்கப்பட்டதாகும். கோபுரத்தின் கீழ் பகுதி கற்களாலும் மேற்பகுதி செங்கல் மற்றும் சுதையாலும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 

11 நிலைகள் கொண்ட இந்த கோபுரத்தில் விஜயநகர மன்னர்களின் கட்டிட கலை அம்சங்களை அதிகமாக காணலாம். கோபுரத்தின் சுற்றுப்பகுதிகளில் நிறைய நாட்டிய சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. விநாயகர், முருகர், பிரம்மா, துர்க்கை, காளை வாகனம், மயில்மேல் அமர்ந்த முருகன், அன்னபறவை, லிங்கத்திற்கு பால் வார்க்கும் பசு உள்பட பல்வேறு சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.

கோபுரத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள பூதகனங்களும் கண்களுக்கு விருந்து கொடுப்பதாக உள்ளன. கோபுரத்தின் இடது பக்கத்தில் செல்வகணபதி சிலை உள்ளது. விறன்மிண்ட நாயனாரின் சிலையும் இடம் பெற்றுள்ளது. ஆங்காங்கே மன்னர் காலத்து கல்வெட்டுகளும் உள்ளன. அந்த காலத்தில் வாழ்ந்த புலவர்கள் இந்த கோபுரத்தின் அழகை புகழ்ந்து பாடியுள்ளனர். அந்த பாடல்களும் கல்வெட்டுகளாக உள்ளன.

அந்த காலத்தில் இறந்தவர்களின் 16-வது நாள் தினத்தன்று மோட்ச தீபம் ஏற்றி வழிபடுவார்கள். திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் இந்த ராஜகோபுரத்தின் ஒரு பகுதியில் மோட்ச தீபம் ஏற்றுவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். சமீப காலமாக இந்த பழக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

2. பேய்க்கோபுரம்

ராஜகோபுரத்திற்கு நேரே மேற்கு பகுதியில் பேய்க்கோபுரம் உள்ளது. இந்த கோபுரம் மலையை பார்த்தப்படி இருப்பதால் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. ராஜகோபுரத்தை கட்டுவதற்கு கிருஷ்ணதேவ ராயர் திருப்பணிகள் தொடங்கியபோதே இந்த மேற்கு கோபுரத்தை கட்டுவதற்கும் திருப்பணிகளைத் தொடங்கி நடத்தினார். இந்த கோபுரத்தின் பணிகளையும் செவ்வப்ப நாயக்கர்தான் கட்டி முடித்தார். 

இதன் உயரம் 160 அடியாகும். இந்த மேற்கு கோபுரம் பேச்சு வழக்கில் மேக்கோபுரம் என்று மாறியது. பிறகு அது பேக்கோபுரம் என்று பேசப்பட்டது. கடந்த நூற்றாண்டில் பேக்கோபுரம் என்பதை மக்கள் தவறாக பேசி பேசியே பேய்க்கோபுரம் என்று அழைக்க தொடங்கி விட்டனர். மற்றபடி பேய்க்கும் இந்த கோபுரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 9 நிலைகள் கொண்ட இந்த கோபுரத்தில் மகிசாசூரணை துர்க்கை வதம் செய்யும் காட்சி, காளை வாகனத்தில் அமர்ந்த சிவன், உமை அம்மை, பிரம்மா, முருகன், சரபேஸ்வரர், முனிவர்கள், பூதகனங்கள் இடம் பெற்றுள்ளனர்.

3. திருமஞ்சன கோபுரம்

திருவண்ணாமலை ஆலயத்தின் தெற்கு திசையில் திருமஞ்சன கோபுரம் அமைந்துள்ளது. அந்த காலத்தில் திருமஞ்சனம் செய்வதற்காக யானை மீது புனித நீரை இந்த வாசல் வழியாகத்தான் எடுத்து வருவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். எனவே இந்த கோபுரத்திற்கு திருமஞ்சன கோபுரம் என்ற பெயர் ஏற்பட்டது. சுமார் 150 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தை யார் கட்டியது என்று தெரியவில்லை. எந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும் தெரியவில்லை. ஆனால் ஏராளமான அழகு சிற்பங்களும், கல்வெட்டுகளும் நிறைந்ததாக இந்த கோபுரம் திகழ்கிறது.

ராஜகோபுரத்திற்கு அடுத்தப்படியாக இந்த கோபுரத்திற்கும் சில சிறப்புகள் உண்டு. ஆனி மாதம் நடைபெறும் ஆனி திருமஞ்சனம், மார்கழி மாதம் நடைபெறும் ஆரூத்ரா தரிசனம் ஆகிய இரு விழாக்களின் போது இந்த கோபுரம் வழியாகத்தான் நடராஜரை வீதி உலாவிற்கு எடுத்து செல்வார்கள். அதுபோல வீதி உலா முடிந்த பிறகு இந்த கோபுரம் வழியாகத்தான் நடராஜரை உள்ளே அழைத்து வருவார்கள். இந்த கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள இசைவானர்கள் சிற்பம் மிகுந்த சிறப்பு பெற்றது. 

4. வல்லாள மகாராஜா கோபுரம்

இந்த கோபுரத்தை வீர வல்லாள மகாராஜா கட்டினார். 1318-ம் ஆண்டு தொடங்கி 1340-ம் ஆண்டு இந்த கோபுரத்தின் கட்டுமானப்பணி முடிந்ததாக ஒரு தகவல் உள்ளது. எனவே இந்த கோபுரத்திற்கு வீர வல்லாள திருவாசல் என்ற ஒரு பெயரும் உண்டு. ராஜகோபுரத்தை தாண்டியதும் அடுத்து வருவது இந்த கோபுரம்தான். இந்த கோபுரத்தின் கீழ் பகுதி தூண் ஒன்றில் வல்லாள மகாராஜாவின் சிற்பம் கை கூப்பிய நிலையில் இருப்பதை காணலாம்.

இந்த கோபுரத்தில் சிவன், பார்வதி, விநாயகர் சிற்பங்களுடன் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் சிவபெருமான், காளை மீது அமர்ந்த சிவபார்வதி, சமணரை கழுவேற்றம் செய்யும் சிற்பங்களும் உள்ளன. லிங்கத்தை பார்வதி தழுவி நிற்பது போன்ற சிற்பமும் இடம்பெற்றுள்ளது. அண்ணாமலையார் தனது மகனாக வல்லாள மகாராஜாவை ஏற்றுக் கொண்ட சிறப்பை இந்த உலகுக்கு உணர்த்தும் வகையில் இந்த கோபுரம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. 

5. கிளி கோபுரம்

திருவண்ணாமலையில் வாழ்ந்த அருணகிரி நாதர் பற்றி சிவ பக்தர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவரோடு தொடர்புடையது இந்த கிளி கோபுரமாகும். திருவண்ணாமலை தலத்தில் உள்ள கோபுரங்களில் இது மிக மிக பழமையானதாகும். 1053-ம் ஆண்டு இந்த கோபுரத்தை ராஜேந்திர சோழன் கட்டினார். சுமார் 140 அடி உயரம் கொண்ட இந்த கோபுரம் 5 நிலைகளை கொண்டது. இந்த கோபுரத்தின் உச்சியில் கிளி சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. 

அருணகிரி நாதர் கிளி உருவம் எடுத்து தேவலோகம் சென்ற போது அவரது உடலை சம்பந்தாண்டான் என்பவன் எரித்து விட்டான். இதனால் அருணகிரிநாதர் கிளி உருவில் அலைய வேண்டியதாற்று. அவர் கிளி உருவத்தோடு இந்த கோபுரத்தில் அமர்ந்து நிறைய பாடல்களை பாடினார். கந்தர் அனுபூதி, சுந்தர அந்தாதி ஆகிய இலக்கியங்கள் இந்த கோபுரத்தில் கிளி உருவத்தில் அமர்ந்த அருணகிரிநாதரால் பாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த கோபுரத்திற்கு கிளி கோபுரம் என்ற பெயர் ஏற்பட்டது. 

இந்த கோபுரத்தில் 33 கல்வெட்டுகள் இருக்கின்றன. அதில் பல்வேறு தகவல்கள் உள்ளன. ஆனால் அவற்றை இன்னமும் வெளியில் கொண்டு வர முடியவில்லை.

6. தெற்கு கட்டை கோபுரம்

திருமஞ்சன கோபுரம் அருகே 5 நிலைகளுடன் உள்ள சிறிய கோபுரம் தெற்கு கட்டை கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. 70 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தில் புராண நிகழ்ச்சிகளை விளக்கும் சிற்பங்கள் அமைந்துள்ளன. 

7. மேற்கு கட்டை கோபுரம்

பேய் கோபுரத்திற்கு அடுத்தப்படியாக அமைந்துள்ள சிறிய கோபுரமாகும். 5 நிலைகளை கொண்ட இந்த கோபுரம் 70 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோபுரத்தில் திசை காவல் தெய்வங்கள் இடம்பெற்றுள்ளன. 

8. வடக்கு கட்டை கோபுரம்

அம்மணியம்மன் கோபுரத்தை அடுத்து இந்த சிறிய கோபுரம் உள்ளது. 70 அடி உயரம் உள்ள இந்த கோபுரத்தில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன், துவார பாலகர்கள் சிற்பங்கள் உள்ளன. இந்த கோபுரத்தில் உள்ள நடன பெண்மணிகளின் சிற்பங்கள் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளன. 

9. அம்மணியம்மாள் கோபுரம்

திருவண்ணாமலை ஆலயத்தின் வடக்கு திசையில் இந்த கோபுரம் அமைந்துள்ளது. அம்மணிம்மாள் என்ற பெண் சித்தர் உருவாக்கிய கோபுரம் இது.

கபால பைரவர் காயத்ரி மந்திரம்

கபால பைரவர் காயத்ரி மந்திரம்

‘ஓம் கால தண்டாய வித்மஹே
வஜ்ர வீராய தீமஹி
தந்நோஹ்: கபால பைரவ ப்ரசோதயாத்’

யாருக்கெல்லாம் சந்திர மகாதிசை நடைபெறுகிறதோ, அவர்கள் தினமும் அவர்களின் ஊரில் இருக்கும் பைரவர் சன்னிதியில் 9 முறை அல்லது, 9-ன் மடங்குகளில் இந்த காயத்ரி மந்திரங்களை பாராயணம் செய்து வர வேண்டும். இதன் மூலம் சந்திர திசை யோக திசையாக இருந்தால், மேலும் யோகங்கள் அதிகரிக்கும். சந்திர திசை பாதகாதிபதி திசையாக இருந்தால், கஷ்டங்கள் குறையும்.

இதய நோய்களுக்கு சிறந்த பரிகாரத் ஸ்தலம்

இதய நோய்களுக்கு சிறந்த பரிகாரத் ஸ்தலம்

திரிபுர சம்ஹாரத்தில் திருமாலுக்கும் பிரம்மனுக்கும் ஏற்பட்ட சாபத்தை நீக்கிய இறைவன் வாழும் ஆலயம், மகிஷாசுரனை வதம் செய்த துர்க்கையின் தோஷம் நீக்கிய தலம் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்த, மூவலூர் மார்க்க சகாயேசுவரர் ஆலயம்.

இந்த ஆலயம் இதய நோய்களுக்கு சிறந்த பரிகாரத் தலமாக திகழ்கின்றது. இதய நோய் உள்ளவர்கள் திங்கட்கிழமைகளில் 11 நெய் தீபம் ஏற்றி, சுவாமிக்கு அர்ச்சனை செய்தும், பாலாபிஷேகம் செய்தும், அபிஷேக பாலை அருந்தியும் வந்தால் நோய் குணமாவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் மூவலூர் அமைந்துள்ளது. மயிலாடுதுறை - கும்பகோணம் வழித்தடத்தில் மயிலாடுதுறைக்கு மேற்கே 5 கி.மீ தூரத்தில், மயிலாடுதுறை ஜங்சன் இருக்கிறது. அங்கிருந்து 1 கி.மீ. தொலைவில், மூவலூர் அமைந்துள்ளது. மூவலூர் தேரடி பேருந்து நிறுத்தத்திற்கு அருகே ஆலயம் அமைந்துள்ளது. 

Wednesday 27 June 2018

சிவ வழிபாட்டிற்கு உகந்த ஆனி மாத பவுர்ணமி விரதம்

சிவ வழிபாட்டிற்கு உகந்த ஆனி மாத பவுர்ணமி விரதம்

ஆனி மாத பவுர்ணமி அன்று விரதம் மேற்கொண்டால் இன்பமான வாழ்வு அமையும். விரதமிருப்பவர்கள் ஆனி மாத பவுர்ணமி அன்றும் விரதமிருந்து மாலை சந்திர உதயத்தில் நிலவையும் அம்பாளையும் தரிசனம் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை செய்பவர்கள் தங்கள் வாழ்வில் மேற்கொள்ளும் எல்லாக் காரியங்களிலும் வெற்றி பெறுவார்கள்.

ஆனி பவுர்ணமி தினத்தன்று தேவர்கள் அன்னையின் நாமத்தை ஜெபித்தபடியே தியானமும் தவமும் செய்து அன்னையின் அருளைப் பெறுவார்கள். பவுர்ணமி இரவின் நடுநிசியில் தியானம், ஜெபம், பூஜை, பிராணாயாமம், தவம் செய்தால் இறைசக்தி உடனே கிடைக்கும்.

இந்த நாளில் விரதம் இருந்து சிவன் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்தால் எண்ணங்கள் ஈடேரும்.

இந்நாளில் விரதம் இருப்பவர்கள் இரவில் குறைவான எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய ஆகாரத்தை உண்ண வேண்டும். இவ்வாறு உண்டால் நள்ளிரவில் தியானம் செய்வதற்கும், பிராணாயமம் செய்வதற்கும் ஏதுவாக இருக்கும்.  

பொதுவான பவுர்ணமி நாட்களில் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்து இறைவழிபாடு செய்வது மேன்மை அளிக்கும்.

வேண்டாமே முரண்பாடு


ஒரு வியாபாரி தன் மகனுக்கு வணிக தந்திரங்களை கற்றுக்கொடுத்து வந்தார். “நாணயம், புத்திக்கூர்மை இரண்டையும் பயன்படுத்து,” என்றார். “நாணயம் என்றால் என்னப்பா?” என்றான் மகன். தந்தை கூறினார்.

“நீ உன் வாடிக்கையாளருக்கு வாக்கு கொடுத்தால், உனக்கு நஷ்டம் வந்தாலும், அந்த வாக்கை நிறைவேற்று,” என பதிலளித்தார்.

அடுத்து மகன், “புத்திக்கூர்மை என்றால் என்ன?” என்றான். “நீ அப்படி ஒரு வாக்குறுதியை கொடுக்காமல் இருப்பது,” என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு நல்லதை கற்றுக் கொடுக்க வேண்டியது தான். ஆனால், அது முரண்பாடுடையதாக இருக்கக்கூடாது. இந்த வியாபாரியின் எடுத்துக்காட்டை யாரும் பின்பற்றக்கூடாது. முரண்பட்ட அறிவுரைகள் எதிர்கால தலைமுறையை உண்மையிலிருந்து விலகச் செய்து விடும்.

காஞ்சி பெரியவர் எழுப்பிய சந்திரமவுலீஸ்வரர் திருக்கோவில்

காஞ்சி பெரியவர் எழுப்பிய சந்திரமவுலீஸ்வரர் திருக்கோவில்

கும்பகோணம் - காரைக்கால் சாலையில் திருநீலக்குடி என்ற ஊர் உள்ளது. இதன் அருகே கொத்துக்கோவில் என்ற இடம் உள்ளது. இங்கு இறங்கி, பசுமை தாலாட்டும் வயல்வெளிகளை ரசித்துக் கொண்டே ½ கி.மீ பயணம் செய்தால், மேலையூர் கிராமத்தை அடையலாம்.

இதன் புராணப் பெயர் உன்னதபுரம் என்பதாகும். இங்கு தான் சந்திரமவுலீஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. மூன்றடுக்கு ராஜகோபுரம் கம்பீரமாக நிற்க, ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் விசாலமான பிரகாரம். எதிரே நந்திதேவர் தனி மண்டபத்தில் அருள்பாலிக்கிறார். இவரைத் கடந்தால் மகாமண்டபம் உள்ளது. எதிரே நந்தியும், பலி பீடமும் இருக்கிறது.

அடுத்துள்ள அர்த்த மண்டபத்தின் நுழைவுவாசலில் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் தண்டாயுதபாணியும் அருள்பாலிக்கின்றனர். உள்ளே கருவறையில் இறைவன் சந்திரமவுலீஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக் கிறார்.

மகாமண்டபத்தின் வலதுபுறம் இறைவி ஆனந்தவல்லி நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் வீற்றிருக்கிறார். இந்த அன்னை சாந்த முகத்துடன் புன்னகை தவழ இருக்கும் அழகே அழகு. அன்னையின் வலது மேல் கரத்தில் ருத்ராட்ச மாலையும், இடது மேல் கரத்தில் பத்மமும், கீழ் வலது கரத்தில் அபய ஹஸ்த முத்திரையுடனும், கீழ் இடது கரத்தில் வரத ஹஸ்த முத்திரையுடனும் வீற்றிருந்து தன்னை நம்பி வரும் பக்தர்கள் அருள்பாலிக்கிறார்.

இறைவனின் தேவகோட்டத்தில் தெற்கே தட்சிணாமூர்த்தி வீற்றிருந்து அருள்கிறார். பிரகாரத்தின் மேற்கு திசையில் பிள்ளையார், விசாலாட்சி, விசுவ நாதர், முருகன், வள்ளி, தெய்வானை, சுந்தரேசுவரர், மீனாட்சி, நாகர், கஜலட்சுமி ஆகியோர் திருமேனிகள் உள்ளன. வடக்குப் பிரகாரத்தில் சண்டீஸ்வரரின் சன்னிதி உள்ளது. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் தனியாக அமர்ந்து அருள்கிறார்கள். கிழக்கு பிரகாரத்தில் சனி பகவான், சூரியன், பைரவர் திருமேனிகள் உள்ளன.

இந்த ஆலயம் பற்றிய தல புராணம் எதுவும் இல்லை. ஆனால் செவி வழி தகவல்கள் உள்ளன. அது என்ன?

காஞ்சி மகாப் பெரியவரான காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகர ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தரிசனம் செய்வதற்காக ஒவ்வொரு தலமாக சென்று கொண்டிருந்தார். அதன் ஒரு பகுதியாக உன்னதபுரம் என்ற இந்த ஊருக்கும் வந்தார். அவர் வந்தது ஓர் இரவு நேரம் என்பதால், அங்கேயே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அன்று இரவு அவர் கனவில் இறைவன், ஆதிசங்கரர் வடிவில் தோன்றினார்.

‘சந்திரமவுலீஸ்வரராக யாம் அருளாட்சி புரிய இத்தலத்தில் ஓர் ஆலயம் எழுப்புக’ என்று கூறிவிட்டு மறைந்துவிட்டார்.

அதன்படி காஞ்சி மகாப் பெரியவர் இத்தலத்திலேயே தங்கி, ஊர்மக்கள் உதவியுடன் ஒரு கோவிலை கட்டி முடித்தார். பின், கும்பாபிஷேகமும் நடத்தி வைத்தார். இறைவனுக்கு சந்திர மவுலீஸ்வரர் என்றும், இறைவிக்கு ஆனந்த வல்லி என்றும் பெயரிட்டு வணங்க, அதுவே இறைவன், இறைவி பெயராக நிலைத்துவிட்டது.

இந்த ஆலயத்தில் இறைவனுக்கும், இறைவிக்கும், பிற தெய்வங்களுக்கும் உற்சவ மூர்த்தி கிடையாது. இறைவனை வணங்க நினைப்பவர்கள் ஆலயத்திற்கு வந்து வணங்கி அருள் பெற வேண்டும் என்பதால் உற்சவ மூர்த்தியை தவிர்த்துவிட்டதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

ஆலயத்தின் தலவிருட்சம் வில்வம். இங்கு இறைவி யின் சன்னிதி முன் சுமார் 8 அடி நீளமும் 3½ அடி அகலமும் கொண்ட சலவைக் கல் ஒன்றை தரையில் பதித்துள்ளனர். தரையில் விழுந்து வணங்கும் பக்தர்களுக்காக இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாம்.

இந்த ஆலயத்தில் துர்க்கையும் இல்லை. இங்கு அம்பாளே அனைத்தும் என எல்லோரும் உணர வேண்டும் என்பதால், துர்க்கை அம்மனை தனியாகப் பிரதிஷ்டை செய்யவில்லையாம்.

இறைவி- இறைவன் முதல் எழுத்தைச் சேர்த்தால் ‘ஆச’ என்ற வார்த்தை வரும். மகாப்பெரியவரின் ‘ஆசை’ கோவில் இது என்பதால், இறைவி இறைவனுக்கு இப்படி பெயர் சூட்டப்பட்டதாக சில பக்தர்கள் கூறுகின்றனர்.

இந்த ஊரில் இந்த ஆலயம் தவிர வரசக்தி விநாயகர், பைரவர், லட்சுமி நாராயணப் பெருமாள், ஆஞ்சநேயர், செல்லியம்மன், அய்யனார் ஆலயங்களும் இருக்கின்றன.

சந்திரமவுலீஸ்வரர் ஆலயத்தில் தினமும் இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. இந்தக் கோவில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12.30 வரையிலும், மாலை 4.30 முதல் இரவு 8.30 வரையிலும் திறந்திருக்கும்.

சிவராத்திரி, பிரதோஷம், நவராத்திரி, புத்தாண்டு, சோமவாரம், ஆடி வெள்ளி, தை வெள்ளி, கார்த்திகை, போன்ற நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று நடைபெறும் அன்னாபிஷேகத்தைக் காண திரளாக பக்தர்கள் கூடுகின்றனர்.

சந்திர தோஷம் உள்ளவர்கள் இறைவனையும் இறைவியையும் அபிஷேகம் செய்து வழிபட்டு, சர்க் கரைப் பொங்கல் படைத்து, அதனை பக்தர்களுக்கு வினியோகம் செய்தால் தோஷம் விலகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

கும்பகோணம் - காரைக்கால் வழித்தடத்தில் உள்ளது கொத்துக் கோவில் என்ற இடம். கும்பகோணத்தில் இருந்து இந்தப் பகுதிக்கு நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.

ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் - தமிழில்

ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் - தமிழில்

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகத்தை இதைத் தினமும் படித்து வந்தால் தீராத கடன்கள் தீரும். கையில் பணம் இல்லையே என நினைத்து வருந்தும்போது குறைந்த அளவுக்கான தேவைக்காவது பணம் கிடைக்க்ம் என ஆத்தீகர்களின் நம்பிக்கை.

தனந்தரும் வயிரவன் தளிரடிபணிந்திடின் 
தளர்வுகள் தீர்ந்து விடும் 
மனந் திறந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின்
மகிழ்வுகள்வந்து விடும் சினந்தவிர்த் தன்னையின்
சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனே
தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (1)

வாழ்வினில் வளந்தர வையகம்
நடந்தான் வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட
தானெனவந்திடுவான் காழ்ப்புகள் தீர்த்தான் 
கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான் 
தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (2)

முழுநில வதனில் முறையொடு
பூஜைகள் முடித்திட அருளிடுவான் 
உழுதவன்விதைப்பான் உடைமைகள் காப்பான்
உயர்வுறச்செய்திடுவான் முழுமலர்த்
தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமேஎன்பான் தனமழை பெய்திடுவான் (3)

நான்மறை ஓதுவார் நடுவினில்இருப்பான்
நான்முகன் நானென்பான் தேனினில் பழத்தைச் 
சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள்
நிறைத்திடுவான் வான்மழை எனவே 
வளங்களைப்பொழிவான் வாழ்த்திட வாழ்த்திடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (4)

பூதங்கள் யாவும் தனக்குள்ளே
வைப்பான் பூரணன் நான் என்பான் நாதங்கள்
ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில்
பூட்டிடுவான் காதங்கள் கடந்து கட்டிடும்
மாயம் யாவையும் போக்கிடுவான் 
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (5)

பொழில்களில் மணப்பான் பூசைகள்ஏற்பான்
பொன்குடம் ஏந்திடுவான் கழல்களில்
தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திட
பொழிந்திடும் நின்மலன் நானென்பான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (6)

சதுர்முகன் ஆணவத் தலையினைக்
கொய்தான் சத்தொடு சித்தானான் புதரினில்
பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம்
செய்யென்றான் பதரினைக் குவித்து 
செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான்
தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (7)

ஜெய ஜெய வடுக நாதனே சரணம் வந்தருள் 
செய்திடுவாய் ஜெய ஜெய ஷேத்திர பாலனே சரணம் 
ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா 
செல்வங்கள் தந்திடுவாய் 
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (8)

Tuesday 26 June 2018

சிறப்பு மிகுந்த சின்ன ஆவுடையார் கோவில்

சிறப்பு மிகுந்த சின்ன ஆவுடையார் கோவில்

மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டியனிடம் முதன்மை அமைச்சராக இருந்தவர் வாதவூரர். இவர் மன்னனின் ஆணைப்படி குதிரை வாங்குவதற்காக பொற்காசுகளுடன் புறப்பட்டார். அப்படிச் சென்ற அவரை, வழியில் குருந்த மரத்தின் கீழ் அமர்ந்து குரு வடிவிலான இறைவன் ஆட்கொண்டு மாணிக்கவாசகர் ஆக்கிய தலம் திருப்பெருந்துறை. இது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. இந்த ஆலயம் ஆவுடையார் கோவில் என்றும், இத்தல இறைவன் ஆத்மநாதசுவாமி என்றும் அழைக்கப்படுகிறார். தன்னிடம் இருந்த பொற்காசுகளைக் கொண்டு, மாணிக்கவாசகரே எழுப்பிய ஆலயம் இது.

குதிரை வாங்கச் சென்ற வாதவூரர் என்னும் மாணிக்கவாசகர், காலம் கடந்தும் மதுரை திரும்பாததால் ஆத்திரமடைந்த அரிமர்த்தன பாண்டியன், தனது தள பதியை அனுப்பி பார்த்து வரச் சொன்னான். மன்னன் ஆள் அனுப்பியதை அறிந்த மாணிக்கவாசகர், ‘குதிரை வாங்க கொடுத்த பணம் கோவில் கட்ட செலவாகி விட்டதே. இப்போது என்ன செய்வது’ என்று நினைத்தவர் இறைவனிடம் தன்னுடைய நிலையை சொல்லி இறைஞ்சினார்.

இதையடுத்து இறைவன் ஒரு ஆவணி மூல நட்சத்திர நாளில் நரிகள் அனைத்தையும் பரி (குதிரை)களாக்கினார். அந்த இடம் இன்றும் நரிக்குடி என்று வழங்கப்படுகிறது. நரிகளாக மாறிய பரிகளுக்கு மாணிக்கவாசகர் கொள்ளு வாங்கிக் கொடுத்த இடம் ‘கொள்ளுக்காடு’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு தான் திருப்பெருந்துறை பெரிய ஆவுடையார் கோவில் போன்று, சிறிய ஆவுடையார் கோவில் அமைந்திருக்கிறது.

திருப்பெருந்துறையைப் போலவே இத்தல இறைவனின் பெயரும் ஆத்மநாதர் தான். இறைவியின் திருநாமமும், யோகாம்பாள் என்பதே ஆகும். கொள்ளுக்காடு தலத்தில் ஆத்மநாதர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார்.

ஆலயத்தில் கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், முன் மண்டபம் ஆகியவை உள்ளன. கருவறையின் தென்புறம் விநாயகர், வட புறம் வள்ளி-தெய்வானையுடன் சுப்பிர மணியரும் அருள்பாலிக்கின்றனர். முன் மண்டபத்தில் வடதுபுறமாக தென்முகம் நோக்கி யோகாம்பாளுக்கு தனிச் சன்னிதி அமைந்துள்ளது. திருக்கோவில் தெற்கு பிரகாரத்தில் தென்முகமாக யோக தட்சிணாமூர்த்தி அமர்ந்துள்ளார்.

வடக்கு பிரகாரத்தில் குருந்தமரமும், அதன் கீழே மாணிக்கவாசகர் உபதேசம் பெறும் காட்சியும் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது. திருக்கோவிலின் எதிர் புறம் தீர்த்தக்குளம் உள்ளது. இங்கு கார்த்திகை சோமவார விழா சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆலயம் தற்போது வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகமவிதி. ஆனால் பல இடங்கள் சேதமடைந்து காணப்படும் இந்த ஆலயத்தில் பல ஆண்டுகளாகியும் இன்னும் கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருக்கிறது.

அமைவிடம்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை-மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் பட்டுக்கோட்டையில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும், அதிராம்பட்டினத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்திலும் கொள்ளுக்காடு உள்ளது.

குபேர பொம்மையை வீட்டில் எங்கே வைக்க வேண்டும்

குபேர பொம்மையை வீட்டில் எங்கே வைக்க வேண்டும்

அலங்காரத்திற்காகவும் குபேர பொம்மையை வீட்டில் வைத்திருப்பர். கடவுளாக குபேர பொம்மையினை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் குவியும்.

வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்ட புள்ளியாக கருதப்படுகிறது. எனவே சிரிக்கும் குபேர பொம்மையை கிழக்கு திசையில் வைத்தால் வீட்டில் ஒற்றுமையும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

கிழக்கு திசையில் குபேர பொம்மையினை வைப்பதால் குடும்பத்திற்குள் ஏற்படும் சண்டைகள், சச்சரவு, வாக்குவாதத்தினால் ஏற்படும் மனகஷ்டம் தீரும்.

கிழக்கு திசையில் வைப்பதால் செல்வம் பெருகுவதோடு வாழ்க்கையில் வெற்றி கிடைக்க உதவிடும். நேர்மறையான எண்ணங்களை நமக்குள் கொண்டு வரும்.

குபேர பொம்மையை அறை, ஹால், படுக்கையறை அல்லது உணவருந்தும் அறை என எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். தென்கிழக்கு திசையில் வைத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டமும், அதிக வருமானமும் கிடைக்கும்.

சிரித்து கொண்டு இருக்கும் பொம்மையை பார்க்கும் போது மன அழுத்தம் குறைகிறது. பிரச்சனைகளை எதிர்நோக்குவதற்கு புது நம்பிக்கை நமக்கு கிடைக்கும்.

புத்த மதத்தில் இந்த பொம்மையை கடவுளாக மதிக்கின்றனர். எனவே இதை இழிவு படுத்தவோ அவமதிக்கவோ கூடாது.

விரும்பியதை கொடுக்கும் பைரவ விரத வழிபாடு

விரும்பியதை கொடுக்கும் பைரவ விரத வழிபாடு

எட்டாவது திதிநாள் எனப்படும் வளர்பிறையிலும் தேய்பிறையிலும் வரும் எட்டாவது திதிநாட்கள் பைரவ வழிபாட்டிற்குரியவை.

இவ்விரு அஷ்டமிகளில் தேய்பிறை அஷ்டமி விரதம் இருந்து சிவனை வழிபடுவதற்குரிய நாள். ஆடித்தேய்பிறை அஷ்டமிக்கு நீலகண்ட அஷ்டமி என்ற பெயரும் உண்டு.  இந்த நாளில் பழங்கள் மட்டுமே உண்டு அர்ச்சிக்க வேண்டும். தட்சிணாமூர்த்தியை மேட்கொண்டு நடத்தும் விரதம் இது. ஞாயிறு பைரவ வழிபாட்டிற்கு உகந்த நாள். திரிபுவனம் ஸ்ரீ சரபர் - திருவிசலூர் சதுர்கால பைரவர் அல்லது அருகில் இருக்கும் ஆலயத்து பைரவரை வழிபடலாம்.

நவக்கிரக தோஷங்கள் நீங்க சதுர்கால பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் ஸ்கஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும்.

குழந்தைப்பேறு கிட்ட தம்பதியர் ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் விரதம் இருந்து சிவப்பு நிறப் பூக்களால் ஸ்கஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும்.

வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமிகளில்  மாலை நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரமே ஸ்கஸ்ரநாமமோ அர்ச்சனை செய்யது 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். அஷ்டமிகளில் தொடர்ந்து வழிபடவேண்டும்.

சனி தோஷம் நீங்க பைரவருக்கு 9 சனிக்கிழமைகள் விரதம் இருந்து சிவப்பு நிறப் பூக்களால் அர்ச்சனை செய்யது 4 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும்.

தினந்தோறும் காலையில் " ஓம் ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷணபைரவாய நமஹ " என்று ஜெபிப்பது நல்லது.

ஆயுளை அதிகரிக்கும் பரிகார ஆலயங்கள்

ஆயுளை அதிகரிக்கும் பரிகார ஆலயங்கள்

ஆயுள் குறைவாக உள்ளவர்களை நீண்ட ஆயுளோடு வாழ வைத்ததும், மாண்டவர்களை மீண்டும் உயிர்ப்பித்து வரச் செய்த தலங்களுமாக பல தமிழ் நாட்டில் இருக்கின்றன. இந்த ஆலயங்களை புராணங்களும், அந்த ஆலய தல வரலாறுகளும் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. அப்படிப்பட்ட ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் நம்முடைய ஆயுள் பலம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. கோவிலுக்குச் செல்ல முடியாதவர்கள், அந்த ஆலயங்களுக்கான திருமுறை திருப்பதிகங்களை தொடர்ந்து படித்து வந்தால் கூட பலன் கிடைக்கும் என்கிறார்கள். சரி தமிழகத்தில் உள்ள ஆயுளை அதிகரிக்கச் செய்யும் ஆலயங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

திருக்குறுக்கை :

யோக தட்சிணா மூர்த்தியின் நெற்றிக் கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறியால், மன்மதன் எரிந்து சாம்பலாகி விழுந்த இடம் திருக்குறுக்கை. இங்கு காம தகன வீரட்டேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. மன்மதனின் மனைவி ரதி திருக்குறுக்கையில் வீற்றிருக்கும் இறைவனைப் பூஜித்து, கணவனுக்கு உயிர் கொடுத்தருளுமாறு வேண்டினாள். அதன்படி மன்மதனை, ரதியின் கண்களுக்கு மட்டுமே புலப்படும் வகையில் ஈசன் உயிர்ப்பித்து அருளினார். இந்தத் திருத்தலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது.

திருக்கடையூர் :

இந்தத் திருத்தலமும் மயிலாடுதுறைக்கு அருகில் தான் இருக்கிறது. இங்கு கால சம்கார வீரட்டேஸ்வரர் கோவில் கொண்டிருக்கிறார். 16 வயதில் இறப்பான் என்று எழுதப்பட்ட, மார்கண்டேயனின் உயிரைப்பறிக்க வந்தான் எமதர்மன். ஆனால் மார்கண்டேயன் தஞ்சமடைந்ததோ, இத்தல ஈசனின் திருவடியை. காலன் வீசிய பாசக்கயிறு மார்கண்டேயனோடு, சிவலிங்கம் மீதும் விழ, வெகுண் டெழுந்த ஈசன், எமதர்மனை காலால் உதைத்து சம்ஹாரம் செய்தார் என்கிறது தல வரலாறு.

திருவாரூர் :

கன்றை இழந்த தாய்ப்பசு ஒன்று, ஆராய்ச்சி மணியை அடித்து நீதி கேட்டது. நீதி எல்லா உயிர்களுக்கும் பொது என்பதை உணர்ந்த மனுநீதிச்சோழ மன்னன், தவறு செய்த தன் ஒரே மகனை தேர் சக்கரத்தில் இட்டு மரண தண்டனை கொடுக்க உத்தரவிட்டான். ஆனால் அந்தத் தண்டனையை நிறைவேற்ற யாரும் முன்வரவில்லை. அதனால் சோழ மன்னனே, தன்னுடைய தேரின் காலில் மகனை படுக்கவைத்து அவனை கொன்றான். அப்போது தந்தை, தாய், சேய் என மூவுரு கொண்ட தியாகேசன், அங்கு திருக்காட்சி கொடுத்து இளவரசன், கன்று இருவரையும் உயிர்ப்பித்து அருளினார். இந்த தியாகேசர் அருளும் ஆலயம் திருவாரூர் தியாகேசர் திருக்கோவிலாகும்.

திருமருகல் :

இந்தத் தலத்தில் மாணிக்க வண்ணர் திருக்கோவில் உள்ளது. இங்கு இரவும் பகலும் ஈசனையே எண்ணி வாழ்ந்த ஒரு வணிகப் பெண் இருந்தாள். அவளது முறை மாப்பிள்ளை ஒரு முறை பாம்பு தீண்டி இறந்து போனான். அவனை இத்தல இறைவனை வேண்டி திருஞானசம்பந்தர் உயிர்ப்பித்தருளினார். மேலும் அவர்கள் இருவருக்கும் திருமணமும் செய்து வைத்தார். திருவாரூருக்கு அருகே உள்ளது திருமருகல். இத்தல ஆலயத்தில் ஆயுள் வேண்டியும், திருமணத் தடை விலகவும் வேண்டிக் கொள்ளலாம்.

மயிலாப்பூர் :

சென்னை மையப்பகுதியில் உள்ளது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோவில். இங்கு வசித்த சிவ நேசன் என்பவரின் மகள் பூம்பாவை, பாம்பு தீண்டி இறந்து போனாள். அவளது சாம்பல், எலும்பு ஆகியவற்றை எடுத்து வைத்திருந்தார் சிவநேசன். ஒரு முறை திருஞானசம்பந்தர் கபாலீஸ்வரர் ஆலயம் வந்தபோது, தனது மகளின் நிலையை அவரிடம் சொன்னார், சிவநேசன். உடனே சாம்பலையும், எலும்பையும் ஆலயத்தில் வைத்து, திருப்பதிகம் பாடினார் சம்பந்தர். என்ன ஆச்சரியம் பூம்பாவைப் பெண் உயிர்ப் பெற்று திரும்ப வந்தாள்.

திங்களூர் :

அப்பூதி அடிகளது வீட்டுத் தோட்டத்தில், அவரது மூத்த மகன் பாம்பு தீண்டி இறந்து போனான். அவனை திருநாவுக்கரசர், திங்களூர் சோமநாதர் ஆலயத்தில் வைத்து பதிகம் பாடி உயிர்ப்பித்து அருளினார். திங்களூர் தலமானது சிவபெருமானை சந்திர பகவான் வழிபட்ட ஆலயம் ஆகும். இத்தல இறைவனுக்கு சோமநாதர், சந்திரசேகரர், சந்திரமவுலி உள்ளிட்ட பெயர்களும் உண்டு. இந்த ஆலயத்தில் வழிபட்டால் ஆயுள் அதிகரிக்கும். மேலும் திருநாவுக்கரசர் பாடிய பதிகத்தைப் பாடினாலும் பலன் உண்டு.

அவிநாசி :

அவிநாசியில் உள்ளது அவிநாசியப்பர் ஆலயம். இந்தப் பகுதியில் வசித்த ஒருவரின் மகன் குளத்தில் நீராடச் சென்றான். அப்போது அந்தக் குளத்தில் இருந்த முதலை அச்சிறுவனை விழுங்கி விட்டது. ஒரு முறை அவிநாசியப்பரை வழிபட வந்த சுந்தரர், இந்த விஷயத்தை அறிந்து, ‘கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே’ பாடினார். அந்த பதிகத்தை அவர் முடிக்கும் தருவாயில், குளத்தில் இருந்து முதலை வெளிப்பட்ட அந்தச் சிறுவனை உயிருடன் உமிழ்ந்து விட்டுச் சென்றதாக தல புராணம் சொல்கிறது. அவிநாசி கோயம்புத்தூருக்கு அருகே உள்ளது. இறந்த பின் மீண்டும் உயிர்ப்பெற்று வாழ்ந்தவர்களில் ஏயர்கோன் கலிக்காம நாயனாரும் ஒருவர்.

வாழ்வில் ஏற்றம் தரும் அகோர மூர்த்தி மந்திரம்

வாழ்வில் ஏற்றம் தரும் அகோர மூர்த்தி மந்திரம்

கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது என்பார்கள். கண் திருஷ்டி என்பது, அவரவர் நம்பிக்கையை பொறுத்தது என்றாலும், பொதுவாக கண்திருஷ்டி படுவதை யாரும் விரும்புவதில்லை. அது தங்களது முன்னேற்றத்தை தடை செய்யக் கூடியது என்ற கருத்து ஆழமாக உள்ளது. 

ஸ்ரீ அகோர மூர்த்தியானவர் இத்தகைய கண்திருஷ்டியை போக்கி, தடைகளை நீக்கி, வெற்றியை அருள்பவர். திருவெண்காட்டில் கோவில் கொண்டுள்ள இப்பெருமானை தரிசித்தால், கண் திருஷ்டி, ஏவல்கள், காரியத் தடைகள் போன்றவை விலகி, வாழ்வில் ஏற்றம் கிடைக்கும். தினமும் அதிகாலையில் 21 முறை இத்துதியைச் சொல்லி வந்தால், நன்மை நடக்கும். 


ஸகல கன ஸமாபம்
பீமதம்ஷ்ட்ரம் த்ரிநேத்ரம்
புஜகதரம கோரம்

ரக்த வஸ்த்ராங்க தாரம்
பரசு டமரு கட்கம்
கேடகம் பாணச்சாயை
திரிசிகநர கபாலை
விப்ரதாம் பாவயாமி

Monday 25 June 2018

ஸ்ரீ ராகவேந்திரர் கனவில் வர கடைபிடிக்க வேண்டிய விரதம்

ஸ்ரீ ராகவேந்திரர் கனவில் வர கடைபிடிக்க வேண்டிய விரதம்

மகான் ராகவேந்திரரை கனவில் காணவிரும்பும் பக்தர்கள் அதற்குரிய விரதத்தினைக் கடைப்பிடிக்க வேண்டும். 

இந்த விரதத்தை ஆரம்பிக்க வியாழக்கிழமை உகந்தநாள் ஆகும். அன்று பூச நட்சத்திரமாக இருந்தால் மிகவும் சிறப்பு. வேறு நட்சத்திரமாக இருந்தாலும் வழிபடலாம். ஆறு வியாழக்கிழமைகள் தொடர்ந்து நம்பிக்கையுடன் பூஜை செய்ய வேண்டும். ஏழாவது வியாழக்கிழமை பூஜையின் விரத முடிவு நாளாகும். அன்று ஒரு அடி உயரத்திற்கு மேல் உள்ள ஐந்து முக குத்து விளக்கு, பூஜைக்கு வேண்டிய வெற்றிலைப் பாக்கு, பழம், மணமிக்க மலர்கள், தூப தீபங்கள் ஆகியவைகள் தேவை.

மகானை கனவில் காண்பதற்கான விரத பூஜை ஆரம்பிக்கும் முதல் வியாழக்கிழமை காலையில் எழுந்ததும் காலைக் கடன்களை முடித்துவிட்டு குளித்து, தூய ஆடை அணிந்து கொண்டு அவரவர் விருப்பப்படி நெற்றியில் திருநீறு அல்லது சந்தனம், திருநாமம் அணியவேண்டும்.

பூஜை செய்யுமிடத்தில் சுத்தம் செய்து கோலமிட்டு பூஜைக்கு என்று வைத்திருக்கும் மணைப் பலகையில் ஸ்ரீராகவேந்திரர் படத்தை வைக்க வேண்டும். படத்திற்கு சந்தனம், குங்குமம், துளசி மாலை சாத்தவேண்டும். அதேபோல குத்து விளக்கிற்கும் சந்தனம், குங்குமம் இடவேண்டும். பூஜையின்போது ஸ்ரீராகவேந்திரர் படத்தை நடுவில் வைத்து பூஜிக்க வேண்டும்.

பூஜையை ஆரம்பிப்பதற்கு முன் மஞ்சள் தூளினால் பிள்ளையார் பிடித்து வைத்து அதற்கு சந்தனம், குங்குமம், மலர் சூட வேண்டும். நிவேத்தியமாக வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் முதலியவைகளை படத்தின் முன்வைத்த பின் பூஜையைத் தொடரலாம். மகான் படத்திற்கு தீப, தூபம் காட்டி தேங்காய் உடைத்தபின் கற்பூர ஆரத்தி எடுத்தும் கையில் துளசி தளங்களை வைத்துக் கொண்டு எழுந்து நின்று

பூஜ்யாய ஸ்ரீராகவேந்த்ராய
சத்ய தர்ம ரதாயச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம்
ஸ்ரீ காம தேநுவே

என்று சொல்லிக்கொண்டே படத்தையும் விளக்கையும் பதினோரு தடவைகள் வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறையும் சுலோகத்தைச் சொல்ல வேண்டும்.

கையில் வைத்திருக்கும் துளசி தளத்தை படத்திற்கு அர்ப்பணித்தலும் முழு நம்பிக்கையுடன் கனவில் வந்து தரிசனம் கொடுக்கும்படி பிரார்த்தனை செய்தபின் கீழே சாஸ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.

இதுபோல் ஆறு வியாழக்கிழமை வழிபட்ட பின் ஏழாவது வியாழக்கிழமை பழங்களுடன் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யவேண்டும்.

ஸ்ரீராகவேந்திரரை வழிபடும் வியாழக்கிழமையில் பகலில் திரவ பதார்த்தங்கள் அருந்தலாம். இரவில் சிறிதளவு பால் அன்னம் சாப்பிடலாம். இதுபோல் விரதம் கடைப்பிடித்து ஸ்ரீராகவேந்திரரை நம்பிக்கையுடன் வழிபட்டால் கனவில் நிச்சயம் தரிசனம் தருவார். அவர் தரிசனம் கிடைத்தால் நமது குறைகள் நீங்கும்.