Tuesday, 26 June 2018

ஆயுளை அதிகரிக்கும் பரிகார ஆலயங்கள்

ஆயுளை அதிகரிக்கும் பரிகார ஆலயங்கள்

ஆயுள் குறைவாக உள்ளவர்களை நீண்ட ஆயுளோடு வாழ வைத்ததும், மாண்டவர்களை மீண்டும் உயிர்ப்பித்து வரச் செய்த தலங்களுமாக பல தமிழ் நாட்டில் இருக்கின்றன. இந்த ஆலயங்களை புராணங்களும், அந்த ஆலய தல வரலாறுகளும் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. அப்படிப்பட்ட ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் நம்முடைய ஆயுள் பலம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. கோவிலுக்குச் செல்ல முடியாதவர்கள், அந்த ஆலயங்களுக்கான திருமுறை திருப்பதிகங்களை தொடர்ந்து படித்து வந்தால் கூட பலன் கிடைக்கும் என்கிறார்கள். சரி தமிழகத்தில் உள்ள ஆயுளை அதிகரிக்கச் செய்யும் ஆலயங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

திருக்குறுக்கை :

யோக தட்சிணா மூர்த்தியின் நெற்றிக் கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறியால், மன்மதன் எரிந்து சாம்பலாகி விழுந்த இடம் திருக்குறுக்கை. இங்கு காம தகன வீரட்டேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. மன்மதனின் மனைவி ரதி திருக்குறுக்கையில் வீற்றிருக்கும் இறைவனைப் பூஜித்து, கணவனுக்கு உயிர் கொடுத்தருளுமாறு வேண்டினாள். அதன்படி மன்மதனை, ரதியின் கண்களுக்கு மட்டுமே புலப்படும் வகையில் ஈசன் உயிர்ப்பித்து அருளினார். இந்தத் திருத்தலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது.

திருக்கடையூர் :

இந்தத் திருத்தலமும் மயிலாடுதுறைக்கு அருகில் தான் இருக்கிறது. இங்கு கால சம்கார வீரட்டேஸ்வரர் கோவில் கொண்டிருக்கிறார். 16 வயதில் இறப்பான் என்று எழுதப்பட்ட, மார்கண்டேயனின் உயிரைப்பறிக்க வந்தான் எமதர்மன். ஆனால் மார்கண்டேயன் தஞ்சமடைந்ததோ, இத்தல ஈசனின் திருவடியை. காலன் வீசிய பாசக்கயிறு மார்கண்டேயனோடு, சிவலிங்கம் மீதும் விழ, வெகுண் டெழுந்த ஈசன், எமதர்மனை காலால் உதைத்து சம்ஹாரம் செய்தார் என்கிறது தல வரலாறு.

திருவாரூர் :

கன்றை இழந்த தாய்ப்பசு ஒன்று, ஆராய்ச்சி மணியை அடித்து நீதி கேட்டது. நீதி எல்லா உயிர்களுக்கும் பொது என்பதை உணர்ந்த மனுநீதிச்சோழ மன்னன், தவறு செய்த தன் ஒரே மகனை தேர் சக்கரத்தில் இட்டு மரண தண்டனை கொடுக்க உத்தரவிட்டான். ஆனால் அந்தத் தண்டனையை நிறைவேற்ற யாரும் முன்வரவில்லை. அதனால் சோழ மன்னனே, தன்னுடைய தேரின் காலில் மகனை படுக்கவைத்து அவனை கொன்றான். அப்போது தந்தை, தாய், சேய் என மூவுரு கொண்ட தியாகேசன், அங்கு திருக்காட்சி கொடுத்து இளவரசன், கன்று இருவரையும் உயிர்ப்பித்து அருளினார். இந்த தியாகேசர் அருளும் ஆலயம் திருவாரூர் தியாகேசர் திருக்கோவிலாகும்.

திருமருகல் :

இந்தத் தலத்தில் மாணிக்க வண்ணர் திருக்கோவில் உள்ளது. இங்கு இரவும் பகலும் ஈசனையே எண்ணி வாழ்ந்த ஒரு வணிகப் பெண் இருந்தாள். அவளது முறை மாப்பிள்ளை ஒரு முறை பாம்பு தீண்டி இறந்து போனான். அவனை இத்தல இறைவனை வேண்டி திருஞானசம்பந்தர் உயிர்ப்பித்தருளினார். மேலும் அவர்கள் இருவருக்கும் திருமணமும் செய்து வைத்தார். திருவாரூருக்கு அருகே உள்ளது திருமருகல். இத்தல ஆலயத்தில் ஆயுள் வேண்டியும், திருமணத் தடை விலகவும் வேண்டிக் கொள்ளலாம்.

மயிலாப்பூர் :

சென்னை மையப்பகுதியில் உள்ளது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோவில். இங்கு வசித்த சிவ நேசன் என்பவரின் மகள் பூம்பாவை, பாம்பு தீண்டி இறந்து போனாள். அவளது சாம்பல், எலும்பு ஆகியவற்றை எடுத்து வைத்திருந்தார் சிவநேசன். ஒரு முறை திருஞானசம்பந்தர் கபாலீஸ்வரர் ஆலயம் வந்தபோது, தனது மகளின் நிலையை அவரிடம் சொன்னார், சிவநேசன். உடனே சாம்பலையும், எலும்பையும் ஆலயத்தில் வைத்து, திருப்பதிகம் பாடினார் சம்பந்தர். என்ன ஆச்சரியம் பூம்பாவைப் பெண் உயிர்ப் பெற்று திரும்ப வந்தாள்.

திங்களூர் :

அப்பூதி அடிகளது வீட்டுத் தோட்டத்தில், அவரது மூத்த மகன் பாம்பு தீண்டி இறந்து போனான். அவனை திருநாவுக்கரசர், திங்களூர் சோமநாதர் ஆலயத்தில் வைத்து பதிகம் பாடி உயிர்ப்பித்து அருளினார். திங்களூர் தலமானது சிவபெருமானை சந்திர பகவான் வழிபட்ட ஆலயம் ஆகும். இத்தல இறைவனுக்கு சோமநாதர், சந்திரசேகரர், சந்திரமவுலி உள்ளிட்ட பெயர்களும் உண்டு. இந்த ஆலயத்தில் வழிபட்டால் ஆயுள் அதிகரிக்கும். மேலும் திருநாவுக்கரசர் பாடிய பதிகத்தைப் பாடினாலும் பலன் உண்டு.

அவிநாசி :

அவிநாசியில் உள்ளது அவிநாசியப்பர் ஆலயம். இந்தப் பகுதியில் வசித்த ஒருவரின் மகன் குளத்தில் நீராடச் சென்றான். அப்போது அந்தக் குளத்தில் இருந்த முதலை அச்சிறுவனை விழுங்கி விட்டது. ஒரு முறை அவிநாசியப்பரை வழிபட வந்த சுந்தரர், இந்த விஷயத்தை அறிந்து, ‘கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே’ பாடினார். அந்த பதிகத்தை அவர் முடிக்கும் தருவாயில், குளத்தில் இருந்து முதலை வெளிப்பட்ட அந்தச் சிறுவனை உயிருடன் உமிழ்ந்து விட்டுச் சென்றதாக தல புராணம் சொல்கிறது. அவிநாசி கோயம்புத்தூருக்கு அருகே உள்ளது. இறந்த பின் மீண்டும் உயிர்ப்பெற்று வாழ்ந்தவர்களில் ஏயர்கோன் கலிக்காம நாயனாரும் ஒருவர்.

No comments:

Post a Comment