திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், தென்காசி- திருநெல்வேலி சாலையில் அமைந்துள்ளது பாவூர்சத்திரம். இவ்வூரில் இருந்து சுரண்டை செல்லும் வழியில் தான் கீழப்பாவூர் காணப்படுகிறது. இந்த ஊர் முற்காலத்தில் ‘சத்திரிய சிகாமணி நல்லூர்’ என வழங்கப்பட்டு வந்ததாக கல்வெட்டுகள் பறைசாற்றுகிறது. நரசிம்ம அவதாரக் கோலத்தை இவ்வூரில்தான் பகவான் காட்டினார் என்றும், அதனால் இவ்வூர் ‘தென்னகத்து அகோபிலம்' என்றும் சொல்லப்படுகிறது.
இங்கு தற்போதுள்ள நூலகத்தின் பின்புறம் வழியாக குருக்கள் மடம் பகுதிக்கு சென்றால், அங்கே சிவலோக பண்டாரம் ஜீவ சமாதி கோவில் உள்ளது.
இந்த ஆலயத்தினைப் பற்றி ஆரம்ப காலத்தில் யாரும் அறியாமலேயே இருந்தனர். பிற்காலத்தில் இடிந்து கிடந்த கற்களால் கட்டப்பட்ட ஆலயத்தை அவரது வாரிசு தாரர்கள் சீரமைக்க முயற்சி செய்தனர். இதற்காக தேவ பிரசன்னம் பார்த்த போது, பல அற்புத தகவல்கள் கிடைத்தன. அவை அனைத்தும் சிவலோக பண்டாரத்தின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக அமைந்திருந்தது.
சுமார் 240 முதல் 400 வருடங்களுக்கு முன்னதாக ஜீவ சமாதி கட்டப்பட்டிருக்கலாம் என தேவ பிரசன்னம் துலங்கியது. இனி இங்கு ஜீவ சமாதியான சிவலோக பண்டாரத்தின் வாழ்க்கை வரலாறு குறித்து காணலாம்.
வடபகுதியில் இருந்து புண்ணிய யாத்திரையாக கீழப்பாவூர் வந்தவர் தான் சிவலோக பண்டாரம். இவர் சிற்றாறு செழிப்பாக்கும் கீழப்பாவூரைக் கண்டார். மனம் பூரித்தார். அருமையான மரம் செடிகளுக்கு இடையே நீர்வளமும், நிலவளமும், மக்கள் வளமும் கொண்ட அவ்வூர் அவருக்கு மன அமைதியைத் தந்தது. இனி இங்கேயே அமர்ந்திருப்பது என முடிவு செய்தார். அங்கு அவர் சிவனை பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தார்.
தனியாக இருந்து இறைவனை வழிபட்டு வந்த அவரிடம், சில காலத்தில் பல சீடர்கள் சேர்ந்தனர். அவர்களுக்கும் உபதேசம் செய்து, அங்கு வரும் மக்களுக்கும் அருள்பாலித்து வந்தார். அங்கிருக்கும் போதே பல மூலிகைகளை அறிந்து அவற்றை கொண்டு மக்கள் நோயை தீர்த்து வந்தார். எனவே இவரை ஆன்மிகவாதியாக மட்டும் மக்கள் வணங்காமல், நல்லதொரு மருத்துவராகவும் எண்ணி வணங்கி வந்தனர். இவரின் அற்புத பிரசாதம் கஞ்சியாகும். இந்த கஞ்சியை காய்த்து ஏழைகளுக்கு வழங்கி வந்தார். அதையும் ஓலைப்பட்டையில் தான் வழங்குவார். இதைக் குடித்து தீராத நோய்கள் எல்லாம் நீங்கி சென்றவர்கள் பலர்.
சிவலோக பண்டாரத்தின் அற்புத சக்தி பரவியதால், நாளுக்கு நாள் இவரை காண வரும் பக்தர்களும் அதிகரித்தனர். இவர் தன்னுடைய தவவலிமை பேணி பாதுகாத்து வந்தார். இதற்காக பல வேளைகளில் இவர், மேற்கு தொடர்ச்சி மலையிலும் யாத்திரை செய்வார். அதோடு மட்டுமல்லாமல் பல புண்ணிய சேத்திரங்களுக்கும் சென்று வந்தார். அவர் வெளியே செல்லும் நேரங்களில் சீடர்கள் அந்தப் பகுதி மக்களுக்கு அருள் வழங்கி வந்தனர். எனவே தான் சிவலோக பண்டாரம் அமர்ந்த இடம் ‘குருக்கள் மடம்’ என்று அழைக்கப்பட்டது.
திருநெல்வேலி நகரில் உள்ள நெல்லையப்பர் ஆலயத்தில் ஆனித்தேரோட்ட நிகழ்ச்சி தான் மணி மகுடமான நிகழ்வு. இச்சமயத்தில் தேர் ஆடி அசைந்து வருவதை காண கண்கோடி வேண்டும். எனவே தான் இத்திருவிழாவில் சிவலோக பண்டாரம் கலந்து கொண்டார். சந்நியாசி கோலத்தில் இருந்த அவர், பொதுமக்களோடு மக்களாக கலந்து மிகுந்த ஆர்வம் கொண்டு தேரின் முன் சென்றார். தேரை இழுக்க முடிவு செய்து கயிறைப் பிடித்தார். அப்போது அங்கு வந்த சிலர், இவரைச் சாதாரணப் பண்டாரம் என நினைத்து, ‘வேறுபக்கம் போய் தேரை இழுங்கள்' என விரட்டி விட்டனர்.
இதனால் கோபமடைந்த சிவலோக பண்டாரம் அங்கிருந்து அகன்று விட்டார். அவர் சென்ற பின் பலரும் தேரை இழுக்க, தேர் கொஞ்சம் கூட அசையாமல் நின்றது. தேரின் சக்கரத்தில் ஏதாவது சிக்கிக் கொண்டிருக்கிறதா? என்று பார்த்தால் அப்படி ஒன்றும் இல்லை. தேர் நகராமல் நிலைகொண்டு நின்றதற்கான காரணம் யாருக்கும் விளங்கவில்லை. பல மணிநேரம் தேர் அங்கேயே நின்று விட்டது. என்ன செய்வது ஏது செய்வது என அனைவரும் திக்குமுக்காடினர்.
அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், ‘தேர் இழுக்க வந்த சந்நியாசி ஒருவரை எல்லோரும் விரட்டி விட்டனர். அவரைக் கூட்டி வந்து தேரை இழுங்கள். அப்போது தான் தேர் நகரும்' என கூறினார்.
உடனே அவரைத் தேடி கீழப்பாவூர் ஓடி வந்தனர். அவர் புன் முறுவலோடு நெல்லை சென்று தேரின் கயிறைப் பிடித்து கொடுக்கத் தேர் நகன்றது. தவ வலிமை மிகுந்த தன் பக்தனின் புகழைப் பரப்புவதற்காக, நெல்லையப்பரே அந்தத் தேரை நகர விடாமல் செய்துவிட்டதாக அந்தப் பகுதி மக்கள் பேசிக்கொண்டனர்.
நெல்லையப்பர் தேர் சம்பவத்திற்குப் பிறகு, சிவலோக பண்டாரத்தின் புகழ் எட்டு திக்கும் பரவிற்று. நோய் கொண்டவர்கள் வந்து அவரைச் சந்தித்து நோய் நீங்கிச் சென்றனர். பேய் பிடித்தவர்கள் அவரை வணங்கி நற்கதி அடைந்தனர். இவர்களுக்கு எல்லாம் ஒரே மருந்து, பட்டை கஞ்சி தான். விழாக் காலங்களில் மிகப்பெரிய அளவில் கஞ்சியை அன்னதானமாக வழங்குவார். எவ்வளவு பேர் வந்தாலும், பனை ஓலைப் பட்டையில் தான் கஞ்சி வழங்கப்படுமாம்.
குருக்கள் மடத்தில் இருக்கும் சமயம் தவிர, சிவலோக பண்டாரம் கீழப்பாவூர் நரசிம்மப்பெருமாள் கோவிலுக்குச் செல்வார். அங்குள்ளத் தெப்பக்குளத்தில் நீராடுவது, தண்ணீரிலேயே தனது ஆடையை படுக்கையாக விரித்து, அதில் படுத்திருப்பது போன்ற சித்து வேலைகளையும் செய்திருக்கிறார். காலங்கள் கடந்தது. ஒரு கால கட்டத்தில் சிவலோக பண்டாரம் சமாதி நிலை அடைந்தார். அவருக்கு குருக்கள் மடத்திலேயே சமாதி வைக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் மிகவும் பிரமாதமாக வழிபாடு நடந்த அந்த இடம் பிற்காலத்தில் அப்படியே மங்கி போய் விட்டது. எனவே குருக்கள் மடத்தில் பூஜை போன்ற காரியங்கள் எதுவும் நடைபெறவில்லை.
இதற்கிடையில் கீழப்பாவூர் கிராமத்தில் அமைந்துள்ளப் பிற கோவில்களைப் புதுப்பிக்கும் சமயம், தேவப் பிரசன்னம் பார்த்தனர். அவ்வூருக்கு சந்நியாசி சாபம் உள்ளதாகக் கூறினர். யார் அந்த சந்நியாசி என ஆராய்ந்தப் போது சிவலோக பண்டாரமாக இருக்கலாமென்று அவ்வூரின் மூத்தக் குடிமக்கள் கூறினர். எனவே அவரது கோவிலைப் புதுப்பிக்கும் வேலையைத் தொடங்கினர்.
கோவிலைப் புதுப்பிக்கும் சமயம், கல் மண்டபம் கட்டப்பட வேண்டியக் காரணத்தினால், ஆறு அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு, அஸ்திவாரம் அமைக்கப்பட்டது. தோண்டும் சமயம், சிவலோக பண்டாரம் விக்கிரகம் அமைக்கப்பட்டிருந்ததற்கு நேர் கீழாக, அவரது அங்கங்கள் (எலும்புகள்) கிடைத்தது. அதை யெல்லாம் அப்படியே பாதுகாப்பாக எடுத்து வைத்தனர். அதன் பின் கட்டிடம் கட்டும் சமயம், அவை மீண்டும் அவ்விடத்திலேயே உரிய மரியாதையுடன் வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலயம் குழந்தைப் பேறுக்கு மிகவும் முக்கியத் தலமாகக் கருதப்படுகிறது. எனவே இங்கு வந்து இவரை வணங்கி குழந்தை வரம் பெற்று செல்கிறார்கள். இந்த ஆலயத்தின் தல விருட்சம் ஆல மரமாகும். இவ்விடத்தில் மாவிலங்கு மரம் என்னும் மகாலிங்க மரம் ஒரு காலத்தில் இருந்துள்ளது. இம்மரத்தின் பட்டைகளை அவித்து சாறு எடுத்து, கால் மூட்டினில் ஊற்றி வந்தால் மூட்டு வலி குணமடையுமாம். இம்மரம் வில்வத்திற்கு இணையானது. வில்வ இலையைப் போன்றே அர்ச்சனைக்கும் பயன்படக் கூடியது. இந்த மரம் தற்போது காணப்படவில்லை. எனவே புதிதாக ஒரு மரம் வைத்து வளர்த்து வருகின்றனர். இதுவும் நோய் தீர்க்கும் அரிய பொக்கிஷமே.
இக்கோவில் மூலஸ்தானம் மற்றும் அர்த்த மண்டபம் ஆகிய இரு அறைகள் கொண்டதாகும். மூலஸ்தானத்தில் சிவலோக பண்டாரம் கற்சிலை வடிவாகக் காட்சித் தருகிறார். அவருடன் விநாயகர் அமர்ந்து அருள்பாலிக்கிறார். சிவலோக பண்டாரத்தின் கோபத்தைத் தணிக்கவே விநாயகர் இங்கு அருள்புரிகிறார்.
பொதுவாகக் கோவில்களில் விசேஷங்கள் நடைபெறும் போது, அதில் கலந்து கொள்பவர்கள் யாரும் எந்தக் காரணத்திற்காகவும் கோபம் கொள்வது இல்லை. ஆனால் சித்ரா பவுர்ணமி அன்று இவருக்கு நடைபெறும் பூஜை சமயத்தில், அங்குள்ள யாராவது ஒருவர் மற்றவர் மீது சினம் கொள்வது வழக்கமாக உள்ளது. அதனைக் காணும் அக்கோவிலைச் சார்ந்தவர்கள் சினம் கொண்டவர் வடிவில் இன்றும் சிவலோக பண்டாரம் பிரசன்னமாகிறார் என்று கூறுவதுண்டு.
இக்கோவிலின் அருகே இவர் வணங்கிய இரு சிவலிங்கங்கள், நந்திதேவர், ஆஞ்சநேயர், ஐந்து துவாரப் பாலகர்கள், ஏழு நாகர்கள் ஆகிய தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.
சித்திரை மாதத்தில் பவுர்ணமி தினத்தன்று, அவருக்கு சிறப்பு அபிஷேகங்களும், பெருமளவில் அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.
சாபம் பெற்ற ஊர்
சிவலோக பண்டாரம் மடத்திற்கு வரும் பக்தர்களுக்கு பனை ஓலை பட்டையில் கஞ்சி வழங்கப்படும். அதனை வாங்கி உண்ணும் பக்தர்கள், ஓலை பட்டைகளை கீழே போட்டு விடுவார்கள். அது காற்றில் பறந்து சென்று, மடத்திற்கு கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மக்கள் வசிக்கும் தெருக்களில் வந்து விழுந்தது. இதனால் கோபமடைந்த அத்தெருவில் வாழ்ந்தவர்கள் சிவலோக பண்டாரத்திடம் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் அந்தத் தெரு மக்களின் எதிர்ப்பு வலுத்தது. இதனால் அந்தத் தெருவில் வாழ்ந்தவர்கள் கூட்டமாகத் திரண்டனர். பண்டாரத்தின் ஓலைக் குடிசை மற்றும் மடத்தின் கூரைகளைப் பிரித்துப்போட்டனர். அதோடு அவற்றுக்கு தீயிட்டும் கொளுத்தினர். உடனே சிவலோக பண்டாரம் அவர்களை நோக்கிச் சாபமிட்டார் என்றும், அவ்வேளையில் அவர்களின் தெரு தீப்பற்றி எரிந்து அழிந்துவிட்டதாகவும் கூறுகிறார்கள். இன்று வரை அத்தெரு வளர்ச்சி அடையாது ‘வெட்டுப்பட்டான் முடுக்கு’ என்ற பெயரில் வெறும் மண் பாதையாகவே காணப்படுகிறது. தற்சமயம் வீடு கட்டுவதற்கு வாணம் தோண்டும்போது, அக்கால வீடுகளின் அடித் தளம் அங்கே காணப்படுவதும் உண்டு.
இக்கோவிலின் திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடந்துள்ளது. புதுபொலிவுடன் காணும் இக்கோவிலை வணங்க பல இடங்களில் இருந்து மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
No comments:
Post a Comment