ராமனின் மகன்களான லவன், குசன் ஆகியோருக்கு சீதாதேவியுடன் சேர்ந்து அமைக்கப்பட்ட சிறப்புடைய கோவிலாகக் கேரள மாநிலம், புல்பள்ளி என்ற இடத்தில் உள்ள ஆலயம் திகழ்கிறது.
பதினெட்டாம் நூற்றாண்டில் மலபார் பகுதியை ஆட்சி செய்த வீர கேரள வர்மா பழசிராஜா என்பவர், மூலக்கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள்ளாகச் சீதாதேவியுடன் லவன், குசன் ஆகியோரையும் சேர்த்துப் புதிய கோவில் ஒன்றைக் கட்டுவித்தான். அக்கோவிலேத் தற்போது புகழ் பெற்ற சீதாதேவி, லவன், குசன் கோவிலாக இருக்கிறது என்கிறது தல வரலாறு.
இக்கோவிலில் 41 நாட்கள் நடைபெறும் மண்டல பூஜை காலங்களில், சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மலையாள நாட்காட்டியின்படி மகரம் (தை) மாதம் வரும் ரேவதி நட்சத்திர நாளில் கோவில் நிறுவப்பட்ட நாள் கொண்டாடப்படுகிறது. தனு (மார்கழி) மாதம் 18 முதல் 23 வரையிலான நாட்களில் ‘சுட்டு விளக்குத் திருவிழா’ எனப்படும் சிறப்புத் திருவிழா நடைபெறுகிறது.
சீதாதேவி, லவன், குசன் கோவிலில் தினமும் மூன்று வேளை பூஜைகள் செய்யப்படுகின்றன. சீதாதேவிக்கு வெள்ளை அரிசிச் சாதம் மற்றும் பாயசமும், லவன், குசனுக்கு இனிப்பு அப்பமும் படைக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது. இங்கு வழிபடுபவர்களுக்கு குழந்தைப்பேறு உள்ளிட்ட அனைத்துச் செல்வங்களும் கிடைப்பதுடன், மனநிறைவும் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
கோழிக்கோடு மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் சுல்தான் பேட்டரி என்ற ஊரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும், மீனங்காடி என்ற இடத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும், கோழிக்கோடு-மனந்தாவடி மாநில நெடுஞ்சாலையில் உள்ள பனமரம் என்ற பகுதியில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் புல்பள்ளி இருக்கிறது. இங்கு செல்ல ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன.
No comments:
Post a Comment