Sunday 17 June 2018

சுக்கிரனால் ஏற்படும் நோய்கள்

சுக்கிரனால் ஏற்படும் நோய்கள்

நவக்கிரகங்களில் குரு பகவானைப் போலவே, சுக்கிரனும் சுப கிரகமாக அமைந்தவர். அவர் ஒருவரது ஜாதகத்தில் உண்டாக்கும் யோகங்கள் பல. 

சுக்கிர யோகம் அவ்வளவு எளிதாக யாருக்கும் அமையாது. லட்சத்தில் ஒருவருக்கு தான், சுக்கிர யோகம் வாய்க்கும். அடுத்த வேளை உணவுக்கே வழியின்றி தவிக்கும் மனிதனைக்கூட, அடுத்த நொடியே கோடீஸ்வரனாக மாற்றிக் காட்டும் வீரியம் மிகுந்தது சுக்கிர யோகம். உடல், முகம் எல்லாம் காந்த ஈர்ப்பும், ஜொலிஜொலிப்பும் உண்டாகும். அந்த ஜாதகரை சுற்றி எந்த நேரமும் பெண்கள் கூட்டம் இருக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் குவியும். மக்கள் விரும்பும் கலைகளைக் கற்று மதிக்கப்படுவார்கள். அரசன் போன்ற வாழ்க்கை அமையும். பெண்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். லாட்டரி, சூதாட்டம் மூலம் பெரும் தொகை வரவு இருக்கும். திருமண யோகம், மனைவி மூலம் வரக்கூடிய வரவுகள் அனைத்தையும் தருவது சுக்கிர யோகம் தான். பெண் தொழிலாளர்களைக் கொண்டு தொழிற்சாலை நடத்தும் யோகம், கப்பல் வியாபாரம், பஸ் அதிபதி யோகம், சினிமாத் துறையில் புகழடைந்து பெரும் பணம் சம்பாதிப்பது போன்றவற்றை அளிப்பதும் சுக்கிர யோகம் தான். மதம், ஜாதி மாறி திருமணம் செய்வது, முறை தவறி திருமணம் செய்வது, திருட்டுத்தனமான திருமணம் செய்வது போன்றவற்றுக்கு சுக்கிரன்தான் காரணம்.

சுக்ரனால் வரக்கூடிய நோய்கள்:-

நமது உடலில் கெட்ட கொழுப்பிற்கு அதிபதியாக இருப்பவர் சுக்கிரன். உடலில் உப்புச் சத்து அதிகமாக இருப்பதற்கும் சுக்கிரனே காரணம். ஒற்றைக் கண் அல்லது இடது கண் பாதிப்பு, கண்களில் பூ விழுதல் போன்றவற்றுக்கும் சுக்கிரனின் பாதிப்புதான் காரணமாகும். நெஞ்சில் கெட்டியான சளி, மாலைக்கண் நோய், பெண்களுக்கு வரக்கூடிய நோய்கள் ஒரு ஆணுக்கு வருவதும், ஆண்களுக்கு வரக்கூடிய நோய்கள் ஒரு பெண்ணுக்கு வருவதும் சுக்கிரனின் பாதிப்பால் தான். உடலில் சர்க்கரை நோய் அதிகரிப்பு, சிறுநீரகத்தில் கல், கட்டிகள், பிறப்புறுப்புகளில் புண், அரிப்பு, தோல் வெடிப்பு, பால்வினை நோய்களுக்கும் சுக்கிரனே காரணம். காதல் முத்திப்போய் கிறுக்குப் பிடித்து, கை, கால்களை வெட்டிக்கொள்வது, உடலில் உற்பத்தியாகும் சிறுநீர் உடனடியாக வெளியேறுவது, கணவன்-மனைவி தாம்பத்தியத்தால் உண்டாகும் நோய், தவறான உறவுகளால் வரக்கூடிய நோய், உடலில் சேரும் கெட்டக்கழிவுகளால் உண்டாகும் நோய்கள், மது போன்ற போதை வஸ்துக்களால் ஏற்படும் நோய், ஆண் ஒருவர் பெண்ணாக உருவம் மாறுதல், உடலில் சர்க்கரை அளவு குறைவதால் ஏற்படும் மயக்கம் அல்லது உயிரிழப்பு, வாசனை திரவியத்தால் ஏற்படும் ஒவ்வாமை மற்றும் மயக்கம் போன்றவற்றுக்கும் காரணமானவர் சுக்கிரன். 

சுக்கிரன் தரும் பாதிப்புகள்:- 

1. சுக்கிரன் பகை ராசியான கடகம், சிம்மம் ஆகிய ராசிகளில் நின்று இருந்தால், நெஞ்சு சளி அடிக்கடி தொல்லை கொடுக்கும். மனதிற்கு பிடிக்காத மனைவி அமையக்கூடும். 

2. சுக்கிரன் நீச்ச ராசியான கன்னிராசியில் இருந்தால், இன உறுப்புகள் பாதிப்பு இருக்கும். விந்து நீர்த்து போக கூடும். விந்து உற்பத்தி தடையாகும். மண வாழ்க்கை வெறுப்பு தட்டும். காமக்களியாட்டத்தில் மனம் ஈடுபடும். உடல் ஒத்துழைப்பு கொடுக்காது. மனைவி மீது பற்றும், பரிவும், பாசமும் இருக்காது. 

3. சுக்கிரன் பகை கிரகங்களான சூரியன், சந்திரனோடு இணைந்து எந்த ராசியில் இருந்தாலும், அந்த நபரின் மனம் எப்போதும் உடல் உறவு பற்றியே சிந்திக்கும். சர்க்கரை நோய் கட்டாயம் வரும். நரம்புதளர்வு ஏற்படும். பெரும்பாலும் சுய இன்பத்திலேயே நாட்டம் அதிகம் இருக்கும். 

4. சுக்கிரன் பகை கிரகமான நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தால், தோல் நோய்கள் வரக்கூடும். சிரங்கு புண்கள், ஆறாத புண்கள் உண்டாகும். உடல் உஷ்ணத்தால் விந்தணுக்கள் உற்பத்தி குறைவாக இருக்கும். மனைவியோடு மன இணக்கம் இருக்காது. 

5. சுக்கிரன் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் நின்று இருந்தால், காம சுகத்திற்கு அலைய வேண்டி வரும். பல பெண்களின் தொடர்புகள் மூலம் நோய்கள் வரக்கூடும். நரம்பு தளர்வு, ரத்தக் கொதிப்பு, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வரக்கூடும். மனைவியை விட்டுப் பிரியும் சூழ்நிலை உருவாகும். சிலருக்கு இரண்டு தாரம் அமையும். 

6. சுக்கிரன் 6, 8, 12 ஆகிய இடங்களின் அதிபதியோடு இணைந்து இருந்தாலோ அல்லது அதன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ அந்த ஜாதகர், கெட்ட பழக்க வழக்கத்தால் நோய்களைத் தேடிக் கொள்வார். போதை வஸ்துக்களுக்கு அடிமையாக இருப்பார். எந்த நேரமும் மனம் காம சுகத்தையே நாடி இருப்பதால், பல நோய்க்கு இவரே காரணமாக இருப்பார். இவரது மனைவியின் குணம் வித்தியாசமாக இருக்கும். பிடிவாதம், திமிர், ஆணவப்போக்கு தென்படும். 

7. சுக்கிரன் லக்னத்திற்கு பாதகாதிபதியாக சேர்ந்து இருந்தால், விந்து உற்பத்தியை தடை செய்யும். விதைப் பையில் கோளாறு உண்டாகும். சர்க்கரை நோய் நிச்சயம் வரும். உடலில் கெட்ட கொழுப்பு உற்பத்தியாகி உபாதைகளைக் கொடுக்கும். சிறுநீரகத்தில் கற்கள் உற்பத்தியாகும். இவர் தன்னுடைய மனைவி மீது வெறுப்பை உமிழ்வார். 

8. சுக்கிரனே லக்னத்திற்கு பாதகாதிபதியாக இருந்தால், சர்க்கரை நோய் வரக்கூடும். சிறுநீரகத்தில் கற்கள் சேரும். விதைப் பையில் பிரச்சினைகள் இருக்கும். போதை வஸ்துக்கள் மூலம் நோய்கள் வரக்கூடும். உடல் உறவில் நாட்டம் இல்லாமல் இருக்கும். சுய இன்ப பிரியராக இருப்பார்கள். இவரது மனைவி நோயாளியாக இருப்பார். கணவன்- மனைவி இணக்கம் இல்லாமல் இருக்கக்கூடும். 9. சுக்கிரனை பகை கிரகங்கள் அல்லது பாதகாதிபதி கிரக பார்வை செய்தால், உடலில் கெட்ட நீர் சேரும். உடல் எப்போதும் கழிவுநீரால் துர்நாற்றம் அடிக்கும். விந்து கெட்டித் தன்மை இருக்காது. சிறுநீர் பிரச்சினைகள் வரக்கூடும். இவர் தனது மனைவியின் நடவடிக்கையால், ‘ஏன் திருமணம் செய்தோம்?’ என்கிற மனநிலைக்கு போய்விடுவார். 

சுக்கிரனின் உலக பாதிப்பு:-

சுக்கிரன் பகை அல்லது நீச்ச ராசியில் இருந்தாலோ, பகை கிரகமான சூரியன் சந்திரனுடன் இணைந்து இருந்தாலோ சுக்கிரன் பாதிப்பு அடையும். நாடுகளுக்கிடையே குழப்பங்களும், பிரச்சினைகளும் வரக்கூடும். பெண்கள் அரசாளும் நாடுகளில் போர் நடக்கும். பெண்கள், ஆட்சியை வெறுப்பார்கள். நாட்டை ஆட்சி செய்யும் பெண்கள், கொலை செய்ய நேரலாம். பெண்களின் கற்புக்கு களங்கம் வரும். பெண்கள் நிம்மதியாக வாழ முடியாமல் போகும். நீர் நிலைகள், குளங்கள் வற்றிப் போகும். அணைக்கட்டுகள் உடைப்பு ஏற்படும். பருவம் தாண்டிய மழையால் மக்கள் அவதிப்படக் கூடும். திடீர் மழையால், திடீர் வெள்ளப்பெருக்கால் மனித உயிரிழப்புகள் உண்டாகும். சினிமா, நாடகம் மற்றும் கூத்து கலைகளில் தொய்வு உண்டாகும். நாட்டில் காச நோய்கள் காற்றின் மூலம் பரவும். தண்ணீரில் புது புது நோய்கள் பரவும். 

No comments:

Post a Comment