Monday, 25 June 2018

மழலைச் செல்வம் தரும் ஐய்யனார்

மழலைச் செல்வம் தரும் ஐய்யனார்

விருதுநகர் அருகே “ஏழாயிரம்பண்ணை’ என்ற பகுதியை சிதம்பரபாண்டியன் என்ற குறுநில மன்னர் ஆண்டு வந்தார். தனது குலதெய்வமான மதுரையில் உள்ள கோச்சடை ஐய்யனார் கோயிலுக்கு குதிரையில் சென்று வழிபட்டு வந்த பின்புதான் மற்ற வேலைகளை ஆரம்பிப்பார் சிதம்பர பாண்டியன். 

அவரால் தனது முதுமை காலத்தில் ஐய்யனாரை வழிபட முடியாமல் போனது. இதனால் மனம் வருந்தி சோர்வுற்று இருந்தார். ஒரு நாள் அவரின் கனவில் தோன்றிய ஐய்யனார், “நான் உன் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் குளத்தின் கரையில் தென் மேற்கில் கருவேலமரத்தின் கீழ் காட்சியளிப்பேன்’’ என்றார். 

இதையடுத்து தனது பரிவாரங்களுடன் “ஏழாயிரம் பண்ணை’ அருகில் உள்ள திருவேங்கடம் மற்றும் பல்வேறு ஊர்களுக்கு சென்று தேடினார் சிதம்பர பாண்டியன். அப்போது மலையின் அடிவாரத்தில் உள்ள குளத்தின் கரையில் ஒரு மயில் பறந்து சென்றது. அதை மன்னரின் கண்கள் நோக்க, அப்போது ஐய்யனார் எலுமிச்சை கனியின் வடிவில் காட்சியளித்தார். மயில் மூலம் தன்னைக் காண்பித்த ஐய்யனாருக்கு அங்கே கோயில் எழுப்பினார் மன்னர். அங்கே பதினெட்டாம்படி கருப்பசாமி மற்றும் இருளாண்டி ஆகிய சுவாமிகளையும் பிரதிஷ்டை செய்தார். 

சிதம்பர பாண்டியனுக்குப் பிறகு பராமரிப்பு இல்லாமல் இருந்தது இவ்வாலயம். கோயிலின் முன் குதிரைகள் மற்றும் வீரபத்திரன், லாடசன்னாசி, தவசி, தம்பிரான்,சனீஸ்வரர் மற்றும் பல்வேறு சுவாமிகளுக்கு ஆலயம் எழுப்பப்பட்டு கடந்த 2007ஆம் வருடம் குடமுழுக்கு நடைபெற்றது. தற்போது முறையாக பராமரிக்கப்பட்டு, இரண்டு கால பூஜைகள் நடைபெறுகிறது. 

இக்கோயிலின் சிறப்பு ஸ்ரீராமபுலி ஐய்யனார் தவக்கோலத்தில் உட்கார்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். மேலும் குழந்தை பேறு இல்லாதவர்கள் ஐய்யனாரை வழிபட்டால் அந்த பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

அமைவிடம்: ராஜபாளையத்தில் இருந்து திருவேங்கடம் வழியாக 43 கி.மீ. தொலைவு. கோவில்பட்டியில் இருந்து 14 கி.மீ தொலைவு.

No comments:

Post a Comment