கும்பகோணம் - காரைக்கால் சாலையில் திருநீலக்குடி என்ற ஊர் உள்ளது. இதன் அருகே கொத்துக்கோவில் என்ற இடம் உள்ளது. இங்கு இறங்கி, பசுமை தாலாட்டும் வயல்வெளிகளை ரசித்துக் கொண்டே ½ கி.மீ பயணம் செய்தால், மேலையூர் கிராமத்தை அடையலாம்.
இதன் புராணப் பெயர் உன்னதபுரம் என்பதாகும். இங்கு தான் சந்திரமவுலீஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. மூன்றடுக்கு ராஜகோபுரம் கம்பீரமாக நிற்க, ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் விசாலமான பிரகாரம். எதிரே நந்திதேவர் தனி மண்டபத்தில் அருள்பாலிக்கிறார். இவரைத் கடந்தால் மகாமண்டபம் உள்ளது. எதிரே நந்தியும், பலி பீடமும் இருக்கிறது.
அடுத்துள்ள அர்த்த மண்டபத்தின் நுழைவுவாசலில் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் தண்டாயுதபாணியும் அருள்பாலிக்கின்றனர். உள்ளே கருவறையில் இறைவன் சந்திரமவுலீஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக் கிறார்.
மகாமண்டபத்தின் வலதுபுறம் இறைவி ஆனந்தவல்லி நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் வீற்றிருக்கிறார். இந்த அன்னை சாந்த முகத்துடன் புன்னகை தவழ இருக்கும் அழகே அழகு. அன்னையின் வலது மேல் கரத்தில் ருத்ராட்ச மாலையும், இடது மேல் கரத்தில் பத்மமும், கீழ் வலது கரத்தில் அபய ஹஸ்த முத்திரையுடனும், கீழ் இடது கரத்தில் வரத ஹஸ்த முத்திரையுடனும் வீற்றிருந்து தன்னை நம்பி வரும் பக்தர்கள் அருள்பாலிக்கிறார்.
இறைவனின் தேவகோட்டத்தில் தெற்கே தட்சிணாமூர்த்தி வீற்றிருந்து அருள்கிறார். பிரகாரத்தின் மேற்கு திசையில் பிள்ளையார், விசாலாட்சி, விசுவ நாதர், முருகன், வள்ளி, தெய்வானை, சுந்தரேசுவரர், மீனாட்சி, நாகர், கஜலட்சுமி ஆகியோர் திருமேனிகள் உள்ளன. வடக்குப் பிரகாரத்தில் சண்டீஸ்வரரின் சன்னிதி உள்ளது. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் தனியாக அமர்ந்து அருள்கிறார்கள். கிழக்கு பிரகாரத்தில் சனி பகவான், சூரியன், பைரவர் திருமேனிகள் உள்ளன.
இந்த ஆலயம் பற்றிய தல புராணம் எதுவும் இல்லை. ஆனால் செவி வழி தகவல்கள் உள்ளன. அது என்ன?
காஞ்சி மகாப் பெரியவரான காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகர ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தரிசனம் செய்வதற்காக ஒவ்வொரு தலமாக சென்று கொண்டிருந்தார். அதன் ஒரு பகுதியாக உன்னதபுரம் என்ற இந்த ஊருக்கும் வந்தார். அவர் வந்தது ஓர் இரவு நேரம் என்பதால், அங்கேயே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அன்று இரவு அவர் கனவில் இறைவன், ஆதிசங்கரர் வடிவில் தோன்றினார்.
‘சந்திரமவுலீஸ்வரராக யாம் அருளாட்சி புரிய இத்தலத்தில் ஓர் ஆலயம் எழுப்புக’ என்று கூறிவிட்டு மறைந்துவிட்டார்.
அதன்படி காஞ்சி மகாப் பெரியவர் இத்தலத்திலேயே தங்கி, ஊர்மக்கள் உதவியுடன் ஒரு கோவிலை கட்டி முடித்தார். பின், கும்பாபிஷேகமும் நடத்தி வைத்தார். இறைவனுக்கு சந்திர மவுலீஸ்வரர் என்றும், இறைவிக்கு ஆனந்த வல்லி என்றும் பெயரிட்டு வணங்க, அதுவே இறைவன், இறைவி பெயராக நிலைத்துவிட்டது.
இந்த ஆலயத்தில் இறைவனுக்கும், இறைவிக்கும், பிற தெய்வங்களுக்கும் உற்சவ மூர்த்தி கிடையாது. இறைவனை வணங்க நினைப்பவர்கள் ஆலயத்திற்கு வந்து வணங்கி அருள் பெற வேண்டும் என்பதால் உற்சவ மூர்த்தியை தவிர்த்துவிட்டதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
ஆலயத்தின் தலவிருட்சம் வில்வம். இங்கு இறைவி யின் சன்னிதி முன் சுமார் 8 அடி நீளமும் 3½ அடி அகலமும் கொண்ட சலவைக் கல் ஒன்றை தரையில் பதித்துள்ளனர். தரையில் விழுந்து வணங்கும் பக்தர்களுக்காக இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாம்.
இந்த ஆலயத்தில் துர்க்கையும் இல்லை. இங்கு அம்பாளே அனைத்தும் என எல்லோரும் உணர வேண்டும் என்பதால், துர்க்கை அம்மனை தனியாகப் பிரதிஷ்டை செய்யவில்லையாம்.
இறைவி- இறைவன் முதல் எழுத்தைச் சேர்த்தால் ‘ஆச’ என்ற வார்த்தை வரும். மகாப்பெரியவரின் ‘ஆசை’ கோவில் இது என்பதால், இறைவி இறைவனுக்கு இப்படி பெயர் சூட்டப்பட்டதாக சில பக்தர்கள் கூறுகின்றனர்.
இந்த ஊரில் இந்த ஆலயம் தவிர வரசக்தி விநாயகர், பைரவர், லட்சுமி நாராயணப் பெருமாள், ஆஞ்சநேயர், செல்லியம்மன், அய்யனார் ஆலயங்களும் இருக்கின்றன.
சந்திரமவுலீஸ்வரர் ஆலயத்தில் தினமும் இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. இந்தக் கோவில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12.30 வரையிலும், மாலை 4.30 முதல் இரவு 8.30 வரையிலும் திறந்திருக்கும்.
சிவராத்திரி, பிரதோஷம், நவராத்திரி, புத்தாண்டு, சோமவாரம், ஆடி வெள்ளி, தை வெள்ளி, கார்த்திகை, போன்ற நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று நடைபெறும் அன்னாபிஷேகத்தைக் காண திரளாக பக்தர்கள் கூடுகின்றனர்.
சந்திர தோஷம் உள்ளவர்கள் இறைவனையும் இறைவியையும் அபிஷேகம் செய்து வழிபட்டு, சர்க் கரைப் பொங்கல் படைத்து, அதனை பக்தர்களுக்கு வினியோகம் செய்தால் தோஷம் விலகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
கும்பகோணம் - காரைக்கால் வழித்தடத்தில் உள்ளது கொத்துக் கோவில் என்ற இடம். கும்பகோணத்தில் இருந்து இந்தப் பகுதிக்கு நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.
No comments:
Post a Comment