நோய் என்ற சொல்லுக்கு அதிபதியே சனி தான். நமது உடலில் வெளிப்படாத உள்நோய்களுக்கு காரணமாக இருப்பவர் சனி. சனி எந்த ராசியில் இருந்தால் என்ன நோய் தாக்கும் என்று பார்க்கலாம்.
* சனி பகை ராசியான கடகம், சிம்மம், விருச்சிகம் ராசிகளில் நின்று இருந்தால், உடல் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடு இருக்கலாம். மனம் சங்கடத்தில் இருக்கக்கூடும். நோய்க்குரிய மருந்துகள் எடுத்துக் கொள்வதில் கூட நம்பிக்கை இல்லாமல் இருப்பார்கள். சின்ன காய்ச்சல் வந்தால் கூட மரண பயம் அப்பிக் கொள்ளும்.
* சனி நீச்ச ராசியான மேஷ ராசியில் நின்று இருந்தால், மூலநோய் வரக்கூடும். மலச்சிக்கல் வரும். ரத்தத்தை பார்த்தாலே மயக்கம் வரும். ஏழரைச் சனி அல்லது அஷ்டம சனி காலத்தில் இந்த ஜாதகருக்கு மரணம் அல்லது மரணத்திற்கு நிகரான கண்டங்கள் உண்டாகும். வாகன பயணத்தில் கவனம் தேவை.
* சனி பகை கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய் இணைந்து எந்த ராசியில் இருந்தாலும், உடலில் பித்த நீர் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். போதை வஸ்துகள் பயன்படுத்தக் கூடாது. கை, கால் சோர்வு அடிக்கடி ஏற்படும். வேலைக்கு உடல் ஒத்துழைப்பு இல்லாமல் போய்விடும்.
* பகை கிரகங்களின் நட்சத்திர பாதத்தில் சனி நின்று இருந்தால், எந்த நேரமும் ஏதாவது உடல் உபாதை இருந்து கொண்டே இருக்கும். மற்றவர்கள் முகம் சுழிக்கும் வகையில் ஏதாவது செய்து கொண்டு இருப்பார்கள். தன் உடலைப் பற்றியோ, நோயை பற்றியோ பெரிதும் அக்கறை காட்ட மாட்டார்கள். அடிக்கடி கால் இடறி விழுதல், கை, கால் எலும்பு முறிவுகள் உண்டாகும்.
* சனி குரூரர் என்பதால், அவர் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைவு பெறுவது நல்லது. என்றாலும் 6-ம் இடத்தை விட 8, 12 ஆகிய இடங்களில் நிற்பது மிகவும் நல்லது. 6-ம் இடத்தில் சனி நின்றால், அந்த நபர் நோய்க்காகவே பிறந்தவர் என்று தான் கூற வேண்டும். தொற்று நோய்கள் உடனே பிடிக்கும். ஏழரைச்சனி மற்றும் அஷ்டம சனி காலத்தில் உடலில் உள்ள அனைத்து நோய்களும் வெளிப்படும். சிலருக்கு மரணம் உண்டாகலாம்.
* சனி கிரகம் 6, 8, 12 ஆகிய அதிபதிகளுடன் இணைந்து இருந்தாலோ அல்லது இதன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பார். தொற்று நோய்கள் பருவகால நோய்கள் உடனே தாக்கக் கூடும். அந்த ஜாதகரின் ஆயுள் சராசரியாக எழுபது வயது வரை இருக்கலாம்.
* சனி கிரகம் லக்னத்திற்கு பாதகாதிபதியுடன் அல்லது பாதக ஸ்தானத்தில் இருந்தாலோ, பாதகாதிபதியின் நட்சத்திர சாரத்தில் நின்று இருந்தாலோ, அந்த ஜாதகர் மன நோயாளி போல் நடந்து கொள்வார். உடலுக்கு ஆகாது என தெரிந்தும் அந்த உணவுகளையே உண்டு அவதிப்படுவார்.
* சனி கிரகமே லக்னத்திற்கு பாவியாக பாதகாதிபதியாக இருந்தால், சனியின் நிலையை பொறுத்தே பலன் எழுத வேண்டும் என்றாலும் சனி கிரகம் அவ்வப்போது ஏதாவது உடல் உபாதையை கொடுத்துக் கொண்டே இருக்கும்.
* சனி கிரகத்தின் மீது பகை கிரகங்கள் அல்லது பாதகாதிபதி பார்வை ஏற்பட்டால், அந்த ஜாதகர் மூலிகை எண்ணெய், நோய்க்கு உதவாத மருந்துகள் எடுத்து அவதிப்படுவார். போதை வஸ்துகள் மூலம் நோய்கள் வரக் கூடும். உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்காது.
No comments:
Post a Comment