ஆயிரம் நாக்கு கொண்ட ஆதிசேஷனின் அம்சமானவர் பதஞ்சலி முனிவர். இவர், தனக்கு தெரிந்த பாடங்கள் மற்றவர்களுக்கும் தெரிய வேண்டும் என ஆசைப்பட்டு, மாணவர்களைத் தேர்ந்தெடுத்தார். தனது விஷ சக்தி மற்றவர்களை தாக்கும் என்பதால், ஒரு திரைக்கு பின் அமர்ந்து, “யாரும் திரையை விலக்கி என்னைப் பார்க்கக் கூடாது. நான் உள்ளிருக்கும் தைரியத்தில் என் அனுமதியின்றி யாரும் வெளியே போகக்கூடாது,” என நிபந்தனை விதித்தார்.
ஒரு குறும்புக்கார மாணவன், திரை போட்டிருக்கும் மர்மத்தை அறிய திரையை விலக்கினான். அவ்வளவு தான்! உள்ளே ஆதிசேஷனின் வடிவில் உக்கிரத்தில் இருந்த ஆசிரியரின் விஷப்பார்வைக்கு அத்தனை பேரும் கருகி விட்டனர்.
சத்தம் கேட்ட ஆசிரியர் ஓடி வந்து பார்த்தார். பிள்ளைகள் கருகிக் கிடந்தனர். அப்போது, ஒரே ஒரு மாணவன் மட்டும் வெளியே இருந்து உள்ளே வந்தான். பதஞ்சலி அவனைப் பார்த்து விட்டார்.
அவருக்கு கோபம் வரவில்லை. இந்த ஒரு பிள்ளையாவது தப்பினானே என அவனை அருகில் அழைத்து, “எங்கே போனாய்,” என்றார். அவன், ஆசிரியரின் அனுமதியின்றி வெளியில் சென்றதற்கு மன்னிப்பு கேட்டு, வகுப்புக்கு 'கட்' அடித்த விபரத்தை தெரிவித்தான்.
அவனை மன்னித்து, பாடத்தை ஆரம்பித்தார். அவனோ சரியான மண்டு என்பதைப் புரிந்து கொண்ட முனிவர் தனது தெய்வீக சக்தியைப் பயன்படுத்தி, தனக்கு தெரிந்த எல்லாம் அவனுக்கும் தெரியட்டும் என்றார். குழந்தை ஒரே கணத்தில் ஞானியாகி விட்டான். இதைத்தான் யோகம் என்பர். எவ்வளவு திறமை குறைந்தவனாக இருந்தாலும், நேரம் வந்து விட்டால் எதையும் தடுக்க முடியாது.
No comments:
Post a Comment