Friday, 15 June 2018

சாட்சி சொன்ன தங்கக்கரண்டி


மகாபெரியவர் தினமும் நடத்தும், சந்திர மவுலீஸ்வர பூஜையில் பயன்படும் தங்க உத்தரணி (சிறு கரண்டி) காணாமல் போனது. சிப்பந்தியில் ஒருவர் தான் எடுத்திருப்பார் என்ற கோணத்தில் விசாரிக்க, இன்னார் என்பது தெரிந்தது. கண்டிப்புடன் உத்தரணியை கொண்டு வர, சுவாமிகள் உத்தரவு இடுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி நடக்கவில்லை.  சிப்பந்தியின் திருட்டு குணம் போக்க விரும்பிய சுவாமிகள் கனிவுடன் அழைத்தார்.

''இதோ பார்... சிப்பந்திகளுக்கு நம் மடத்தில் நிறைய சம்பளம் தரவில்லை. அதற்கான வசதியும் நம்மிடம் இல்லை. மடத்துக்கு நீ செய்வது வேலையல்ல; கைங்கரியம் தான். அதில் கொஞ்சம் தியாகம் இருக்க தானே வேண்டும்? வேறு இடத்தில் வேலை செய்தால், நிறைய வருமானம் உனக்கு கிடைக்கலாம். அதை தியாகம் செய்து தானே இங்கு கைங்கரியம் செய்கிறாய்'' என்று சொல்லி அவரை கூர்ந்து கவனித்தார். 

மேலும், ''நீ சரீர சேவையில் (உடல் உழைப்பு) ஈடுபட்டால் போதாது. திரவிய கைங்கர்யத்திலும் (பொருளுதவி) பங்கு பெற வேண்டும் என்பது என் ஆசை. ஏதாவது ஒரு பொருளை சந்திர மவுலீஸ்வரருக்கு நீ அர்ப்பணம் செய். சம்பளம் குறைவாக இருந்தாலும், மாதம் பத்து ரூபாயாவது மிச்சம் பிடி. அந்த சேமிப்பில், தங்க உத்தரணி வாங்கி காணிக்கை கொடு. எப்படியாவது உன்னிடமிருந்து சுவாமிக்கு ஒரு தங்க உத்தரணி வர வேண்டும். அதற்கான முயற்சியை இப்போதே செய்வாயா?'' என்றார்.

திருடனுக்கு தேள் கொட்டியது போல் சிப்பந்தி விழித்தார். தலையை மட்டும் அசைத்து விட்டு கிளம்பினார்.  அவர் மனம் திருந்தியதற்கு சாட்சி சொல்வது போல, மறுநாள் சந்திர மவுலீஸ்வர பூஜையில் தங்க உத்தரணி இருந்தது.

No comments:

Post a Comment