சிவபெருமானுக்குரிய இரண்டு தரிசனங்களில் முதல் தரிசனம் ஆனி மாதத்திலும், இரண்டாவது தரிசனம் மார்கழி மாதத்திலும் நடைபெறும். அதில் வருடத் தொடக்கத்தில் வரும் ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தன்று நடராஜர் அபிஷேகம் நடைபெறும். இந்த மாதத்தில் ஆடலரசனைப் பாடிப் பணிந்து வழிபட்டால் கோடி கோடியாய் நன்மை கிடைக்கும். மேலும் அன்றைய தினம் சிவபுராணம் பாடி இறைவனைத் தரிசித்தால் சிந்தையில் நினைத்த காரியங்கள் சிறப்பாக நிறைவேறும். வந்த துயரங்கள் வாயிலோடு நின்றுவிடும். எந்தக் குறைபாடாக இருந்தாலும் அதை அகற்றும் ஆற்றல் இறை வழிபாட்டிற்கு உண்டு. ஆனால் அதற்கு நம்பிக்கை மட்டுமே நமக்குத் தேவை.
அந்த நம்பிக்கையை முழுமையாக நடராஜர் மீது வைக்க வேண்டிய மாதம் ஆனி மாதமாகும். நடராஜரை ‘தில்லை கூத்தன்’ என்றும், ‘ஆடலரசன்’ என்றும் ‘கூத்தபிரான்’ என்றும் அழைப்பது வழக்கம். ஆடிய பாதத்தோடு நீடிய கருணைகொண்டு வாழ்வை வளப்படுத்துபவர் நடராஜப் பெருமான். கலைகளைக் கற்று காசினியெங்கும் புகழ்பெற வேண்டுமென்று விரும்புபவர்கள், நடராஜப் பெருமானை முழுமையாக வழிபட வேண்டும்.
அதற்கு உகந்த நாள் ஆனி மாதம் 6-ம் நாள். அதாவது 20-6-2018 (புதன்கிழமை) உத்திர நட்சத்திரத்தில் ஆனி உத்திர தரிசனமும், நடராஜர் அபிஷேகமும் நடைபெற இருக்கிறது. ஓடி ஓடி சம்பாதிக்கும் நமது வாழ்க்கையை, மற்றவர்கள் பார்த்து வியக் கும் விதத்தில் அமைத்துக் கொள்ள நடராஜர் தரிசனம் வழிகாட்டுகிறது.
நடனக் கலையில் சிறந்து விளங்க வேண்டுமென்று விரும்புபவர்கள், நாடகம் மற்றும் கலைத்துறையில் பிரகாசிக்க வேண்டுமென்று விரும்புபவர்கள் நடராஜப் பெருமான் வழிபாட்டை முறையாக மேற்கொள்ள வேண்டும். சிவாலயங்களில் சிவகாமி அம்மன் சமேத நடராஜப் பெருமான், சிவன் சன்னிதிக்கு அருகிலேயே இருக்கும். முயலகனை வதம் செய்த கோலத்தோடு கால் தூக்கி ஆடும் அந்த இனிய காட்சியை நாம் கண்டு மகிழ வேண்டும். மிதுனத்தில் சூரியன் சஞ்சரிக்கும் ஆனி மாதத்தில் இந்த விழா நடைபெறுகின்றது.
மிதுனம் நவக்கிரகங்களில் புதனுக்கு சொந்த வீடாகும். புதன் கல்விக்குரிய கிரகமாக கருதப்படுகிறது. எனவே கல்வி, கேள்விகளில் தேர்ச்சி பெற மாணவச் செல்வங்கள் இம்மாதத்தில் நடைபெறும் இதுபோன்ற விழாக்களில் கலந்துகொண்டு வழிபட்டால் முதன்மை பெற வழிவகுக்கும்.
சிவராத்திரி அன்று சிவனை நாம் வழிபடும் போது இரவு முழுவதும் விழித்திருந்து சிவபுராணம் பாடி சிவாலயங்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். ஆனால் ஆனி மாதத்திலும், மார்கழி மாதத்திலும் வரும் நடராஜர் தரிசனத்தைக் கண்டுகளிப்பவர்கள் பகல் முழுவதும் விரதம்இருந்து சிவனுக்குரிய அபிஷேக ஆராதனைகளைக் கண்டுகளிப்பதோடு நடராஜப் பெருமானையும் தரிசித்து அவர் சன்னிதியில் சிவபுராணம் பாடவேண்டும்.
‘திருவாசகத்திற்கு உருகார், ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்பது பழமொழி. அந்த அடிப்படையில் நாம் இறைவன் சன்னிதியில் திருவாசகம் பாடினால் அவர் தரிசனம் நமக்கு கிடைப்பதோடு மட்டுமல்லாமல், கரிசனத்தோடு வந்து காட்சி கொடுத்து அருள் வழங்குவார் என்பது நம்பிக்கை.
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான்
தாள்வாழ்க!
கோகழி ஆண்ட குறு மனிதன் தாள்வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள்வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க!
என்று இறைவனைநாம் வாழ்த்திப் பாடினால் நாமும் நன்றாக வாழ்வோம், நம்மைச் சார்ந்தவர்களும் நன்றாக வாழ்வார்கள். நாம் வாழ்வாங்கு வாழ வாழ்வை வெல்ல, வெற்றிகளைக் குவிக்க சிவன் சேவடியைப் போற்றிவணங்க வேண்டுமென்று மாணிக்கவாசகர் எடுத்துரைக்கின்றார். அல்லல் பிறவியறுப்பவனை, சொல்லற்கு அரியனை, தில்லையுள் கூத்தனை, தென்பாண்டி நாட்டானை நள்ளிரவில் நட்டம் பயின்றாடும் நாதனை, ஆனி உத்திரத்தன்று வழிபட்டால் தேனினும் இனிய வாழ்க்கை அமையும்.
அன்றைய தினம் சிவபிரானுக்கு நடைபெறும் அபிஷேகத்தில், பால் அபிஷேகம் பார்த்தால் நான்கு திசைகளில் இருந்தும் நல்ல தகவல் வந்துகொண்டே இருக்கும். பன்னீர் அபிஷேகம் பார்த்தால் எண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும். எனவே அந்த அற்புத தரிசனம் தரும் ஆனி மாதம் ஒரு அபூர்வ மாதமாகும். அகிலத்து மாந்தர்களுக்கு அனைத்து நலன்களையும் தரும் வழிபாட்டிற்குரிய மாதம் இதுவாகும். மனிதப்பிறவி எடுத்ததன் பயனே இறைவனுடைய அழகை கண்ணார காண்பதற்காகவே என்கிறார்கள் சான்றோர்கள். அந்த இறைவன் தரிசனம் தரும் நாளில் நாம் உள்ளன்போடு வழிபட்டு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம்.
No comments:
Post a Comment