Saturday 16 June 2018

எல்லாம் நன்மைக்கே!


ஒரு மன்னர் பழம் நறுக்க கத்தியை எடுக்க, தவறுதலாக கையில் பட்டு ரத்தம் வந்தது. அதைக் கண்ட மந்திரி, 'எல்லாம் நன்மைக்கே' என்றார் இயல்பாக. மன்னர் கோபத்தில், “என்ன உளறுகிறீர்?” என கத்தினார். “ஆம்! மன்னா! வேலைக்கு ஆயிரம் பேர் இருக்க, தாங்கள் இப்படி கையை நறுக்கி கொண்டதில் ஏதோ அர்த்தம் இருக்கிறது. எல்லாம் நன்மைக்கே!” என்றார்.

கொந்தளித்த மன்னர், “ இவரை சிறையில் அடையுங்கள்,” என உத்தரவிட்டார்.
சில நாள் கழித்து தனியாக காட்டுக்கு புறப்பட்ட மன்னர், காட்டுவாசிகளிடம் சிக்கினார். காளிக்கு அவரை பலி கொடுக்க எண்ணி கட்டி வைத்தனர். காட்டுவாசிகளின் தலைவன், மன்னரின் கையில் இருந்த ரத்தக் காயம் கண்டு, “குறையுள்ள இவனை பலி கொடுப்பது நல்லதல்ல” என்று சொல்லி அவிழ்த்து விட்டான். மன்னர் அரண்மனை திரும்பினார்.

“மந்திரியாரே... நீர் சொன்னது சரி தான். உம்மை சிறையில் அடைத்ததற்கு வருந்துகிறேன்” என்றார். “வருத்தம் வேண்டாம் மன்னா... அதுவும் நன்மைக்கே! உங்களோடு வந்திருந்தால், காட்டுவாசிகளிடம் நானும் சிக்கியிருப்பேனே!” என்றார் மந்திரி.

No comments:

Post a Comment