Monday 25 June 2018

பஞ்சம் போக்கும் பட்டீஸ்வரர்

பஞ்சம் போக்கும் பட்டீஸ்வரர்

கற்காலம் கடந்து, கணிப்பொறி யுகத்தின் உச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், எப்பொழுதும் மனிதர்களுக்கும், வாழும் உயிர்களுக்கும் இன்றியமையாத தேவை உணவு. மனிதர்களுக்கு அந்த உணவு பெரும்பாலும் விவசாயத்தில் இருந்தே கிடைக்கிறது.

திருமணத்துக்கு முன்பு மாப்பிள்ளை சம்பாவும், திருமணத்துக்குப் பிறகு கவுனி அரிசியும், மகப்பேற்றின் போது பூங்காரும், பிறந்த குழந்தைக்குச் சாதம் ஊட்ட வாரன் சம்பாவும், குழந்தை பிறந்த பிறகு பால் குடவாரையும் என நெல் வகைகள் தமிழகத்தில் நீண்ட காலமாக அக்காலத்தில் பயிரிடப்பட்டு வந்துள்ளன. கிச்சிலிச் சம்பா, கைவரகுச் சம்பா, சிங்கினிச் சம்பா, மடுமுழுங்கி, இலுப்பைப்பூ சம்பா, குழியடிச்சான், கொட்டாரச் சம்பா, தூயமல்லி, ஆரக்குறுவை, காட்டுயானம், குடவாழை இப்படி இன்னும் நெல் வகைகள் நிறைய உண்டு.

தற்போது இப்படிப்பட்ட நெல் வகைகள் இல்லை. கிடைக்கும் நெற்பயிரை வயலில் பயிரிடலாம் என்றால் தற்போது வயல்களும் இல்லை. நகர மயமாக்கல் என்ற பெயரில் விவசாய நிலங்கள் எல்லாம் கான்கிரீட் கட்டிடங்களாக மாறிவிட்டன. இயற்கை வளங்களை அழித்து, மரங்களை வெட்டி வீழ்த்திவிட்டனர். விளைவு.. மழை பொய்த்து விவசாயம் நலிவடையும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. விவசாயிகள் செய்வது இன்னதென்று தெரியாமல் கையறு நிலையில் தவிக்கிறார்கள். விவசாயத்தை பயிர்த்தொழிலாக நினைக்காமல், ஒட்டுமொத்த உலகத்துக்கே உணவு கிடைக்கச்செய்யும் உயிர் தொழிலாகக் கருதிடவேண்டும்.

அப்படிப்பட்ட உயிர்காக்கும் பயிர் தொழிலின் மேன்மையை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு, அக்காலத்தில் சிவபெருமான் விவசாயியாகவும், அன்னை பார்வதி தேவி விவசாயப் பெண்ணாகவும் வந்து சேற்றில் தங்கள் திருப்பாதம் பதித்து, நாற்று நட்டு விவசாயம் புரிந்த நிகழ்வு நடந்துள்ளது. அதுபற்றி பார்ப்போம்.

கோயம்புத்தூரில் இருந்து சிறுவாணி செல்லும் வழியில் 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பேரூர். இங்கு மேலைச் சிதம்பரம் எனும் பச்சை நாயகி சமேத பட்டீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. ஒருமுறை மகாவிஷ்ணுவிடம் பிரம்மனின் படைப்புத்தொழில் ரகசியத்தை காமதேனு கேட்டது. அதற்கு விஷ்ணு, தட்சிண கயிலாயமாக விளங்கும் பேரூர் ஆலய ஈசனை வழிபட்டு வர பணித்தார். காமதேனுவும் தனது கன்று பட்டியுடன் பேரூர் வந்து அங்கே காஞ்சி நதி என்னும் நொய்யல் நதிக்கரையில் இருந்த புற்று சிவலிங்கத்துக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தது.

ஒருநாள் விளையாட்டாய் காமதேனுவின் கன்று பட்டி, புற்று வடிவில் இருந்த சிவலிங்கத்தை கலைத்துவிட்டது. கன்றின் குளம்படி ஈசனின் திருமுடியில் அழுத்தமாகப் பதிந்து விட்டது. பதறிப்போன காமதேனு வருந்தியது. காமதேனுவின் வருத்தத்தைப் போக்க ஈசன் அங்கு தோன்றி, ‘பார்வதியின் வளைத்தழும்பை எம் மார்பினில் ஏற்றதுபோல, உன் கன்று பட்டியின் குளம்படித் தழும்பையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்' என்றார்.

மேலும், ‘பேரூர் முக்தித் தலம் என்பதால், நீ வேண்டும் படைப்பு ரகசியத்தை இங்கே அருள முடியாது. அதனைக் கருவூர் (கரூர்) திருத்தலத்தில் அருள்கிறேன். இங்கு பேரூரில் எமது நடன தரிசனத்தை கண்டிடுக' என்றருளி மறைந்தார்.

இத்தலத்தில் சுந்தரருக்கும் ஈசன் தமது ஆனந்த நடனத்தை காட்டியருளி உள்ளார். கோமுனி எனும் பசுவாக பிரம்மனும், பட்டி முனி என்னும் இடையனாக மகாவிஷ்ணுவும் பேரூரில் ஈசனை வழிபட்டு அவரது ஆனந்த திருநடனத்தை கண்டு தரிசித்து பேறுபெற்றுள்ளனர். அதற்கேற்றாற்போல் பேரூர் வெள்ளியம்பலத்தில் நடராஜரின் இரு புறமும் பிரம்மனும், விஷ்ணுவும் இருப்பது சிறப்பு.

தில்லை சிதம்பரத்தில் தாம் ஆடும் ஆனந்த திருத்தாண்டவத்தை, மேற்கிலுள்ள பேரூரில் ஈசன் காட்டியருளுவதால் இத்தலத்தை ‘மேலைச் சிதம்பரம்' என்கிறார்கள்.

ஆதிசங்கரர் எழுதிய சங்கர பாஷ்யத்தில் இக்கோவில் சிறப்பு கூறப்பட்டுள்ளது. வெள்ளியங்கிரி மலையை ஈசனின் சிரசாகவும், பேரூர் திருத்தலத்தை திருப்பாதமாகவும் குறிப்பிடு கிறார்கள். இங்கு ஆலயத்தில் வட கயிலாயம், தென் கயிலாயம் என இரு சன்னிதிகளும் உள்ளது. பரசுராமர், பஞ்சபாண்டவர்களும் இத்தலம் வந்து ஈசனைப் பணிந்து அருள்பெற்றுள்ளனர். இங்குள்ள காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் சன்னிதிக்கு நடுவில் பால தண்டாயுத பாணியாக மேற்கு நோக்கியவண்ணம் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்கொண்டவர் இவர்.

இத்தல அருணாச்சலேஸ்வரர் சன்னிதியில் திருக்கார்த்திகை தீப விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஆஞ்சநேயர் ஜெயந்தி மற்றும் அமாவாசை, மூல நட்சத்திர நாட்களில் பச்சைநாயகி அம்மனின் வெளிப் பிரகாரச் சுவற்றில் உள்ள சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. இங்கு நாய் வாகனம் இல்லாத ஞானபைரவர் தெற்கு பார்த்தக் கோலத்தில் அருள்கிறார். இவரை வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம்.

ஒரு முறை சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஈசனிடம் திருப்பணிக்காக பொருள் வேண்டி, பேரூர் திருத்தலம் வந்தார். அப்போது சுந்தரரிடம் விளையாட விரும்பிய ஈசன், அம்பிகையுடன் விவசாயி வேடம் பூண்டு அருகிலுள்ள வயலுக்குச் சென்று நாற்று நட்டுக் கொண்டிருந்தார். பேரூர் ஆலயத்தில் சுவாமியையும், அம்பாளையும் காணாது திகைத்தார் சுந்தரர். அவரது திகைப்பைக் கண்ட நந்தி, ஈசன் வயலில் நாற்று நடும் இடத்தைக் காட்டிக்கொடுத்தார். சுந்தரர் வயலுக்குச் சென்று அங்கு ஈசனும், அம்பாளும் விவசாயி கோலத்தில் சேற்றில் தங்கள் திருப்பாதம் பதித்து நாற்று நட்டுக் கொண்டிருப்பதையும், கூடவே இந்திரன், பிரம்மன், விஷ்ணுவும் வயலில் நீர் பாச்சி, வரப்புகளை சீர்செய்வதையும் கண்டார்.

அப்போது பார்வதி தேவி பச்சை ஆடை உடுத்தி இந்திராணி, சரஸ்வதி, லட்சுமியுடன் சேர்ந்து கும்மியடித்து நாற்று நடவுப் பாடல்கள் பாடி நாற்று நட்டுக்கொண்டிருப்பதையும் கண்டு துதித்து நின்றார். விநாயகரும், முருகரும் விவசாயக் குழந்தைகளாய் வந்து அங்கே வயலில் உள்ள ஆமைகளையும், மீன்களையும் எடுத் தெடுத்து வயற்புறத்தில் வீசி குறும்பாக விளை யாடிக் கொண்டிருப்பதையும் கண்டார்.

பின்னர் சுந்தரரும் வயலினுள் இறங்கி நாற்று நட்டுக்கொண்டிருந்த பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன் அருகில் சென்று வணங்கி மீண்டும் ஆலயத்திற்குள் அழைத்துவந்தார். பின்பு ஈசனை துதித்து பதிகம் பாடி பொன், பொருள் வேண்டி நின்றார்.

அப்போது ஈசன், ‘சுந்தரா! இத்தலத்தில் உனக்கு எமது ஆனந்த திருநடனம் காட்டுகிறேன். சேரமான்பெருமான் உனது வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறான். நீ வேண்டும் பொன், பொருளை அங்கு அவன் உனக்கு அளித்திடுவான்' என்று அருளி மறைந்தார்.

இந்த நிகழ்வு பேரூர்ப் புராணத்தின் 19-வது படலமான பள்ளுப்படலம் பகுதியில் விரிவாக கூறப்பட்டு உள்ளது. விவசாயியாகச் சென்ற சிவனுடன் வயலில் வேலை செய்ததால், இத்தல அம்பிகைக்கு ‘பச்சை நாயகி’ என்று பெயர். நல்ல மகசூல் பெறவும், பயிர்கள் செழிப்பாக வளரவும் இவளது சன்னிதியில் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் விதை நெல், தானியத்துடன் பூஜிக்கிறார்கள். இங்கு சுந்தரருக்கும், சேரமான் பெருமாளுக்கும் தனி சன்னிதிகள் உள்ளன. அன்று சுந்தரர் பொருட்டு ஈசன் வயலில் இறங்கி நாற்று நட்ட நிகழ்வு அதன் தொடர்ச்சியாய் இன்றும் பேரூர் ஆலயத்தில் ஆனி திருமஞ்சனம் நாளின் முந்தைய தினம் நடைபெற்று வருகிறது.

அன்றைய தினம் மாலையில் ஆலயத்தின் அருகில் உள்ள வயலில் ‘நாற்று நடும் விழா' எனும் பெயரில் பத்துநாள் திருவிழாவாக நடைபெறுகிறது. மறுநாள் காலையில் நடராஜருக்கு ஆனித் திருமஞ்சனம் வெகுசிறப்பாக நடைபெறுகிறது. ஈசனும், அம்பாளும் நாற்றுநடும் வயலில் உள்ள மண்ணெடுத்து வந்து வயலிலோ, தோட்டத்திலோ சிறிது தூவினால் மகசூல் நிறையக் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அம்மண்ணில் சிறிது எடுத்துவந்து வீட்டின் முகப்பில் ஒரு பச்சை நிறத் துணியில் கட்டித் தொங்கவிட்டால் தீய சக்திகள், வாஸ்து கோளாறுகள் யாவும் நீங்குகிறது என்கிறார்கள். 

பிறப்பில்லாத தலம்

இங்கு தல விருட்சமாக சித்தேச மரம் எனும் பன்னீர் மரம் உள்ளது. இந்த மரம் தவிர ‘பிறவாப் புளி’, ‘இறவாப் பனை’ ஆகிய மரங்களும் இத்தலத்தில் சிறப்புக்குரியவை. இங்குள்ள புளிய மரத்தின் விதைகளை எங்கு போட்டாலும் முளைக்காது என்பதால், ‘பிறவாப் புளி’ என்று பெயர். இந்த புளியமரத்தின் மூலமாக, இத்தல ஈசனை பணிந்தால் மறு பிறப்பில்லை என்பதை ஈசன் உணர்த்துவதாக சொல்கிறார்கள். இங்கு இறப்பவர்கள் காதுகளில், ஈசனே ‘நமசிவாய’ மந்திரம் சொல்லி சிவலோகம் அழைத்துச் செல்வதாக ஐதீகம். 

No comments:

Post a Comment