Friday 29 June 2018

சுயநலம் கூடாது


ஒரு பெரியவருக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். ஒருவரை ஒரு விவசாயிக்கும், மற்றொருவரை மண்பாண்ட தொழிலாளிக்கும் கட்டி வைத்தார். இருவர் மீதும் மிகுந்த பாசம் கொண்டவர். 

ஒருநாள் அவர், விவசாயி மருமகன் வீட்டிற்கு போனார். மகள் தந்தையிடம், “அப்பா! எங்கள் நிலங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டன. மழை பெய்ய வேண்டுமென்று கடவுளிடம் வேண்டுங்கள்,” என்றாள். அவரும் சரியென சொல்லி விட்டு, இளையவள் வீட்டுக்குச் சென்றார்.

அவள் தந்தையிடம், “அப்பா! நாங்கள் பானைகள் செய்து உலர வைத்துள்ளோம். மழை பெய்தால், எல்லாம் கரைந்து விடும். நல்ல வெயிலடிக்க வேண்டுமென நீங்கள் எனக்காக வேண்டுங்கள்,” என்றாள். யாருக்காக கடவுளை வணங்குவது என தந்தைக்கு தெரியவில்லை. குழப்பத்தில் ஆழ்ந்தார். ஒரு துறவியிடம் சென்று பிரச்னையைச் சொன்னார்.

துறவி பெரியவரிடம், “இதிலென்ன குழப்பம்! யாருக்கு என்ன நேரத்தில் என்ன வேண்டுமோ, அதைக் கொடு கடவுளே என வேண்டுதல் செய். அவர் எல்லாருக்கும் நன்மை செய்வார்,'' என்றார். யாருக்கு எதைத் தரவேண்டுமென கடவுளுக்கு தெரியும். அவரிடம் பொறுப்பை விடுங்கள். கடமையை செய்யுங்கள்.

No comments:

Post a Comment