Saturday, 16 June 2018

அம்மன் திருவிளையாடல்...


அம்மன் பக்தரான ஏழை விவசாயிக்கு நிம்மதிக்கு குறைவில்லை. ஆனால், மனைவியோ ஆடம்பரமாக வாழ விரும்பினாள். 'அம்பாள் அருளால் நல்லது நடக்கும்' என்று சமாதானம் சொல்வார் அவர்.

விவசாயியை சோதிக்க எண்ணிய அம்பாள், தன் நாடகத்தை தொடங்கினாள். நிலத்தை உழுத போது, கலப்பையில் ஏதோ தட்டுப்பட விவசாயி அதை எடுத்தார். செப்புக்குடத்தில் தங்க நாணயங்கள் இருந்தன. அதை வயல் ஓரத்தில் புதைத்தார். நடந்ததை மனைவியிடம் சொல்ல, “யாராவது குடத்தை எடுத்து போனால் என்ன செய்வது?” என்றாள்.

“அம்பாள் நமக்கென அளந்ததை யாரும் எடுக்க முடியாது. ஒருவேளை காணாமல் போனால், அவள் கொடுக்க விரும்பவில்லை'' என்றார். தற்செயலாக திருடன் ஒருவன், இதை கேட்க நேர்ந்தது. உடனே, வயலுக்கு சென்று தேட, குடம் அகப்பட்டது. ஆவலுடன் திறந்தான். உள்ளிருந்த தேள் கையைப் பதம் பார்க்க, வலியால் துடித்தான்.

மறுநாள் விவசாயி வயலுக்கு சென்ற போது, குடம் காணவில்லை. மனதிற்குள், 'அம்பாள் கொடுக்க விரும்பவில்லை போலும்' என எண்ணியபடி பணியில் ஈடுபட்டார். அன்று மாலை வீடு திரும்பினார்.

வந்ததும், வராததுமாக அவரது மனைவி, 'குடத்தை எங்கே?” என்றாள். “திருட்டு போயிடுச்சு” என்றார் விவசாயி. “ தங்கத்தை பார்த்தால் யாருக்கு தான் ஆசை இருக்காது” என்றாள். “இதோ பாரம்மா.... உள்ளது போகாது; இல்லாதது ஒருநாளும் வராது. கவலைப்படாம துாங்கு” என்றார் விவசாயி.

“உங்களை போல அசடு, உலகத்தில் யார் இருப்பா? கால் முளைச்சு செப்புக்குடம் வீட்டுக்கு தேடியா வரும்?” என கோபத்தில் கத்தினாள். தேள் கடி வாங்கிய திருடன், அன்றிரவு தன்னை ஏமாற்றிய விவசாயியைத் தண்டிக்க எண்ணினான். தேளுடன் அந்த குடத்தை கொண்டு வந்து விவசாயி வீட்டு வாசலில் வைத்துச் சென்றான். அதிகாலையில் எழுந்த விவசாயி, அம்பாளை வழிபட்டு, வயலுக்கு புறப்பட்டார்.

வாசலில் குடம் இருந்தது. திறந்தபோது குடத்தில் தங்க நாணயங்கள் இருந்தன. அதைக் கண்ட மனைவி, “கொடுக்கிற தெய்வம் கூரையை பொத்துக்கிட்டு கொடுக்கும் என்பார்கள். அம்பாள், உங்களுக்காக குடத்தை வீட்டுக்கே அனுப்பிச்சுட்டாளே!” என்றாள். “அம்பாள் கொடுத்தது நமக்கு மட்டும் சொந்தமல்ல. கஷ்டப்படும் ஏழைகளுக்கு கொடுத்து உதவணும்” என்றார் விவசாயி. ''எல்லாம் அம்மனின் அருள்” என்றாள் மனைவி.

No comments:

Post a Comment